எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தரிசனங்களின் அடிப்படைகள்
தரிசனம் என்றால் என்ன?
இந்து மெய்ஞான மரபு என்பது இந்துத் தரிசங்களின் வரிசையே. அவற்றை அறிவதற்கு முன்பாக ‘தரிசனம்’ என்றால் என்ன என்று அறிந்தாகவேண்டிய அவசியம் உள்ளது.
’தரிசனம்’ என்ற வார்தையானது சமஸ்கிருதத்திலே பலவாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு பொருள்மயக்கம் அதிகம். சரியானபடி மொழிபெயர்த்தால் தரிசனம் என்பதற்குக் ‘காட்சி’ என்று மட்டும்தான் பொருள் வரும். அப்பொருளில் தான் அது சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது.
பக்தி மரபில், இறைவனைக் காண்பதைத் தரிசனம் என்கிறார்கள். தன் அகத்தில் இறைவனைத் தரிசிப்பதையும் ஆலயத்திற்குப் போய் வணங்குவதையும் தரிசனம் என்றே கூறுவார்கள்.
மெய்ஞான மரபில் இச்சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உண்டு. அன்றாட வாழ்வில் நாம் புழங்கும்போது நமக்கு தேவைக்கு ஏற்பவும், நமது இயல்புக்கு ஏற்பவும்தான் ஒவ்வொன்றும் நமக்கு காட்சி அளிக்கின்றன. இக்காட்சிகள் குறையுடையவை. முழுமை இல்லாதவை. அன்றாட வாழ்வின் தளத்திலிருந்து விடுபட்டு நமது மனம் தன்னைத்தானே முழுமையாக காணும் நிலையில் இருப்பதை அகவிழிப்பு நிலை என்கிறோம். இதை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையில் விளக்குகிறது என்பதை நாம் அறிவோம். அத்துடன் விளக்கத்துக்கு அப்பாற்பட்ட ஓர் ஆழ்நிலை இது என்பதையும் நாம் அறிவோம்.
இந்த சூழ்நிலையில் நாம் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகவும், முழுமையாகவும் பார்ப்பதையும் ‘தரிசனம்’ என்று மெய்ஞான மரபு குறிப்பிடுகிறது. அதாவது, தரிசனம் என்பது வேறு, பார்வை என்பது வேறு. பார்வை, சாதாரணமாகப் பார்த்து அறிவது. தரிசனம், அகவிழிப்பு நிலையில் பார்த்து அறிவது.
இவ்வாறு அகவிழிப்பு நிலையில் வாழ்க்கையும் பிரபஞ்சத்தையும் ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும் பார்த்து அறிந்த விஷயங்களைத் தர்க்கப்பூர்வமாகக் கூற முடையும் போதுதான் தத்துவ தரிசனங்கள் உருவாகின்றன. ஆகவே தத்துவ ரீதியாகப் பார்த்தால் தரிசனம் என்பது வழ்க்கை மற்றும் பிரபஞ்சம் குறித்த ஒட்டு மொத்தமான ஒரு பார்வை ஆகும்.
இவாறு மெய்ஞான மரபில் இருந்து பிறந்த தரிசனம் என்ற வார்தையானது பிற்பாடு தத்துவம் முதலிய அறிவுத்துறைகளிலும் இலக்கியத்திலும் சிற்சில மாறுதல்களுடன் பயன்படுத்தபடுவதைக் காணலாம். தரிசனம் என்ற வார்தைக்குச் சமானமன ஆங்கில வார்தை ‘விஷன்’(Vision) என்பதாகும்.
தத்துவத்துறையில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைப் பார்வையை எல்லாத் துறைகளுக்கும் விரித்தெடுக்க முயன்றால் அதை தரிசனம் என்கிறார்கள். அந்த மூலதரிசனத்தை நடத்திய தத்துவ ஞானியே அந்த விரிவாக்கத்தை நடத்த வேண்டும் என்பது இல்லை. அவரது மாணவர்கள் செய்தால் கூடப் போதுமானது.
அதாவது ஒரு கருத்து (idea) தர்க்கப்பூர்வமாக விவாதிக்கப்படும்போது சித்தாந்தம் அல்லது கொள்கை (theory) ஆகிவிடுகிறது. அதை வாழ்கையின் எல்லாத் தளங்களுக்கும் விரித்தெடுக்கும் போது அது தரிசனம் (vision) ஆக மாறுகிறது. பிராய்டியம் என்பது ஒரு கொள்கை மட்டுமே. மார்க்ஸியம் என்பது தரிசனம். காரணம், மாக்ஸியமானது அரசியல், பொருளாதாரம், ஒழுக்கவியல், இலக்கியம் என்று எல்லாத் தளங்களுக்கும் பொருத்திப் பார்க்கப்படுகிறது
ஒரு குறிப்பிட்ட அறிவுத் துறைக்குள் உருவான ஒரு கருத்து. பிறகு சித்தாந்தமாக விரிவடைந்து அத்துறைக்கு அப்பால் உள்ள எல்லாவற்றையும் விளக்க முற்படுவதாக ஆகும்போது அதையும் தரிசனம் என்று கூறுகிறார்கள். ஐன்ஸ்டீனின் சார்பு நிலைக் ( relativity ) கொள்கை இவ்வாறு குறிப்பிடப்படவேண்டிய ஒரு தரிசனம் ஆயிற்று.
இலக்கியத்திலே தரிசனம் என்பது சற்று வித்தியாசமான பொருளில் பயன்படுத்தப்படுகிறது. வாழ்கையின் ஒரு துறையுடன் ஒர் இலக்கியப் படைப்பு எப்போதும் நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளது. வாழ்கையில் ஒரு தருணத்தில் இருந்து கிடைத்த தூண்டுதலினாலேயே அது பிறக்கிறது.
அந்த இலக்கியப் படைப்பு மிகுந்த வீச்சுடன் ஆழமாக நகருமென்றால் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் தொட்டுக்காட்டக் கூடியதாக அது அமையும். இந்த ஆழமான முழுமையையே இலக்கியத்திலே தரிசனம் என்று கூறுகிறார்கள். உதாரணமாக ஒரு கவிதை பிரிவின் துக்கத்தை பற்றிப் பேச முற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆழமாகப் போகும்போது அது மனித உறவினைப் பற்றி பேசுவதாக ஆகிவிடுகிறது. பிறகு வாழ்க்கையின் அர்த்தம் குறித்து பேசுவதாக ஆகிவிடுகிறது. அதுவே தரிசனம் என்பது.
இந்த தரிசனம் கவிதையிலே ஒரு மின்னல்போல ஒரு வரியில் அல்லது ஒரு உவமையில் வெளிப்பட்டுவிடுகிறது. ‘யாதும் ஊரே’ என்பது அப்படிப்பட்ட ஒரு தரிசனம். காப்பியத்திலும் நாவிலும் அது அந்த ஆக்கத்தின் ஒட்டு மொத்தமாக வெளிப்படுகிறது.
இந்த அர்த்தங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதனை நாம் கவனிக்கலாம். தரிசனம் என்பது மன ஆழத்திலிருந்து பெறப்பட்ட ஒட்டுமொத்தமான பார்வை என்று பொதுவாக நாம் நிர்ணயிக்கலாம்.
இந்திய மெய்ஞான மரபிலே தரிசனங்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் குறிப்பாகப் பார்க்கவேண்டியுள்ளது. இரண்டு வகையான பார்வைகள் உள்ளன. இவை இரண்டுக்கும் இடையேயான குழப்பம் அறிஞர்கள் மத்தியில் கூட எப்போதும் இருந்தபடியே உள்ளது.
மெய்ஞான மரபில், அகவிழிப்பு நிலையில் ஞானிகளினால் அடையப்பெற்ற எல்லா ஒட்டுமொத்தப் பார்வைகளும் தரிசனங்கள் என்றே கூறப்படுகிறது. வள்ளலாரின் ஜோதி தரிசனம் சமீபகாலத்தைய உதாரணமாகும். நடராஜ நிருத்யம் ஒரு பெரும் தரிசனம் என்று ஆனந்த குமாரசாமி கூறியிருக்கிறார்.
ஆனால் வழிபாட்டு முறைகளாக மாறிவிட்ட தரிசனங்களை மதங்கள் என்று குறிப்பிடப்படுவது மரபாக உள்ளது. சைவம், வைணவம், சாக்தேயம் முதலியவை மதங்களாகவே அறியப்படுகின்றன. மதங்களாக வளர்ச்சி அடையாத தரிசனங்களே இன்று தரிசனங்கள் என்று கூறப்படுகின்றன. மதம் என்பது ஒரு தரிசனமும் வழிபாட்டுமுறையும் இணைந்த ஒன்று.
இவ்வாறு மதமாக வளர்ச்சி அடையாத தரிசனங்களில் ஆறு தரிசனங்கள் காலத்தால் பழைமையானவையும் அடிப்படையானவையும். சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் என்பவை அவை. இவற்றையே மெய்ஞான மரபு குறித்த விவாதங்களில் பொதுவாக தரிசனங்கள் என்று குறிப்பிடுவது வழக்கம்.
அதே சமயம் இன்னொரு பொருளும் ‘தரிசனங்கள்’ என்ற சொல்லுக்கு தரப்படுகிறது. அத்வைதம், வசிஷ்டாத்வைதம், துவைதம் முதலிய ஞான வழிகளில் பிரபஞ்ஞத்தைப் பற்றிய மானுடனின் பார்வையானது எவ்வாறு படிப்படியாகப் பரிணாம மாற்றம் அடைகிறது என்று கூறப்படுகிறது. இந்த ஒவ்வொறு படிநிலையும் ஓவ்வொரு தரிசன நிலை என்று கூறப்படுகிறது
இம்மாதிரியான ‘தரிசன நிலைப்பாடு’ கள் குறித்து பெளத்தமும் சமணமும் கூட பேசுகின்றன. இந்த நூலில் தரிசனங்கள் குறித்துப் பேசப்படும் எந்த பொருளுக்கும் இப்படிப்பட்ட அர்த்தம் இல்லை. இரண்டும் முற்றிலும் வேறுபட்டவையே. இந்தத் தளத்தில் தரிசனம் என்பது பெரும்பாலும் மாயக்காட்சி, பொய்த்தோற்றம் என்றே பொருள்படுகிறது.
உதாரணமாக கேரள மெய்ஞானியாகிய நாரயணகுரு ‘தர்சனமாலா’ என்ற நூலை இயற்றியுள்ளார். இதில் அத்யாரோபத் தரிசனம், அபவாதத் தரிசனம், அசத்யத் தரிசனம், பானத் தரிசனம், கர்மத் தரிசனம், ஞானத் தரிசனம், பக்தித் தரிசனம், யோகத் தரிசனம், நிர்வாணம் என்று பத்து தரிசன நிலைகளைப் பற்றி அவர் விவாதிக்கிறார். இவை எதுவுமே வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டங்கள் அல்ல. நாம் பிரபஞ்சத்தை பார்க்கும் பத்துவிதமான தோற்ற நிலைகள் மட்டும்தான். உதாரணமாக அத்யாரோபம் என்றால் உண்மையில் இல்லாத குணங்களை நாம் பொருட்கள் மீது ஏற்றி அவற்றின் சாராம்சமாக அறிந்துகொள்வது ஆகும். உதாரணமாக நீர் குளுமையானது என்று ஏன் சொல்கிறோம்? நமது தசை குளுமையை உணர்வதனால்தான் இதையே அத்யாரோபத் தரிசனம் என்கிறார்.
இதைப்போல பெளத்த ஞான மார்க்கத்திலும், ஒர் உயிர் மெய் ஞானம் அடையும்போது எட்டுவகையான தரிசனங்கள் விலகும் என்றும் தர்மம் மட்டுமே எஞ்சும் என்றும் கூறப்படுகிறது. இவையும் நாம் பிரபஞ்சத்தை அறியும் பல்வேறு படி நிலையின் வகைகளே. நமது அறிதல்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் குறைபட்டவை என்பது பெளத்த மரபுக்கும் அத்வைத மரபுக்கும் பொதுவான நம்பிக்கை. அறிதலின் பூரண நிலையில் அறி பொருள். அறிவு, அறிபவன் என்ற பேதம் இல்லை என்கின்றன அவை.
இந்த தரிசன நிலைகளை தரிசனங்களுடன் குழம்பிக் கொள்ளலாகாது என்பதை இங்கு தெளிவாகக் கூறிவிட வேண்டியுள்ளது. இங்கு நாம் தரிசனம் என்று கூறுவது முழுமையானதும் ஒட்டு மொத்தமானதுமான வாழ்க்கை நோக்கையேயாகும். உள்ளுணர்வின் ஆழத்திலிருந்து பிறந்து தர்க்கத்தின் வழியாகத் தத்துவ நிலைபாடாக ஆனவை அவை.
தரிசனங்களில் மதங்களைப் பற்றி விரிவாகவே பேசவேண்டும். மதங்களில் உள்ள தரிசனம், தத்துவம், வழிபாட்டு முறைகள், சடங்குகள், குறியீடுகள் எல்லாமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. அவற்ரையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் அவற்றைப் பற்றிப் பேசமுடியும். உதாரணமாக சைவ சித்தாந்தத்தை சைவ மரபின் பக்திப் பாடல்களிலிருந்தும். சைவக் கோயில் வழிபாட்டு மரபுகளிலிருந்தும், நம்பிக்கைகளில் இருந்தும் பிரித்துப் பார்த்தால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே அவை வேறு தளங்களில் பேசப்பட வேண்டியவை.
இங்கு பேசப்படுவது தரிசனங்களுகு எல்லாம் அடிப்படையாக அமைந்த ஆறு ஆதி தரிசனங்களைப் பற்றி மட்டுமே. இத்தரிசனங்களை பலவிதமாக வளர்த்து முழுமைப்படுத்திக் கொண்டுதான் பிறகு வந்த எல்லாத் தரிசனங்களும் உருவாகியுள்ளன.’ முனிவர்களில் நான் கபிலன்’ என்று கிருஷ்ணன் கீதையில் குறிப்பிடுகிறான். சாங்கியம் குறித்து கீதையில் விரிவாகவே பேசவும் படுகிறது
பெளத்த சமண மதங்களும், சைவ, வைணவ சித்தாந்தங்களும் எல்லாம் ஆறு ஆதிதரிசனங்களுக்குக் கடன்பட்டவையேயாகும். இந்த ஆதிதரிசனங்களைத் தெளிவுற அறியாமல் இந்து மெய் ஞான மரபின் உள்ளோட்டங்களைப் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாது. இன்று இந்ததரிசனங்கள் தங்கள் தூய நிலையில் எங்கும் பின்பற்றப்படுவதில்லை. இப்போது கிடைக்கும் சில மூல நூல்களில் இருந்தும் உரைகளில் இருந்தும் இவற்றைப்படிப்படியாக உருவாக்கி அறிய வேண்டியதுள்ளது.
ஆனால் பேரப்பிள்ளைகளின் மரபணுக்களில் (ஜீன்) வாழும் தத்தா பாட்டிகளைப் போல இத்தரிசனங்கள் நமது மரபின் எல்லா சிந்தனைகளிலும் வாழ்கின்றன. இன்னும் சொல்லபோனால் சமீபகாலத்தில் இந்து மெய்ஞான மரபில் உருவான புதிய போக்குகளில்கூட இவற்றின் பாதிப்பு உண்டு. தத்துவார்த்தமாகப் பார்த்தோமெனில் நமது சிந்தனைப் போக்குகளில் எல்லாம் இவற்றின் கூறுகளைக் கண்டடைய முடியும்.
அடுத்து வருவது..
தரிசனங்களின் அமைப்பு முறை