முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.5
[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]
யோகத்தின் நவீனவாசிப்பு
இன்றைய உலகளாவிய சிந்தனைச் சூழலில் யோகத்தை நாம் எப்படி வாசிப்பது? வழக்கமாக செய்யப்படும் இரு வகை வாசிப்புகள் உண்டு. ஒன்று மத ரீதியான வாசிப்பு. பண்டைய ரிஷிகள் கண்டடைந்த மெய்ஞானத்தின் இறுதி வடிவம் அது என்று எடுத்துக்கொண்டு அதை வழிகாட்டிக் கட்டளைகளாக மட்டும் காண்பது. இரண்டு, பண்டைய சிந்தனைகளை தெரிந்துகொள்ளும் வரலாற்று ரீதியான ஆர்வம். இரண்டுக்கும் அவற்றுக்கான பங்களிப்பு உண்டு.
அவற்றுக்கும் அப்பால் ஒரு வாசிப்புச் சாத்தியமும் உண்டு என்பதைச் சுட்ட விரும்புகிறேன். கிரேக்க தத்துவ நூல்கள் கிரேக்க மதம் மற்றும் கிரேக்கப் பண்பாட்டின் விளைவுகள். ஆனால் மேலைத்தத்துவம் அவற்றை தத்துவமூலநூல்களாகக் கண்டு காலந்தோறும் வளர்ந்து வரும் தத்துவசிந்தனைகளுடன் தொடர்பு படுத்தி விவாதித்துக்கொண்டே இருக்கிறது. அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற நூல்களின் அடிப்படை மெய்யறிதல்களை மானுடப்பொதுவாக ஆக்கவும், மானுடசிந்தனையின் அனைத்து தளங்களுடனும் இணைத்து விரிவாகப்புரிந்துகொள்ளவும் உதவக்கூடியதாகும். அதுவே இன்றைய அடிப்படைத்தேவை என்பது என் எண்ணம்.
இவ்வாறான நவீன வாசிப்பில் நாம் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய நவீனச் சிந்தனைகள் மூன்று தளங்களைச் சார்ந்தவை. ஒன்று தத்துவம். மேலைத்தத்துவ சிந்தனை என்பது தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்கு கொண்ட ஒன்று. அத்தகைய ஒரு சீரான வளர்ச்சி இந்திய சிந்தனையில் இல்லை என்பது உண்மை. அதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் முக்கியமான காரணம் இந்தியாவில் இன்று இந்திய சிந்தனை கற்பிக்கப்படுவதில்லை என்பதே. நாம் எட்டாம் வகுப்பு படிப்பதற்குள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வரை அறிமுகம் செய்துகொண்டு விடுகிறோம். இந்திய தத்துவத்தை சிறப்புப்பாடமாக எடுத்து பட்டமேற்படிப்பு படித்தாலொழிய கபிலரை நாம் அறிமுகம்செய்துகொள்ள முடியாது.
அத்துடன் நம் கல்விமுறையின் அடித்தளமாக இருப்பது மேலைநாட்டு அறிவியலும் தத்துவமும்தான். ஆகவே நம்முடைய சிந்தனைமுறையின் அடியில் இந்திய தத்துவமரபின் அம்சமே இல்லை. இதனால் நம்மால் இந்திய தத்துவ மரபை ஒரு தொல்பொருள் என்ற அளவில் தகவல்களாக மட்டுமே அணுக முடிகிறது. அதை நம் சிந்தனைகளுக்கான கருவியாகக்கொள்ள முடிவதில்லை. ஆகவே நம் தத்துவ மரபு நவீனகாலகட்டத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக வளர்க்கப்படவில்லை. சிற்சில விதிவிலக்கான தனிச்சிந்தனையாளர்கள் மட்டுமே கண்ணுக்குப் படுகிறார்கள்.
அது போதாது. ஒரு தத்துவமரபு ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தின் பொதுச்சிந்தனையின் உள்ளே செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது மட்டுமே அதில் உண்மையான வளர்ச்சி நிகழமுடியும். கிரேக்க தத்துவ மரபு ஐரோப்பிய சிந்தனையின் அடித்தளமாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. இன்றைய நவீன சிந்தனையாளன்கூட கிரேக்க மரபில் இருந்துதான் தன் கருதுகோள் உருவாக்கத்தை தொடங்குகிறான், ஏற்றோ மறுத்தோ. ஆகவே மேலைத்தத்துவத்தில் உண்மையான வளர்ச்சி உள்ளது.
மேலும் இந்தியசிந்தனை சார்ந்த எதுவுமே உதவாத பழங்குப்பை என்று சொல்ல நாம் ஒரு நூற்றாண்டாக பழக்கப்பட்டிருக்கிறோம். மெக்காலேயின் புகழ்பெற்ற மேற்கோளில் அவர் ஒட்டுமொத்த இந்திய சிந்தனை அனைத்த்தையும் சேர்த்தால்கூட பத்தாண்டுகால பிரிட்டிஷ் இலக்கியம் மற்றும் தத்துவசிந்தனையின் அளவுக்கு நிகராகாது என்று சொல்கிறார். மெக்காலேயில் தொடங்கும் நம் கல்வித்துறை தலைமுறை தலைமுறையாக நம்மிடம் அந்த எண்ணத்தை உருவாக்குகிறது.
அதை ஒரு மானசீகமான அடிமைத்தனம் எனலாம். ஆனால் நம்முடைய பேரறிஞர்கள் இலக்கியவாதிகள் என பலர் அந்த எண்ணத்தை மீற முடியாதவர்கள். உதாரணமாக, நான் நன்கு அறிந்த இலக்கியவாதியான சுந்தர ராமசாமி இந்திய சிந்தனை என்பது அர்த்தமில்லாத பழங்கால தர்க்கங்களும் மூடநம்பிக்கைகளும் கலந்தது என்று எண்ணினார்.அவை காலாவதியாகிவிட்டன என்று குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு இந்திய சிந்தனை பற்றி எளிய அறிமுகம் கூட இருக்கவில்லை. அதேசமயம் மூவாயிரமாண்டு பழமையுள்ள சாக்ரடீஸ்,பிளேட்டோ, அரிஸ்டாடில் சிந்தனைகள் மானுட சிந்தனையின் அடித்தளங்கள் என்று அவர் சொல்வார், அவை அவருக்கு பழங்குப்பைகள் அல்ல.
இந்திய சிந்தனைகளை மத சிந்தனைகள் என அவர் சொன்னபோது சாக்ரடீஸ¤ம் கிரேக்க மதத்துக்குள் நின்றவரல்லவா, அவரும் ஆத்மா போன்ற உருவகங்கள் வழியாக சிந்தித்தவர் அல்லவா என்று நான் கேட்டேன். அப்போதுதான் அச்சிந்தனைகளிலும் அவருக்கு பெரிதாக அறிமுகம் இல்லை என்று உணர்ந்தேன். ஆனால் இந்த மனப்பிம்பம் அவரில் ஆழ வேரூன்றியிருந்தது. இது சராசரியான ஒரு இந்தியமனத்தின் அமைப்பு. நம்மைச்சூழ்ந்துள்ள பெரும்பாலானவர்கள் இந்தத் தளத்திலேயே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம்.
ஆகவே மேலைத்தத்துவத்தின் அடிப்படைகளுடனும் இன்றைய பரிணாமத்துடனும் பதஞ்சலி யோகசூத்திரத்தை நாம் ஒப்பிட்டு வாசிக்கும்போது ஏராளமான புதிய சாத்தியங்களைக் கண்டடைய முடியும். அதற்கு பதஞ்சலி யோகசூத்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தத்துவப்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலைத்தத்துவம் உருவாக்கியிருக்கும் கோட்பாடுகளுடன் அவற்றை இணைத்து யோசிக்க அது நமக்கு உதவும்
இரண்டாவதாக, மேலை உளவியல். பதஞ்சலி யோக சூத்திரத்துடன் ஒப்புநோக்கையில் மேலை உளவியல் குழந்தைப்பருவத்திலேயே இருக்கிறது என்பதே என் எண்ணம். அதை முக்கியமான சில உளவியலாளர்களுடனான உரையாடலிலும் நான் கேட்டதுண்டு. மேலும், மேலை உளவியலின் பல ஆதாரக் கோட்பாடுகள் பதஞ்சலி யோகம் போன்ற கீழை யோகவியலில் இருந்து கடன்பெற்றவை.
ஆனால் மேலை உளவியல் நவீன அறிவியலுக்குரிய தர்க்கத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது கிரேக்க தர்க்கவியலில் இருந்து பிறந்து இன்று எல்லா சிந்தனைகளுக்கும் அடிபப்டையாக இருக்கும் மேலை அறிவியங்கியலில் அது அமைந்திருக்கிறது. நாம் கல்விக்கூடங்களில் கற்பதும் சிந்திப்பதும் அதில்தான். ஆகவே பதஞ்சலி யோகம் போன்ற பண்டையச் சிந்தனைகளை நாம் மேலை உளவியலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது அவற்றை புரிந்துகொள்வதும் விவாதிப்பதும் எளிதாகிறது.
பதஞ்சலி யோகத்தை உளவியலும் உளம் கடந்த இருப்பு குறித்த ஆய்வும் என்று பொதுவாக வகுத்துக்கூறலாம். அதன் அடிப்படைகள் பல மேலை உளவியலை வைத்துப்பார்த்தால் புரிந்துகொள்ள எளிதானவை. அதே சமயம் பதஞ்சலி சொல்வதை ‘நிரூபிக்க’ மேலை உளவியலை துணைகொள்வது போன்ற அபத்தமும் வேறில்லை. பட்டப்படிப்புப் பாடத்தை பத்தாம் வகுப்புப் பாடத்தை வைத்து நிரூபிக்க முயல்வது போன்றது அது
மூன்றாவதாக, மொழியியல். பதஞ்சலி அடிப்படையில் மனித இருப்பு அல்லது தன்னிலை குறித்த தரிசனத்தை முன்வைக்கிறார் எனலாம். சமகாலச் சிந்தனையில் இந்த கருதுகோள்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மொழியியலில்தான் நிகழ்ந்துள்ளன. ஆகவே மொழியியலின் கோட்பாடுகளை பதஞ்சலியை புரிந்துகொள்ள பயன்படுத்தலாம்.
அத்தகைய ஒரு நவீன வாசிப்புக்கு இன்றியமையாத தேவை பதஞ்சலி யோகசூத்திரத்தை நவீன மனநிலையுடன் அணுகுவதாகும். நவீன மனநிலை என்றால் நான் இப்படி வகுத்துக் கொள்கிறேன். 1. ஒரு ஞானத்தை ஒரு இனம், மொழி, மதம், பண்பாட்டுக்குள் நிறுத்திவிடாமல் மானுடப்பொதுவான ஞானமாக அதை எடுத்துக்கொண்டு ஆராய்வது. 2. ஒரு ஞானத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடாகக் கருதாமல் எப்போதைக்குமான ஞானமாக எடுத்துக்கொண்டு ஆராய்வது 3. அதன் மீது பக்தியோ வெறுப்போ இல்லாத தர்க்கபூர்வ அணுகுமுறை
அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலியை நமக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரக்கூடும்