முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.6
[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]
தந்திரமும் யோகமும்
இத்தகைய ஓர் ஆய்வுக்கு முன் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. தாந்திரீக மரபு உருவாக்கியிருக்கும் தியான, உபாசனை முறைகளுக்கும் பதஞ்சலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அவை வேறு வேறு. பல ஆசிரியர்களின் யோக முறைகளில் இந்த மயக்கம் நிகழ்ந்து பலவகையான புரிதல் இடர்களை உருவாக்கியிருக்கிறது. பலர் பதஞ்சலி யோகசூத்திரத்தையே தாந்திரீக பாணியில் விளக்குவதையும் நான் வாசித்திருக்கிறேன்.
நெடுங்காலமாகவே யோகமரபும் தாந்த்ரீக மரபும் இரு தனிப்போக்குகளாக செயல்பட்டு வந்துள்ளன. இரு மரபுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பதனால் அவற்றுக்கு இடையே பல பொதுக்கூறுகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இந்து தாந்த்ரீக மதங்களும் சரி, பௌத்தத்துக்குள் உள்ள வஜ்ராயனம் போன்ற தாந்த்ரீக பிரிவுகளும்சரி, யோகத்தை தங்களுக்காக மறு ஆக்கம் செய்து கையாண்டன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனாலும் அவை இரண்டும் வேறு வேறுதான்.
என்ன வேறுபாடு? அடிப்படையே வேறு வேறு என்பதுதான். யோகம் தன் மனத்தை அவதானிப்பதில் தொடங்குகிறது. அதை கட்டுப்படுத்தி அதன் ஆழங்களை அறியும் ஒரு தொடர்செயல்பாடு அது. மனத்தின் வெளிப்பாடுகளில் அதற்கு ஆர்வம் இல்லை. அதன் மூலத்தை நோக்கிச் செல்வதையே அது இலக்காகக் கொள்கிறது. அதற்காக பலவகையான பயிற்சிகளை அது உருவாக்கிக் கொள்கிறது. அத்தனை பயிற்சிகளுக்கும் நோக்கம் அகத்தை அறிந்து கடந்து சென்று அதன் சாரத்தில் அமர்தல் மட்டுமே.
நேர் மாறாக தாந்த்ரீக மரபு என்பது மனவெளிப்பாடுகளையே முதலில் கருத்தில் கொள்கிறது. மனத்தின் வெளிப்பாடுகளை ஒவ்வொன்றாக பயின்று அறிந்து வென்று கடந்துசெல்லுதல் அதன் வழிமுறை. அச்சம் காமம் வன்முறை போன்று மனத்தின் ஆதார வெளிப்பாடுகள் ஏராளமானவை. ஒவ்வொன்றையும் அறிவதே தாந்த்ரீகம் முன்வைக்கும் விடுதலை மார்க்கமாகும்.கடந்துசெல்லுதலே விடுதலை அல்லது முக்தி என்பது அதன் அறிதல்.
மனம் வெளிப்படுவது குறியீடுகள் வழியாகவே. ஆகவே தாந்த்ரீகம் குறியீடுகளை ஏராளமாக உருவாக்கிக் கொள்கிறது. நம்முடைய புராணங்கள் சிற்பங்கள் போன்ற ஏராளமான குறியீடுகள் தாந்த்ரீகத்தால் உருவகிக்கப்பட்டவையே. அதேபோல நம் உடல், மனம் பற்றியும் தாந்த்ரீகம் ஏராளமான குறியீடுகளை உருவாக்கியிருக்கிறது. அக்குறியீடுகளை பருண்மையான உண்மைகளாக எடுத்துக்கொள்வர்கள் பலர்.
தாந்த்ரீகம் இரு வழிகளை கடைப்பிடிக்கிறது. அவை இடது வலது என பிரிக்கப்பட்டு வாமாசாரம் தட்சிணாச்சாரம் என்று சொல்லப்படுகின்றன. மனவெளிப்பாடுகளை அறிய அவ்வெளிபபடுகளையே மனதால் நிகழ்த்தி அதன் எல்லையை அறிவது ஒரு வழி. அதாவது காமத்தை வெல்ல காமத்தையே பழகுவது. அச்சத்தை வெல்ல அச்சமூட்டுவதற்குள்ளேயே நுழைவது. மரணத்தை அச்சமென்றால் சுடுகாட்டு பிணம் மீது அமர்ந்து தியானம்செய்வது போன்ற ஒரு உக்கிரமான வழி அது. இதுவே இடதுமுறை. அல்லது வாமாச்சாரம்.
மன வெளிப்பாடுகளை வெல்ல அவ்வெளிப்பாடுகளை உன்னதமாக்கிக் கொள்ளலாமென்பது இன்னொரு வழி. காமத்தை வெல்ல அதை குறியீடாக ஆக்கி அக்குறியீட்டை கலைகளாக ஆக்கி அக்கலையின் உன்னதங்கள் வழியாக காமத்தை அறிந்து கடந்துசெல்லலாம். அச்சம் வன்முறை அருவருப்பு என அனைத்தையுமே அவ்வாறு கடந்துசெல்லலாம். உன்னதமாக்கல் என்பது இம்முறையின் முக்கியமான வழிமுறை. சடங்குகள் பூஜைமுறைகள் கலைகள் என அதற்கு பல வழிகளை அது கண்டடைந்துள்ளது. இது வலதுமுறை–தட்சிணாச்சாரம்.
நாம் தமிழ் சித்தர் மரபு என்று சொல்லும் மரபில் இருவகை தாந்த்ரீகர்களும் உள்ளனர். இரு மரபுகளுமே யோகத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்கின்றன. இவ்விரு மரபுகளும் பலவகையான உருவகங்களையும் குறியீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.அக்குறியீடுகள் எளிமையான சித்தர் பாடல்கள் வழியாக சாதாரண மக்களிடம் வரும்போது அவை அப்படியே நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு யோகம் குறித்து ஏராளமான நம்பிக்கைகள் நம்மிடையே புழங்குகின்றன. உடலில் உள்ள மூலாதாரம் முதலிய ஒன்பது சக்திமுனைகள் பற்றிய பேச்சு ஓர் உதாரணம். அவை முறையே காமம்,பசி,மூச்சு,பேச்சு,இதயம், சிந்தனை, உள்ளுணர்வு, உயிருணர்வு, பேருணர்வு என்ற நிலைகளைச் சுட்டுபவை. ஆனால் உடம்பிலேயே அவை உள்ளன, தொட்டுக்கூட பார்க்க முடியும் என்ற அளவில் அவை புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. தியானத்தில் நெற்றிப்பொட்டில் ஒளி தெரிவது போன்ற பல நம்பிக்கைகள் இவ்வாறு தாந்த்ரீக உருவகங்களை நேரடியாக எடுத்துக்கொள்வதன் விளைவுகளே.
இன்னும் அடுத்தபடிக்குச் சென்று அணிமா மகிமா போன்ற அட்டமாசித்திகளும் யோகத்தால் வசமாகும் என்றும் முக்காலமும் தெரியும் என்றும் சொல்லக்கூடியவர்கள் உள்ளனர். சிலர் கல்லைக் கடித்து தின்னுதல் போன்ற ஹடயோக வித்தைகளையும் யோகத்துடன் தொடர்புறுத்துகிறார்கள். அவையெல்லாமே தாந்த்ரீக மரபின் குறியீடுகள். பதஞ்சலி யோகத்துக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை என்பதை உணரலாம். அத்தகைய எளிய உருவகங்களை உதறிவிட்டுத்தான் நாம் பதஞ்சலி யோகத்தை அணுக வேண்டும்.
பதஞ்சலி யோகம் மாயவித்தையோ, ரகசிய வித்தையோ ஒன்றும் அல்ல. அது மிக திட்டவட்டமாக எழுதப்பட்டு புறவயமாக முன்வைக்கப்பட்ட ஒரு ஞானம். அதை குருமரபுகளில் தெளிவாகவே கற்றறிந்திருக்கிறார்கள். அதில் சில பகுதிகள் நமக்கு விளங்காதவையாக இருக்கலாம்– ஏனென்றால் அது பயிலப்பட்ட மரபுகளில் பதினேழாம் நூற்றாண்டு முதல் ஓர் அறுபடல் உள்ளது. அதில் இடைச்செருகல்களும் இருக்கலாம். ஆனாலும் அது திட்டவட்டமான ஒரு தத்துவ -நடைமுறை நூலேயாகும்.