எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தரிசனங்களின் அடிப்படைகள்
தரிசனங்களின் அமைப்பு முறை
ஒரு தரிசனத்தின் பொதுவான அமைப்பு முறை எப்படிப்பட்டது? இந்து மரபின் ஆதி தரிசனங்கள் நன்கு வளர்ந்து மேம்பட்ட நிலையில் உள்ளன. பெரும்பாலான தரிசனங்களை நாம் மதங்களின் ஒரு பகுதி என்ற நிலையிலேயே காணமுடிகிறது. வேறு பல தரிசனங்களைப் பல்வேறு துறைகளில் அவை பிரதிபலிப்பதை வைத்து ஊகித்து அறியவேண்டியுள்ளது. ஆகவே இந்து மரபின் ஆறு தரிசனங்கள் எப்படி உள்ளன என்பதை வைத்து இந்த நிர்ணயத்தினை நடத்துவதே உசிதமானது.
ஒரு தரிசனம் பெரும்பாலும் ஒர் ஆதி குருவின் மொழியிலிருந்து தொடங்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனம் கபிலரின் கூற்றுகளிலிருந்தே தொடங்குகிறது. ஆகவே கபிலர் சாங்கியக் குரு என்று அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அத்தரிசனம் அவரால் சூனியத்தில் இருந்து உருவாக்கப்பட்டது அல்ல. உலகத்தில் இதுகாறும் உருவான எந்த தரிசனமும் அப்படி ஒரு தனி நபரால் திடீரென்று கண்டடையப்பட்டது அல்ல என்று உறுதிபடக் கூறிவிட முடியும்.
தரிசனங்களின் விதைகளை நாம் நம் மொழியில் சாதாரணமாகவே காண முடியும். நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள்,பழங்கதைகள் முதலியவற்றில் அவை புதைந்து கிடக்கும். அதேபோல புராதனமான சடங்குகள், தெய்வ வடிவங்கள் ஆகியவற்றிலும் அவை உறைந்திருக்கும். அவை மனித மனத்திலிருந்து இயல்பாகவே உருவாகி மொழியிலும் கலையிலும் வெளிப்பட்டவை ஆகும்.
ஒரு விழிப்புற்ற மனம் அந்தத் தரிசனத்தைக் கண்டுபிடிக்கிறது அவ்வளவுதான். விதையை அந்த மனம் பெரிய மரமாக ஆக்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனத்தின் சாராம்சம் என்ன? Continue reading



