சுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள்

சுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள்

நூல் அறிமுகம் by ஜெயமோகன்

[ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது]

பலவருடங்களுக்குமுன் என்னுடன் ஒரு நண்பர் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோயிலைப் பார்க்க வந்திருந்தார். கோயிலுக்குள் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது நண்ப சட்டென்று ”இந்தக் கோயில் ஒரு மாபெரும் புத்தகம் அல்லவா” என்று ஆச்சரியப்பட்டார். நான் சற்று வேடிக்கையாக ”இல்லை, ஒரு மாபெரும் பத்திரப்பதிவாளர் அலுவலகம்” என்றேன். அவர் சிரித்தார். ஆம் சுசீந்திரம் ஒரு பிரம்மாண்டமான சமூக ஆவணக்குவியல்

குமரிமாவட்டத்தின் பிரம்மாண்டமான கோயில்களில் ஒன்று சுசீந்திரம். கன்யாகுமரிப்பாதையில் இது இருப்பதனால் பொதுவாக இங்கே வந்திருக்கக் கூடியவர்கள் அதிகம். பெரும்பாலானவர்கள் பயணத்தின் நடுவே புயல் வேகமாக கோயிலைக் கடந்துசென்றிருப்பார்கள். சற்றே கூர்ந்து கவனிப்பவர்கள் தென்தமிழ்நாட்டின் வரலற்றையே இந்த ஒரு கோயிலில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.

கன்யாகுமரி-நாகர்கோயில் சாலையில் நாகர்கோயிலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சுசீந்திரம். சுசீந்திரம் கோயில் அமைந்திருக்கும் இடம் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் கொண்டது. கடலில் இருந்து சுசீந்திரம் வரை விரிந்து கிடக்கும் மணக்குடி காயல் ஒரு காலத்தில் சிறிய துறைமுகம் போலவே இயங்கியது. அதனருகே உள்ள கோட்டாறு பழங்காலம் முதலே முக்கியமான ஒரு சந்தைத்தலம். ஆகவே வணிகமுக்கியத்துவம் கொண்ட இடத்தில் அமைந்த பெரும் கோயில் இது.

 

தென்னாட்டின் முக்கியமான நெல்லுற்பத்தி மையமாக இருந்த நாஞ்சில்நாட்டின் நிர்வாகத்தலைமையகமாக இக்கோயில்தான் நெடுங்காலமாக இருந்துள்ளது. இக்கோயிலைச்சுற்றியிருக்கும் வேளாள ஊர்கள் 12 பிடாகைகளாக [வருவாய்ப்பகுதிகளாக] பிரிக்கபப்ட்டிருந்தன. அவர்கள் அனைவருமே தங்கள் ஆலோசானைகளை சுசீந்திரம் கோயிலில் சுப்ரமணியசாமிகோயிலின் முன்புள்ள செண்பகராமன் முற்றத்தில் கூடித்தான் தீமானிப்பது என்ற வழக்கம் இருந்தது. இது சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை இப்படியே நீடித்தது.

மிகப்பெரிய நிலச்சொத்துள்ள கோயில் சுசீந்திரம். அந்நகரமே அக்கோயிலை ஒட்டி உருவானதுதான். கோயிலின் நிலங்கள் கோயிலைச்சுற்றியிருக்கும் பெரும்பாலான கிராமங்களில் பரந்து கிடந்தன. அவற்றை நிர்வாகசெய்யும் அமைப்புகள் இருந்தன. அந்த நிலத்திலுருந்து கிடைக்கும் வருவாய் பொதுக்காரியங்களுக்குச் செலவிடப்பட்டதோடு பஞ்சத்துக்கான சேமிப்பாகவும் இருந்தது.

 

சுசீந்திரம் என்ற பேரை சமகால பக்திநூல்கள் பலவகையாக விளக்குகின்றன. பெரும்பாலும் அவை வரலாற்று போதம் இல்லாத சொற்பகுப்புகள். சுசீ+இந்திரம் என்று பகுத்து இந்திரன் அகலிகைவிஷயத்தில் சாபம் பெற்று இங்கே வந்து தன் சாபத்தை தீர்த்து சுத்தம்செய்து கொண்டதனால் இப்பெயர் என்பார்கள். ஆனால் கோயிலில் அகலிகையின் சிலை கிடையாது. பழைய நூல்களிலும் அப்படிப்பட்ட குறிப்பேதும் இல்லை.

ஸ்ரீஇந்திரம் என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்பது ஆய்வாளர் கருத்து. ஸ்ரீ என்பது சி என்றாகும் மரபு உண்டு. கிபி 941 ஆண்டுள்ள கல்வெச்டு ஒன்றில் சுசிந்திரம் என்ற பெயர் முதன்முதலில் வருகிறது. கிபி 11 ஆம் நூற்ராண்டு கல்வெட்டு இந்த ஊரை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு நாஞ்சில்நாட்டு பிரம்மதேயம் சுசீந்திரமான சுந்தர சதுர்வேதி மங்கலம்‘ என்று சொல்கிறது

சுசீந்திரம் பிரம்மதேய கிராமம். இது சதுர்வேதிமங்கலமும் கூட. அதாவது மன்னர்களால் வேதம் பயிற பிராமணர்களுக்கு நிலமும் கிராமமும் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் இது. இது முதலில் தொன்மையான நாஞ்சில்நாட்டு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்திலும் பின்பு சேரர் ஆதிக்கத்திலும் அதன்பின் பாண்டிய ஆட்சியிலும் பின்பு சோழர் ஆட்சியிலும் மீண்டும் பாண்டிய ஆட்சியிலும் நடுவே நாயக்கர் ஆதிக்கத்திலும் கடைசியாக வேணாட்டு [திருவிதாங்கூர்] ஆட்சியிலும் இருந்துள்ளது. ஒவ்வொருவரும் கோயிலை விரிவாக்கம் செய்து கட்டியிருக்கிறார்கள்.

இது ஐதீகப்பிரகாரம் மும்மூர்த்திகளின் கோயில். ஸ்தாணுமாலயன் என்பது மூலவரின் பெயர். ஸ்தாணு என்றால் சிவன். மால் விஷ்ணு. அயன் பிரம்மன். ஆனால் மையச்சிலை சிவலிங்கம்தான். அந்த லிங்கம் மும்மூர்த்தியாக வழிபடப்படுகிறது. கல்வெட்டுகள் இக்கோயில் மூலவரை மகாதேவர், சடையார், நயினா, உடையார் எம்பெருமான், பரமேஸ்வரன் போன்ற பெயர்களில் குறிப்பிடுகின்றன. இக்கோயிலில் உள்ள செண்பகராமன் மண்டபத்தில் உள்ள ஒரு கல்வெட்டில்தான் முதலில் தாணுமாலயன் என்ற பெயர் வருகிறது.  இக்கல்வெட்டு 1471 ஆம் ஆண்டைச்சார்ந்தது.

மலையாள-தமிழ் பண்பாட்டு இணைவின் அடையாளம் இந்தக்கோயில். 11 ஆம் நூற்றாண்டுமுதல் 1956 வரை தொடர்ச்சியாக மலையாள ஆட்சியில் இக்கோயில் இருந்துவந்திருக்கிறது. 800 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப்பிராமணர்களான நம்பூதிரிகளின் நேரடி நிர்வாகத்தில் இருந்து வந்தது. ஆனால் இக்கோயிலின் தமிழ்த்தன்மைகள் அபப்டியே பேணப்பட்டன. வழிபாட்டில் ஞானசம்பந்தருக்கும் மாணிக்கவாசகருக்கும் இங்கே முக்கியமான இடம் உண்டு. கோயிலின் பொறுப்புக்கு வரும் தந்திரிகளும் நிர்வாகிகளும் பழையமரபுகளை அப்படியே பேணுவதாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்ததே இதற்குக் காரணம்.

சுசீந்திரம் கோயிலைப்பற்றிய முக்கியமான நூல் வரலாற்றாசிரியர் கே.க்லே.பிள்ளை எழுதிய ‘சுசீந்திரம் கோயில்‘. அதற்கு முன்னரே சிதம்பரகுற்றாலம் பிள்ளை என்பவர் சிறு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அவரது ஆளூர் ஊரைச்சேர்ந்தவரான கே.கே.பிள்ளை தன் முனைவர் பட்ட ஆய்வேட்டுக்காக பலவருடம் இக்கோயிலை ஆராய்ந்து பிரம்மாண்டமான நூல் ஒன்றை எழுதினார். ஆலயங்களை ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளும் முறைக்கு முன்னோடிவழிகாட்டி நூல் அது.

1946ல் இந்த ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்தவர் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. 1953ல் சென்னை கலா§க்ஷத்ரா வெளியீடாக இந்தபெருநூல் வெளிவந்தது. இதற்கு கேரள ஆலயங்களை ஆராய்ந்த அறிஞரான ஜேம்ஸ் என் கஸின்ஸ் ஆழமான அணிந்துரை வழங்கியிருக்கிறார். ஒரு கிளாஸிக் என்று சொல்லத்தக்க இந்நூல் தமிழாக்கம்செய்யப்படவோ மறுபதிப்புகள் காணவோ இல்லை.

இந்த முதனூலை ஒட்டி அ.கா.பெருமாள் எழுதிய நூல் தாணுமாலயன் ஆலயம் -சுசீந்திரம் கோயில் வரலாறு  என்ற நூல். கே/கே.பிள்ளையின் நூலில் இருந்து அ.கா.பெருமாள் முன்னால் செல்லும் இடங்கள் பல உண்டு. ஒன்று கோயிலை ஒட்டி நடந்த சுதந்திரப்போராட்டம் ஆலயநுழைவுப்போராட்டம் முதலியவற்றை அ.கா.பெருமாள் கணக்கில் கொள்கிறார். பிற்பாடு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளை சேர்த்துக் கொள்கிறார். அனைத்துக்கும் மேலாக முக்கியமான நாட்டாரியல் ஆய்வாளரான அ.கா.பெருமாள் நாட்டார்கதைப்பாடல்கள் மற்றும் வாய்மொழிமரபுகளில் இருந்து பெறப்பட்ட  தகவல்களை விரிவாகவே பயன்படுத்துகிறார். இதுவே இந்நூலுக்கான நியாயமாக அமைகிறது.

ஆய்வாளர் செந்தீ நடராஜன் அவர்களின் ஆய்வுமுன்னுரையுடன் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒன்பது அத்தியாயங்கள் கொண்டது.ஊரும்பேரும், அனுசூயையின் கதை, கோயில் அமைப்பும் பரிவார தெய்வங்களும், பூஜைகளும் விழாக்களும், மகாசபை முதல் அறங்காவலர் வரை, பூசகரும் பணியாளர்களும், கோயிலின் சமூக ஊடாட்டம், கல்வெட்டுச்செய்திகள், சிற்பங்களும் ஓவியங்களும் ஆகியவை அவை. அதன் பின் 32 பின்னிணைப்புகளிலாக மிக விரிவான தகவல்தொகுப்பு உள்ளது.

&&&

இந்த நூல் ஓர் வரண்ட ஆய்வேடு அல்ல. தொடர்ச்சியாக சிந்தனையை பலதிசைகளுக்கு தூண்டிவிடும் செய்திகளை அளித்துக்கோண்டெ செல்கிறது இது. இக்கோயில் சோழர்கள் காலத்திற்கு முன்பு தொன்மையான வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தது. கேரளத்தைக் கைபப்ற்றிய சோழர்கள் இங்கே இருந்த வழிபாட்டுமுறைகளை ஒழித்து ஆகம வழிபாட்டு முறையை புகுத்தினார்கள்

சோழர் ஆட்சிக்குப் பின் கேரள மன்னர்களின் ஆட்சி உருவானபோது ஆகம முறைகள் மீண்டும் தவிர்க்கபப்ட்டு தாந்த்ரீக முறை வழிபாடு கொண்டுவரபப்ட்டது. ஆனால் சோழர்கள் உருவாக்கிய சடங்குகளும் மரபுகளும் நீடித்தன. ஆகம – தாந்த்ரீக முறைகளின் கலவையாக வழிபாட்டு முறை அமைந்தது.

1720 முதல் 1729 வரை வேணடை ஆண்ட ராமவர்மா என்னும் அரசரைப்பறிய செய்தி ஒன்று. இவர் சுசீந்திரம் கோயில் திருவிழாவுக்கு வந்தார். அங்கே தமிழ்நாட்டிலிருந்து வந்து நடனம் ஆடிய அபிராமி என்ற தேவதாசிப்பெண்ணை கண்டு காதல்கொண்டு அவளை மணந்து தன் பட்டத்தரசியாக ஆக்கிக்கொண்டார். இது அக்காலத்தில் தேவதாசிகளுக்கு இருந்த சமூக முக்கியத்துவத்தைக் காட்டும் முக்கியமான ஆதாரமாகும்.

திருவிதாங்கூர் அரசை ஓர் நவீன அரசாக மாற்றிய மாமன்னரான மார்த்தாண்ட வர்மா [1730 முதல் 19 வரை] சுசீந்திரம் கோயிலுக்கு வர விரும்பினார். அவர் நாகர்கோயிலில் இருந்துகொண்டு தகவலைச் சொல்லியனுப்பினார். கோயில் பொறுப்பில் இருந்த நம்பூதிரிப்பிராமனர்கள் கோயிலை முன்னரே இழுத்துச் சாத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள். கோயிலுக்கு வந்த மார்த்தாண்ட வர்மா மகாராஜா அவமானப்படுத்தப்பட்டார். கோபம் கொண்ட அவர் தன் தளபதியான தளவாய் ராமய்யனிடம் அந்த கோபத்தைச் சொல்ல ராமய்யன் சுசீந்திரத்துக்கு அவ்ந்து படைபலத்தால் பிராமணர்களை சிறைப்பிடித்து நாடுகடத்தினார். கோயிலை நேரடி அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.

இச்செய்தியில் கவனிக்கப்படவேண்டிய செய்திகள் பல. கோயிலின் உரிமை எத்தகைய அரசியலதிகாரமாக, மன்னரே அஞ்சும் அளவுக்கு இருந்திருக்கிறது என்பதுதான் முக்கியமானது. ஐரோப்பியத் தொடர்பு ஏற்பட்டு ஐரோப்பியமொழிகளை பேசும் பழக்கமும் வாசிப்புப் பழக்கமும் இருந்தமையால்தான்  மார்த்தாண்ட வர்மா பிராமணர்களை படைபலத்தால் வெல்லும் முடிவை எடுத்தார். அப்போதுகூட அதற்கு இன்னொரு பிராமணனை– தமிழ் அய்யர்- பயன்படுத்தினார்.

மார்த்தாண்ட வர்மா நம்பூதிரிகளை நாடுகடத்தியது ஒரு திருப்புமுனை. தொன்மங்களுக்கும் குடிமரபுகளுக்கும் மைய இடமுள்ள ஆட்சிமுறை மாறி அரசரை மையமாக்கிய ஆட்சிமுறை — ஐரோப்பிய ஆட்சிமுறை — இங்கே உருவானமையின் சான்று அது. ஆனால்  மார்த்தாண்ட வர்மா அந்த விஷயத்துக்கு மக்கள் ஆதரவை மெல்லமெல்லத்தான் திரட்ட முடிந்தது. அவர் ல்  தன் வாளை திருவனந்தபுரம் ஸ்ரீபதமநாப சுவாமி கோயிலுக்குக் கொண்டுசென்று இறைவன் காலடியில் வைத்து நாட்டையே பத்மநாபனுக்குச் சமர்ப்பணம்செய்து பத்மநாபதாசன் என்று தனக்குப் பெயரிட்டுக்கொண்டு இறைவனின் பிரதிநிதியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். இவ்வாறு இறைவனின் பிரதிநிதிகளாக இருந்த நம்பூதிரிகளை துரத்தியதன் பழையை நீக்கி மக்கள் ஆதரவை அவர் பெறவேண்டியிருந்தது.

இன்னொரு ஆர்வமூட்டும்செய்தி சுசீந்திரம் கைமுக்கு என்னும் வழக்கம் குறித்தது. பாலியல் மீறல் போன்ற பிழைகளைச் செய்த நம்பூதிரிகளை கொண்டுவந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு சோதனைசெய்யும் தண்டனை முறை இங்கே நெடுங்காலம் இருந்தது. ஒரு நம்பூதிரி தண்டனைக்கு அஞ்சி கோயில் மீது ஏறி குதித்து தற்கொலைசெய்துகொண்டார். அதைத்தொடர்ந்து இதை தடைசெய்யவேண்டுமென கோரிக்கை எழுந்தது.  ல் மகாராஜா சுவாதித்திருநாள் சுசீந்திரம் கைமுக்கு வழக்கத்தை நிறுத்தம்செய்தார்.

இதுவும் மிகவும் கூர்ந்து  ஆராய வேண்டிய நிகழ்ச்சி. மரபான நீதிமுறை என்பது சடங்குகள் மற்றும் தொன்மங்களுக்குக் கட்டுப்பட்டது. அதில் எல்லா சாதியினரும் கட்டுப்பட்டிருந்தார்கள், பாதிக்கப்பட்டார்கள். சுசீந்திரம் கைமுக்கு என்பது நவீன நீதிமுறை சார்ந்த ஒரு பிரக்ஞை உருவாவதன் சான்றாகும்.

1930 ல் நடந்த கோயில் நுழைவு உரிமைப்போரின் தகவல்களை விரிவாகவே அ.கா.பெருமாள் அளிக்கிறார்.  1916லேயே அப்போது ஸ்ரீமூலம் மகக்ள்சபையின் நியமன உறுப்பினராக இருந்த குமாரன் ஆசான் ஆலய நுழைவு குறித்துப் பேசி சுசீந்திரம் கோயிலுக்குள்புக அனுமதி தேவை என்று கோரினார். 1930ல் நேரடிப்போரட்டமாக இது வெடித்தது. 1924 ல் நாராயண குருவின் மாணவரான டி.கெ.மாதவன் தலைமையில் காங்கிரஸ் நடத்திய வைக்கம் கோயில் நுழைவுப்போராட்டம் [இதில்தான் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஒருநாள் தலைமைதாங்கினார்] பெற்ற வெற்றி சுசீந்திரம் போராட்டத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.

1936ல் திருவிதாங்கூர் மன்னர் கோயில் நுழைவுரிமையை அனுமதித்து பிரகடனம் வெளியிட்டார்.  1937 ஜனவரியில் மகாத்மா காந்தி நேரில் அவ்ந்து சுசீந்திரம் கற்காடு பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து சுசீந்திரம் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போதைய தேவசம் உயரதிகாரி மகாதேவ அய்யர் அரசு ஆணையின்படி காந்தியை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

தொன்மம் சார்ந்தஅரசு அதிகாரத்தின் குறியீடாக கோயிலைக் கொள்ளலாமென்றால் அது எப்படி படிப்படியாக ஜனநாயக முறைக்கு வழிவிடுகிறது என்பதற்கான சித்திரமாக மேற்கண்ட தகவல்களை நாம் வரிசைப்படுத்திப் பார்க்கலாம். இவ்வாறு மொத்த வரலாற்றையே இக்கோயிலை அடிப்படையாகக் கொண்டு நாம் வாசித்து விட முடியும் என்பதுதான் இந்நூலை ஓர் முதன்மையான வரலாற்று நூலாக ஆக்குகிறது.

&&&

கோயிலின் சிற்ப – கட்டுமான அமைப்பைப்பற்றி மிகவிரிவான தகவல்களை அளிக்கிறார் அ.கா.பெருமாள். பிற பேராலயங்களைப் போலவே இதுவும் பலகோயில்களின் ஒரு பெரிய தொகுப்பு. கோயிலுக்கு முன்னால் உள்ள முன்னுதித்த நங்கை என்ற கோயில்தான் ஆகபப்ழையது. இது ஒரு காளிகோயில். பின்பு வந்தது உள்ளா ஒரு பாறைமேல் இருக்கும் பழமையான சிவன் கோயிலான கைலாசநாதர் ஆலயம். அதன்பின் மையக்கோயில் பெருமாள்கோயில்கள் பல்வே சிற்றாலயங்கள்.

மூலதிருநாள் மகாராஜா காலத்தில்– பேச்சிப்பாறை அணைகட்டப்பட்டபோது- தான் சுசீந்திரம் ராஜகோபுரம் கட்டப்பட்டது. ஏற்கனவே அஸ்திவாரம் மட்டுமே இருந்தது. பாப்போது மண்ணைத்தோண்டும்போது கிடைத்த மாபெரும் ஒற்றைக்கல் அனுமார் சிலை உள்ளே நிறுவபப்ட்டது. இன்று சுசீந்திரம் அனுமார் மிகமுக்கியமான வழிபாட்டு மையம். கோயிலுக்குள் உள்ள கொன்றைமரம் புராதனமானது– இப்போது ·பாஸில் ஆக உள்ளது அது. இக்கோயிலின் தலவிருட்சம்.

கோயிலுக்குள் உள்ள சிற்பங்களைப்பற்றிய விரிவான தகவல்கள் இந்நூலில் உள்ளன. நாயக்கர் கால சிற்பக்கலையின் சிறந்த மாதிரிகள் இங்கே உள்ளன. வீரபத்ர சிலைகள். குறவன் குறத்தி சிலைகள். கல்லை உலோக வழவழப்புவரை கொண்டுசென்றிருப்பதன் நுட்பம் மிகத்தேர்ச்சியான கலையைக் காட்டுகிறது. கோயிலின் பூசைகள் நிர்வாக முறைகள் திருவிழாக்கள் என தகவல்களை மிகவிரிவாக தொகுத்து அளிக்கிறார் அ.கா.பெருமாள்.

அ.கா.பெருமாள் பெருமாள் இக்கோயிலைப்பற்றிய தன் ஆய்வுகளை முன்னுரையில் சொல்கிறார். ஏறத்தாழ 40 முறை அவர் இக்கோயிலை இந்த ஆய்வுக்காக பார்த்திருக்கிறார். கோபுர ஓவியங்களை மட்டும் 14 மனிநேரம் பார்த்திருக்கிறார். செண்பகராமன் மண்டபத்துச் சிற்பங்களை இரண்டுநாட்கள் பார்த்திருக்கிறார். செந்தீ நடராஜன் அவர்களும் அவருமாக கோயில் சிற்பங்களை தனியாக பதிவுசெய்து ஆராய்ந்திருக்கிறார்கள்.

பொதுவாக இந்து மரபுகளையும் கோயில்களையும் ஆராயும் மேலைநாட்டவர் தன்முனைப்பும் அலட்சியமுமாக தங்கள் சொந்தக் கோட்பாடுகளை திணிப்பது வழக்கம். அ.கா.பெருமாள் அவருக்கே உரித்தான முறையில் அந்த குறைபாடுகளை மென்மையாகச் சொல்லிச் செல்கிறார். உதாரணம் ச்டுவெர்ட் பிளாக்பர்ன் என்ற ஆய்வாளர். இவர் இப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நாட்டாரியல் துறைத்தலைவராக இருக்கிறார். இவரது ஆய்வுக்களம் குமரிமாவட்ட வில்லுப்பாட்டுகள். இவர் ஸ்தாணுமாலயன் என்றால் ஸ்தாணு-சிவன், மால்–விஷ்ணு , அயன் என்றால் ஒரு நாட்டார் தெய்வமான அய்யனார் என்று தன் ஆய்வேட்டில் சொல்கிறார். [Perfomance of Paradigm – The Tamil Bow Song Tradition 1980] அது ஆக்ஸ்போர்டு வெளியிடான நூலாகவும் வந்துள்ளது.

ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் குமரிமாவட்ட வில்லிசைப்பாடல்களில் மையப்புராண நோக்கு எடுத்தாளப்படுகிறது என்று சொல்லி சுசீந்திரம் தொன்மங்கல் சில அவ்ருவதை உதாரணமாகக் காட்டுவதை அ.கா.பெருமாள் அவர்கள் அபப்ட்டமான மேலைநாட்டு பார்வை என்கிறார். அனைத்தையும் மேல்நிலையாக்கமாகவே காணும் அணுகுமுறை இது. குமரிமாவட்ட வில்லிசைப்பாடல்களில் மையப்புராணநோக்கு மிகமிகக் குறைவாக, வேறுவடிவில் திரிபு பட்டுத்தான் சொல்லப்படுகிறது.

மேலைநாட்டு ஆய்வாளர்களின் போக்கைப்பற்றி கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை 1949ல் சுசீந்திரம் கோயிலின் தேவாரப்பாடசாலை விழாவுக்கு தலைமைதாங்கிப் பேசும்போது ”ஐரோப்பாவில் அமேசான் என்ற வீரப்பெண்கள் இருந்தார்கள். அவர்கள் வில் நாணை இழுத்து அம்புபூட்டும் வசதிக்காக தங்கள் ஒருமார்பை வளரவிடாமல் செய்வார்கள். இந்த விஷயத்தை அறிந்த ஓர் ஐரோப்பியர் இந்தியக்கோயிலில் ஒரு சிற்பத்தைப் பார்த்து ‘ஓ இங்கும் அமேசான் ‘ என்றாராம். அது அர்த்தநாரீஸ்வரர் சிற்பம்‘ என்றாராம்..

இத்தகைய ஆய்வுகள் இப்போது நிறைய வருகின்றன. அவற்றை ஆதாரமாகக் கோண்டு சிந்திக்கும் போக்கும் தமிழில் வலுப்பெற்று வருகிறது. காரணம் உண்மையான ஆய்வுகள் குறைவாக நிகழ்த்தப்படுகின்றன. நம் பண்பாட்டு ஆய்வுகளுக்கான கருத்தியலும் முறைமையும் மட்டுமல்ல முடிவுகளும்கூட இறக்குமதிசெய்யபப்டுகின்றன. இச்சூழலில் நம் பண்பாட்டை நாமே திறந்த மனத்துடன் சமரசமில்லாத ஆய்வுநோக்குடன் அணுகவேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அந்த தேவையை நிறைவேற்றும் முக்கியமான நூல்களில் ஒன்று அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல்.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s