எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
ஆறு தரிசனங்கள்
ஆதி இயற்கை வாதம் – சாங்கியம்
[பூட்டான் புலிக் கூடு மடாலயம் முன்பு]
ஆறு தரிசனங்களில் முதன்மையானதாகவும் காலத்தால் முற்பட்டதாகவும் கருதப்படுவது சாங்கியமேயாகும். சாங்கியத்திற்குத் தமிழில் ’ஆதி இயற்கைவாதம்’ என்று சாராம்சப்படுத்தி பெயர் சூட்டலாம். சாங்கியத்தின் முதன்மையான மையக்கருத்து, முக்குணங்களும் பரிபூரணச் சமனிலையில் இருக்கும் ஆதி இயற்கையைப் பற்றிய அதன் கணிப்புதான். புராதன இந்தியாவில் சாங்கியம் அறிஞர்கள் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
‘சங்கிய’ என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து சாங்கியம் என்ற சொல்லாட்சி உருவாயிற்று என்று கூறப்படுகிறது. எண்ணிக்கை, தருக்க ஞானம், பயன்பாடு சார்ந்த பொருள் ஆகிய பொருளில் பயன் படுத்தப்படும் சொல்தான் சங்கிய என்பது. தருக்கத்தை அடிப்படையான மெய்ஞான மார்க்கமாகக் கொண்டிருந்தமையால் சாங்கியம் இப்பெயர் பெற்றது போலும். சாங்கியம் என்ற சொல் தமிழில் வட்டார வழக்கில் குலச்சடங்கு என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது.
சாங்கிய தரிசனத்தின் ஆதி குரு கபிலர். ஆனால் கபிலர் என்ற பெயர் முழுமையானதல்ல. அது அடையாளப் பெயராக பரவலாகப் புழக்கத்திலிருந்திருக்கலாம். சங்ககால மரபிலேயே தொல்கபிலர், கபிலர் என்று இரு கவிஞர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. கபிலர் குறித்து சில புராண நம்பிக்கைகள் தவிர தெளிவான சரித்திரம் ஏதும் இப்போது கிடைப்பது இல்லை. ரிச்சர்ட் கார்பே என்ற வரலாற்றாசிரியர் கபிலனின் நினைவாகவே கபில வாஸ்து என்ற பெயர் அந்நகருக்கு சூட்டப்பட்டது என்கிறார். புத்த மதத்துக்கு சாங்கிய மதத்திடம் உள்ள நெருங்கிய உறவுக்கும் இது விளக்கம் தருகிறது. ஆனால் கபிலன் வசித்த இடம் என்ற பொருள் வரும் கபில வாஸ்துவுக்கும் கபிலனுடன் உறவுண்டு என்று காட்டும் வேறு ஆதாரம் ஏதும் இல்லை.
கபிலர் பிராமணப் புரோகிதர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற ஐதீகக் கதையை சில பிற்கால நூல்களில் காண்கிறோம். அதற்கு உரிய ஆதாரம் ஏதும் தரப்படவில்லை. ஆனால் அடிப்படையில் சாங்கிய மதத்துக்கு வைதிக புரோகித மதத்துடன் முழுமையான எதிர்ப்பு காணப்படுகிறது. வெகுகாலம் சாங்கிய மதம் புரோகித மதத்துக்கு எதிரான பெரும் சக்தியாக விளங்கியிருக்கக்கூடும். சாங்கியத்தை சார்வாகமதத்தின் ஒரு தர்க்கபூர்வமான வளர்ச்சி நிலையாகக் காண்பதிலும் தவறில்லை.
சாங்கியத்தின் காலமும் மூலமும்
பெளத்தம், சமணம் ஆகிய பெரிய மதங்கள் உருவாவதற்கு வெகு காலத்துக்கு முன்பே சாங்கியம் வளர்ந்து வலுப்பெற்றிருந்தது என்று கூற ஆதாரமுள்ளது. அஸ்வகோஷனின் புத்த சரிதம் என்ற நூலில் புத்தருக்கு காலத்தால் முந்திய பல சாங்கிய அறிஞர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. உபநிஷதங்களில் முக்கியமானவையும் காலத்தால் பிந்தையவையுமான ஈசம், கடம், பிரகதாரண்யகம், மாண்டூக்யம் முதலியவற்றுக்கு முன்னரே சாங்கிய தரிசனம் வலுப்பெற்றிருந்தது என்பதை கார்பே, ஸிம்மர் முதலிய தத்துவ ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். ஆரம்பகால உபநிடதங்களும் சாங்கியமும் ஏறத்தாழ ஒரே கால கட்டத்தில் வளர்ந்து வந்தவையாக இருக்கலாம். அதாவது, வேதங்களிலிருந்து தத்துவ ஞானம் கிளைத்து வந்த கால கட்டத்தைச் சேர்ந்ததாகும் சாங்கியம்.
இந்தியாவிலுள்ள ஆரியரல்லாத புராதனப் பழங்குடியினரின் வழிபாடுகளில் இருந்து சாங்கியம் முளைத்தது என்று கருதுபவர்களில் மூவர் முக்கியமானவர்கள். சாங்கியத் தரிசனமானது எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்ட தத்துவ வரலாற்றுக்கும் முந்தைய காலகட்டத்தை சேர்ந்தது, திட்டவட்டமான தருக்கபுத்தியை நம்பி இயற்கையை ஆராயப் புகுந்த பழங்குடி மரபில் இருந்து முளைத்தது என்கிறார் ரிச்சர்ட் கார்பே ( Richard Garbe : Ancient Indian Philosophy )
இதே கருத்தை மேலும் குறிப்பாகக் கூறுகிறார் ஹென்ரிக் ஸிம்மர். இந்திய வைதிக, பிராமண, புரோகித மரபுக்கு வெளியே இருந்த பழங்குடியினரின் சிந்தனையிலிருந்து சாங்கியம் பிறந்தது என்கிறார் அவர். ( Heinrich Zimmer: Philosopies of India ). இதே கருத்தை மேலும் விளக்கும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ( Debi Prasad Chattobadhyaya : Lokayata )தன் ஆய்வில் சாங்கிய மரபு இயற்கை வழிபாடு, தாய்வழிபாடு ஆகியவற்றின் தத்துவ நீட்சியே என்கிறார். சக்தி வழிபாடு தத்துவ ரீதியாகச் சாங்கியத்துக்கு முன்னோடி என்கிறார்.
கே. தாமோதரன் இதை மறுக்கிறார். இத்தகைய தத்துவார்த்தமான சிந்தனைகள் உருவாவதற்கு அதற்குறிய சமூக அமைப்பு தேவை. அதாவது உபரி உற்பத்தி, உழைப்புப் பாகுபாடு, சிந்திக்கும் தனிக்கூட்டம் ஆகியவை உருவாகியிருக்க வேண்டும், அவை பழங்குடி சமூக அமைப்பில் இருந்ததில்லை.
ஆகவே இப்படிக் கூறலாம். பண்டைய வழிபாட்டு மரபிலிருந்து ஒரு பொறி கிளம்பி, தத்துவ சிந்தனை மூலம் வளர்ந்து சாங்கியம் ஆயிற்று. ஆனால் சாங்கியம் முற்றிலும் வேதமரபுக்கு எதிரானது என்பது சரியல்ல. ரிச்சர்ட் கார்பே சாங்கியம் வேத மரபுடன் விவாதித்து வளர்ந்தது என்று கூறுவது உண்மையே. ஆனால் சாங்கிய ஞான மரபுக்கு இந்து ஞானத்தில் மிக முக்கியமான பங்கு கண்டிப்பாக இருந்தது.
உதாரணமாக, மகாபாரதம் சாந்திபர்வத்தில் சாங்கியமும் யோகமும் பிற வேதங்களில் இருந்து முற்றிலும் வேறுபடக்கூடிய தனித்த சனாதன தர்மங்களாகும் என்று கூறப்படுகிறது. ஓர் இடத்தில், வாழ்க்கை இயற்கையின் விளையாட்டு, இயற்கையை அறிந்தால் துயரில்லை என்று ஸெளனகன் எனும் அமைச்சன் தருமனுக்கு கூறுகிறான். மேலும் பல உபதேசங்களில் சாங்கிய தரிசனக் கருத்துக்கள் கூறப்படுகின்றன. கீதையில் சாங்கியத் தரிசனம் மிக முக்கியமாகப் பேசப்படுகிறது. சாங்கியத்தரிசனத்தை பயில வேண்டியதன் தேவை குறித்து அர்த்தசாஸ்திரம் வலியுறுத்திக் கூறுகிறது. சரக சம்ஹிதையில் முற்றிலும் வேதத்துக்கு எதிரான பெளதிகவாதச் சிந்தனையாக இது குறிப்பிடப்படுகிறது. ஆனால் இயற்கையின் பல்வேறு சலனங்களை அறிய சாங்கியம் கற்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது அது.
சாங்கியத்தரிசனம் குறித்த மிகப் புராதன நூல்கள் எவையும் இப்போது கிடைப்பதில்லை. கபிலனில் மூலநூல் என்று கூறப்பட்ட சாங்கிய பிரவசன சூத்ரம் உண்மையில் மிகவும் பின்னால் – 14 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமக்கு கிடைக்கும் மிகப்பழைய நூல் ஈஸ்வர கிரிஷ்ண சூரி எழுதிய சாங்கிய காரிகை. அது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. எட்டாம் நூற்றாண்டில் கெளடபாதர் சாங்கிய காரிகைக்கு ஒர் உரை எழுதினார். ஒன்பதாம் நூற்றாண்டில் வாசஸ்பதிமிஸ்ரர் சாங்கியத் தத்துவ கெளமுதி என்ற ஓர் உரையை எழுதியுள்ளார். பிற்பாடு சில எளிய ஆய்வுரைகள் வந்துள்ளன.
மிகப் பிற்காலத்தில் பெரிதும் மாறுதலுக்கு உள்ளான சாங்கியத் தரிசனம் வைதிகமரபின் ஒரு பகுதி என்றே சிலரால் விளக்கப்பட்டது. ஆறு தரிசனங்களையும் வேதங்களின் உப அங்கங்கள் என்று மதுசூதன சரஸ்வதி போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிரம்ம உபநிஷத் ( இது மிகப் பிற்காலத்தையது ) ஆறு தரிசங்களும் ஒன்றே என்று கூறுகிறது. பல நிறப்பசுக்கள் ஒரே நிறப்பாலை அளிப்பது போல என்று அது கூறுகிறது.
அடுத்து வருவது..
சாங்கியத்தின் தத்துவ மையம்