சுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள்
நூல் அறிமுகம் by ஜெயமோகன்
[ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது]
பலவருடங்களுக்குமுன் என்னுடன் ஒரு நண்பர் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோயிலைப் பார்க்க வந்திருந்தார். கோயிலுக்குள் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது நண்ப சட்டென்று ”இந்தக் கோயில் ஒரு மாபெரும் புத்தகம் அல்லவா” என்று ஆச்சரியப்பட்டார். நான் சற்று வேடிக்கையாக ”இல்லை, ஒரு மாபெரும் பத்திரப்பதிவாளர் அலுவலகம்” என்றேன். அவர் சிரித்தார். ஆம் சுசீந்திரம் ஒரு பிரம்மாண்டமான சமூக ஆவணக்குவியல்
குமரிமாவட்டத்தின் பிரம்மாண்டமான கோயில்களில் ஒன்று சுசீந்திரம். கன்யாகுமரிப்பாதையில் இது இருப்பதனால் பொதுவாக இங்கே வந்திருக்கக் கூடியவர்கள் அதிகம். பெரும்பாலானவர்கள் பயணத்தின் நடுவே புயல் வேகமாக கோயிலைக் கடந்துசென்றிருப்பார்கள். சற்றே கூர்ந்து கவனிப்பவர்கள் தென்தமிழ்நாட்டின் வரலற்றையே இந்த ஒரு கோயிலில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.
கன்யாகுமரி-நாகர்கோயில் சாலையில் நாகர்கோயிலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சுசீந்திரம். சுசீந்திரம் கோயில் அமைந்திருக்கும் இடம் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் கொண்டது. கடலில் இருந்து சுசீந்திரம் வரை விரிந்து கிடக்கும் மணக்குடி காயல் ஒரு காலத்தில் சிறிய துறைமுகம் போலவே இயங்கியது. அதனருகே உள்ள கோட்டாறு பழங்காலம் முதலே முக்கியமான ஒரு சந்தைத்தலம். ஆகவே வணிகமுக்கியத்துவம் கொண்ட இடத்தில் அமைந்த பெரும் கோயில் இது.
தென்னாட்டின் முக்கியமான நெல்லுற்பத்தி மையமாக இருந்த நாஞ்சில்நாட்டின் நிர்வாகத்தலைமையகமாக இக்கோயில்தான் நெடுங்காலமாக இருந்துள்ளது. இக்கோயிலைச்சுற்றியிருக்கும் வேளாள ஊர்கள் 12 பிடாகைகளாக [வருவாய்ப்பகுதிகளாக] பிரிக்கபப்ட்டிருந்தன. அவர்கள் அனைவருமே தங்கள் ஆலோசானைகளை சுசீந்திரம் கோயிலில் சுப்ரமணியசாமிகோயிலின் முன்புள்ள செண்பகராமன் முற்றத்தில் கூடித்தான் தீமானிப்பது என்ற வழக்கம் இருந்தது. இது சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை இப்படியே நீடித்தது. Continue reading









