விஷ்ணுபுரம் (1998)

விஷ்ணுபுரம் (1998)

ஜ.சிவகுமார்

கீற்று இணையதளம்

தமிழ்ப் புனைகதை உலகில் ‘விஷ்ணுபுரம்’ தனித்ததொரு நிலையில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது. இதற்குக் காரணம் இதன் கதையமைப்பு, மொழியமைப்பு என்பதை விடக் கதையை நிகழ்த்த ஏதுவான பரிமாணத்தை முக்கியமாகக் குறிப்பிடலாம். இந்நாவல் ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி என மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் தோற்றம் கொள்வதற்கு முன் வாழ்ந்த ஆதிமக்களின் வாழ்நிலை, விஷ்ணு புரத் தோற்றம், விஷ்ணுபுரத்திற்குள் நிகழும் உள்முரண்பாடுகள் ஆகியவற்றை முதற்கட்டமாகவும் விஷ்ணுபுரம் அழிவதற்கான காரணம், அழிவுற்ற பிறகான சமூகநிலை அதற்குப் பின்னும் சொல்லப்படுகிறது.

பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட விஷ்ணுபுரம் பார்ப்பனர்களின் செல்வாக்குமிக்க இடமாகத் தோற்றம் கொள்கிறது. விஷ்ணுபுரத் தலைவராகிய சூர்யதத்தரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே விஷ்ணுபுரம் அமைகிறது. அங்கு நிகழும் திருவிழாச் சடங்குகள், நீதி வழங்குதல் முதலானவற்றின் அடிப்படையில் இதனை அனுமானிக்க முடிகிறது. ஆனால் விஷ்ணுபுர பார்ப்பனர்களுக்கும் காளாமுகர்களுக்கும் இடையே நிகழும் உள்முரண்பாடுகள் காலச் சுழற்சியில் உச்சகட்ட மடைந்து பார்ப்பனர்களின் ஆட்சி வீழ்ச்சியடைகிறது. பார்ப்பனர்களின் ஆட்சி வீழ்ச்சியடைவது போலச் சித்திரிக்கப்பட்டாலும் ஆத்திகத்தின் வெற்றியே இந்நாவலின் உட்கருத்தாக அமைகிறது.

Continue reading

விஷ்ணுபுரத்தின் வாசலில்

விஷ்ணுபுரத்தின் வாசலில் ஒரு வாசகனாக – ஸ்ரீபாதம்

எழுதியவர் : ஜெகதீஸ்வரன்

ஜெகதீஸ்வரன் தளம்

பொம்மைகள் விற்கப்படும் மிகப் பெரிய கடையில் ஒரு குழந்தையை மட்டும் முழு சுகந்திரத்தோடு விட்டால் என்ன ஆகும். அந்தக் குழந்தை கடை முழுவதும் ஓடும், கண்ணிகளில் படும் பொம்மைகளையெல்லாம் வாரி அனைத்து விளையாடும், சிலவற்றை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்திருக்கும், சிலவற்றை மதிக்காமல் செல்லும், கைக்கெட்டாத பொம்மைகளை நினைத்து ஏங்கும்,.. விஷ்ணுபுரத்தினை பெரும் பொம்மைக் கடையாக நினைத்துக் கொண்டால், அந்த குழந்தைதான் ஜெயமோகன். ஆம் விஷ்ணுபுரம் என்ற கற்பனை நகரில் ஜெயமோகன் ஓடிக்கொண்டே இருக்கிறார். கண்களில் படுபவனப் பற்றியெல்லாம் விவரிக்கிறார். சில கதைமாந்தர்களை புறக்கணிக்கிறார், சிலரை தொடர முடியாமல் தவிக்கிறார். விஷ்ணுவின் பாதத்தின் அழகிலிருந்து இருந்து தொடங்கி, தேவதாசி யோனியின் வலி வரை எல்லாவற்றையும் தன் எழுத்துகளில் வடித்திருக்கிறார்.  ஐம்பது அத்தியாங்களை ஸ்ரீபாதம் எனும் முதல் பகுதியில் படிக்கும் வரை இப்படிதான் தோன்றியது. அடுத்த சில அத்தியாங்கள் இது வரை நினைத்தவற்றை எல்லாம் நொறுக்கி எறிந்தன. நாவலின் மிகவும் அழகிய கட்டுமானம் விளங்கியது. அதுவரை தனித்தனியாக இருந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று அட்டகாசம் என்று சொல்ல வைக்கும். ஸ்ரீபாதத்தின் கடைசி வரிகளை படித்து முடித்தபின் புத்தகத்தினை மூடிவைத்துவிட்டு சிந்தனைக்குள் ஆழ்ந்தேன்.

Continue reading

விசுவின் விஷ்ணுபுரம் பதிவுகள் அறிமுகம் by RV

விசுவின் விஷ்ணுபுரம் பதிவுகள்

எழுதியவர் : RV

சிலிகான் ஷெல்ஃப்

நான் படித்த முதல் ஜெயமோகன் புத்தகம் ஏழாம் உலகம். திலீப்குமாரின் மனைவி அதை என் கையில் கொடுக்கும்போதே சொன்னார், இது depressing ஆக இருக்கும், ஆனால் கீழே வைக்க முடியாது என்று. சரியாகத்தான் சொன்னார். ஆனால் எனக்கு அதைப் படிக்கும்போது ஒரு மன எழுச்சியும் ஏற்பட்டது. வாழ்க்கை என்பது அற்புதமான விஷயம், உருப்படிகளுக்குக் கூட என்பது தெரிந்தது. அப்புறம் ரப்பரைப் படித்தேன். நல்ல நாவல், ஆனால் முழு வெற்றி இல்லை என்று தோன்றியது. பிறகு படித்த கன்யாகுமரி எனக்கு சரிப்படவே இல்லை. ஏற்கனவே விஷ்ணுபுரத்தின் சைஸ் பயமுறுத்தியதால் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன், கன்யாகுமரி எல்லாம் படித்த பிறகு படிப்பதற்கான உந்துதலும் குறைவாகத்தான் இருந்தது. அப்புறம் வழக்கம் போல ஒரு நீளமான விமானப் பயணத்தில் விஷ்ணுபுரத்தைப் பிரித்தேன்.

ஆரம்பித்த சில பக்கங்களுக்குள் பெரிய பிரமிப்பில் மூழ்கிவிட்டேன். புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. நான் படித்த தமிழ் புத்தகங்களில் மிகச் சிறந்த ஒன்று.படிக்கும்போதே ஜெயமோகன் அசோகமித்திரன் மற்றும் புதுமைப்பித்தன் லெவலுக்கு என் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

Continue reading

1. விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்

1. விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்

எழுதியவர் : விசு என்கிற விஸ்வநாதன்

சிலிகான் ஷெல்ஃப்

விஷ்ணுபுரத்தின் ‘கதை’ பற்றி, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், சிறுகுறிப்பு வரைக, என்று பரிட்சையில் கேள்விகேட்டால், கீழ்கண்டவாறு எழுதுவேன். (விஷ்ணுபுர நாவல் மூன்று பகுதிகளாக ஆனது.)

விஷ்ணு யுகத்திற்கு ஒரு முறை புரண்டு படுப்பார் என்பது ஐதீகம். தென்னாட்டின் தென்கோடியில் உள்ள ஊர் விஷ்ணுபுரம். காலாகாலமாக, விஷ்ணுபுரத்தை நோக்கி தாந்திரீகர், வைதீகர், சமணர், பௌத்தர், காளாமுகர், வேதாந்திகள் என எல்லா மரபினரும் ஞானத்தைத் தேடி வந்த வண்ணம் உள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் தென்னாட்டில் நடந்த ஞான விவாத சபையில், மற்ற மரபுகளை வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக வைதீக மரபை நிலைநாட்டியவர் வடநாட்டினரான அக்னிதத்தர். நான்காம் நூற்றாண்டில், அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதத்தில் வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்தத்தை நிலைநாட்டியவர் அஜிதர். பௌத்தத்திலிருந்து சமணம். பின்பு மீண்டும் வைதீகம். விஷ்ணுபுரத்தின் சொல் எதுவோ, அதற்குக் கட்டுப்பட்டது, மதுரையை ஆளும் பாண்டியனின் கோல்.

நாவலுடைய முதல் பகுதியின் காலம், பக்தி மரபு ஓங்கியிருந்த பத்தாம் நூற்றாண்டு. கதைக்களம், விஷ்ணுபுரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஶ்ரீபாதத் திருவிழா. பத்தாம் நூற்றாண்டில் விஷ்ணுபுரத்தின் சொல்லாக இருக்கும் வைதீக மரபின் காவலராக இருப்பவர் சூர்யதத்தர். திருவிழாவின் ஒரு பகுதியாக கூடும் தர்க்க விவாத சபையில் தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றி, பெறும் பரிசில் மூலம், தன் வறுமை நீங்கும் என்ற கனவோடு தன் மனைவி, மக்களுடன் வரும் சங்கர்ஷணன், சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்டு, காவியக் கனவு கலைந்து, ஒரு விபத்தில் மகனைப் பறிகொடுத்து, கணிகையர் வீதியில், பத்மாட்சி எனும் கணிகையிடம் சென்று சேர்கிறான். விஷ்ணுபுரத்தில் உள்ள வைதீக குருகுலத்தைச் சேர்ந்த பிங்கலன் என்ற இளம் சீடன், வைதீகத்திலும், தன் குருகுலத்திலும் நம்பிக்கை இழந்து, குருகுலத்தை விட்டு வெளியேறி, சாருகேசி எனும் கணிகையிடம் தஞ்சமடைந்து போகத்தின் எல்லைக்கும் ஞானத் தேடலின் எல்லைக்கும் இடையே முடிவின்றி அலைகழிக்கபடுகிறான். சங்கர்ஷணனின் மனைவியான லட்சுமி, மகனை இழந்த துக்கதிலிருந்து மீள, ஒரு பஜனை கோஷ்டியில் சேர்ந்து, பின்பு பிங்கலனில் தன் மகனை ‘கண்டடைந்து’, துக்கத்திலிருந்து மீள்கிறாள். சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்ட சங்கர்ஷணன், அதிகார பகடையாட்டத்தின் ஒரு பகுதியாக சூர்யதத்தராலேயே ஞான சபையில் காவியம் அரங்கேற்ற அழைக்கப்படுகிறான். ஞான சபையை அவமதிக்க, பத்மாட்சி இல்லாமல் காவியம் அரங்கேறாது என்கிறான் சங்கர்ஷணன். கணிகையான அவளின் தூய்மையை சோதிக்க நடக்கும் அக்னிப் பரிட்சையில் ‘வெல்லும்’ பத்மாட்சியை காவிய தேவதையாக்கி, சிலை வைக்க உத்தரவிடுகிறார், விஷ்ணுபுரத்தில் ‘புதிதாக எதுவும் நிகழ்ந்துவிடாமல்’ பார்த்துக்கொள்ளும் சூர்யதத்தர். தன் காவியத்தை அரங்கேற்றிய பின், லட்சுமியுடன் மீண்டும் இனைந்து, விஷ்ணுபுரத்தில் நடக்கும் கேலிக்கூத்துகளால் மனம் வெறுத்து, விஷ்ணுபுரத்தை விட்டுச் செல்கிறான் சங்கர்ஷணன்.

Continue reading

நான் கண்ட விஷ்ணுபுரம் – வாசகர் பார்வை

நண்பரும் சிலிகான் ஷெல்ஃப் குழும உறுப்பினருமான விசு விஷ்ணுபுரம் பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி இருக்கிறார், பகுதி பகுதியாக வெளிவரும்.

விசு என்கிற விஸ்வநாதன் இளைஞர்.மயிலேறி என்ற பேரில் வலைத்தளம் நடத்துகிறார். அங்கே சில அருமையான பயணக் கட்டுரைகள் இருக்கின்றன. அவர் வயதில் எனக்கு அவருக்கு இருப்பதில் பாதி கூட விவேகம் இருந்ததில்லை, அவரைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை, அப்ளிகேஷன் போட விரும்புவர்களுக்கு வசதியாக இங்கே புகைப்படத்தையும் இணைத்திருக்கிறேன்.

எழுதியவர் : RV

சிலிகான் ஷெல்ஃப்

Continue reading

விஷ்ணுபுரம் சில விளக்கங்கள்

விஷ்ணுபுரம் சில விளக்கங்கள்

இளைய ஜீவா

திண்ணை

விஷ்ணுபுரம் நாவல் குறித்து தமிழகத்தில் அது வெளிவந்த போது எழுந்த பல சந்தேகங்கள் இப்போதுதான் இணைய விவாதங்களில் எழுவதை காணமுடிகிறது.இவை குறித்து இங்கு பலவாறாக பேசி ஒரு தெளிவு ஏற்பட்டுவிட்டது.மதுரையிலும் தஞ்சையிலும் நடந்த விவாத கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன்.இது பற்றிய கட்டுரைகளையும் படித்தேன்.சில விசயங்களை என் தரப்பாக சொல்லலாம் என்று பட்டது.

1] விஷ்ணுபுரம் ஏன் தமிழ் பண்பாடு பற்றி அதிகம் பேசவில்லை ?

விஷ்ணுபுரத்தின் கரு என்ன ?அது விஷ்ணுபுரத்தை பற்றிய நாவல். விஷ்ணுபுரம் வடக்கிலிருந்து வந்த மஹாவைதிகனான அக்னிதத்தன் அவனது சொல்லை நிலைநிறுத்தும் பொருட்டு அச்சொல்லை கல் வடிவமாக மாற்றியதனால் உருவானது என்று நாவலில் பல இடங்களில் சொல்லப்படுகிறது.அதாவது இந்நாவல் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி பேச வரவில்லை இதன் இலக்கு தமிழ் நாட்டின் மீதான வைதிகப் பண்பாட்டு ஆக்கிரமிப்பு மட்டுமேயாகும்.அதனுடன் தொடர்புள்ள அளவில் மட்டுமே இது மற்ற விஷயங்களை பற்றி பேசுகிறது.ஆகவே தமிழ் பண்பாட்டின் ஒட்டுமொத்த காட்சி இதிலில்லை என்பது பொருந்தாகூற்று மட்டுமேயாகும்.

Continue reading

matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்

matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்லாத தலைப்பு, வருத்தம் தராத நாவல் )

எழுதியவர் : பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் தளம்

மேட்ரிக்ஸ் படம் பார்த்து இருப்பீர்கள்… படம் பார்த்து இருப்பவர்களுடன் பேசினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ரசித்து இருப்பதை பார்க்க முடியும்…

என்னை பொறுத்தவரை, அந்த படம் பார்த்து முடித்தவுடன், நாம் இருப்பது 2010 ல் தானா, உண்மையில் நாம் இருக்கிறோமா அல்லது இதெல்லாம் கற்பனை தோற்றமா , வேறு யாரவது நம்மை ப்ரோகிராம் செய்து வைத்து இருக்கிறார்களா என்றெலாம் தோன்றியது…
யோசித்து பார்த்தால், அப்படி இருக்கும் சாத்தியமும் இருக்கிறது…

அதே போன்ற உணர்வுதான், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்து முடித்ததும் தோன்றியது…

நாமெல்லாம் உண்மைதானா அல்லது யாரோ ஒருவர் சொல்லி கொண்டு இருக்கும் கதையில் நாமெல்லாம் ஒரு பாத்திரம்தானா .. எல்லாமே ஒரு நாடகம்தானா என்று ஓர் உணர்வு ஏற்பட்டது…

Continue reading

விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!

விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!

எழுதியவர் : வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன் பக்கம்

ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ‘ இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.’

Continue reading

விஷ்ணுபுரம் – மற்றுமொரு விமர்சனம்

விஷ்ணுபுரம் – மற்றுமொரு விமர்சனம்

எழுதியவர் : பாஸ்கர் [பாஸ்கி]

பாஸ்கி தளம்

விஷ்ணுபுரத்தின் மீதான விமர்சனங்களையும் விவாதங்களையும் தொகுத்தாலே தனியாக ஒரு பெரிய புத்தகம் போடலாம் போலிருக்கிறது.  இதோ, அதன் தாக்கத்தால் உருவான மற்றுமொரு வாசகர் சண்முகம் (ஹ்யூஸ்டன்) அவர்களின் விமர்சனம்…

காலத்தின் பெருவெளியில் உயரத்திலிருந்து, விஷ்ணுபுரம் எனும் ஊரை மையமாக கொண்டு, மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த மானுடர்களின் ஞானத்தேடலைப் பற்றிய தரிசனமே விஷ்ணுபுரம். பலர் தேட, வெகு சிலரே கண்டடைய, தத்துவங்களைச் சுற்றி மதங்களும், அரசியலும் அதிகாரம் செலுத்த, ஆதி தெய்வ வழிபாட்டை வைதீகம் அபகரிக்க, வைதீகத்தை பௌத்தம் வெற்றி கொள்ள, வைதீகம் மீண்டும் மீள என மதங்கள் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்க, ஒரு காலத்தில் நடக்கும் அதர்மங்களும் அபத்தங்களும் பின்னர் ஐதீகங்களாய் மாற – என பன்முகமாய் பிரம்மாண்டமாய் விரிகிறது.

Continue reading

விஷ்ணுபுரம் – ஒரு விஸ்வரூபம்

விஷ்ணுபுரம் – ஒரு விஸ்வரூபம்

எழுதியவர் : பாஸ்கர் [பாஸ்கி]

பாஸ்கி தளம்

அசுர வேகத்தில் எழுதும் ஜெயமோகனின் நூல்களில் ஏழாம் உலகத்திற்கு அடுத்து அதிகளவு விமர்சனத்துக்குள்ளான புத்தகம் இதுதான் என்று நினைக்கிறேன். ஏற்கனவே கல்கி போன்றவர்களின் தலையணை சைஸ் புத்தகங்களைப் படித்திருகிறேன். அனால், விஷ்ணுபுரத்தில், கலைச்சொற்கள் மிகுதி, கடின நடை, போன்ற விமர்சனங்களே மிகுதியாக இருந்ததால், இதனுள் கொஞ்சம் தயங்கித்தான் நுழைய நேர்ந்தது. பின்னர், படித்து முடித்ததும், Lord of the Rings – மற்றும் Matrix Trilogy பார்த்தது போலிருந்தது.

நிறைய விமர்சகர்கள், இது ஒரு இந்துத்துவா நாவல் என்று வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. மாறாக இது, இந்து மத ஆச்சார்யர்களை,
பண்டிதர்களை, ஏகத்துக்கும் கிண்டல் செய்கிறது. ஒரு உதாரணம் இங்கே..
“ஆற்றோரமாக சிறு சிறு பலிதேவதைப் பீடங்கள் இருந்தன. அவற்றருகே மட்டும் அவ்வபோது நின்று, பின்னால் வந்த கார்மிகனின் கையிலிருந்த தாம்பாளத்திலிருந்து மலரும் அட்சதையும் எடுத்துத் தூவி வணங்கினார். ‘பரதேசத்து நாய்தான் கல்லைக் கண்டால் அடையாளம் வைத்துப் போகும்’ என்று ஒரு வித்யார்த்தி ரகசியமாகக் கூறினான்’ மற்றவர்கள் கிளுகிளுவென்று சிரித்தார்கள் ”

Continue reading