7.தரிசனங்களின் பின்னணி – உபநிஷத காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

உபநிஷத காலகட்டம்

உபநிஷதம் (உபநிடதம்) என்றால் அருகே அமர்ந்து கொள்ளுதல் என்று அர்த்தம். இந்நூல்கள் பெரும்பாலும் குரு சிஷ்யனுக்குக் கூறியவையோ குருசீட விவாதங்களாகவோ அமைந்திருப்பதே இவற்றுக்கு இப்பெயர் உருவாகக் காரணம் என்று ஊகிக்கலாம். நேரடியான தத்துவச் சிந்தனை, இந்திய ஞான மரபில் உபநிஷதங்களில்தான் தொடங்குகிறது. எனவே இந்து ஞான மரபின் எல்லாத் தத்துவ மரபுகளுக்கும் உபநிஷங்களில் வேர்கள் உண்டு.

வேதங்களில் எழுப்பபட்ட அடிப்படை கேள்விகளும்  கண்டடையப்பட்ட அடிப்படையான தரிசனங்களும் மேலும் விரிவாகவும் தருக்கப்பூர்வமாகவும் விவாதிக்கப்பட்டது உப நிடதங்களில்தான். அத்துடன் உப நிடதங்கள் வேத ஞானத்தை மறுதலித்தும் தாண்டியும் செல்கின்றன. இந்த முரண்பாட்டை நாம் தெளிவாக புரிந்துகொள்ளுதல் அவசியம்.

ஒரு சிந்தனை மரபோ ஞான மரபோ அடுத்த கட்டத்துக்கு எப்படிச் செல்கிறது?. அம்மரபில் உள்ள சாராம்சமான சில கூறுகள் விரிவாக வளர்த்தெடுக்கப்படுகின்றன. அம்மரபில் உள்ள சாரமற்ற பல கூறுகள் விமர்சித்து ஒதுக்கப்படுகின்றன. இரண்டும் ஒரே சமயம் நிகழுகின்றன. வளர்ச்சி என்பது இதுவேயாகும்.

உபநிஷதங்களில் வேததரிசனங்கள் பல வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. அதை வைத்து டாக்டர் ராதாகிருஷணன் முதலிய ஆன்மிக பார்வை உடைய தத்துவ ஆய்வாளர்கள், வேதங்களின் தொடர்ச்சிதான் உபநிஷதங்கள் என்கிறார்கள். வேதங்களை கடுமையாக மறுக்கக்கூடிய, எள்ளி நகையாடக் கூடிய பல பகுதிகள் உபநிஷதங்களில் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி, தேவி பிரசாத் சட்டோபாத்யாய முதலிய உலகியல் பார்வை கொண்ட தத்துவ ஆய்வாளர்கள், உபநிஷத காலகட்டம் வேதங்களை மறுத்து எழுந்தது என்கிறார்கள்.

எது உண்மை? இரண்டுமே உண்மைதான். உபநிஷதங்கள் வேதங்களின் தத்துவார்த்த பார்வையாகவும், ஆதி தரிசனங்களையும் ஏற்று வளர்த்தெடுக்கின்றன.

எங்கும் எரியும்

தீ ஒன்றேதான்

எங்கும் ஒளிரும்

சூரியன் ஒன்றேதான்

இவற்றையெல்லாம் ஒளிரவைக்கும்

உஷஸ் ஒன்றுதான்

அந்த ஒன்றே இதெல்லாம்.            (ரிக் VI 58-2)

இதே தரிசனத்தை நாம் சாந்தோக்கிய உபநிஷதத்தில் விரிவாகப் பார்க்கிறோம். ஆருணியாகிய உத்தாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்கு இதே தரிசனத்தை உதாரணங்கள் மூலம் விரிவாக விளக்கிக் கூறுவதே சாந்தோக்கிய உபநிஷதம்.

வானத்துக்கும் அப்பால்

மிக உன்னதத்தில் உள்ள

உலகங்களுக்கெல்லாம் அப்பால்

அனைத்துக்கும் அப்பால்

ஒளிரும் ஜோதிதான்

இங்குள்ள அனைவரிலும்

சுடர்கிறது                     (சாந்தோக்ய உபநிடதம்  III 13-7)

என்கிறது உபநிடதம். வேத தரிசனம் இங்கு மேலும் கவித்துவ உக்கிரம் பெற்றுள்ளது.

அதே சமயம் வேதங்களில் உள்ள உலகியல் வேட்கையையும் வேள்விகர்மங்களின் சுயநலப் போக்கினையும் உபநிஷதங்கள் கடுமையாகக் கண்டிக்கின்றன. (இவற்றை ஆதரிக்கும் உப நிஷதங்களிம் பல உண்டு.) ஸ்வசனவேத உபனிஷதம் ‘ அவதாரங்கள் இல்லை தெய்வங்கள் இல்லை; சொக்கம் இல்லை; நரகம் இல்லை’ என்று கூறுவதை லோகாய தரிசனத்தின் முதல் கட்ட சூத்திரங்களில் ஒன்றாக எம்.என்.ராய் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார்1.

சில உப நிடதங்களில் கடுமையான பிராமணக் கண்டனமும் காணப்படுகிண்றன. சாந்தோக்கிய உபநிடதம் பிராமணர்களை ளையிடும் நாய்களுக்கு உவமிக்கிறது. உபநிடத மரபு வேதங்களின் சடங்கு சார்ந்த உலகியல் நோக்கைக் கண்டிக்கிறது. தத்துவ ஆன்மிக அடிப்படைகளை வளர்த்தெடுக்கிறது

பெரும்பாலான உபநிடதங்களுக்கு நாடகத் தன்மை கொண்ட ஒரு கதைச் சந்தர்ப்பம் இருக்கும். உதாரணமாக நசிகேதனின் தந்தை கோபத்தை ‘ உன்னை எமனுக்கு தந்துவிடப் போகிறேன்’ என்கிறான். தந்தை சொல்லை மெய்யாக்கும் பொருட்டு நசிகேதன் எமனை நாடி வந்து மூன்றுவரம் பெறுகிறான். அவ்வரத்தின்படி, எமன் நசிகேதனுக்கு கூறிய உபதேசங்கள்தான் கடோபநிஷதம்.

இன்னொரு முக்கிய அம்சம், உப நிடதங்களில் உள்ள கூறுமுறை. இவை கவித்துவம் நிரம்பிய உருவக மொழியில்தான் பெரும்பாலும் உள்ளன.இவற்றை மதநூலாகவோ பொருட்படுத்த மறுப்பவர்கள் கூட இவற்றின் கவித்துவம் குறித்துப் பெருமிதம் அடையாமலிருக்க முடியாது.

காலத்தால் மிகவும் பிந்தியது எனினும் பகவத்கீதை ஒரு உபநிடதமேயாகும். அதன் நாடகீய கதைச் சந்தர்ப்பம், கவிதை நடை ஆகியவை உபநிடதங்களை ஒத்துள்ளன. அத்துடன் வேதங்களின் சடங்கு சார்ந்த உலகியல் பார்வையைக் கீதை கடுமையாக நிராகரிக்கிறது. ‘ ஆகவே அர்ச்சுனா, முக்குணங்களிடன் வளர்ந்து நிற்கும் வேதங்கள் என்ற மரத்தை வேருடன் வெட்டி வீழ்த்து வாயாக’ என்கிறது அது ( கீதை ). அதே சமயம் வேதங்களின் தத்துவ மெய்ப்பொருளை விரிவாக்கமும் செய்கிறது.

பல நூறு உபநிடதங்கள் உண்டு என்பது பூராண நம்பிக்கை. ஒவ்வொரு வேதத்துக்கும் அதை ஒட்டி உருவான உபநிடதங்கள் உண்டு என்று மரபு கூறுகிறது.

அதேசமயம் இன்று பார்க்கையில் உபநிடதங்களுக்கு அவற்றின் மூலவேதங்களுடன் உள்ள உறவு தற்செயலானது என்றே படுகிறது. உபநிடதங்களை அழியாமல் காக்கும் பொருட்டு செய்யப்பட்ட எற்பாடாக இது இருக்கலாம். ஒவ்வொரு வேதமும் குறிப்பிட்ட இன/குல மரபுக்கு என ஒதுக்கப்பட்டுருந்தது. உபநிடதங்களையும் அவர்கள் பயின்றாக வேண்டும் என்பதற்காக இந்த பிணைப்பு உருவாக்கப் படிருக்கலாம்.

ரிக் வேதத்துக்கு 42 உபநிடதங்களும், சாம வேதத்துக்கு 90 உபநிடதங்களும், அதர்வண வேதத்துக்கு 52 உபநிடதங்களும் உண்டு என்று கோபிலரின் ‘ சாஸ்திரானுபவம்’ என்ற இலக்கண நூல் குறிப்பிடுகிறது. மொத்தம் 244 உபநிடதங்கள் இருந்தன. நுற்றியெட்டு உபநிடதங்களின் பெயர்களை முக்திகோபநிஷத் பட்டியலிடுகிறது.

அதனல் முக்கியமான உப நிஷதங்கள் பதினெட்டுதான்  என்ற கருத்து அறிஞர்களுக்கு இடையே பிரபலமாக உள்ளது. இவற்றில் சங்கரர் முதலிய முக்கியமான உரையாசிரியர்களால் உரை வகுக்கபட்டவை பன்னிரண்டும்தான். அவை ஐதரேயம், கெளஷீதகம், தைத்ரியம், கடம், ஸ்வேதஸ்வேதரம், பிரகரதாரண்யகம், ஈஸம், கேனம், சாந்தோக்யம்,மாண்டூக்யம், முண்டகம், பிரஸ்னம் இவையே பலராலும் பொருட்படுத்தி விவாதிக்கப்படுகின்றன. பிற  உபநிஷதங்களில் சில இடைக்காலத்து போலி சிருஷ்டிகள் என்று அறிஞர்கள் கண்டடைந்துள்ளனர்.

உபநிஷதங்களின் தத்துவத் தரப்பு என்ன? உபநிடதங்கள் பல வகைபட்டவை. இவை ஒற்றைப் பார்வை உடையவை அல்ல. இவை தத்துவார்த்தமான விவாதங்கள். ஆகவே இவற்றின் தேடல் பல்வேறு திசைகளுக்கும் விரிந்து பரவுகிறது. உரையாசிரியர்கள் இவற்றைப் பல கோணங்களில் விவாதித்துள்ளனர். ஆகவே உபநிஷதங்கள் கூறுவது இதுதான் என்று ஏதாவது ஒன்றை வகுத்துக் கூறுவது தவறேயாகும். பிற்காலத் தரிசனங்களில் பல உபநிஷதங்களையே மூல நூல்களாகக் கொண்டுள்ளன.

மொத்தமாக சில சூத்திர வாக்கியங்களை உபநிஷதங்களின் தத்துவப் பார்வையின் அடையாளங்களாக வகுத்துக் கூறலாம். அவையாவன.

  1. நேதி நேதி நேதி ( இவையல்ல இவையல்ல இவையல்ல )
  2. பிரக்ஞானம் பிரஹ்ம ( பிரக்ஞையே பிரம்மம் )
  3. தத்துவ மஸி ( அதி நீயேதான் )
  4. அகம் பிரம்மாஸ்மி ( நானே பிரம்மம் )
  5. ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் ( இவற்றிலெல்லாம் இறைவன் உறைகிறான்)

இவற்றில் ஒரு பயணம் இருப்பதைக் கவனிக்கலாம். முதலில் கண்டு அறியும் அனைத்தையும், இவை உண்மை அல்ல என்று மறுக்கிறது நம் பிரக்ஞை. பிறகு நாம் அறிவதெல்லாம் நம் அறிவை மட்டுமே. நமது அறியும் எல்லைக்கு அப்பால் உள்ள எதையுமே நாம் அறிவதில்லை என்று அறிகிறோம். பிரக்ஞையே முழுமுதல் கடவுள் என்று அறிகிறோம்.

இதன் தொடர்ச்சியாக அறிவதும் அறியப்படும் பொருளும் அறிபவனும் வேறு வேறல்ல என்று உணர்கிறோம். அது நீயே என்ற பிரக்ஞை ஏற்படுகிறது. தொடர்ந்து நானே பிரம்மம். நானே பிரபஞ்சம் என்ற முழுமையுணர்வு. அதிலிருந்து மீண்டு வருகையில் நம்மை சுற்றி உள்ள ஒவ்வொன்றும் நாமும் பிரம்மமே என்ற பிரபஞ்சத் தரிசனம் ஏற்படுகிறது.

இந்த ஆப்தவாக்கியங்கள் (தியானத்திற்குரிய மூலச்சொற்றொடர்கள்) மிக மிக விரிவாக இந்து ஞான மரபில் விளக்கப் பட்டுள்ளன.

அடுத்துவருவது…

தரிசன காலகட்டம் மற்றும் அவைதீக காலங்களின் காலகட்டம்

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s