எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
வேதாந்தமும் வைசேஷிகமும்
[கோதாவரிப் பயணத்தின் போது]
இவ்விளக்க நூலில் தொடங்கத்தில் கூறிய ஒரு மனவரைபடத்தினை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. தரிசனங்கள் அடிப்படையில் மூன்று என்றால் சாங்கியம் ஒர் எல்லை. வேதாந்தம் மறு எல்லை. நடுவில் வைசேஷிகம். வைசேஷிகத்திற்கும் சாங்கிய வேதாந்த மரபுகளுக்கும் இடையேயான தூரத்தினை, உறவினை வகுத்துக்கொள்ளுவது அதைப் புரிந்துகொள்ள உதவிகரமானது.
வேதாந்தமரபின் படி இறை (பிரம்மம்) மட்டுமே முழுமையானது, உண்மையானது. இறை சக்தி உருவாக்கும் மாயத்தோற்றமே இப்பிரபஞ்சம். வைசேஷிக மரபின்படி முழுமையானதும் முதன்மையானதுமாக உள்ளவை பருப்பொருட்களான நுண்ணணுக்கள். அவை அழிவதுமில்லை, பிறப்பதுமில்லை. அவை எந்த அதீத சக்தியாலும் படைக்கப்பட்டவை அல்ல. அதாவது இறைசக்தியைச் சாராமல் தனித்து நிற்கும் திறம் உடையது. பிரபஞ்சம் அதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வி எழும்போதுதான் பிரம்மன் அல்லது இறைவன் என்ற தேவை எழுகிறது. அதாவது, வைசேஷிகர்களின் இறைவன் படைத்துக்காக்கும் மூல சக்தி அல்ல. ஒரு கருத்துத் தள உந்துசக்தி மட்டுமேயாகும்.
ஆகவேதான் பிற்கால வேதாந்திகள், குறிப்பாக, சங்கரர் மிகத்தீவிரமாக வைசேஷிக மரபின் மீது தத்துவரீதியான தாக்குதல்களைத் தொடுத்தார். வைசேஷிகத்தின் காரியகாரண உறவு குறித்த உருவகத்தில் தர்க்க பூர்வமான ஒரு முரண்பாட்டைக் கண்டு பிடித்து விரிவாக அதை அவர் முன்வைத்தார்.
அதாவது, வைசேஷிகத்தின் கொள்கையின்படி காரணப் பொருளில் உள்ள குணங்களின் சேர்க்கையின் மூலமே காரியப் பொருளில் உள்ள குணங்கள் உருவாகின்றன. வெண்ணிற நூலில் இருந்து வெண்ணிற ஆடையே உருவாகிறது. ஆகவே இப்பிரபஞ்சத்திற்குக் காரணமாகப் பிரம்மன் இருக்குமெனில், இப்பிரபஞ்சத்தின் முக்கிய இயல்புகளான பருத்தன்மை, மாறும் தன்மை முதலிய இயல்புகள் பிரம்மத்திற்கும் இருக்க வேண்டும். ஆகவே அருவமான பெரும் சக்தியானதுதான் பிரம்மன் என்று கூறுவது சரியல்ல என அது கூறுகிறது.
சங்கரர் இதை விமரிசிக்கும் விதம் சற்று நுட்பமானது. (பிரம்ம சூத்திர பாஷ்யம் அத். 2, பாதம் 2, சூத்திரம் 11) ஒவ்வொரு நுண் அணுவுக்கும், அணுவாகத் தன் தனித்தன்மையுடன் விளங்கும் இயல்பு என்று ஒன்று உண்டு என்கிறது வைசேஷிகம். இதற்குப் ‘பாரிமண்டல்யம்’ என்று அது பெயர் சூட்டுகிறது. அணுப்பரிமாண இருப்பு என்று இதை நாம் தமிழ்ப்படுத்தலாம். இவ்வியல்பு, அணுக்கள் ஒன்றாகக் கூடிப் பொருட்களாக ஆகும் போது எங்கே போகிறது என்று கேட்கிறார் சங்கரர்.
உடனே புரிந்து கொள்ள சற்று சிரமம்தான். அபத்தமாகவும் தோன்றலாம். யோசித்துப் பார்ப்போம். அணுவாக இருக்கும், இயங்கும் ஒரு உந்துதல் பொருளுக்கு உள்ளது. அது ஏன் அந்த உந்துதலை ரத்து செய்துவிட்டு ஒன்றாக இணைந்து பொருளாக ஆகவேண்டும்? பொருளாக ஆகும்/இருக்கும் இயல்புதான் அதற்கு உரியது என்றால் அந்த அணுத்தன்மை எதற்கு?
இன்னும் தருக்கபூர்வமாக்ப் பார்ப்போம். ஒரு நுண் அணுவில் நிறம், கனம், வடிவம் என்ற மூன்று இயல்புகள் உள்ளன. அவ்வணு பொருளாக மாறும்போது அவ்வியல்புகள் அப்பொருளில் அப்படியே தொடர்கின்றன. ஆனால் அணுத்தன்மை என்ற இயல்பு அப்படியே மறைந்து விடுகிறது. ஏன்?
ஆகவே, காரணத்தில் உள்ளவை எல்லாம் காரியத்திலும் இருக்கும் என்பது சரியல்ல என்று வைசேஷிகமே கூறிவிடுகிறதே என்று சங்கரர் வாதிட்டார். காரணத்தில் உள்ள ஒர் இயல்பு காரியத்தில் மறைந்து, நேர் மாறான ஒர் இயல்பு காரியத்தில் விளையக்கூடும் என்பதற்கு, அணுவின் தனித்தன்மை மறைவதே ஆதாரம் என்றார்.
அதுபோல பிரம்மத்தின் முழுமுதல் குணங்கள், அது பிரபஞ்சமாகும் போது மறைந்து விடுகின்றன என்று ஏன் கூறக்கூடாது என்று சங்கரர் கூறினார். பிரபஞ்சத்தின் மாயத்தோற்றம், மாயத்தன்மை இல்லாத பிரம்மத்திலிருந்து பிறக்கவும் கூடும் என வாதிட்டார்.
கணாதரே இந்த முரண்பாட்டை ஏற்கிறார். நுந்துகள்களின் (அணுக்களின்) பல்வேறு இயல்புகள், அவற்றிலிருந்து உருவாகும் பிரபஞ்சப் பொருட்களுக்கு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. உதாரணமாக அணுச்சேர்க்கைகளின் விளைவான எப்பொருளும் தன் நிறை நிலையில் இல்லை. ஆனால் அணுக்கள் தன் நிறைனிலையில்தான் எப்போதுமே இருந்தபடி உள்ளன. பொருட்களும் அழிவுண்டு. அணுக்களுக்கு அழிவில்லை. இதன் அடிப்படையில் தான் காரியம் காரணத்தில் உறைந்திருக்கவில்லை என்று (அசத்காரியவாதம்) வைசேஷிகர்கள் கூறினார்கள்.
தங்களுடைய இந்த முரண்பாட்டை வைசேஷிகர் எதிர்கொண்டது நியாமரபின் சில தர்க்க முறைகளைப் பயன்படுத்தியாகும். அதாவது, பிரபஞ்சதை நாம் அறியும் விதமே பிரபஞ்சத்தின் இருப்பை விட முக்கியம். விஷயம் அல்லது அறிபடுபொருள்கள் என்று பிரபஞ்சத்தை வகுத்துக்கொண்டது நியாய மரபு. இப்படி பார்க்கும்போது இம்முரண்பாடு நம் அறிதலில்தான் உள்ளது.
அதாவது, நுண் அணுக்களில் நாம் அறியும் சில குணங்கள், அவற்றில் பரிணாம வடிவங்களில் நம்மால் அறியப்படுவதில்லை என்று இதே முரண்பாட்டை வகுத்துக்கொள்ளலாம். அப்போது அறிதல் சம்பந்தமான பிரச்சினை மாறிவிடுகிறது. வைசேஷிகத்தின் ஒரு பகுதியாகக் கிளைத்த நியாயம் தனியான தரிசனமாக வளர்ச்சி அடைந்தது பிற்காலத்தில்தான். அதைத் தனியாகவே காணவேண்டும்.
அடுத்து வருவது..
வைசேஷிகமும் பெளதீகவாதமும்