எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
சாங்கியம்
முக்குணங்களின் அலகிலா விளையாட்டு
[கவி, கேரளா. மழைப்பயணத்தின் போது]
ஆதி இயற்கை முக்குணங்களின் சம நிலையை மீட்க முயன்று அதன் மூலம் பிரபஞ்சம் பிறக்கிறது என்று சாங்கியம் கூறுகிறது என்பது முன்பே விளக்கப்பட்டது. சத்துவம், தமஸ், ரஜஸ் என்ற மூன்று குணங்களைப் பற்றியும் சாங்கிய காரிகை மிக விரிவாகவே பேசுகிறது.
சத்துவகுணம் சுககரமானது அழகும் ஒளியும் உடையது. ஞானம், சிரத்தை, செயலூக்கம் முதலிய இயல்புகள் கொண்டது. நல்ல விளைவுகளை உண்டுபண்னுவது. மேற்கத்திய தத்துவ உருவகத்தைப் பயன்படுத்திக் கூறினால் இது நேர் நிலை இயக்கம் (Positive Movement) எனலாம்.
தமோகுணம் (தமஸ் என்றால் இருள் என்று பொருள்) இருள், சலனமின்மை, அறியாமை ஆகிய குணங்களைக் கொண்டது. அதாவது அனைத்து வகையிலும் இது எதிர்நிலை இயக்கம் (Negative Movement)
ரஜோகுணம் இவ்விரு இயக்கங்களுக்கும் நடுவே உள்ள தீவிரமான செயலூக்க நிலையாகும். துயரவிளைவுகளையும் நல்ல விளைவுகளையும் உண்டுபண்ணக் கூடியது. இதை நாம் நடுநிலை இயக்கம் (Nuetral Movement) என்று கூறலாம்.
ஒவ்வொரு பொருளிலிலும் முக்குணங்களும் போர்புரியும் நிலையில் உள்ளன. தமோகுணம் பிற இரு குணங்களுக்கும் தடையாகமாறும் இயல்பு கொண்டது. ஆணும் பெண்ணும் போல எதிர் எதிர்க் குணங்கள் புணர்ந்து புதிதாகப் பிறந்து முன்னகர்கின்றன என்பது சாங்கிய மரபின் உருவகம்.
இங்கே இயல்பாக நம் நினைவுக்கு வருவது மேற்கத்திய மரபில் உள்ள முரண்பாட்டியக்கம் (Dialectics) என்ற கருதுகோள்தான். மேற்கத்திய சிந்தனையின் அடிப்படையாக உள்ள உருவகம் இது.
எல்லாவிதமான இயக்கங்களும் எதிரும் புதிருமான சக்திகளில் மோதல் மூலம்தான் உருவாகின்றன என்று அவர்கள் கூறினார்கள். நமது சிந்தனை மரபிலும் இந்த இரட்டை முரணியக்கம் பற்றி பேசப்பட்டுள்ளது. நம்முடையது மூன்று சக்திகளினாலான முரண்பாட்டியக்கம், அவ்வளவுதான்!
ஆயினும் நம்முடைய இயக்கக் கொள்கைகள் இம்மூன்று போக்குகளின் முரண்பாடு மூலம்தான் உருவகிக்கப்படுகின்றன. எங்கெல்லாம் இயக்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த முக்குணங்களின் முரண்பாடு குறித்துப் பேசப்பட்டிருப்பதைக்காணலாம். இந்த முக்குணக்கொள்கை பிறகு எல்லா இடத்திலும் விரிவாக எடுத்தாளப்பட்டது.
உதாரணமாக சாதிகளைப் பற்றிப் பேசுமிடத்தில் பிராமணன் சத்வகுணமும் சூத்திரன் தமோகுணமும் ஷத்ரியன் ரஜோகுணமும் உடையவனாக கூறப்படுகிறான். ரசாயனம் இவ்வாறு எல்லா உலோகங்களையும் மூன்றாகப் பிரித்து விடுகிறது. ஆயுர்வேதம் வாதம், பித்தம், கபம் என்று பிரிப்பதும் இதனடிபடையிலேயே.
சாங்கியத்தின் மீதான் தாக்குதலுக்கு பிற தரப்பினர் தொடுத்த முதல் வினா “ என்ன காரணத்தால் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஆதி இயற்கையின் முக்குணம் சம நிலையை இழந்தது?” என்பதாகும்.”எப்போது எப்படி அது மீண்டும் சம நிலையை அடையும்?” என்பது இன்னொரு வினா. “இரண்டுக்கும் நோக்கம் என்ன?” என்பது மூன்றாவது வினா.
இவ்வினாக்களுக்கு ‘அறிய முடியாமை’ யையே சாங்கியர் விடையாகக் கூறுகிறார்கள். முக்குணச் சமநிலை குலைந்தது இயல்பாக, சகஜமாக நடந்த ஒன்று என்கிறார்கள். அப்படிச் சமநிலை இழந்து இயக்க வடிவம் கொள்வது மூல இயற்கையின் பொருண்மைக் குணத்தின் விளைவாகவே கூட இருக்கலாம். இயற்கைக்கு வெளியே இருந்து எந்தச் சக்தியும் அதை இயக்கவில்லை. இயற்கைக்கு எந்த நோக்கமும் இல்லை.
சாங்கியத்தை விமரிசிப்பவர்கள் சாங்கியம் சார்வாக மதத்தின் ‘ தற்செயல்வாதம்’ நோக்கிப் போய் சரணடைந்துவிட்டது என்கிறார்கள். பிரபஞ்சம் தோன்றியதற்கு காரணம் இல்லை என்றால், இலக்கு இல்லை என்றால், பிரபஞ்சத்தின் எந்த நிகழ்வுக்கும் காரணம் இல்லைதான். மொத்த வாழ்க்கைக்கும் காரணமும் நோக்கமும் இல்லைதான். எல்லாமே வெறும் தற்செயல் விளையாட்டுதான். அதைக்கூற தர்க்கமோ தத்துவமோ தேவை இல்லை என்றார்கள். புருஷன் என்ற தத்துவத்தை உருவாக்கி இதை மறுத்தார்கள் சாங்கியர்கள்.
அடுத்து வருவது
புருஷன் – பரிபூர்ண சாட்சி