எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
ஆறு தரிசனங்கள்
[இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தில் கவிஞர் யுவனுடன்]
ஆதி தரிசனங்கள் ஆறு. அவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்திய மெய்ஞான மரபின் அடிப்படைகள் அடைத்தும் உருவாகியுள்ளன. அந்த ஆறு தரிசனங்களின் சாயல் சிறிதேனும் இல்லாத எந்த மதமும் தத்துவமும் இந்து மெய்ஞான மரபில் பிற்பாடு உருவானதில்லை.
தரிசனங்களின் ஒட்டு மொத்தமான பங்களிப்பு என்ன? வேதங்களில் கவித்துவவீச்சுடன் கூறப்பட்ட அகவெளிச்சங்களை திட்டவட்டமான தத்துவ விவாதத் தளத்துக்குக் கொண்டு வந்தவை தரிசனங்களே. இதன் மூலம் அருவமான ( abstract ) விஷயங்களை புறவயமாக விவாதிக்கும் தருக்க உபகரணங்களை அவை உருவாக்கி அளித்தன.
பல்வேறு விதமான ஞானத்தேடல்கள் நடக்கும் ஒரு பொதுப்பரப்புதான் இந்து மெய்ஞானம் என்பது. ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட ஞான வழிகள் உண்டு. வழிபாடுகள் மற்றும் சடங்குகளை மட்டும் சார்ந்து இயங்குபவை உண்டு. முழுக்க முழுக்க அறிவார்ந்த தளத்தில் இயங்குபவை உண்டு.
இந்த ஒவ்வொரு ஞான மார்க்கமும் பிறிதுடன் உரையாட வேண்டியுள்ளது. அந்த உரையாடல் மூலம்தான் ஒவ்வொரு தரப்பும் தன்னை முழுமை செய்துகொள்ள முடியும். அவ்விவாதத்துக்கு எல்லாத் தரப்புக்கும் பொதுவான ஒரு இடம் அவசியம் தேவை.
இந்தப் பொது இடத்தில் நான்கு விஷயங்கள் அனைவருக்கும் பொதுவாக வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். அவை முறையே பேசு பொருள், பேசும் விதம், அடிப்படையான சொற்கள் மற்றும் பேசுவதன் நோக்கம்.
எதைப்பற்றி பேச வேண்டும் என்பது முதன்மையான பொது வரையரையாகும். பிரபஞ்சத்தின் பிறப்பு, முடிவு, வாழ்வின் இயங்குமறை, வாழ்வின் நோக்கம் முதலியவையே பேசு பொருட்கள் என்று பொதுவாக வரையறுக்கப்பட்டிருப்பதை இப்போது காணலாம். மாறுபட்ட தரப்புகள் கூடி விவாதிக்கும்போது அனைத்திலும் பொதுவாக உள்ள இவ்வம்சங்களே விவாதிக்கப்பட்டன.
பொதுவான ஒரு விவாதத்தில் கருத்துக்களை எந்த வரிசையில் முன் வைப்பது, எப்படி ஒரு கருத்தை நிறுவுவது, எப்படி அதை மறுப்பது என்பதும் தெளிவாக இருக்க வேண்டும்.
பொது விவாதத்துக்கு பொதுவான சொல்லாட்சி மிக அவசியமாகும். ஒவ்வொரு தரிசனமும் கலைச் சொற்களைச் சற்று வித்யாசமாகவே வரையறுத்துக்கொள்கிறது. ’பிரகிருதி’ என்றால் சாங்கிய மரபில் உள்ள பொருளல்ல வேதாந்த மரபில். சாங்கியம் அதைப் பருப்பொருட்களின் தொகை என்று உருவகிக்கிறது. வேதாந்தம் இயற்கையை ஒரு நிகழ்வாக ( அல்லது நிகழ்வுகளின் தொடராக ) அறிமுகம் செய்கிறது. ஆயினும் எல்லாத் தரப்பும் ஒரெ சொற்களையே பயன்படுத்துகின்றன. பஞ்ச பூதங்கள், பிரகிருதி, புருஷன், தன்மாத்திரைகள் என்று தரிசன விவாதங்களுக்கு என்றே தனிக் கலைச் சொற்கள் உள்ளன. சமீப காலம் வரை நம் தத்துவ விவாதத்தில் பயன்படுத்தப்பட்டன.
விவாதம் எதன் பொருட்டு என்ற தெளிவு அவசியம். மெய்மையை அதன் பலமுகங்களுடன் அறிவதே விவாதத்தின் இலக்கு எனும் தெளிவும், எல்லா ஞானத் தேடலுக்கும் நோக்கம், முக்தி அல்லது மோட்சம் ( விடுதலை ) தான் என்ற பொதுப்புரிதலும் அன்றைய தத்துவத் தரப்புகளிடம் பொதுவாக இருந்தன. எது விடுதலை என்பதில்தான் அவை வேறுபட்டன.
இந்த நான்கு பொது அடிப்படைகளையும் உருவாக்கி அளித்தவை தரிசனங்களே என்றால் மிகையல்ல. விவாதத்திற்கான அனைத்துக் கலைச் சொற்களும் ஆறு தரிசனங்களால்தான் முதலில் வடிவமைக்கப்பட்டன. அடிப்படையான வினாக்களைத் திட்டவட்டமாக வகுத்துப் புறவயமான முன்வைத்தவை அவைதான். தத்துவ விவாதத்திற்கான எல்லாத் தர்க்க முறைகளும் இங்கு தரிசனங்களுக்கு இடையேயான விவாதம் மூலமே உருவாகி வந்தன.
இவ்வாறு பார்த்தால் இந்து ஞான மரபு இன்றுள்ள விரிந்த வடிவுக்கு வந்து சேர முதல் காரணமாக அமைந்தவை தரிசனங்களேயாகும். தரிசனங்களை ஐயம் திரிபறக் கற்ற பிறகே ஒருவர் வேதங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று பண்டைய மரபு வலியுறுத்தியது. பிற்கால வேதாந்த மரபுகள் கூட ஆறு தரிசனங்களியும் கற்க வேண்டியதன் அவசியத்தைப் பெரிதும் வலியுறுத்தியுள்ளன.
ஆறு தரிசனங்களும் ஒன்றையொன்று மறுப்பவை அல்ல. ஒன்றையொன்று நிரப்புபவை என்ற கருத்தும் உண்டு. அந்தப் பார்வையும் மிக முக்கியமானதேயாகும். காரணம், அவை ஒன்றுடன் ஒன்று மிக விரிவான விவாததில் ஈடுபட்டிருந்தன. ஒன்று விட்டிருந்த இடத்தை பிறிதொன்று நிரப்ப முயன்றது.
மேற்கத்திய தத்துவ மரபின் அடிப்படையில் இந்திய மெய் ஞான மரபினை வகுத்தறிய முற்படும் நடராஜகுரு, ஆறு தரிசனங்களும் அறிவியக்கத்தின் ஆறு கோணங்களை, ஆறு வழிமுறைகளை அடையாளம் காட்டுபவை என்று கூறுகிறார்.
ஆறு தரிசங்களையும் மூன்று தரப்புகளாக தொகுத்துப் பார்க்கும் பார்வையும் நம் தத்துவ மரபில் உண்டு. சாங்கியத்தில் யோகம் அடக்கம். வைசேஷிகத்தில் நியாயம் அடக்கம். வேதாந்தம் என்ற பொது வட்டத்துக்குள் இரு மீமாம்சை மரபுகளும் அடங்கும். ஆக சாங்கியம்,வைசேஷிகம், வேதாந்தம் என்று மூன்று தரப்புகள்.!
தெளிவாகப் புரிந்துகொள்ள இன்னும் ஒரு மன வரைபடத்தினை தயாரிக்கலாம். வேதாந்தம் வைதிக மரபுக்கு நெருக்கமானது; ஆன்மிக சாரம் உடையது. நேர் எதிர் எல்லையில் சாங்கியம் உள்ளது. இது லோகாயத மரபுக்கு நெருக்கமானது; பெளதிகவாதச் சாரம் உடையது. வைசேஷிகம் நடுவே உள்ளது.
ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஆறு தரிசனங்களும் மிக நீண்ட விவாததில் ஈடுபட்டுருந்தவை. எனவே எந்த தரிசனத்திலும் பிற அனைத்துத் தரிசனங்களிலும் சாராம்சமான பகுதிகளின் சாயல் அடங்கியிருக்கும். எப்படி சாங்கியத்தில் வேதாந்தத்தின் அம்சம் உள்ளதோ அப்படி வேதாந்தத்தில் சாங்கியத்தின் அம்சமும் அடங்கியுள்ளது.
தரிசனங்களைப் புரிந்துகொள்ளும் போது தடையாக அமையக் கூடிய ஒரு விஷயத்தினை இங்கு கூறியாக வேண்டும். கணிசமான அறிஞர்களுக்கு இவ்விடறல் நேர்ந்துள்ளது. ஒவ்வொரு தரிசனமும் ஒரு விவாத நிலையில் – அதாவது, மறு தரப்பினை எதிர்கொள்ளும் நிலையில் அல்லது ஏற்கும் நிலையில்தான் உள்ளது.
மூல இயற்கை எனும் பருப்பொருள் பற்றி சாங்கியம் கூறுவது, வேதாந்தத்தின் மூல பரம்பொருள் வாதத்தின் எதிர்வினையாகவே. பரம புருஷன் எனப் பிரம்மத்தை வேதாந்தம் வகுப்பது, சாங்கிய மரபுக்குள் உள்ள புருஷ தத்துவத்தின் எதிர்வினையாகவே. இவற்றைப் பிரித்து, வகுத்துப் புரிந்துகொள்வது பலவித சிக்கல்களையே உருவாக்கும். தரிசனங்கள் தனித்துச் செயல்பட முடியாதபடி பிணைந்துவிட்டவை.
சிறப்பான உவமை ஒன்று உண்டு. ஸ்ரீ நாராயண குரு இதைக் கூறியதாகக் கூறப்படுகிறது. வேதாந்தம் ஒரு தரிசனம் என்றால் தரிசனங்கள் மொத்தம் ஐந்து. இவை ஐந்து விரல்களுக்கு சமம். சாங்கியம் கட்டை விரல், யோகம் சிறுவிரல், வேதாந்தம் சுட்டு விரல், வைசேஷிகம் நடு விரல். நியாயம் அதற்கடுத்த விரல்.
கட்டைவிரல் தனித்து செயல்பட முடியும். அது பிற விரல்களுடன் எல்லாம் தனித்தனியாகவும் மொத்தமாகவும் இனைந்து செயல்படுவதும் கூட. அதம் மறு இன்ணைதான் சிறு விரல். ஒற்றை முத்திரை காட்டும், சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படும், சுட்டு விரலே வேதாந்தமாகும். அது சாங்கியத்துடன் இணைந்து செயல்படும். வைசேஷிகமும் நியாயமும் ஒன்றுதான். ஒன்றின் சலனம் மற்றதின் சலனமாக ஆகும் அளவு பின்னிப் பிணைந்தவை அவை. கட்டை விரலும் சுட்டு விரலும் இணையும்போது பிரம்ம ஞானமே கைப்பிடிக்குள் அடங்குகிறது. இதுவே சின்முத்திரை.
அடுத்து வருவது..
ஆதி இயற்கை வாதம் : சாங்கியம்