குருகுலமும் கல்வியும் – 3 [நிறைவுப்பகுதி]
[எனி இன்டியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘குருவும் சீடனும், ஞானத்தேடலின் கதை’ -தமிழாக்கம் ப.சாந்தி -என்ற நூலுக்கான முன்னுரை]
ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது
[கவிஞர் தேவதேவன் கவிதையரங்கு. திப்பரப்பு. குமரி மாவட்டம்]
மூன்று
நாராயண குருவின் குருகுல உரையாடல்கள் பற்றி ஓரளவே எழுதப்பட்டுள்ளது. மூர்க்கோத்து குஞ்சப்பா, குமாரன் ஆசான், ச்கோதரன் அய்யப்பன் போன்றோர் எழுதிய குறிப்புகள் முக்கியமானவை. நடராஜ குருவின் வகுப்புகளைப்பற்றி நித்யாவைப்போலவே சிதம்பரானந்த சுவாமி எழுதியிருக்கிறார். உண்மையில் அந்நூல் இந்த நூலைவிட சுவாரஸியமானது. அதையும் தமிழாக்கம்செய்யும் என்ணம் உள்ளது
ஆக்கப்பூர்வமான குருகுலம் எப்படி இருக்கும் என்பதற்கான விரிவான சித்தரிப்பை அளிக்கிறது நித்ய சைதன்ய யதி அவரது சிறுவயதில் எழுதிய இந்நூல்.இந்நூலை எழுதும்போது அவருக்கு முப்பத்தைந்து வயதுதான். அவர் பிற்காலத்தில் எழுதிய பெரும் தத்துவ நூல்களின் தொடக்கப்புள்ளிகள் இந்நூலில் உள்ளன.குருவும் சீடனும் சேர்ந்து பயணம் செய்கிறார்கள்.குரு பேசிக்கொண்டே இருக்கிறார். வேடிக்கையாக. திடீரென்று சினம் கொண்டவராக. பெரும்பாலான சமயங்களில் ஆழ்ந்த தத்துவ நோக்கு கொண்டவராக. எல்லா தருணங்களிலும் பிரபஞ்சக்கூரை வேய்ந்த வகுப்பறை ஒன்றில்தான் இருவரும் உள்ளனர்.
இவ்வுரையாடல்களில் மூன்று கூறுகள் காணப்படுகின்றன. ஒன்று நடராஜ குருவின் அன்றாட செயல்பாடுகள், அதைச்சார்ந்த உரையாடல், வேடிக்கையாகவும் தத்துவார்த்தமாகவும் அவர் கூறும் சொற்கள். இரண்டு ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை அவர் பிறரிடம் விவாதிக்கும் தருணங்கள். மூன்று அவர் பிற நூல்களை ஒட்டியும் வெட்டியும் சொல்லும் கருத்துக்கள். இம்மூன்றிலும் தொடர்ந்து நடராஜ குரூ வெளிப்படுகிறார். அவரது தரிசனம் விவரிக்கப்படுகிறது.
நடராஜகுருவின் நோக்கு அடிப்படையில் முரணியக்கம் சார்ந்தது. [டைலடிக்கல்] இதை அவர் யோகாத்ம நோக்கு என்கிறார். இந்திய ஞானமரபு பல்லாயிரம் வருடங்கள் முன்னரே விரிவாக்கம் செய்து எடுத்த இந்த ஆய்வுமுறை மிகவும் பிற்பாடுதான் மேலைநாட்டு ஆய்வாளர்களுக்கு புரிந்தது. மானுட உணர்வுகள், சிந்தனைகள், இயற்கையின் இயக்கம், வரலாற்று இயக்கம் எல்லாமே ‘நேர் Xஎதிர்’ இயக்கங்களால் நிகழ்பவை என்பது அவரது கோட்பாடு. இந்நூலில் அவர் அதுசார்ந்து ஆராயும் இடங்களை வாசகர் தொட்டுச்செல்லலாம். தத்துவ ஆய்வு சம்பத்தமான சில பகுதிகள் வாசகர்களுக்கு புரியாமல் போகலாம். அதற்கு நடராஜ குருவின் மூலநூல்களையே நாடவேண்டும். இவை ஒரு தத்துவ ஞானி எப்படி தன் மாணவனுக்கு கற்பிப்பார் என்பதைக் காட்டும் இடங்களாக அவற்றை காண்பதே நலம்.
தத்துவ ஆய்வு என்பது நிலையான உயர்விழுமியங்களை அடையும் நோக்கு கொண்டதாகவும் அதன் விளைவு பயனளிப்பதாகவும் இருக்கவேண்டுமென சொல்லும் நடராஜ குரு தத்துவம் என்பது தர்க்கம் மூலம் முழுமையாக ஆராயக்கூடியதல்ல என்று சொல்கிறார். தத்துவத்தின் அடிப்படையான தரிசனத்தை நாம் யோகாத்ம உள்ளுணர்வு மூலமே உணர முடியும். அது தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. அதாவது தரிசனங்களை விளக்கவே தத்துவம் பயன்படும். தரிசனம் தியானம் மூலம் பெறப்படுவதாகும். இந்நோக்குடன் இங்கே அவர் தன் ஆய்வுகளையும் முடிவுகளையும் அளித்துள்ளார்.
நித்ய சைதன்ய யதி ஒருமுறை இக்குறிப்புகள் எழுதிய காலங்களை நினைவுகூர்ந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருகுல நிகழ்ச்சிகளை மகேந்திரநாத தத்தர் விரிவாக எழுதியதை [ ராமகிருஷ்ண கதாம்ருதம்] படித்த நித்யா அதைப்போல எழுத ஆசைப்பட்டு இவற்றை எழுதினார். ஆனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. முக்கியமாக நடராஜ குரு சொன்னவற்றின் மேலான தன்னுடைய எதிர்வினைகளை தவிர்க்க அவரால் இயலவில்லை. இரண்டாவதாக நடராஜ குரு சொன்னவை மிகமிகச் சிக்கலான தத்துவக் கோட்பாடுகள். ஏற்கனவே தத்துவ விவாதத்தில் அவற்றின் மூலங்களை கற்று அறிந்துள்ள மாணவர்களுக்கு சொல்லப்பட்டவை. பொதுவான மனிதர்களுக்காக அவர் பேசியது குறைவுதான். அதாவது குருகுலப் பதிவுகள் என்பவை குரு மட்டும் செய்யும் உபதேசங்கள் அல்ல. அவை சீடர்களும் சம அளவில் பங்கு பெறுபவை. அவற்ரை பதிவுசெய்வது அரைகுறைப்பதிவாகவே அமைய முடியும். ஆகவே நித்யா இரண்டாம் கட்டமாக எழுதிவைத்த குறிப்புகளை ஒருமுறை ரயிலில் செல்லும்போது அப்படியே பறக்கவிட்டுவிட்டார். இக்குறிப்புகள் அரைகுறையானவையாக இருப்பது அதனாலேயே.
ஆயினும் இக்குறிப்புகள் ஒருகுருகுலம் எப்படி இருக்கும், ஒரு மகாகுருவின் ஆளுமை எப்படி மாணவன் மீது கவியும் என்பதற்கான சிறந்த ஆவணமாக கொள்ல இயலும் என்று எனக்குப்படுகிறது. அவ்வண்னம் சில வாசகர்களுக்காவது இவை தூண்டுதலாக இருக்கும்.
நான்கு
பேராசிரியர் ஜேசுதாசனை நான் சில வருடங்கள் நன்கறிந்திருந்தேன். அவரது வீட்டில் அவரது குரு கோட்டாறு குமரேசபிள்ளை அவர்களின் பெரிய படம் ஒன்று எப்போதும் துடைத்து சுத்தமாக இருக்கும். தன் ஆசிரியர் பற்றி சொல்லும்போது முதிர்ந்த வயதில் பேராசிரியர் கண்ணீர்விட்டு அழுததை நினைவுகூர்கிறேன். ஆசான் கம்பராமாயணத்தை கற்பிக்கும் விதத்தை பெரும்பரவசத்துடன் அவர் எனக்கு நடித்துக்காட்டினார். [பேராசிரியரின் பேட்டி ஒன்றை நான் எடுத்தேன். அது என் ‘உரையாடல்கள்’ என்ற பேட்டித் தொகுப்பில் உள்ளது] ஜேசுதாசனின் பிரியத்துக்குரிய மாணவர்கள் எம்.வேத சகாய குமார், அ.கா.பெருமாள், ராஜ மார்த்தாண்டன் ஆகியோர் இன்று தமிழில் தங்கள் இடத்தை நிறுவிக்கொண்டவர்கள்
எம்.வேதசகாய குமாரை நான் பத்து வருடங்களாக அறிவேன். எந்நிலையிலும் அவர் ஆசிரியர்தான். எனக்கும் அவர் ஆசிரியர் எனற நிலையில் இருப்பவரே. தமிழ் இலக்கிய மரபு குறித்து அவரிடம் எப்போதும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் தன் ஆசிரியரிடம் கொண்டிருந்த மட்டற்ற காதலை அருகே நின்று கண்டிருக்கிறேன். மரணம் வரை பேராசிரியர் ஜேசுதாசன் தன் மகன்களைவிட மேலாக வேதசகாய குமாரையே அனைத்துக்கும் நம்பியிருந்தார். அதற்கு இணையாகச் சொல்லவேண்டுமென்றால் குமார் தன் மாணவர்களிடம் கொண்டுள்ள அன்பைச் சொல்லவேண்டும். சஜன், மனோகரன் போன்ற அவரது மாணவர்கள் எதிர்காலத்தில் பேசப்படுவார்கள்.
எம்.வேதசகாயகுமாரின் பிரியத்துக்குரிய மாணவியான ப.சாந்தி இந்தச் சிக்கலான நூலை மிகக் கடுமையான உழைப்பின் விளைவாக மொழியாக்கம்செய்தார். அந்த விடாப்பிடியான சிரத்தை என்னை பிரமிக்கச்செய்தது. அது ஒருவகையான குருகுலக்கல்வியின் விளைவென்றே எனக்குப் படுகிறது. தலைமுறைகளின் வழியாக நீளும் ஒரு பண்புநலன் அது. நவீனத் தமிழிலக்கியத்தில் இரண்டாம் உலகப்போரின் பங்களிப்பு என்ற தலைப்பில் எம்.வேதசகாயகுமாரின் வழிகாட்டலில் திருவனந்தபுரம் பல்கலைகழகக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
[நிறைவு]