எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
ஆறு தரிசனங்கள்

[இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தில் கவிஞர் யுவனுடன்]
ஆதி தரிசனங்கள் ஆறு. அவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்திய மெய்ஞான மரபின் அடிப்படைகள் அடைத்தும் உருவாகியுள்ளன. அந்த ஆறு தரிசனங்களின் சாயல் சிறிதேனும் இல்லாத எந்த மதமும் தத்துவமும் இந்து மெய்ஞான மரபில் பிற்பாடு உருவானதில்லை.
தரிசனங்களின் ஒட்டு மொத்தமான பங்களிப்பு என்ன? வேதங்களில் கவித்துவவீச்சுடன் கூறப்பட்ட அகவெளிச்சங்களை திட்டவட்டமான தத்துவ விவாதத் தளத்துக்குக் கொண்டு வந்தவை தரிசனங்களே. இதன் மூலம் அருவமான ( abstract ) விஷயங்களை புறவயமாக விவாதிக்கும் தருக்க உபகரணங்களை அவை உருவாக்கி அளித்தன.
பல்வேறு விதமான ஞானத்தேடல்கள் நடக்கும் ஒரு பொதுப்பரப்புதான் இந்து மெய்ஞானம் என்பது. ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட ஞான வழிகள் உண்டு. வழிபாடுகள் மற்றும் சடங்குகளை மட்டும் சார்ந்து இயங்குபவை உண்டு. முழுக்க முழுக்க அறிவார்ந்த தளத்தில் இயங்குபவை உண்டு.
இந்த ஒவ்வொரு ஞான மார்க்கமும் பிறிதுடன் உரையாட வேண்டியுள்ளது. அந்த உரையாடல் மூலம்தான் ஒவ்வொரு தரப்பும் தன்னை முழுமை செய்துகொள்ள முடியும். அவ்விவாதத்துக்கு எல்லாத் தரப்புக்கும் பொதுவான ஒரு இடம் அவசியம் தேவை.
இந்தப் பொது இடத்தில் நான்கு விஷயங்கள் அனைவருக்கும் பொதுவாக வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். அவை முறையே பேசு பொருள், பேசும் விதம், அடிப்படையான சொற்கள் மற்றும் பேசுவதன் நோக்கம்.
எதைப்பற்றி பேச வேண்டும் என்பது முதன்மையான பொது வரையரையாகும். பிரபஞ்சத்தின் பிறப்பு, முடிவு, வாழ்வின் இயங்குமறை, வாழ்வின் நோக்கம் முதலியவையே பேசு பொருட்கள் என்று பொதுவாக வரையறுக்கப்பட்டிருப்பதை இப்போது காணலாம். மாறுபட்ட தரப்புகள் கூடி விவாதிக்கும்போது அனைத்திலும் பொதுவாக உள்ள இவ்வம்சங்களே விவாதிக்கப்பட்டன. Continue reading →