1. விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
எழுதியவர் : விசு என்கிற விஸ்வநாதன்

சிலிகான் ஷெல்ஃப்
விஷ்ணுபுரத்தின் ‘கதை’ பற்றி, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், சிறுகுறிப்பு வரைக, என்று பரிட்சையில் கேள்விகேட்டால், கீழ்கண்டவாறு எழுதுவேன். (விஷ்ணுபுர நாவல் மூன்று பகுதிகளாக ஆனது.)
விஷ்ணு யுகத்திற்கு ஒரு முறை புரண்டு படுப்பார் என்பது ஐதீகம். தென்னாட்டின் தென்கோடியில் உள்ள ஊர் விஷ்ணுபுரம். காலாகாலமாக, விஷ்ணுபுரத்தை நோக்கி தாந்திரீகர், வைதீகர், சமணர், பௌத்தர், காளாமுகர், வேதாந்திகள் என எல்லா மரபினரும் ஞானத்தைத் தேடி வந்த வண்ணம் உள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் தென்னாட்டில் நடந்த ஞான விவாத சபையில், மற்ற மரபுகளை வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக வைதீக மரபை நிலைநாட்டியவர் வடநாட்டினரான அக்னிதத்தர். நான்காம் நூற்றாண்டில், அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதத்தில் வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்தத்தை நிலைநாட்டியவர் அஜிதர். பௌத்தத்திலிருந்து சமணம். பின்பு மீண்டும் வைதீகம். விஷ்ணுபுரத்தின் சொல் எதுவோ, அதற்குக் கட்டுப்பட்டது, மதுரையை ஆளும் பாண்டியனின் கோல்.
நாவலுடைய முதல் பகுதியின் காலம், பக்தி மரபு ஓங்கியிருந்த பத்தாம் நூற்றாண்டு. கதைக்களம், விஷ்ணுபுரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஶ்ரீபாதத் திருவிழா. பத்தாம் நூற்றாண்டில் விஷ்ணுபுரத்தின் சொல்லாக இருக்கும் வைதீக மரபின் காவலராக இருப்பவர் சூர்யதத்தர். திருவிழாவின் ஒரு பகுதியாக கூடும் தர்க்க விவாத சபையில் தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றி, பெறும் பரிசில் மூலம், தன் வறுமை நீங்கும் என்ற கனவோடு தன் மனைவி, மக்களுடன் வரும் சங்கர்ஷணன், சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்டு, காவியக் கனவு கலைந்து, ஒரு விபத்தில் மகனைப் பறிகொடுத்து, கணிகையர் வீதியில், பத்மாட்சி எனும் கணிகையிடம் சென்று சேர்கிறான். விஷ்ணுபுரத்தில் உள்ள வைதீக குருகுலத்தைச் சேர்ந்த பிங்கலன் என்ற இளம் சீடன், வைதீகத்திலும், தன் குருகுலத்திலும் நம்பிக்கை இழந்து, குருகுலத்தை விட்டு வெளியேறி, சாருகேசி எனும் கணிகையிடம் தஞ்சமடைந்து போகத்தின் எல்லைக்கும் ஞானத் தேடலின் எல்லைக்கும் இடையே முடிவின்றி அலைகழிக்கபடுகிறான். சங்கர்ஷணனின் மனைவியான லட்சுமி, மகனை இழந்த துக்கதிலிருந்து மீள, ஒரு பஜனை கோஷ்டியில் சேர்ந்து, பின்பு பிங்கலனில் தன் மகனை ‘கண்டடைந்து’, துக்கத்திலிருந்து மீள்கிறாள். சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்ட சங்கர்ஷணன், அதிகார பகடையாட்டத்தின் ஒரு பகுதியாக சூர்யதத்தராலேயே ஞான சபையில் காவியம் அரங்கேற்ற அழைக்கப்படுகிறான். ஞான சபையை அவமதிக்க, பத்மாட்சி இல்லாமல் காவியம் அரங்கேறாது என்கிறான் சங்கர்ஷணன். கணிகையான அவளின் தூய்மையை சோதிக்க நடக்கும் அக்னிப் பரிட்சையில் ‘வெல்லும்’ பத்மாட்சியை காவிய தேவதையாக்கி, சிலை வைக்க உத்தரவிடுகிறார், விஷ்ணுபுரத்தில் ‘புதிதாக எதுவும் நிகழ்ந்துவிடாமல்’ பார்த்துக்கொள்ளும் சூர்யதத்தர். தன் காவியத்தை அரங்கேற்றிய பின், லட்சுமியுடன் மீண்டும் இனைந்து, விஷ்ணுபுரத்தில் நடக்கும் கேலிக்கூத்துகளால் மனம் வெறுத்து, விஷ்ணுபுரத்தை விட்டுச் செல்கிறான் சங்கர்ஷணன்.
Continue reading →