6. தரிசனங்களின் அடிப்படைகள் – தரிசனங்களின் பின்னணி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள் 

தரிசனங்களின் பின்னணி

இந்து ஞான மரபுக்கு ஒரு எளிய வரைபடத்தினை உருவக்கிக் கொண்டோமெனில் அதில் ஆறு தரிசனங்களையும் அடையாளப்படுத்தி அறிவது மிகவும் எளிதாக இருக்கும். பொதுவாக ஒரு சூழலின் சிந்தனைத் தளத்தில் செயல்படுபவர்கள் அச்சூழலின் சிந்தனை மரபு, வரலாற்று மரபு ஆகியவை குறித்து ஒரு மன வரைபடத்தினை கொண்டிருப்பது மிக அவசியம்.

இந்து ஞான மரபுக்கு தொன்மையான காலம் தொட்டு ஒரு பாடத்திட்டம் இருந்துள்ளது. புராதன நூல்களில் அந்த வைப்புமுறை மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது. வேதங்கள், ஆறுதரிசனங்கள், ஆறு மதங்கள், மூன்று தத்துவங்கள் ஆகியவைதான் அந்த பாடத்திட்டம்.

வரலாற்று ரீதியாக நாம் இந்து ஞான மரபை வேறு வகையான பகுத்துப் பார்க்கலாம். இது வேத காலம் முதல் இன்றுவரை உள்ள ஒட்டு மொத்த மரபை வகுத்துப் புரிந்துகொள்வதற்கு உதவும். இப்பிரிவினை சிந்தனைப் போக்குகளையும் அவை உருவான கால கட்டங்களையும் இணைந்து பார்க்கும்போது உருவானது.

இந்து ஞான மரபினை எட்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். (1) வேத காலகட்டம் (2) உபநிடத  காலகட்டம் (3) தரிசன காலகட்டம் (4) அவைதிக மதங்களின் காலகட்டம் (5) பக்தி கால கட்டம் (6) பிற்கால வேதாந்தங்களின் கால கட்டம் (7) இந்து மறுமலர்ச்சிக் கால கட்டம் (8) இந்து நவீனப் போக்குகளின் காலகட்டம்

இவற்றில், பல பழங்கால மரபுகளின் வரலாற்றுக் காலகட்டங்களைத் தெளிவாக அறுதியிட்டு கூற முடியாது. எனவே அவற்றை கால வரிசைப்படி அடக்க முடியாது. சிந்தனையின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையிலேயே அடுக்க முடியும். எனினும் இவ்வரிசை மூலம் நம் மரபு எப்படி வளர்ந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.1.   வேத காலகட்டம்

நாம் இன்று அறிய முடிகிற இந்து ஞான மரபின் தொடக்கப்புள்ளி வேதங்களேயாகும். இவற்றின் காலம் குறித்த விவாதங்களுக்கு எல்லையே இல்லை. முதற்கட்ட ஐரோப்பிய ஆய்வாளர்கள் இவற்றுக்கு அளித்த கால நிர்ணயம் தவறு என்றும் இவை மேலும் பழைய காலகட்டத்தை சேர்ந்தவை என்றும் இப்போது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

வேதங்கள் தத்துவ நூல்கள் அல்ல. மதநூல்களும் அல்ல. அவற்றைப் புராதன பிரார்தனைப் பாடல்களின் தொகை என்று கூறுவதே பொருத்தமுடையது. அவற்றில் தத்துவச் சிந்தனையின் பல கூறுகள் உள்ளன. பிற்காலத்தில் இந்து மதமாக வளர்ந்து வந்த வழிபாட்டு முறைகளையும் அவற்றில் காணலாம். ஆயினும் அடிப்படையில் வேதங்கள் கவிதைகளே ஆகும்.

வேதங்களின் மொழி மிகப்பழமையானது. பிற்காலத்தில் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படும் வேர்ச்சொற்கள்தான் வேதமொழியில் உள்ளன. அதாவது, வேர்ச்சொற்கலிலாலான கவிதைகள் இவை. ஆகவே இவற்றுக்குப் பொருள் கூறுவதில் மிகப்பெரிய முரண்பாடுகள் ஆராய்ச்சியாளர் மத்தியில் காணப்படுகின்றன. திட்டமிட்டு கூறப்பட்ட பொய்யான பொருட்களும் இல்லாலமலில்லை.

வேதப்பாடல்கள் பல நூற்றாண்டுகளாக சடங்குகளின்போதும் கொண்டாட்டங்களின் போதும் பாடப்பட்டவை. வெவ்வெறு கவிஞர்களால் இயற்றப்பட்டவை. பல காலம் வாய்மொழியில் வாழ்ந்தவை. பிறகு இவை தொகுக்கப்பட்டன. பிற்பாடும் இவை பெரும்பாலும் வாய்மொழி மரபு மூலமே பயிலப்பட்டன; பேணப்பட்டன. ஆகவே இவற்றுக்கு ‘எழுதாக் கிளவி’ என்று பெயர் உண்டு. சமஸ்கிருதத்தில் ‘சுருதி’ ( கேட்கப்படுவது) என்று இவை கூறப்படுகின்றன.

வேதங்களின் முக்கியமான சிறப்பியல்புகள் இரண்டு. ஒன்று: பல்லாயிரம் வருடங்களாகியும் கூட மாறுதலில்லாத தூய பிரதிகளாக இன்று கிடைப்பவை அவை மட்டுமே. இரண்டு: எழுத்துவடிவ பிரதிக்கு அதாரமாக உச்சரிப்புகளை எடுத்துக் கொள்ள முடியக் கூடிய படைப்புகளும் இவை மட்டுமே.

இந்த இரு இயல்புகளுமே, வேதம் எழுதாக் கிளவியாக தொடர்ந்து பேணப்பட்டதன் விளைவுகள் என்பதைக் காணலாம். ஒரு இலக்கியப் பிரதியைப் பேண அதை எழுத்து வடித்துப் போற்ற வேண்டும் என்ற எண்ணம் உடைய நமக்கு இது வியப்பு தருகின்றது. எழுதப்படாத காரணத்தாலேயே வேதத்தை உரிய உச்சரிப்புகளுடன் பயின்று பேணி வருவதற்க்குத் தனியான குலங்களும், குருபரம்பரைகளும் உருவாக்கப்பட்டன. எழுதப் படாத காரணத்தால்தான் அவற்றின் உச்சரிப்பு முறைக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. எழுதப்பட்ட நூல்களில் எராளமான இடைச்செருகல்களும், எழுத்துத் திரிபுகளும் ஏற்பட்ட போது வேதம் இந்தியா முழுக்க தன் அசலான நிலையிலேயே இன்று வரை பேணப்படுகிறது.

வேதங்களில் உள்ள சொற்கள், மொழியின் ஆதிநிலையில் இருந்த வேர்ச்சொற்கள் என்பதைக் கண்டோம். வேதங்களின் உச்சரிப்பு முறை (குறிப்பாக எற்ற இறக்கங்கள்), கூடவே உள்ள சைகைகள் ஆகிவற்றுடன் தொடர்பு படுத்தி அவற்றின் பொருளையும் அறியும் போதுதான் தெளிவான சித்திரம் உருவாகும். வேதங்களை ஆராய்ந்து ஆரம்பகட்ட ஆய்வாளர்கள் நிகழ்த்திய பெரும் பிழைகள் பல இப்போது சுட்டிக் காட்டப்படுகின்றன. அவை ‘எழுதப்பட்ட’ வேதவரிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாசித்தமையின் விளைவுகளாகும்.

வேதவரிகளை ஒரு சாரார் அப்படியே நேரடியான அர்த்தத்தில் எடுத்துகொண்டு பொருள் கூறுகிறார்கள். இன்னொரு சாரார் வேதங்களில் ஒவ்வொரு வரிக்கும் வலிந்து கவித்துவ அர்த்தம் கண்டுபிடித்துக் கூறுகிறார்கள். இரண்டு போக்குகளுமே அபாயகரமானவை. வேதங்களின் அடிப்படையான கவித்துவ உணர்ச்சியை அளவுகோலாக வைத்து வேதங்களை மதிப்பிடுவதே சரியானதாக இருக்கும்.

கற்கள் நிரம்பிய நதி

ஒடிக் கொண்டிருக்கிறது

தோழர்களே

ஒன்றாக முன்னேறுங்கள்

தலை நிமிர்ந்து

இந்நதியைத் தாண்டிச் செல்லுங்கள்

என்ற வரியை கவித்துவமாகவே வாசிக்க முடியும். அந்த நதி சரஸ்வதியா கங்கையா என்று விவாதிப்பதனாலோ, வேதகால மக்கள் நதியைக் கண்டு மிகவும் அஞ்சினர், அவர்களுக்கு நீந்தத்தெரிந்திருக்கவில்லை என்று ஆராய்ச்சி செய்வதாலோ எந்தப் பொருளுமில்லை. அதே போல வெண்குதிரைகள் என்று ரிக்வேதம் குறிப்பிடுவது சூரிய ஒளியைத்தான் என்று அதீத குறியீட்டு அர்த்தம் கொடுப்பதும் தவறானதே.

வேதங்களின் கணிசமான பகுதி நேரடியான எளிய பிரார்த்தனைகளே. தங்களுக்கு தேவையானவற்றை இறைச் சக்திகளிடம்கோரியும் தங்களுக்குப் பிரியமானவற்றை அந்த சக்திகளுக்குச் சமர்ப்பனம் செய்தும் பாடப்பட்டவை அவை.

தேவனே

எங்களுக்கு உடல் பலத்தை அருள்க

எங்கள் வளர்ப்பு மிருகங்களுக்கு

வலிமை அருள்க

எங்கள் குழந்தைகளுக்கும்

வாரிசுகளுக்கும்

உயிர்ச்சக்தி அருள்க

அவர்கள் நெடுனாள் வாழ்க

நீ எங்களுக்கு

வல்லமையை அருள்பவனல்லவா?     (ரிக் III 53,28 )

இம்மாதிரியான பிரார்த்தனைகளே வேதத்தில் அதிகம் காணப்படுகின்றன.

அதே சமயம் இப்பிரார்தனைகளில் கவித்துவமான முறையில் பிரபஞ்சத் தரிசனத்தின் சாரமான பகுதிகளும் காணக்கிடைக்கின்றன. கவித்துவ மின்னல்களாக இவை தென்பட்டு மறைகின்றன என்று கார்பே எனும் வேத ஆய்வாளர் கூறுகிரார். உதாரணமாக,

வருணன்

காட்டில் மரக்கூட்டங்களைப் படைத்தான்

வீடுகளுக்கு உயிர்துடிப்பும்

பசுக்களுக்குப் பாலும்

இதயங்களுக்கு ஞானமும் அளித்தான்

நீருக்குள் அக்னியையும்

வானில் சூரியனையும்

மலைகளில் சோமரசத்தையும் வைத்தான் (ரிக் V 85, 2)

இவ்வரியில் குறிப்பிட்டத்தக்கது ‘நீருக்குள் அக்னி’ என்ற சொல்லாட்சியாகும். கண்ணுக்கும் மனதுக்கும் தென்படும் காட்சிக்கு அப்பால், தருக்கப் புத்திக்குத் தட்டுப்படாத ஒரு உண்மை குடி கொள்கிறது என்ற ஞானம் இவ்வரிகளில் தென்படுகிறது. அதாவது, இது நேரடி வரி அல்ல, கவிதை.

ஒட்டு மொத்தாமாக வேதங்களை எடுத்துப் பார்க்கும்போது கவித்துவமான மொழியில் வெளிப்படுத்தப்பட்ட ஞனத் தரிசனங்கள் மூன்று புள்ளியில் குவிவதைக் காணலாம். ஓன்று; நாம் கண்டு அறியும் எல்லாப் பொருள்களும் எல்லா விஷயங்களும் அடிப்படையில் ஒன்றே. அந்த ஒன்றின் தோற்றமே இவை எல்லாம். இரண்டு: நாம் கண்டு அறியும் ஒவ்வொன்றும் நம்முடைய அறிவின் இயல்புக்கு ஏற்ப நமக்கு தென்படுபவையாகும். மூன்று: நமக்கு வெளியே நம்மைச் சுற்றி எதையெல்லாம் தேடுகிறோமோ. அவற்றையெல்லாம் நமக்கு நாம் அறிய முடியும்.

ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தை வேதஞானம் திரண்ட பகுதி என்று ஆய்வாளர்கள் குறித்திருக்கின்றனர். இப்பகுதியில் மேற்குறிப்பிட்ட தரிசனங்கள் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன. அங்குள்ள ‘சிருஷ்டி கீதம்’ என்ற புகழ் பெற்ற பாடல், உலக ஞான மரபின் முதல் வெளிச்சம் என்று புகழப்படுகிறது. இந்த நிமிடம் வரை மானுட ஞானத்தேடலை முன்னால் செலுத்தி வரும் அடிப்படையான கேள்விகள் முழுக்க அந்தப் பாடலில் உள்ளன. இன்கு குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உண்டு. இந்து ஞானமரபின் மையம் என்று கருதப்படும் இப்பாடலில் வினாக்கள் மட்டுமே உள்ளன. விடைகள் இல்லை.

ரிக், யஜுர், சாமம், அதர்வம் என்று நான்கு பெரும் தொகுப்புகளாக வேதங்கள் உள்ளன. பத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ரிக் வேதத்தில் 10,600 பதங்கள் கொண்ட 1,017 சூக்தங்கள் உள்ளன. வேதங்கள் நான்குக்கும் அன்னை ரிக் வேதமேயாகும். இதிலுள்ள சூக்தங்களை மற்ற வேதங்களில் மீண்டும் மீண்டும் காணலாம்.

ரிக் வேதத்தின் காலம் கி.மு 1200 –க்கும் 1000-துக்கும் இடையே என்று மாக்ஸ் முல்லர் கூறினார். பிற்கால ஆய்வாளர் கி.மு. 4500-க்கு முன்பே ரிக்வேதம் உருவாகிவிட்டது என்கிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் இவற்றின் காலகட்டதை கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டு என்கிறார். விவாதம் முன்னகரும் போது  டாக்டர் ராதாகிருஷ்ணனின் தரப்பே உறுதிப்பட்டு வருகிறது. இக்காலகட்டத்துக்கு முன்பு, நாகரீக அடையாளங்களே உருவாகியிராத மிகத்தொன்மை வாய்ந்த காலத்தில் எழுதப்பட்ட ரிக்வேத சூக்தங்களும் உண்டு

யஜூர் வேதம் வேள்விச் சடங்களுக்காகத் தொகுக்கப்பட்ட பாடல்கள் அடங்கியது. இதில் 40 அத்தியாங்களில் 1886 மந்திரங்கள் உள்ளன. இவற்றில் பாதிக்கு  மேல் ரிக்வேதத்திலும் உள்ள மந்திரங்கள்தான். சாமவேதம் ‘உத்கீதத்துக்கு’ (பாடுவதற்கு) உரியது எனப்படுகிறது. இதில் 32 அத்தியாங்களில் 460 சூக்தங்கள் உள்ளன. இவற்றில்  75 தவிர மீதம் ரிக்வேத சூக்தங்கள்தான். அதர்வ வேதம் முற்றிலும் தனித்து நிற்கிறது. இதில் 20 காண்டங்களிலாக 131 மந்திரங்கள் உள்ளன. இது குறியீட்டுச் செயல்களுக்கான வேதம்.

அதர்வ வேதம் பொதுவாக வைதீக மரபின் தவிர்க்க முடியாத பகுதியாக கருதப்படவில்லை. சாக்தோய உபநிடதம், ஐதரேய பிராமணம், சதபத பிராமணம், மனுஸ்மிருதி முதலியவை அதர்வண வேதத்தை நிராகரித்து அதிகாரப்பூர்வ வேதங்கள் மூன்றே என்று குறிப்பிடுகின்றன. வேத மரபு பெளராணிக மரபாக மாறியபோது அதர்வவேதம் முழுமையாக நிராகரிக்கப்பட்டது. காரணம், அது தாந்த்ரீக விதிகளைப் பற்றியது. என்பதே. கேரளம், ஒரிசா, வங்கம் முதலிய பகுதிகளில் உள்ள தாந்த்ரீக மதங்களே அதைத் தங்கள் வேதமாகக் கருதின. இந்தியா முழுக்க தாந்த்ரீக மரபு வெறுத்து ஒதுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது.

புராணங்களின்படி, ரிஷிகளின் ரிஷியான வியாசர் வேதங்களைப் பிற ரிஷிகளுக்கு உபதேசம் செய்தார். ரிக்வேதம் பைலனுக்கும், யஜுர் வேதம் வைசம்பாயனுக்கும், சாம வேதம் ஜைமினிக்கும், அதர்வவேதம் சுமந்த்துவிற்கும் உபதேசிக்கப்பட்டன.

ஒவ்வொரு வேதத்துக்கும் அதற்குரிய பிராம்மணங்கள் உண்டு. அதையொட்டி உருவான ஆரண்யகங்கள் உண்டு. உபநிஷதங்களையும் வேதங்களின் கிளைகளாகக் கூறுவது மரபு. பிராம்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷங்கள் ஆகியவற்றை, வேதங்களை விளக்கிக்கொள்ளவும், நடைமுறைக்கு ஏற்ப மறு தொகுப்பு செய்துகொள்ளவும் அக்கால மக்கள் செய்த முயற்சிகள் எனலாம்.

அடுத்து வருவது…

உபநிஷத காலகட்டம்

பின்னூட்டம்