எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
சாங்கியமும் பகவத் கீதையும்
[இலக்கிய முகாம், ஊட்டி நாராயண குருகுலம். நண்பர் ”விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்” அரங்கசாமியுடன்]
இன்றைய சூழலில் சாங்கியத் தரிசனத்தின் மிக விரிவான சித்திரத்தை தரும் பொதுநூல் பகவத் கீதையேயாகும் ஆகும். இன்னும் கூறப்போனால் சாங்கியம் எனும் போதே கீதையின் ‘சாங்கியோகம்’ பகுதிதான் பரவலாக நினைவு கூறப்படும். கீதையில் சாங்கியத்தரிசனம் சற்று உருமாறிய நிலையில் விரிவாகவே பேசப்படுகிறது.
இதைப்புரிந்துகொள்ள முதலில் கீதையை நாம் அதன் பின்னணியில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும். மார்க்ஸிய வரலாற்று ஆய்வாளரான டி.டி. கோசாம்பி கீதையை ‘மகத்தான இலக்கியத் திருட்டு’ என்று கூறுகிறார். அதாவது பல்வேறு நூல்களின் முக்கியமான பகுதிகளைத்திரட்டி அழகிய மொழியில் முன்வைத்த நூல் அது என்ற பொருளில்.
கே.தாமோதரன் கீதையை முரண்பாடுகளின் சந்திப்புப் பள்ளி என்கிறார். இது இன்னும் நுட்பமான பார்வையாகும். நாம் கீதையை இப்படி வகுக்கலாம். பற்பல நூற்றாண்டுகளாக வேதமரபு, வேதாந்தம்,பெளதிகவாத ஞான மரபுகள், பெளத்த சமண மதங்கள் ஆகியவற்றுக்கு இடையே நடந்து வந்த பெரும் விவாதம் மூலம் உருத்திரண்டு வந்ததுதான் கீதை. பாற்கடலில் அமுது போல.
கீதையின் சாரம் ஆன்மிகவாதமேயாகும். அதே சமயம் அது சடங்குகளுக்கு எதிரானது. ஆழமான இறை நம்பிக்கையை அது முன்வைத்தது. அதே சமயம் அது மூடநம்பிக்கைகளுக்கு எதிரானது. ஆன்மிக விடுதலைக்காக அது அறைகூவுகிறது. அதே சமயம் பெளதிகத்திலிருந்து தப்பியோடுதலை அது ஏற்கவில்லை. பற்றற்ற நிலையில் பெளதிக வாழ்வினை அதிக பட்ச திறனுடன் நடத்தும்படி அது தன் சாரமாக கொண்டுள்ளது. ஆனால் பெளதிகவாத மரபின் சிறந்த அம்சங்களையெல்லாம் உள்ளிழுத்துக் கொண்டுள்ளது.
ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் கீதை அதற்கான மூன்று பாதைகளாகிய பக்தி, ஞானம், தியானம் ஆகியவற்றை மூன்று வகைகளில் முக்கியப்படுத்துகிறது. பகவத்கீதை ஒரு தத்துவ நூல். அதே சமயம் அது மிகுந்த அழகியல் நுட்பம் உடைய ஒரு பேரிலக்கியம் கூட. கீதை ஒரு மாபெரும் சம நிலையாகும். பல்லாயிரம் தராசு தட்டுகள் நடுவே அசையாமல் நிற்கும் தராசு முள் அது.
சாங்கியத்தை எடுத்துப் பேசும் கீதை அதை வேதாந்த மரபின் ஆன்மிகத்துடன் இணைந்து விடுகிறது. ‘புருஷன்’ என்ற கருதுகோளுக்கு அழுத்தம் தந்து அதை ‘ஆத்மா’ அளவுக்கு உருமாற்றி இந்த இணைப்பினை அது செய்கிறது.
‘இயற்கையும் புருஷனும் தொடக்கமிலாத காலம் முதல் உள்ளனர். குணங்களும், பரிணாமங்களும் எல்லாம் இயற்கையிலிருந்து உருவானவை என்று அறிக’ என்று கீதை கூறுகிறது (கீதை XIII-19). ” எல்லாச் செயல்களும் ஆதி இயற்கையின் குணங்களின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன. அகங்காரம் மூலம் செயல்களை அவனே நிகழ்த்துவதாக மூடன் எண்ணிகொள்கிறான்” என்கிறது அது (கீதை – III – 27).
இன்னொரு இடத்தில் கீதை இயற்கைக்கு அப்பால் ஏதுமில்லை என்றும் கூறுகிறது. “இயற்கையிலிருந்து பிறந்த இந்த முக்குணங்களிலிருந்து அல்லாமல் அவற்றிலிருந்து வேறிட்டுப் பூமியிலோ வானிலோ வேறு எங்குமோ எதுவும் இல்லை” என்று வகுத்துக் கூறுகிறது (கீதை XVIII – 40 ). புருஷன் சுக துக்கங்களை அனுபவிக்கிறானேயொழிய அவனுக்கு இயற்கையின் ஆட்டத்தில் பங்கேதுமில்லை (கீதை XVIII – 21).
இப்போது கீதை தரும் சாங்கியத்தின் சித்திரம் புரிந்திருக்கும். அதாவது கீதையின் தரிசனப்படி ஆத்மா சுதந்திரமானது, எதனாலும் பாதிக்கப்படாதது. வெளியே உள்ள வாழ்க்கை மற்றும் இயற்கையின் சுக துக்கங்களை அது அடைகிறது. உண்மையில் அவை ஆத்மாவின் மாயத்தோற்றங்கள் மூலம் அடையப் பெறுபவையே. மாயை என்று தெளிந்தால் ஆத்மா அவற்றிருந்து விலகி சமநிலை அடைய முடியும்.
ஆத்மாவுக்கு பங்கில்லாமல் வெளியே இயற்கை தன் நியதிகளின்படி சுதத்திரமாக இயங்குகிறது. ஆத்மாவின் யத்தனங்களேதும் இயற்கையை பாதிப்பதில்லை. ஆகவே பற்றுள்ள செயல் என்பதற்கு அர்த்தமே இல்லை. மனித மனமும் உடலும் இயற்கையின் பகுதிகள் என்பதானால், அவையும் இயற்கையின் நியதிப்படி இயங்குபவையேயாகும். ஆகவே பற்றற்ற சாட்சியாக ஆத்மாவை வைத்தபடி இயற்கையின் நியதிப்படி வெற்றிகரமாகச் செயல்படுபவனே சிறந்த மனிதன். கீதை இவனைக் கர்மயோகி என்கிறது.
தன் விதிப்படி இயங்கும் இயற்கை, பற்றற்ற சாட்சியான ஆத்மா என்ற இரு அடிப்படைக் கருத்துக்களையும் சாங்கிய மரபில் உள்ள இயற்கை, புருஷன் என்ற கருதுகோள்களுடன் பிணைத்துவிடுகிறது கீதை. அதே சமயம் பருப்பொருளுக்கு அப்பால் ஏதும் வல்லமை கிடையாது என்பதை அது நிராகரித்து விடுகிறது ஆதி இயற்கையின் மீது ஒரு பரம்பொருளை அது நிறுவிவிடுகிறது. அப்பரம்பொருளின் பிரதிநிதியாக நின்றுதான் கீதையில் கிருஷ்ணன் பேசுகிறார். ஆதி இயற்கை தன்னுடைய ஆதார குண இயல்புகளின்படி செயல்படுவதற்கு உந்துசக்தியாக அமைவது பரம்பொருளின் பார்வையே என்று கீதை கூறுகிறது. இங்கு சாங்கியத்தை புறமொதுக்கிவிடுகிறது. 2
இந்து ஞானமரபின் உதய காலத்தில் தோன்றிய தரிசனமான சாங்கியமே இன்றும் முக்கியத்துவமிழக்காது நிற்கும் முக்கியமான பெளதிகவாத தரிசனமாகும். சாங்கியத் தரிசனம் குறித்துத் தெளிவு பெறாமல் நாம் இந்துஞான மரபின் எந்தத் தரிசனத்திலும்ஆழமாக ஈடுபட முடியாது. முற்றிலும் ஆன்மிகவாதத் தன்மை உடைய அத்வைதம், சைவ சித்தாந்தம் முதலியவற்றை அறியவும் சான்கியத்தை பயில்வது அவசியம். காரணம், அவற்றின் பல தர்க்க அடிப்படைகள் சாங்கிய பரபில் இருந்து உருவாக்கப் பட்டவையாகும். சாங்கியம் இந்து ஞான நதியின் முக்கியமான ஊற்றுமுகங்களில் ஒன்று என்று கூறலாம்.
அடுத்து வருவது..
தூய்மையான அறிதல் முறை: யோகம்