எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
ஆறு தரிசனங்கள்
சாங்கியத்தின் தத்துவ மையம்
[மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனுடன். மேகமலை.]
சாங்கியத் தரிசனத்தின் தத்துவ மையம் என்பது அது முன் வைக்கும் விடுதலைக்கான வழியேயாகும். சாங்கிய காரிகையில் உள்ள முதல் சுலோகமே மானுட துக்கத்தை தீர்ப்பதே சிந்தனையின் நோக்கம் என்று கூறுகிறது. துக்கமிலாத வாழ்வே விடுதலை. துக்கம் அறியாமையிலிருந்து உருவாகிறது. ஆகவே அறிவே விடுதலை தருவது என்கிறது சாங்கியம்.
அத்யாத்மீகம், ஆதி பெளதிகம், ஆதி தெய்வீகம் எனும் மூவகைத் துயரங்களுக்கு இரையாகக் கூடியவன் மனிதன். அகத்துயரம், புறத்துயரம், இயற்கை நியதி தரும் துயரம் என்று இம்மூன்றையும் தமிழ்ப்படுத்தலாம். மனக்குழப்பங்கள், காமம், குரோதம், மோகம் போன்ற தீங்குதரும் இச்சைகள், நோய்கள் முதலியவை அகத்துயரங்கள். சமூக அமைப்பு மூலமோ இயற்கைப் பொருட்களின் மூலமோ விளையும் துயரங்கள் புறத்துயரங்கள். இயற்கை விதிகள், பிரபஞ்ச இயக்கம் முதலிய, மனிதனுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட காரணங்களிலிருந்து வரும் துயரம் இயற்கைத்துயரம்.
இம்மூன்று துயரங்களையும் மனிதன் எதிர் கொண்டே ஆகவேண்டும். இவற்றை தடுக்க அவனால் முடியாது. ஆனால் இவற்றை காரண காரிய ரீதியாக புரிந்துகொண்டான் என்றால் அவனுக்கு அச்சமோ பதற்றமோ பரிதவிப்போ ஏற்படுவதில்லை. இவை தரும் துயரங்களில்லிருந்து அவன் தன்னை விடு விடுவித்துக்கொள்ள முடியும். சாங்கியம் தரும் அடிப்படைப் புரிதல் அவ்விடுதலைக்கு உதவும். அதைச் சாங்கிய மரபு ‘ வியக்த அவியக்த விஞ்ஞானம்’ என்கிறது. இதைத் ‘தெரிந்தது தெரியாதது குறித்த அறிவு” என்று விளக்கலாம். நமக்கு தெறிவது இயற்கை. தெரியாதது மூல இயற்கை. மூல இயற்கை இயற்கையாக மாறி இயங்கும் விதமே நாம் அறிய வேண்டியது.
சத்காரியவாதம் – பருப்பொருளே உண்மை
இயற்கையின் நிகழ்வுகளைப் பற்றிய சாங்கியத்தின் புரிதலில் மிக முக்கியமானது சக்காரியவாதமாகும். எல்லாச் சித்தாந்தமும் ஒரு காரிய காரணத் தொடர்பை விளக்கியாகவேண்டும். அதாவது ஒவ்வொரு சித்தாந்தமும் எதிர்கொள்ளும் முதல் கேள்வியே ‘ இது எங்கிருந்து வந்தது? எங்கு செல்கிறது?’ என்பதே. ’இதம்’ (இது) என்ற இந்தச் சுட்டுபொருள் தத்துவ சிந்தனையில் மிக முக்கியமானது. இந்த கூழாங்கல்லை அப்படி விளக்கி விட்டால் அதன்படி மொத்த பிரபஞ்சத்தையும் விளக்கி விடலாம். இந்த முதல் கேள்விக்கு விடையாக ஒரு தத்துவம் உருவாக்கும் விளக்கமே காரிய காரண வாதம் ஆகும்.
காரியம் என்றால் விளைவு. காரணம் என்றால் அதற்குரிய மூலம் அல்லது காரணம். பால் காரியம், பசு காரணம். மோர் காரியமாக இருந்தால் பால் அதன் காரணம். வெண்ணை காரியமாக இருந்தால் மோர் அதன் காரணம். இவ்வாறு காரிய காரண உறவினால் ஆன ஓரு பெரும் தொடர் நிகழ்வுதான் நாம் காணும் பிரபஞ்சம்.
சரி, இப்படிப் பின்னால் சென்று இறுதியில் பார்த்தால் வரக்கூடிய அந்த ஆதிகாரணம் யாது? அந்த மூலக்காரணம் ஒரு பருப்பொருள் என்று நம்புபவர்களை பெளதிகவாதிகள் என்றும் அது அறியமுடியாத வல்லமையே என்று நம்புபவர்களை ஆன்மிகவாதிகள் என்றும் கூறலாம். அந்த மூலகாரணம் ஆதி இயற்கை என்னும் பருப்பொருள் என்கிறது சாங்கியம் என்பதை நாம் அறிவோம்.
ஆதி இயற்கை எப்படி நாம் காணும் இயற்கையாக ஆயிற்று என்று விளக்கும் பொருட்டு சாங்கிய தரிசனம் உருவாக்கிய தருக்க ரீதியான காரண காரியவாதமே சத்காரியவாதம் ஆகும். இதன் சிறப்பம்சம் என்ன? ஒரு காரணம் காரியமாக மாறும் போது அது இல்லாமல் ஆவதில்லை. காரியத்தில் அது உள்ளுறைந்துள்ளது. அதேபோல காரியமாக மாறாத காரணத்தில் கூட காரியம் உள்ளுறைந்துள்ளது.
பாலில் இருந்து மோர் உருவாகிறது. ஆகவே மோரில் பால் உறைந்துள்ளது. பாலை மோராக ஆக்க முடியும். அந்தச் சாத்தியம் பாலில் உறைந்துள்ளது. ஆகவே பாலில் மோர் மறைந்து உறைகிறது. ஆகவே காரணம் பருப்பொருள்தான். காரியமும் பருப்பொருள்தான். இரண்டும் உண்மை. இதுவே சத்காரிய வாதத்தின் அடிப்படையாகும்.
நாம் இப்போது காண்பது முக்குணங்களால் இயக்கப்படும் இயற்கையே.இதில் மூல இயற்கை மறைந்துள்ளது. இந்த இயற்கை இதன் எல்லாச் சாத்தியங்களுடனும் மூல இயற்கையில் மறைந்து கிடந்தது. சத்காரிய வாதத்தின் அடிப்படை, இருப்பதில் இருந்தே புதிதாக ஒன்று உருவாக முடியும், இல்லாததில் இருந்து எதுவும் உருவாக முடியாது என்பதாகும்.
நம்மிடம் மோர் மட்டும் உள்ளது. பாலை நாம் கண்டதில்லை. என்றால் பாலைப் பற்றி எப்படி அறிய முயல்வோம். மோரின் இயல்புகளிலிருந்துதானே பாலை ஊகித்தறிவோம்? மோர் திரவமானது. ஆகவே பாலும் திரவமே. மோரில் நெய் உள்ளது. ஆகவே பாலிலும் அது இருந்திருக்க வேண்டும் – இப்படி. இதைப் போல நம் அறிவுக்குச் சிக்கும் இந்த இயற்கையை அடிப்படையாகக் கொண்டுதான் இதன் மூலகாரணமாக ஆதி இயற்கையை அறிய முடியும். இது பருப்பொருள். ஆகவே அதுவும் பருப்பொருள்.
அனைத்திற்கும் காரணம் உண்டு என்றால் அந்த ஆதி இயற்கையின் காரணம் என்ன? அதை சாங்கியம் எப்படி விளக்குகிறது. ‘ அமூலம் மூலம்’ ( வேருக்கு வேர் இல்லை) அந்த மூலப் பிரகிருதியில் முக்குணச்சமநிலை குலைந்து செயலூக்கம் பிறந்ததன் விளைவாகவே காரிய காரண உறவு பிறந்தது. காலமில்லாத வெறுமையில் உள்ள மூலப்பிரகிருதி காரிய காரண உறவு என்ற விளக்கத்துக்கு அப்பாற்பட்டது.
இந்த மூல இயற்கை எப்படிப்பட்டது என்று சாங்கிய காரிகை விளக்குகிறது. அனைத்துக்கும் ஆதியான அதைப் ‘பிரதானம்’ என்கிறது சாங்கியம் (முதன்மையானது). நம்மால் அறிய முடியாததும் எந்த குண விசேஷங்களும் இல்லாததுமான ஆதி இயற்கையை சாங்கியம் அவியக்தம் (அறியமுடியாதது, வடிவற்றது) என்கிறது. நம்மால் குணங்களையே அறிய முடியும். குணங்கள் இல்லாத ஆதி இயற்கை நமது புலன்களில் அறிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. அதாவது, கண்ணுக்குத் தென்படும் வடிவமோ, தொட்டறியும் திடமோ, ருசியோ, மணமோ, ஒலியோ இல்லாத ஒன்று அது.
இந்த மூல இயற்கையிலிருந்து உருவான இயற்கை, குணமயமானது எனவே நம்மால் புலன்களால் அறியப்படுவது (வியக்தம்) காரண காரிய உறவு மூலம் ஒன்று இன்னொன்றாக மாறியபடியே இருப்பது. எனவே நிலையற்றது (அநித்யம்); ஒன்றையோன்று சார்ந்து இயங்குவது.
நிரந்தரமானதும், எதையும் சாராததும் ஆன மூல இயற்கை அறிய முடியாததாக இருப்பது. அது இல்லாமல் இருப்பதனாலல்ல. அது நுட்பமாக இருப்பதானால்தான். அது நாம் அறியும் இயற்கையிலேயே சூட்சுமமாக உறைகிறது. நாம் காணும் இயற்கையிலிருந்தே அதை நம் நுண்ணுணர்வு மூலம் ஊகித்தறிய முடியும். ஆனால் நம்மால் எந்நிலையிலும் அதை ஒர் அனுமானமாக (ஊகமாக) மட்டுமே அறியமுடியும் என்று விளக்குகிறது சாங்கிய காரிகை
அடுத்து வருவது…
சத்காரியவாதமும், வேதாந்தமும்