எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தத்துவம் – ஒரு எளிய அறிமுகம்
சிந்திக்கும் பழக்கம் உடையவர்களில் கூட ஒரு சாரார் தத்துவத்தில் தங்களுக்கு ஆர்வமில்லை என்று கூறுவது வழக்கம்.
தத்துவ பழக்கமற்றவர்களின் சிந்தனை தெளிவற்றதாகவும், அகவய அபிப்ராயமாகவும் இருப்பதை காணலாம்.
தத்துவத்தின் மீதான இந்த வெறுப்புக்கு என்ன காரணம்? தத்துவம் வெறும் தருக்கங்களில் போட்டி ஆட்டம்தான் என்ற மனச்சித்திரம் உருவாவது தான்.
எளிமையாக கூறப்போனால் தத்துவம் என்பது அனைத்து அறிவுத் துறைகளிலும் உள்ள தருக்கங்களின் தொகுப்பு. இத்தருக்க நிலைகளை அந்தந்தத் துறைகளை சார்ந்த நிதரிசனக்களுடன் பொருத்திப் பார்த்து விரித்தெடுத்துக்கொள்வது தத்துவ மாணவனின் வேலை. அப்படி விரித்து எடுக்காமல் தருக்கங்களை வெறும் சதுரங்கக்காய்களாக மட்டும் பார்க்கும் போதுதான் மேற்குறிப்பிட்ட சலிப்பு ஏற்படுகிறது.
உதாரணமாக இதை எழுதும்போது எனக்கு தாகமெடுக்கிறது. டீ குடிக்க சாலையில் இறங்குகிறேன்.ஒரு லாரி என்மீது மோதி உயிர் துறக்கிறேன். அப்படி என்றால் நான் எழுதத் தொடங்கிய விஷயத்திற்கு என்ன அர்த்தம்? என் மரணத்துக்கு என்ன அர்த்தம்? இதே போல கண்டிப்பாக நாம் அனைவரும் ஏதாவது ஒரு தருணத்தில் யோசித்திருப்போம்.
மேற்கொண்டு யோசிக்கும்போது நமக்கு இரு விடைகள் கிடைக்கும். ஒன்று: என் எழுத்து முடிவடையாமல் போனது, என் மரனம் எல்லாமெ ஒரு தற்செயல்தான். இரண்டு: நம்மால் அறிய முடியாத ஒரு மாபெரும் செயல்திட்டத்தின் ஒரு சிறு பகுதிதான் இது.
இந்த இடத்தில் நாம் நின்றுவிடுவோம். தத்துவார்த்தமாக சிந்திப்பவன் மேலே செல்லுவான். அப்படி என்றால் இந்த பூமியில் நடக்கும் கோடிக்கணக்கான செயல்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தோடர்புள்ள தற்செயல்கள் மட்டும்தானா? இல்லை, நமக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்திட்டம் அவற்றுக்கு பின்னால் உள்ளதா?
தத்துவச் சிந்தனை இதை வெரும் தருக்கமாக பொதுமை படுத்திக்கொள்ளும். தற்செயல்வாதமா? இல்லை பெருந்திட்டவாதமா?’ என்று இக்கேள்வியைக் கூர்மை படுத்தும். இரு தரப்புக்கும் தேவையான தருக்கங்களை கண்டுபிடித்துத் தொகுத்து விவாதித்தபடியே போகும்.
நாம் தத்துவத்திற்குள் நுழையும்போது காண்பது,இவ்வாறு பொதுமை படுத்தி கூர்மை படுத்தப்பட்ட தருக்கங்களை மட்டுமே. ஆகவே இது வெறும் தர்க்க விளையாட்டு என்ற மனச்சித்திரம் தோன்றிவிடுகிறது.
உண்மையில் இந்த தருக்கங்கள் அனைத்துமே நமது அன்றாட வாழ்வுடன் மிகவும் சம்பந்தப்பட்டவை. நமது ஒவ்வொரு சிந்தனையையும் செயலையும் தீர்மானிப்பவை. நமக்கு தத்துவ ஆர்வம் இல்லை என்றால் நமக்கும் தத்துவத்திற்கும் தொடர்பு இல்லை என்று பொருளல்ல. மின்சாரத்தை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோருக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது அல்லவா?
தத்துவம் வெறும் தர்க்கங்களாக முன் வைக்கும் சிந்தனைகளை நடைமுறைத் தளத்துக்கு விரிவுபடுத்திகொள்ள நமக்கு முடியுமென்றால், தத்துவம் மிகமிக ஆர்வமூட்டும் துறையாக ஆகிவிடும்
நமது வீட்டில் ஒரு மின்சாரக் கருவி உள்ளது. அது சில மின்காந்த விதிகளின்படி செயல்படுகிறது. இக்கருவியைப் பழுதுபார்க்க வேண்டுமெனில் அதன் செயல்முறையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அச்செயல்முறைக்கு அடிப்படையாக உள்ள மின்காந்த விதிமுறைகளை கற்பதுதான் முதன்மையான வழிமுறை, இல்லையா?
அதுபோல ஒரு அறிவுத்துறையை கற்க, அவ்வறிவுத்துறையின் ஆதாரமான செயல் விதிகளை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு தத்துவம் உதவிகரமானது. உதாரணமாக ஒரு கலை விமர்சகர் இந்த ஓவியம் அழகானது, அழகற்றது என்று விமரிசிக்கிறார். அழகு என்றால் என்ன என்று அவர் ஆராயத்தொடங்கினால் தத்துவத்துக்குள் இறங்கிவிடுகிறார். அழகுக்கும் பண்பாட்டுக்கும் இடையேயான உறவு என்ன என்ற கேள்வியை ஒரு தத்துவவாதி எழுப்பிகொள்ள மேற்கண்ட இருவரும் உதவுவார்கள்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் எந்த துறை மிகுந்த தீவிரத்துடன் செயல்பட்டுப் புதிய கேள்விகளை எழுப்புகிறதோ அந்த துறைக்கு நெருக்கமானதாகத் தத்துவம் இருக்கும். அந்தத்துறையில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் தத்துவத்துக்குள் வரும்.
கடந்த காலத்தில் மதத்திற்கும் மிக நெருக்கமானதாகத் தத்துவம் காணப்பட்டது. பிற்பாடு அது அரசியல் சித்தாந்தங்களை ஒட்டி செயல்பட்டது. கடந்த ஐம்பது வருடங்களை எடுத்து பார்த்தால் மொழியியல், உயர் பெளதீகம், நரம்பியல், மரபணுவியல் முதலிய துறைகளில் உருவான அடிப்படைப் பிரச்சினைகளைத் தத்துவம் எடுத்துப் பேசியிருக்கிறது என்று காணலாம்.
உதாரணமாக ரஸ்ஸல் உயர் பெளதீகத்தைச் சார்ந்து சிந்தித்திருக்கிறார். விட்ஜென்ஸ்டைன் மொழியியல் பிரச்சினைகளை ஆராய்ந்தார். கார்ல் பாப்பர் பரிணாமக் கொள்கைகளை ஆராய்ந்தார். நாம் சாம்ஸ்கி மொழையியலையும் நரம்பியலையும் குறித்து ஆராய்ந்தார்.
ஆகவே எந்த துறையிலாவது ஆழமான சிந்தனைக்குள் போக வேண்டுமெனில் கண்டிப்பாகத் தத்துவ பயிற்சி அவசியம். அதை தவிர்க்க முடியாது. இலக்கியத்தில் கூட ‘தத்துவமின்றி நாவல் இல்லை’ என்று கூறப்படுவதுண்டு. இலக்கிய விமர்சனம் என்பது தத்துவத்தின் கிளை போலவே இயங்கக்கூடியது.
தத்துவத்தை பயில்வது எப்படி?
தத்துவக்கல்வியில் சலிப்பு ஏற்பட முக்கியமான காரணம் அவற்றை நான் சரியான முறையில் படிக்காததுதான். நமது கல்விக் கூடங்களில் தத்துவத்தைப் பற்றிய தகவல்கள்தான் கற்பிக்கபடுகின்றனவேயொழிய தத்துவமல்ல. தகவல்களைக் கற்று மூளையில் சேமிப்பது மிகவும் சோர்வு தருவது.
தத்துவம் என்பது தருக்கங்கள் என்று சொன்னேன். தருக்கம் எப்போதுமே இரு பக்கங்களுக்கும் நடக்கும் விவாதம் தான். (இதை சுபக்கம் பரபக்கம் என்பார்கள் இந்திய மரபில்.) இதை ஒர் ஊஞ்சல் என்று கூறலாம்.
பழங்காலத்தில் விவாதமாகவே தத்துவம் கற்பிக்கப்பட்டது. குருவும் சீடர்களும், சீடர்களுக்குள்ளே உள்ள குழுக்களும் ஒரு தலைப்பு குறித்து விவாதிப்பார்கள். மாறி மாறி எதிர்த்து வாதிடுவார்கள். அப்போது இரு பக்கங்களும் துலங்கி அத்தலைப்பு தெளிவுபட்ட படியே வரும்.
ப்ளேட்டோ, சாக்ரடீஸ் முதல் தொடங்கும் மேலைத்தத்துவம் விவாத வடிவில் தான் ஊள்ளது. நமது பண்டைய தத்துவச் சிந்தனைகள் முழுக்க விவாதங்களாகவே உள்ளன. என் வணக்கத்துக்குறிய ஆசிரியர் நித்ய சைதன்யயதி தத்துவத்தை விவாதமாவே கற்பிப்பார்.
கட்டுரை வடிவில் தத்துவம் எழுதப்படும்போது இரு பக்கங்களையும் அதுவே கூறிச் செல்கிறது. அப்போது ஒர் ஊஞ்சலை தள்ளி நின்று பார்ப்பது போல சலிப்பு ஏற்படுகிறது. இதை வெல்ல தத்துவ விவாதத்தில் நாமும் ஈடுபடவேண்டும்.
இதற்கு இரு வழிகள் உள்ளன. ஓன்று அத்தத்துவ ஆசிரியர் கூறுவதற்கு எதிராக – மறு தரப்பாக – நம்மை வைத்துக்கொண்டு மானசீகமாக விவாதித்து பார்ப்பது. இது நம் மூளையைத் தூண்டி நம்மை ஆர்வத்துடன் அதில் ஈடுபடுத்தும். நமது சிந்தனையையும் வலுப்படுத்தும்.
இரண்டு, அத்தத்துவ ஆசிரியர் ஒர் உதாரணம் கூறினால் அதனுடன் நமது செந்த அனுபவத்தில் இருந்து ஒர் உதாரணத்தையும் போட்டு பார்ர்பது. இது நமது கற்பனையை விரியச்செய்து தத்துவக் கொள்கைகளைப் புரியவைக்கும். மேலும் பொதுவான தத்துவத் தருக்கத்தை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டுவரவும் உதவும்.
உதாரணமாக, மிஷெய்ல் ஃபூக்கோ சமூக அதிகாரம் எப்படி செயல்படுகிறது என்பதை காட்ட ஒரு உதாரணத்தைக் கூறுகிறார். பெரிய சிறைகளில் கண்காணிப்பு கோபுரம் இருக்கும். அங்கிருந்து எல்லா அறைகளையும் பார்க்க முடியும்.அறைகளில் இருந்து அதை பார்க்க முடியாது. அந்நிலையில் தாங்கள் கண்காணிக்கபடுவதான உணர்வு எப்போதுமே கைதிகளிடம் இருக்கும். அவர்கள் தங்களை தாங்களே கட்டுப் படுத்திக் கொள்வார்கள். கண்காணிப்பு கோபுரத்தில் ஆள் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுபோலதான் அரசாங்கமும்.
நான் என் அப்பாவை நினைவு கூர்ந்தேன். நாங்கள் படிக்க அமரும் மேஜைக்கு அருகே ஒரு சன்னல். அதில் ஒரு வெடிப்பு. அதன் வழியாக அப்பா எங்களை சிலசமயம் பார்ப்பார். அதை நாங்கள் அறிய முடியாது. பிறகு அச்சன்னலெ எங்களை கண்கணிக்க ஆரம்பித்தது. ஃபூக்கோவை என் சொந்த வாழ்வில் போட்டுப் பார்க்க முடிகிறது இல்லையா?
படித்தவற்றைத் தொகுப்பதிலும் சிறந்த வழி ஒன்று உண்டு. படித்தவற்றைப் பிறருக்கு விளக்கி கூறுவது போலவோ, பிறருடன் விவாதிப்பது போலவோ காற்பனை செய்துகொண்டு யோசிப்பதுதான் அது.
அடுத்த பதிவில் “பழங்கால தத்துவம் இன்றைக்கு எதுக்கு?”…