எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
யோகத்தின் வழிமுறை
[அருங்காட்சியகம். டோரொண்டோ, கனடா ]
யோகம் என்றால் ‘சித்தவிருத்தி நிரோதம்’ என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். (யோகேஸ்சித்த விருத்தி நிரோத) சித்த விருத்தி நிரோதம் என்றால் சித்தத்தின் செயல்பாடுகளைத் தடுத்தல் என்று பொருள். ஒருவரின் மனமும் அறிவும் அடங்கியது தான் சித்தம் என்பது.
சித்தத்தின் செயல்பாடுகள் ஐந்து. அவை (1) பிரமாணங்கள் (2) விபரியாயம் (3) விகல்ப விருத்தி (4) நித்ரா விருத்தி (5) ஸ்மிருதி விருத்தி (யோகசூத்திரம் 1-5-6)
பிரத்யட்சம், அனுமானம், சுருதி என்ற மூன்று வகை ஆதாரங்களை நம்பி இயங்குவதே பிரமாணம் என்ற சித்த செயல்பாடாகும்.
பொய்யாக உருவாகும் ஞானம் அல்லது ஆதாரமில்லாத ஞானமே விபரியாயம்.
எந்தவித ஆதாரமும் இல்லாமல் பழைய கூற்றுகளையும் நம்பிக்கையையும் அப்படியே பின்பற்றுவது விகல்பம்.
பொருட்களைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் செய்யப்படும் கற்பனை சஞ்சாரம் நித்ரா விருத்தி.
பழைய நினைவுகளில் ஆழ்ந்திருத்தல் ஸ்மிருதி விருத்தி.
இந்த ஐந்து வகையான அறிவு, மன இயக்கங்களையும் ஒருவன் தடுத்தாக வேண்டும். அதுவே யோகம் என்பது.
இதற்கு செய்யப்படும் பயிற்சிகளே அப்பியாசம் என்று கூறப்படுகிறது. அப்பியாசத்திற்கு மனித இயல்பில் உள்ள பல விஷயங்கள் தடையாகின்றன. அவை
- வியாதி (நோய்)
- ஸ்த்யானம் (வாழ்க்கை வசதித் தடைகள்)
- சம்சயம் (ஐயம்)
- பிரமாதம் (பிழைகள்)
- ஆலஸ்யம் (சோம்பல்)
- அவிரதி (விருப்பமின்மை)
- பிராந்தி தர்சனம் (பலன் இன்மை)
- அவப்த பூமிகத்வம் (தடைபடும் பலம்)
- அவைஸ்தி தத்துவம் ( தற்காலிகப் பலன்)
(யோக சூத்திரம் 1-30)
இவற்றுடன் ஆதி தெய்விகம். ஆதி பெளதிகம் முதலிய துயரங்கள் உருவாக்கும் தடைகளும் உள்ளன. தொடர்ந்த முயற்சி மூலம் இந்தத் தடைகளை வென்று முன்னேறும் சாதகனே ஞானத்தை அடைகிறான்.
எட்டு யோகப் பயிற்சிகள்
யோக மரபில் அஷ்டாங்கம் என்று கூறப்படும் எட்டு யோகப் பயிற்சிகளுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அவை (1) யமம் (2) நியமம் (3) ஆசனம் (4) பிராணயாமம் (5) பிரத்யாகாரம் (6) தாரணை (7) தியானம் (8) சமாதி. இவை எட்டும் யோகத்தின் எட்டு உட்கூறுகள், அல்லது படிநிலைகள் ஆகும்.
யமம், நியமம் இரண்டும் ஒழுக்கம் நிரம்பிய அன்றாட வாழ்வுக்கு அவசியமானவை. அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரம்மசரியம், அபரிகிரகம் என்று கூறப்படும் ஐந்து பெரும் விரதங்கள் (பஞ்சமா விரதங்கள்) தான் யமம் எனப்படுகிறது. கொல்லாமை, உண்மை, மனவிலக்கம், புலனடக்கம் ஆகியவையே இவை.
நியமம் என்பது நெறிகள் என்பதன் வடமொழிச்சொல். இதில் செளசம் (உடலையும் மனத்தையும் சுத்தப்படுத்துதல்), தபஸ் (பிடிவாதமாக தொடர்ந்து நெறிகளைப் பின்பற்றுதல்), ஸந்தோஷம் (சகஜமான இனிய மன நிலை), ஸ்வாத்யாயம் (கல்வி), ஈஸ்வர தியானம் (இறை வழிபாடு) ஆகியவை அடங்கும். இதில் இறை வழிபாடு பிற்பாடு சேர்க்கப்பட்டது.
யமம், நியமம் இரண்டையும் யோகம் எந்த அளவுக்கு வலியுருத்துகிறது என்பதைப் பதஞ்சலி யோக சூத்திரத்தின் பல வரிகளிலிருந்து அறியமுடியும். சீரான இயக்கம் உடைய வலுவான உடல் யோகப் பயிற்சியின் முதல் தேவையாகும். அலைபாய்தல்களும் கொந்தளிப்புகளும் இல்லாத சீரான வாழ்க்கை முறையும் தவிர்க்க முடியாத தேவை. இவை இரண்டையும் அடைந்த பிறகே யோகத்தின் பிற படிகளை நோக்கி செல்ல முடியும்.
உதாரணமாக ஒருவருக்கு மிதமிஞ்சிய உணவு ஆசையோ, காமவிருப்பமோ இருந்தால் அவரால் யோகம் செய்ய முடியுமா? ஒருவருக்கு ஆஸ்துமா இருப்பின் அவரால் சித்தி விருத்தி நிரோதம் செய்ய முடியுமா? முடியாது. தூய உடல், தூய மனம் ஆகியவை யோகத்திற்கு அவசியம். அவை தூய வாழ்க்கை முறையின் விளைவுகள். யம, நியமங்களை அதற்காகவே யோகம் வலியுறுத்துகிறது.
சமீபகாலமாக யோக முறைகளை யம நியமங்களில் இருந்து விடுவித்து ஒருவகை மனப்பயிற்சிகளாக மட்டும் மாற்றும் போக்கு உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு விதமான வாழ்கைப் போக்குகளில் உள்ள பல்வேறு வகையான மக்களிடம் யோகத்தை கொண்டுசெல்லும் பொருட்டே இது செய்யப்படுகிறது. இந்நிலையின் யோகம் மிக மேலோட்டமான எளிய பலன்களை மட்டுமே தருகிறது. அபூர்வமாகப் பொய்யான மனப்போக்குகளையும் பிரமைகளையும் அளித்து எதிர்மறை விளைவுகளையும் தருகிறது. உடலைக் கட்டுப் படுத்தாமல் ஒரு போதும் யோகத்தை ஆற்ற முடியாது.
ஆசனம், பிராணாயாமம் என்று கூறப்படுபவை இரண்டும் அடுத்த படிநிலைகள். ஆசனம் எனும்போது வசதியான சுகமான இருப்பு என்றுதான் பதஞ்சலி கூறுகிறார். அதில் பலவகையான யோகாசன முறைகள் பிறகு உருவாகி வந்தன. அவற்றைப் பற்றி நாம் அறிவோம். பிராணாயமம் என்பது சுவாசத்தைச் சீராக விடுவது. பிறகு பல்வேறு விதவிதமான மூச்சுபயிற்சிகள் உருவாகி வந்தன.
யோகாசனம் மூலம் வெளியுறுப்புகளையும் பிராணாயமம் மூலம் உள்ளுறுப்புகளையும் துல்லியமாக வைத்திருப்பதை யோகம் வலியுறுத்துகிறது.
பிரத்யாகாரம்தான் உண்மையில் யோகத்தின் சரியான முதல்படி. புலன்களை மூடிவிட்டு (கண், காது, மூக்கு, சருமம், நாக்கு) மனதை நோக்கி நம் கவனத்தைக் குவிப்பது இதன் முதல் கட்டம். இப்புலன்கள் நம்முள் உருவாகியுள்ள பதிவுகளில் இருந்து படிப்படியாக நம்மை விடுவித்துக்கோள்வது அடுத்த கட்டமாகும்.
தொடரும்…