எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
புருஷன் – பரிபூர்ண சாட்சி
[அருகர்களின் பாதை நெடும் இந்தியப்பயணத்தின் போது நண்பர்களுடன். ”சாம் மணல் திட்டு”. ஜெய்சாலமர் அருகில். தார் பாலைவனம். ராஜஸ்தான்]
புருஷன் என்று சாங்கியமரபு கூறுவதை இப்படிப்புரிந்து கொள்ளலாம். பிரபஞ்சத்தை அறிவது யார்? நான்! நான்கள் கூடினால் நாம். நான் என்றால் ‘அறியும் மனம்’ இல்லையா? பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அறியும் மனங்களையும் ஒன்றாகச் சேர்த்தால் வரும் ஒற்றை மனம் எதுவோ அதுவே புருஷன். இதைப் ‘பிரபஞ்ச மனம்’ என்று கூறலாம்.
புருஷன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். எல்லா இடத்திலும் இருப்பவன். வடிவம் இல்லாதவன். ஆதி இயற்கையைப் போலவே அவனும் முழுமுதல் பொருள் போன்றவன். ஆதி இயற்கையும் ஆதி புருஷனும்தான் முதலில் இருந்தார்கள். இயற்கையின் எல்லா மாற்றங்களும் இந்த புருஷனின் பார்வையின்தான் நிகழ்கின்றன. இயற்கையின் இயல்புகள் எல்லாமே புருஷனின் இயல்புகளுடன் ஒப்பீட்டளவில் உருவாவதே. அதாவது சத்வகுணம் என்றால் அது புருஷனில் சத்வ விளைவுகளை உருவாக்குவது என்று பொருள்.
அதே சமயம் புருஷன் எந்த விதத்திலும் இயற்கையுடன் ஊடாடுவதில்லை. அவன் ஒரு பரிபூரண மெளன சாட்சி மட்டுமே. இயற்கையின் எந்த செயலும் புருஷனில் விளைவுகள் எதையும் உருவாக்குவதில்லை. ஒவ்வொரு மனிதனும் புருஷனின் அம்சம் உடையவனே.
புருஷதத்துவம் சாங்கிய மரபில் ஏன் உருவாயிற்று என்று ஏற்கனவே கோடிகாட்டப்பட்டது. இயற்கையில் குணங்கள் உருவாயின என்று கூறப்பட்ட உடனேயே அக்குணங்கள் எதன் அடிப்படையில் தீர்மானிக்கபட்டன என்ற கேள்வி எழுந்து விடுகிறது. உதாரணமாக ‘வெப்பம்’ என்றால் அதை உணர ஒர் உடல் தேவை. ஒளி என்றால் அதை உணர ஒரு விழி தேவை. எவராலும் உணரப்படாத, அறியப்படாத ஒன்று இருப்பதும் இல்லாததும் சமம்தானே.! இதன் விடையாக சாங்கியர் புருஷன் என்ற பார்வையாளனை உருவகித்துக்கொண்டனர்.
இரண்டாவது மனிதனுக்குள் உள்ள மனம், அதில் உள்ள ஞானம், ஞானத்தில் உள்ளடங்கிய்யுள்ள தேடல், இதெல்லாம் எங்கிருந்து வந்தன என்ற கேள்வி முக்கியமானதாகக் கூறப்பட்டது. ஜடத்தில் முக்குணச் சமன் குலைந்தமையினால் இயக்கம் எற்பட்டது சரி. ஜடத்தை குணரீதியாக அறிந்து மதிப்பிடும் பிரக்ஞையும் ஆவலும் ஜடத்தில் எப்படி குடியேறின? இதற்கு விடையாகவும் புருஷ தத்துவம் கூறப்பட்டது. ஜடத்தை அறிவதே புருஷனின் வேலை. அவனுடைய இருத்தலுக்கு அர்த்தமே இதுதான்.
படிப்படியாக புருஷ தத்துவம் ஆத்ம தத்துவத்துடன் இணைந்தது. சதீஸ சந்திர சட்டர்ஜி, நீரேந்திர நாத மோகன் தத் போன்ற வங்க சிந்தனையாளைர்கள் சாங்கிய தரிசனத்தைத் துவைதவாத மரபு சார்ந்த யதார்தச் சிந்தனை என்று வகுத்துக் கூறும்போது, ஆத்ம தத்துவமே பின்பு சாங்கிய மரபில் புருஷ தத்துவமாகப் புது வடிவம் பெற்றது என்று வாதிடுகிறார்கள். ஆத்மாவும் புருஷனும் ஒன்றுதான் என்று கூறப்பட்டது. இந்தபார்வையின் அடிப்படையில்தான் டாக்டர் ராதாகிருஷ்ணனைப் போன்ற அறிஞர்கள் சாங்கியத் தரிசனமும் ஆன்மிகவாதத் தரிசனமே என்று வாதிடுகிறார்கள்.
சாங்கியம் கூறும் புருஷன் வேதாந்தம் கூறும் ஆத்மனின் பெரும்பாலான இயல்புகளை அப்படியே பிரதிபலிக்கிறான் என்பது உண்மையே. உதாரணமாக இயற்கையில் நிகழும் பரிணாம மாற்றங்களின் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு புருஷனின் முக்தியே என்று சாங்கிய காரிகை பதில் கூறுகிறது! (சா.காரிகை – 58)
சாங்கியத் தரிசனத்தின் அடிப்படைக் கோப்பில் புருஷ தத்துவத்துக்கு இடமில்லை என்றும் அது பிற்பாடு சேர்க்கப்பட்டது என்றும் கருத இடமுள்ளது. வேதாந்த மரபின் ஒரு பகுதியாகச் சாங்கியத்தையும் சேர்க்க நடந்த முயற்சியின் விளைவாகவே புருஷதத்துவம் உருவாக்கப்பட்டது என்கிறார் ஷெர்பாட்ஸ்கி (Steherbatsky, Buddist Lagic Vol.I 47-78).
இதற்கு உதாரணமாக புருஷதத்துவம் சாங்கிய மரபின் பிற அடிப்படைகளும் மோதுவதைக் சுட்டிக்காட்டலாம். உதாரணமாக பருப்பிரபஞ்சத்திலிருந்து மகத் பிறக்கிறது. அதிலிருந்து தன்மாத்திரைகள். பிறகு புலன்கள், பிறகு மனம். இங்கு புருஷன் எங்கே வருகிறான்? மனம் வேறு புருஷன் வேறா?
அதேபோல சாங்கிய காரிகையே கூட தனக்குள் முரண்படுகிறது. புருஷன் வெறும் சாட்சியே என ஒரு இடத்தில் கூறுகிறது. பிறிதொரு இடத்தில் புருஷனும் இயற்கையும் முடவனும் குருடனும் போல இணைந்து இயங்கும் இரு சக்திகள், ஒன்றில்லையேல் பிறிதில்லை என்கிறது.
ஆனால் இறுதிவரை சாங்கியம் இறைவன், பிரம்மம் முதலிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மிகப் பிற்கால நூலான சாங்கிய பிரவசன சூத்திரம் ‘ கடவுளின் இருப்பை நிரூபிக்க முடியாது’ என்கிறது. ‘ செயல்களின் விளைவுகளை நாம் அனுபவிப்பது கடவுளின் விருப்பப்படியல்ல. செயலின் இன்றியமையாத நியதிகளின்படி மட்டுமே’ என்று கூறுகிறது அது. (சாங்கிய பிரவசன் சூத்திரம் 1, 93-95) அதாவது இயற்கை தன் விதிகளின்படி பரிணாமம் அடைகிறதே ஒழிய இறையருளால் அல்ல என்கிறது.
ஆனால் சாங்கியம் கூறும் புருஷனின் குணங்கள் பெரும்பாலும் இறைவனின் குணங்களுடன் ஒத்து போகின்றன. புருஷ சித்தாந்ததிலிருந்து இறை சித்தாந்தத்துக்கு ஒரு அடி தூரம்தான். ஏற்கனவே சமூகம், பிரபஞ்சம் முதலியவற்றை மாபெரும் மானுட வடிவமாகப் பார்க்கும் பார்வை (விராட புருஷன்) வழக்கத்தில் இருந்தது. இந்த அணுகுமுறைகள் எல்லாமே இறைச் சித்தாந்தந்தில் சென்று முடிந்துள்ளன. நமது எல்லாக் கடவுள்களுக்கும் ‘பரமபுருஷன்’ என்ற அடைமொழி உண்டு. விஷ்ணு ’புருஷோத்தமன்’ என்று கூறப்படுகிரார். இந்தச் சிறு இடைவெளியை தர்க்கம் மூலம் தூர்த்து வேதாந்தம் சாங்கியத்தை விழுங்கிக்கொண்டது.
அடுத்து வருவது
வேதாந்தத்தின் அறைகூவல்