எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
யோகத்தின் வழிமுறை – தொடர்ச்சி
[ நன்றி: ஜெயமோகன்.இன்]
தாரணை என்று கூறப்படுவது மனச் செயல்பாட்டினை ஒரு புள்ளியில் குவிக்கும் பொருட்டு ஒரு மையத்தினைக் கண்டடைதலாகும். தாரணை என்ற சொல்லுக்கு தரித்தல் என்று பொருள். இதை நடைமுறையில் மந்திர தாரணை என்பார்கள். மனத்தை ஒரு மந்திரத்தில் குவிப்பதே வழக்கம். அதற்காக மூலமந்திரங்கள் (ஒம், க்ரீம், ஹம், முதலியவை), ஆப்த வாக்கியங்கள் ( பிரக்ஞானம் பிரம்மம், அஹம் பிரம்மாஸ்மி) முதலியவை குருவால் சாதகனுக்கு உபதேசம் செய்யப்படுகின்றன.
மனதை குவிக்க வேண்டிய மையம் விக்ரகமோ (உதாரணம்: கணபதி, நடராஜர்) யந்திரமோ (ஸ்ரீசக்ரம்) தீபமோ ஆகலாம். கொக்கோ கோலா என்று கூட சொல்லலாம். மந்திரம் என்பது மனமே என்று ஒஷோ ஒர் இடத்திலே சொல்கிறார்.
இம்மையத்தின் மீது முழு பிரக்ஞையையும் மெதுவாகக் குவிய வைப்பதே தியானம். இது பலபடிகள் உடையது. முதலில் பிரக்ஞையை மையம் மீது படியவைக்கும் முயற்சி. மையம் படிப்படியாகப் பிரக்ஞையின் எல்லா இடங்களையும் ஆக்கிரமிக்கிறது. பிறகு அம்மையம் மட்டுமே எஞ்சி, பிரக்ஞையே அதுவாக ஆகிறது. இறுதியில் அதுவும் இல்லாமலாகிறது.
சித்தம் பூரணமாக அடங்கி தியானிப்பவன், தியானிக்கப்படுவது என்ற இருநி லையே இல்லாமலாவதே சமாதி நிலை. இதில்தான் புருஷன் தன் தூய நிலைக்குப் போய் தூய பிரகிருதியை அறிகிறான். இதுவே மெய்ஞான நிலை. இதுவே கைவல்யம்.
இங்கு தரப்பட்டுள்ளது மிக எளிய ஒரு சித்திரம். பதஞ்சலி யோக சூத்திரமும் சரி, பிற்கால யோக நூல்களும் சரி, இந்தப் பயிற்சிகளின் பல்வேறு சிக்கல்களையும், அவற்றின் தீர்வுகளையும் விரிவாகவே விவாதிக்கின்றன.
இங்கு ஒரு தெளிவு அவசியம். யோக மரபில் இறைவழிபாட்டுக்கு இடம் உண்டா? நியமத்தின் உள்ளே அதன் ஒரு அம்சமாக யோகம் இறைத்தியானம் குறித்துக் கூறுகிறது. ஆகவே யோகம் கடவுளை ஏற்கிறது என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். யோகத்தைக் கடவுள் உள்ள சாங்கியம் ( ஸேஸ்வர சாங்கியம் = ஸ + ஈஸ்வர சாங்கியம்) என்று இவர்கள் வரையறுக்கிறார்கள்.
கடவும் நம்பிக்கையை ஒரு முழு முதல் இலக்காக யோகம் ஏற்கவில்லை என்பதை ரிச்சர்ட் கார்பே, ஹரிதாஸ் பட்டாசாரியா, டாக்டர் ராதாகிருஷ்ணன் முதலியோர் எடுத்துரைக்கிறார்கள். அன்றாட வாழ்வை நெறியுடன் நடத்த அவசியமானவற்றில் ஒன்றாகவே அது இறைபக்தியைப் பற்றிக் கூறுகிறது. இறை பக்தியை நீக்கி விட்டாலும் யோகம் எவ்வகையிலும் குறைபடுவதில்லை. ஆகவே இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட ஒன்றாகவே இருக்கவேண்டும்.
சாங்கியம் கூறும் கைவல்யம் இறைவனைக் காண்பதோ இறைவனில் இரண்டறக் கலந்துவிடுவதோ அல்ல. நம்முடைய வாழ்வையும் நம்மைச் சுற்றி உள்ள இயற்கையையும் நாம் அறிந்து வரும் விதத்துக்கு காரணமான அவித்யை விலகும் தருணம்தான் அது. அப்போது புருஷனின் சிதறுண்ட நிலை அகன்று அவன் உறுதியான தூயநிலையை அடைகிறான். அதுவே கைவல்யம்.
ஒர் உவமை கூறலாம். தாந்த்ரீக தியான முறையில் ஒரு பயிற்சி உண்டு. ஒரு நிலைக்கண்ணாடியில் துளித்துளியாக நீரோ எண்ணையோ விழச் செய்து அதன் முன் அமர்ந்து அலைபாயும் தன் பிம்பத்தைப் பார்த்தபடி அமர்ந்து தியானிப்பார்கள். அலைகள் உண்மையில் இல்லை என்று எண்ண முயல்வார்கள். ஒரு கட்டத்தில் அலைபாயாத பிம்பம் கண்ணாடியில் தெரியுமாம்.
புருஷன் அலைபாயாதவன். ஆனால் அவன் அவன் தன்னை இயற்கை எனும் அலைபாயும் கண்ணாடியில் பிரதிபலித்துதான் பார்த்துக் கொள்ள முடியும். ஆகவே தன்னை அலைபாயும் பிம்பமாகவே அவன் அறிகிறான். அலைகளைத் தன் மனப்பயிற்சி மூலம் அவன் இல்லாமல் ஆக்கிவிட்டால் தன் அசல் பிம்பத்தை அவன் காண்கிறான். இதுவே கைவல்யம் என்பதாகும்.
யோகமும் வைதிக வேதாந்த மரபுகளும்
யோகமும் ஒரு பெளதிகவாதத் தரிசனமாகத் தொடங்கி படிப்படியாக ஆன்மிகவாத தரிசனமாகப் பரிணாமம் அடைந்தது. ஆரம்பத்தில் அது ’உப சாங்கியமாக’ இருந்தது. பிற்பாடு ‘கைவல்யம்’ அதன் முதல் இலக்காக ஆயிற்று. யோகத்தைப் பிற மதங்களும் தரிசனக்களும் படிப்படியாக உள்வாங்கிகொண்ட போது அதன் பெளதிகவாத அம்சம் – அதாவது சாங்கியத் தத்துவ அம்சம் – முழுமையாகவே ரத்து செய்யப்பட்டது. இன்று நாமறியும் யோகம் ஆன்மிகவாதத் தரிசனங்களில் உள்ள ஒரு பயிற்சி முறை மட்டுமேயாகும்.
யோகம் முழுமையாகவே வேதாந்த மரபால் உள்வாங்கபடுவதைக் காண நாம் பகவத் கீதையை எடுத்துப் பார்க்கலாம். யோக மரபின் பெரும்பாலான கருத்துகளைக் கீதை எடுத்தாள்கிறது. ‘யோகி’ என்ற கருத்தை மிக விரிவாக பல தளங்களுக்கு அது எடுத்து செல்கிறது. யோகம் மூலம் தன்னை அறிந்தவன் யோகி. அதன்பிறகு தன் அன்றாட வாழ்வை அவன் திறம்பட நடத்தும் போது அவன் கர்மயோகி ஆகிறான். ‘கர்மயோகி’ என்ற கருத்தே கீதையின் சாரமாகும்.
வேத, வேதாந்த மரபுகள் யோகத்தை தங்களிடமிருந்து வேள்வி மரபுகளுடன் பிற தியான முறைகளுடனும் இணைந்து பெரிதாக வளர்த்து எடுத்தன. வேத வேதாந்த மரபில் யோகம் மூன்று வகையில் விளக்கப்படுகிறது. யுஜ் என்ற வேர்சொல்லில் இருந்து பிறந்தது யோகம். இது சமாதி, சுயக்கட்டுபாடு, ஒன்றாதல் ஆகிய மூன்று பொருட்களை உடையது. இம்மூன்று அர்த்தங்களும் யோகத்திற்கும் தரப்படுகின்றன. ஏராளாமான விளக்கங்கள் உள்ளன.
யோகங்களில் ஹடயோகம், ராஜயோகம், கர்மயோகம், பக்தி யோகம் என்ற நான்குமே முக்கியமானவை என்று கூறப்படுகிறது. யோகம் என்று தனியாக கூறும்போது வேதாந்தமரபு ஞானயோகம்தான் என்று உத்தேசிக்கிறது.
இவற்றில் பற்பல உட்பிரிவுகளும் பற்பல கிளைகளும் இந்த நாள் வரை உருவாகியபடியே வருகின்றன
அடுத்து வருவது..
அணுக்கொள்கை: வைசேஷிகம்