குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

நண்பர்களே ! பணி நிமித்தம் வாசிக்க நேர்ந்த “இந்து வாரிசுரிமைச் சட்டம்” வியப்பான ஒன்று. ஒரு இந்துக் குடும்பத்தின் உறவு முறைகள் எந்தெந்த அடுக்குகளில் அமைகின்றன, அவற்றுள் முதன்மை பெறும் வரிசை எது, அடுத்த வரிசைக்கிரமம் என்பனவற்றை ஒரு நாவல் போல விவரித்துச் செல்லும் சட்டம் அது. எண்ணிறந்த உறவு முறைகளையும், அவற்றுக்கிடையே பாவியிருக்கும் தாய்வழி, தந்தைவழி குறுக்குப் பின்னல்களையும், அவற்றின் சொத்துரிமைக்கான அடுக்கு முறைகளையும் காணும்போது இவ்வளவு உறவுமுறைகளா என்று தோன்றும். ஆனால் , ரத்த உறவாலும், திருமண பந்தத்தாலும் அல்லாது இவ்வகைப்பாட்டைத் தாண்டிய ஒரு உறவு முறை நமது மரபில் தோன்றி இன்று வரை இடையறாது நீடிக்கிறது.

கால ஓட்டத்தின் வேக வாகினியை மீறி துளித் துளியாய் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மானுட ஞானத்தினை பின்வரும் தலைமுறைக்கென தருவதில் இந்த உறவுமுறையின் பங்கு மகத்தானது. எந்த பந்தத்தின் அடிப்படையிலுமல்லாது , தேடலின் துணை கொண்டு மட்டுமே தேர்வு செய்யப்படும் உறவு இது. புல்லின் வேரென இந்தத் தேசம் முழுதும் பரவி, காலந்தோறும் உருவாகி வரும் குரு சிஷ்ய உறவினாலேயே இன்றைய நமது ஞானம் சாத்தியமாகிறது.

வேறெந்த உறவுமுறையையும் வரையறை செய்து, வகைப்படுத்திவிட முடியும். ஆனால், இந்த குரு சிஷ்ய உறவு எந்த இலக்கணத்திற்கும், எந்த வரையறைக்கும் நாலு விரற்கடை தள்ளியேதான் நிற்கும்.எப்படி உருவாகிறது இந்த உறவு என்பதை ஆண்டவனும் அறிய இயலாது போலும். “வா” என்ற குருவின் ஒற்றைச் சொல்லுக்கு, மறு பேச்சின்றி, திரும்பிப் பாராது எழுந்து அவர் பின்னே செல்லும் சீடனை இயக்குவது எது? மாறாக் காதலுடன் குருவின் பாதத்தை பணிந்து நிற்கும் சீடன் மனம் அடைவதுதான் என்ன? தரிசனம் பெற்ற ஒரு நொடியின் பரவசத்தை, தனக்கேற்ற சீடனைக் கண்டபோதும் அடையும் குருவின் உவகைதான் எப்படிப்பட்டது? மரபின் தொடர்ச்சியாய் நீளும் இவ்வுறவிலிருந்து மானுட ஞானம் பெறும் விழுமியம்தான் எது?

நண்பர்களே! எண்ணிறந்த குருமார்களும், சீடர்களும் நிறைந்த இந்த பூமியில் , நாம் பெற்றதனைத்தும் குருமார்களால் நமக்குத் தரப்பட்டதல்லவா? முடிவிலா ஞானத்தின் ஒவ்வொரு கீற்றையும் , சல்லடை மூடிய விளக்கின் ஒளியாய் உணரச் செய்வது குருவின் அருளன்றி வேறென்ன? இந்த மண்ணில் இன்றிருக்கும் மகத்தான மானுட ஞானம் எதுவும் குரு சீட உறவின் மரபன்றி வேறெதாலும் பேணப்பட்டதல்ல. குருவாய் நிற்பவனும் தனது குருவின் முன் சீடனே. அவர்களால் அறியப்பட்டதே அறிவு. அவர்களால் தரிசிக்கப்பட்டதே ஞானம். அநாதி காலந்தொட்டு இன்றுவரை தொடரும் அத்தகைய குரு சீட உறவிற்கு சிரம் தாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறெப்படி நன்றி சொல்வது?

இந்த மண்ணில் , இந்த மண்ணின் மரபைப் பற்றி எழுதப்படும் எந்தப் படைப்பும் குரு, சிஷ்ய உறவினைப் பேசாது முழுமை பெறுமா என்ன? குரு, சிஷ்ய உறவினைத் தொடாமல் இந்த மண்ணின் எந்த மரபினை நாம் விளக்கி விட முடியும்? இதற்கு விஷ்ணுபுரம் மட்டும் விதிவிலக்கல்ல. குருசிஷ்ய உறவின் அனைத்து பரிமாணங்களையும் தொட்டெடுக்க முயலும் படைப்பூக்கத்தை விஷ்ணுபுரம் படைப்பு முழுதும் காண முடிகிறது.

எத்தனை, எத்தனை குருமார்கள் ! எத்தனை ஞான பாடங்கள் ! எவ்வளவு சிஷ்யர்கள்! எத்துனை தரிசனங்கள்! விஷ்ணுபுரம் மூச்சு முட்டச் செய்கிறது. கூடவே குரு சிஷ்ய உறவின் எல்லா சாத்தியங்களையும் காட்டிச் செல்கிறது. ஒரு வகையில் சொல்வதென்றால் மொத்த விஷ்ணுபுரமுமே குரு, சிஷ்ய சம்வாதம்தான்.

தேடலின் சிக்கலே அது உருவாக்கும் நிம்மதி இழப்பே. பற்றிக் கொள்ளும் ஒவ்வொரு கிளையுமே உடைய , உடைய, கால்கள் தேடலின் நதி வெள்ளத்தில் இழுபடும் அவஸ்தை. அறிந்ததாக உணரும் கணந்தோறும் “இதுவல்ல” எனும் உண்மையை முன்னிலும் மூர்க்கமாக சந்திக்கும் நொடியில் , சுயம் நொறுங்கும் சப்தத்தை குருவன்றி வேறு யாரால் கேட்க இயலும்?

இருள் பிரியா விடிகாலையில் நொறுங்கிய சுயத்தினை அள்ளிக் கொணர்ந்த பிங்கலன் சிரவண மகா பிரபுவின் குடில் முன்புதானே காத்துக் கிடக்கிறான். அவரைக் கண்ட கணத்தில், வீரிட்டலறியபடி, தடுக்கி வீழ்ந்த குழந்தை தாயிடம் பாய்வது போலல்லவா ஓடி வருகிறான். “குழந்தாய்” என்று குழைந்து கூவித்தான் அவரும் அவனை அணைக்கிறார். அதனைத் தொடர்ந்து வரும் உரையாடல்களில் தெளிந்து வருகிறது குரு சிஷ்ய உறவின் தேர்ந்த அனுபவம்.காமத்தை அறியச் சென்ற சிஷ்யன் மிச்சமேதுமற்ற வெறும் பாத்திரமாய் மனம் மாறும் வரை தானறிந்தவற்றை , அனுபவித்தவற்றை , உணர்ந்தவற்றை குருவிடம் கொட்டுகிறான். ஆடை அணிந்த நிர்வாணியாய் தன் குரு முன் நிற்க அஞ்சாத ஒரு சீடன்.

மனித மனத்தின் ஒட்டுமொத்த தேடலையும் உள்ளடக்கிய ஒரு கேள்வியை பிங்கலன் கேட்கிறான். “குருநாதரே ! மனித மனதிற்கு அறிதலே சாத்தியமில்லையா?” சிரவண பிரபு “நான் சொல்ல ஏதுமில்லை” என்கிறார். கேள்விகளின் பாதையில், அறியும் ஆர்வத்தை அனுபவமாய் ஆக்கிக்கொள்ளும் பொருட்டு வெகுவாய் முன்னகர்ந்து விட்ட பிங்கலன் , அப்பயணத்தின் தனிமை தாளாது கதறுகிறான். ஆயினும் குரு தன்னிலை மீறாது சொல்கிறார் – “நீ கேட்டுவிட்டாய் குழந்தை, இனி முன்னால் மட்டுமே போக இயலும்”

மேலும் இறைஞ்சும் சீடனைக் கண்ட குரு தன் சுயத்தை அவன் முன் காட்டுகிறார். வழி காட்டுவது மட்டுமல்ல, வாழ்ந்தும் காட்டுவது என்பதே குருவின் செய்தியோ? தன் மனம் சீடனை எண்ணுவதைக் காட்டிலும், சீடன் துய்க்கும் காமம் எண்ணி , தன் இளமை தொலைந்த ஏக்கத்தை எண்ணி தான் அழுததை சீடன் முன் தோலுரித்த குரு சிரவண மகாபிரபு.

“முப்பது நாட்களில் நீ திரும்பி விட்டாய். ஐம்பது வருடங்களைத் தாண்டி நான் எங்கே போவது?” – இந்நிலையிலும் சிரவண மகாபிரபு குருவின் நிலையில் நின்றுதான் பாடம் சொல்கிறார். வென்றவர் கதை மட்டுமல்ல பாடம், முயன்றவரின் கதையும்தானே?

தாண்டி விட விழைவோர் தடுமாறி நிற்கும் எல்லைக் கோட்டை தன் முழு வாழ்க்கையாலும் கட்டித் தந்த சிரவண மகா பிரபுவை வணங்காது எந்த முமுட்சுவால் அந்தப் புள்ளியைத் தாண்ட இயலும்?

தனது சஞ்சலத்தை சீடன் அறியத் தந்த வகையில் ஞானத்தின் நேர்மையில் நின்ற குரு சிரவண மகா பிரபு என்றால் அறியாமையின் சிகரமேறி நிற்கும் விஸ்வகர் காட்டுவது குரு சிஷ்ய உறவின் வேறொரு பரிமாணத்தை.

தொடரும் ….

5 thoughts on “குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து by ஜாஜா

  1. shivatma's avatar shivatma says:

    One of the best articles read in the recent days.
    Many salutations to JaJa.

  2. […] [இக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்] […]

Leave a reply to shivatma Cancel reply