எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
சாங்கியம் – வேதாந்தத்தின் அறைகூவல்
[டோரொண்டோ, கனடா அருங்காட்சியகத்தில் பிரம்மாண்டமான அடிமரம் முன்பு.]
பிற்கால வேதாந்தம், குறிப்பாக, சங்கரரின் அத்வைத தரிசன மரபு சாங்கியத்தை மிகக் கடுமையாக மறுத்து தருக்க பூர்வமாக நிராகரித்தது. இன்றைய சூழலில் இந்திய மரபு குறித்துப் பயிலும் ஒருவர் சங்கரர் கூறிய எதிர்க்கருத்துக்களை அறிந்த பிறகுதான் சாங்கிய மரபு குறித்து அறியப்புகுவார்.
சாங்கியத்தில் ‘புருஷன்’ குறித்துக் கூறும் இடங்களை சங்கரர் பொருட்படுத்தவில்லை. அடிப்படையில் பருப்பொருளே இருந்தது என்ற வாதத்தை மீண்டும் மீண்டும் தன் ‘ பிரம்ம சூத்திர பாஷ்யத்தில்’ தாக்குகிறார். இன்றைய விஞ்ஞானம் வரை தொடரக்கூடிய ஒரு ஆழமான புதிர், மனிதனிலும் பிரபஞ்சத்தின் பிறவற்றிலும் உள்ள சிருஷ்டி சக்தியாகும். இதை ‘உயிர்’ என்கிறோம். இது தன் வளர்ச்சிக்குப் பருப்பொருட்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறது. தன் வாழ்கைக்காகப் பருப்பொருட்களை இது பல்வேறு விதமாக உருவாக்குகிறது. இந்த வல்லமையை வெறும் பல்பொருட்களின் கூட்டு என்று கூறி விளக்கிட முடியாது.
ஒரு மரம் பிரம்மாண்டமாக வளர்ந்து பரவி நிற்கிறது. இது என்ன என்ற வினாவுக்கு இது இன்னின்ன வேதிப்பொருட்கள், இன்னின்ன மூலகங்கள் கலந்து உருவான ஒன்று என்று கூறிவிடலாம். நார்ப்பொருள், பச்சையம், அமிலங்கள், கரியமில வாயு, மாவுச்சத்து இவற்றைத் தனிதனியாகப் பிரித்தும் காட்டிவிடலாம். ஆனால் அந்த மரம் என்பது அவை மட்டும்தான? அப்பொருட்களைப் பட்டியலிட்டால் மரத்தை விளக்கி விட முடியுமா?
அந்த மரத்தின் உயிர் உள்ளது. அந்த உயிரின் துடிப்புதான் அதை விதையின் உறையை உடைத்து வெளிவரச் செய்தது. மண்ணில் உள்ள ரசங்களை உண்டு வளரச் செய்தது. அந்த அடிப்படையான இச்சையே (Will) மரத்தை அந்த வடிவத்தை அடைய வைத்தது. ஒளியைத் தேடி அதன் கிளைகள் பரவவும் நீரைத்தேடி அதன் வேர்கள் பரவவும் அதுவே காரணம். அம்மாமரத்தில் உள்ள வடுக்கள், அதன் இலைகளின் வடிவம் அனைத்துமே உயிர்வாழும் பொருட்டு அந்த இச்சை எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சியின் மூலம் உருவாகி வந்தவைதான். அந்த மரம் என்பது அந்த இச்சை பருப்பொருளில் பிரதிபலித்ததன் விளைவுதான்.
இதையே பிரபஞ்சம் குறித்தும் கூற முடியும். அந்த பிரபஞ்ச உயிரையே வேதாந்த மரபு ‘பிரம்மம்’ என்கிறது. சாந்தோக்ய உபநிடதத்தில் ஆரணியாகிய உதாதாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்குப் பிரம்மாண்டமன ஆலமரத்தைக் காட்டி அதன் சிறுவிதைக்குள் உறங்கும் உயிரே பிரம்மம் என்று கூறுகிறார்.
இந்த இச்சையை சாங்கிய மரபு விளக்கவில்லை. சங்கரர் அதைச் சுட்டிக் காட்டுகிறார். கல்லுக்கும் மண்ணுக்கும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளும் படைப்பூக்கம் இல்லை. ”ஒரு பக்கம் பலவிதமான விளைவுகளை உருவாக்கக் கூடியவையும் தொடர்ந்து உருமாறுபவையுமான புறவுலகம். மறுபக்கம் பற்பல உருவகங்களையுடையவையும் தங்களை தாங்களே அறிபவையுமான உயிர்ப் பிரபஞ்சம். இவை முழுக்க வெறும் பருப்பொருளிலிருந்து எப்படிப் பிறந்து வரமுடியும்? மண்ணும் கல்லும் தங்களைத்தாங்களே வனைந்து கொள்ளுவதில்லை. அவற்றைக் குயவந்தான் உருவாக்குகிறான். அதனைப் போல ஆதிஜடத்தை வனையும் ஒரு பிரக்ஞை, ஒரு சிருஷ்டி சக்தி தேவையாகிறது” என்று சங்கரர் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் (அத்.2) வாதிடுகிறார்.
பிரபஞ்சத்தில் உள்ள சிருஷ்டிகரத்துக்கு வேதாந்தம் கூறும் விடை எந்த அளவுக்கு சரி என்பது வேறு விஷயம். ஆனால் சாங்கியம் குறித்து அது முன்வைக்கும் வினா மிக மிக அர்த்தம் நிரம்பியது என்றுதான் கூறவேண்டும். ஒரு மதமாக சாங்கியம் வளராது போனமைக்குக் காரணமும் இதுவே. ‘ இந்த உயிர் எங்கிருந்து வந்தது, எங்கு போகிறது?’ என்ற வினா மனிதப் பிரக்ஞையின் அடிப்படையாக அமைவது. குழந்தை பிறக்கும்போதும் முதியவர் இறக்கும்போதும் தொடர்ந்து எழும் வினா அது. அதற்குத் திட்டவட்டமான பதிலை கூறாத ஒன்று மதமாக வளராது.
அடுத்து வருவது
சாங்கியமும் லோகாயதமும்