எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
ஆறு தரிசனங்கள்
சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும்
சத்காரிய வாதத்தை சாங்கிய அறிஞர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று அறிய அவர்கள் எப்படித் தங்கள் முக்கிய எதிர்த்தரப்பான வேதாந்தததை எதிர்கொண்டனர் என்று பார்ப்பது உதவிகரமானதாகும்.
பிரம்மம் மட்டுமே ‘சத்’ அல்லது ‘இருப்பு உடையது’ என்கிறது வேதாந்தம்.பிரபஞ்சம் ‘அசத்’ அதாவது ‘இருப்பு அற்றது’ (அல்லது மாயத்தோற்றம் அல்லது மனமயக்க நிலை); சத் வடிவமான பிரம்மதிலிருந்தே அசத் வடிவமான பிரபஞ்சத்தோற்றம் உருவாயிற்று என்று அது கூறியது.
சாங்கியர்கள் இதை ஐந்து முனைகளில் எதிர்த்தார்கள்.
- இல்லாததற்கு, அதாவது அசத்திற்குக் காரணம் தேட வேண்டிய அவசியமே இல்லை. இருப்பதற்குதான் நாம் காரணம் தேட வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றுக்கும் காரணம் உள்ளது. ஆகவே இது இல்லாமை அல்ல, இருப்பேயாகும். அதாவது, இந்தப் பிரபஞ்சம் உண்மையில் உள்ளது என்பதற்கு, இதற்கு காரணம் தேடவேண்டும் என்பதே சான்றாகும் (சத் காரணாத்)
- ஒரு பொருள் அதன் அடிப்படை இயல்புகள் உள்ள இன்னொரு பொருளையே உருவாக்க முடியும். ஒரு காரணத்தின் இயல்புகளை அடிபடையாகக் கொண்டே அதன் காரியத்தின் இயல்புகள் பிறக்கின்றன. நாம் காணும் இயற்கைக்கு என்ன இயல்புகள் உண்டோ அவ்வியல்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக நாம் காணாததாக இதன் காரணம் இருக்க நியாயமில்லை (உபதான காரணாத்)
- ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய இடம், நிலை ஆகியவை உள்ளன. ஒரு மரம் இரண்டு இடத்தில் நிற்க இயலாது. எல்லா இடத்திலும் இருப்பதாக ஏதும் இருக்க முடியாது. ஒரு விஷயம் எல்லா இடத்திலும் இருக்க முடியாத நிலைக்கு ‘ சர்வ சம்பவ அபாவம்’ என்று சாங்கியம் பெயர் சூட்டியது. பூமியில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் இவ்வியல்பு உள்ளது. ஆகவே இது இருப்பது. அதே இயல்புதான் இதன் மூலகாரணத்திற்கும் இருக்கும் (சர்வசம்பவ அபாவத்).
- ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய சக்தி உண்டு. ஒன்று ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் பிறிதொன்றினைச் செய்ய முடியாது. பால் மோர் ஆகும். நீர் மோர் ஆகாது. எல்லா விளைவுகளும் சாத்தியமாக்ககூடிய சக்தி எந்த பொருளுக்கும் இல்லை. இவ்வியல்பு பூமியில் உள்ள எல்லாவற்றுக்கும் உள்ளது. இவ்வியல்பே இதன் மூலகாரணத்திற்கும் இருக்கும் (சக்தியஸ்ய சக்திய காரணாத்).
- ஒரு பொருள் இன்னொன்றுக்கு காரணமாகக் கூடிய இயல்பினை எப்போதும் கொண்டிருக்கிறது. மோர் வெண்ணையாகும். வெண்ணை நெய்யாகும். நெய் சுடராகும். இவ்வாறு இங்குள்ள எல்லாப் பொருட்களும் பிறிதொன்றுக்குக் காரணங்களாக ஆகக் கூடியவையே. ஆகவே இவற்றுக்குக் காரணங்களாக இருந்தவையும் இதே போன்ற பொருட்களே (காரண பவாத்).
இந்த ஐந்து தருக்க அடிப்படைகளை வைத்து, இந்தப் பிரபஞ்சம் மாயை அல்ல உண்மை என்று வாதிட்டனர் சாங்கியர். பிரபஞ்சத்திற்குக் காரணம் உள்ளது. இதன் இயல்புகள் இதன் காரணத்தின் இயல்பிலிருந்து வந்தவை, இங்குள்ள ஒவ்வொன்றுக்கும் திட்டவட்டமான இருப்புநிலை உள்ளது. இங்குள்ள ஒவ்வொன்றுக்கும் வரையறைக்குட்பட்ட வல்லமையே உள்ளது. இந்த ஐந்து காரணங்களும் இந்தப் பருப்பிரபஞ்சம் உண்மையே என்பதற்குச் சான்றுகள். இதன் மூலம் இப்பிரபஞ்சம் (காரியம்) ஒரு உண்மையிருப்பே (சத்) என்று வாதிட்டமையால் இவ்வாதம் சத்காரிய வாதம் எனப்பட்டது.
இயற்கையின் பரிணாம வளர்ச்சி
சாங்கியத் தரிசனம் கூறுவதன்படி ஆதி இயற்கை படிப்படியாக பரிணாமம் அடைந்து நாம் காணும் இயற்கையாக தோற்றம் அளித்தது, இருபத்து நான்கு தத்துவங்கள் தங்களுக்குள் இணைந்தும் பிரிந்தும் காரியகாரண உறவினை உருவாக்குவதன் மூலமேயாகும். ‘பால் மோராவது போல இயல்பாக’ இந்தப் பரிணாமம் நடைபெற்றது என்று சாங்கியம் கூறுகிறது.
இங்கு பொது வாசகர்களுக்கு ஒரு விளக்கம் தரவேண்டியுள்ளது. தத்துவம் என்று இங்கு குறிப்பிடப்படுவது தத்துவம் (Philosophy) என்று சாதாரணமாக அறியப்படும் பொருளில் அல்ல. ’தத்’ என்றால் ‘அவ்வாறு’ என்று சமஸ்கிருத அர்த்தம். தத்வம் என்றால் ‘ அவ்வாறு காணப்படுதல்’ என்று பொருள். ஆகவே இங்கு தத்துவம் என்பது கருதுகோள்கள் (Phenomina) என்றே பொருள்படுகிறது.
முதல் தத்துவம் அவியக்தமாக உள்ள மூலப்பிரகிருதிதான். மூலப்பிரகிருதியில் இருந்து முதலில் உண்டானது பரிசுத்தமான பிரக்ஞை ஆகிய மகத் ஆகும். ‘மகத்’ என்பதை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். அறிவு, உணர்ச்சிகள், உள்ளுணர்வு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான் பிரக்ஞை. இத்தகைய பிரக்ஞைகளின் ஒட்டு மொத்த பிரபஞ்ச வடிவம் பிரபஞ்சப் பிரக்ஞை. அதில் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பிரக்ஞையும் உள்ளடங்கியுள்ளது. ஐந்தப் பிரபஞ்சப் பிரக்ஞை ஒரு காடு என்று வைத்துக்கொள்ளுவோம். அந்தக் காடு உருவாகக் காரணமாக அமைந்த முதல் விதைதான் மகத்.
அதாவது குணரூபங்களே இல்லாத ஆதி இயற்கையில் முதல் விழிப்பு எற்படுவது அதில் பிரக்ஞையின் துளி உருவாகும் போதுதான். பிரக்ஞை உருவான உடனே அகங்காரம் உண்டாகிறது. இது மூன்றாவது தத்துவம். அகங்காரம் என்றால் கர்வம் என்பது நடைமுறைப் பொருள். தத்துவ விவாதங்களில் அப்படி அல்ல. அஹம் என்றால் சுயம். அகங்காரம் என்றால் சுயபிரக்ஞை அல்லது தன்னுணர்வு. அதாவது நாம் இருக்கிறேன், நான் அறிகிறேன் என்ற மனநிலை.
தன்னுணர்வு உருவானதும் அதன் வெளிப்பாடுகளுக்காகப் பிற தத்துவங்கள் பிறந்தன. அவை ஷோடசக் கணங்கள் எனப்படுகின்றன. (பதினாறு தத்துவங்களின் தொகை.) அவை படிப்படியாக உருவாகின்றன. முதலில் உருவாவது ஒலி, தொடுகை, நிறம், சுவை, மணம் எனும் ஐந்து குணங்கள். இந்த ஐந்து தன்மாத்திரைகளில் இருந்து ஐந்து புலன்கள் உருவாகி வந்தன. இவை ஞான இந்திரியகங்கள்( அறிவுப் புலன்கள்) எனப்பட்டன. கண், காது, நாக்கு, மூக்கு, சருமம் என அவை ஐந்து. இவற்றைச் செயல் படுத்தும் பொருட்டு ஐந்து கர்ம இந்திரியங்கள் உருவாயின. அவை வார்தை, கை, கால் என்று கூறப்பட்டன. மொத்தம் பதினாறு.
இந்தப் பதினாறு அறிதல் மூலங்களின் விளைவாகவே ஐந்து பருப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த ஐந்து பருப்பொருட்களின் எல்லாத் தனித்தன்மைகளும் இவ்வாறு உணரப்படுவதன் மூலம் உருவாகி வருபவையேயாகும். நிலம், நீர், வானம், நெருப்பு , காற்று என அவை ஐந்து. இவ்வாறு பஞ்ச பூதங்கள் உருவான பிறகு அவற்றின் மூலம் பெறும் அனுபவங்களைக் கோர்த்து அறியவும் மதிப்பிடவும் கூடிய மனம் உருவாகிறது. இது இருபத்தி நான்காவது தத்துவம்.
இந்த இருபத்தி நான்கு தத்துவங்களின் செயல்பாடு மூலமே நாம் காணும் இயற்கையாக ஆதி இயற்கை மாறித் தெரிகிறது என்கிறது சாங்கியம். புல், புழு, சூரியன், காற்று, மனிதர்கள், காமம், குரோதம், மோகம் எல்லாமே இந்த இருபத்து நான்கு தத்துவங்களின் விளைவுதான்.