இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – கேள்வி பதில்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – கேள்வி பதில்

ஜெயமோகன்.இன் இல் இருந்து

[வட கிழக்கு பயணத்தின் போது]

“இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற தலைப்பை வைக்கும்போது, இடதுசாரிகள் “இந்திய ஞான மரபு” என்று அழைப்பதைக் குறிப்பிட்டு, அது தவறான புரிதலில் எழுந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஜவஹர்லால் நேரு, The Discovery of Indiaவில் “நமது பழைய இலக்கியங்களில் ‘ஹிந்து’ என்னும் சொல் காணப்படவில்லை. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தந்திரிக நூலில்தான் முதன்முதலாக இந்தச் சொல் காணக்கிடைக்கிறது என்று தெரியவருகிறது. இந்த நூலில் ஒரு மதத்தினரை அல்லாமல், ஒரு மக்களைத்தான் ‘ஹிந்து’ என்னும் சொல் குறிக்கிறது” என்று எழுதியுள்ளதை திரு.சோதிப் பிரகாசம் தன் அணிந்துரையில் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதன் அடிப்படையில் பார்க்கும்போதும் கூட, “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற தலைப்பே பொருத்தமானது என்று எண்ணுகிறீர்களா? ஆமெனில், ஏன் என்று விளக்க முடியுமா?

– பி.கே.சிவகுமார்.

நேரு மட்டுமல்ல விவேகானந்தர், காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி போன்ற மாறுபட்ட கோணங்கள் கொண்ட பல இந்து அறிஞர்களும் அதைச் சொல்லியுள்ளனர். இந்து என்பது சிந்துவிலிருந்து உருவான ஒரு பொதுச்சொல் என்பது ஓர் உண்மை. பன்னிரண்டாம் நூற்றாண்டு மொகலாய வரலாற்றாசிரியர்களால்தான் ஓரளவு வரையறை செய்யப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகைக்குப் பிறகே முக்கியம் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து மறுமலர்ச்சிக் காலத்திலேயே பரவலாக ஆயிற்று.

ஆனால் எல்லாச் சொற்களும் இப்படி வெவ்வேறு சூழல்களிலிருந்து உருவானவையே. மெல்லமெல்ல பொருளைத் திரட்டிக் கொண்டவையே. எந்தச் சொல்லும் நிரந்தரமாக ஒன்றையே குறிப்பது இல்லை, காலத்துக்கு ஏற்ப அது மாறுபடுகிறது. இன்று நாம் மொழியை ஆளும்போது இதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

இந்து என்ற சொல்லுக்கு பல தளங்களில் பொருள்கொள்ளப்படுகின்றன.

1] மொகலாய வரலாற்றாசிரியர்களைப் பொருத்தவரை அது இந்திய மண்ணில் உள்ள அனைவரையும் குறிப்பதாக இருந்தது.

2] பின்பு இங்குள்ள பண்பாட்டுப்போக்குகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதாக ஆயிற்று. விவேகானந்தரும் பாரதியும் ஜெயகாந்தனும் அப்படித்தான் பயன்படுத்துகிறார்கள்.

3] ஆங்கிலேய மக்கள்தொகைக் கணக்கெடுப்பினூடாக பின்பு ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயராக அது உருவகமாயிற்று. இன்று சாதாரணமக்களும், அரசியல்சட்டமும் மதத்தின் பெயராகவே அதைக் கொண்டுள்ளன. இம்மூன்று பொருட்களில் ஒன்றைத் தருணத்துக்கு ஏற்பப் பயன்படுத்தலாம்.

நடைமுறைப் பொருளில் இந்து என்பது ஒரு மதம்தான். அப்படி பயன்படுத்தப்பட்ட பிறகு அதை எவரும் மறுக்கவோ மாற்றியமைக்கவோ இயலாது. சொற்கள் ஆறுபோல, தங்கள் பாதைகளைத் தாங்களே கண்டடைகின்றன. பல்வேறு மதங்களும் சிந்தனைப் போக்குகளும் பத்தாம் நூற்றாண்டு முதல் உருவான பக்தி இயக்கம் வழியாக ஒன்றாக மாற ஆரம்பித்து, இந்து மறுமலர்ச்சிக் காலத்தில் நவீன விளக்கம் பெற்று மெல்ல இந்த மதம் இன்று உருவாகியுள்ளது. நான் மதத்தால் ஓர் இந்து.

ஆனால் என் நூலில் அச்சொல்லை நான் ஒரு மதத்தைக் குறிப்பிட அதைக் கையாளவில்லை. அதை அதில் விளக்கியுள்ளேன்.

நம் சிந்தனைமரபைப் பொருத்தவரை மதம் என்பது உறுதியான தரப்பு என்று பொருள்வரும் சொல். 1] மையத்தரிசனம், 2] ஒருங்கிணைவுள்ள தர்க்கமுறை, 3] வரையறை செய்யப்பட்ட வழிபாட்டுமுறை ஆகியவை அடங்கியதே மதம். அப்படிப் பார்த்தால் இந்துமதம் என ஒன்று நேற்று இருந்தது இல்லை. ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு மட்டுமே. சில பொதுவான கூறுகளினால் அதை ஒன்றாகக் கருதுகிறோம். நான் அதை இந்து ஞானமரபு என்று சொல்கிறேன். அதை வேறு சொல்லால் சொல்வதாக இருந்தால் ‘சனாதன தர்மம்’ என்று சொல்லவேண்டும். அச்சொல் ‘அழிவற்றது’, ‘பழைமையானது’ என்ற பொருள் கொண்டது. ஆகவே அது சிறப்பித்தலாக ஆகுமே ஒழிய பெயராக ஆகாது.

இந்து என்ற சொல் மீதான உங்கள் தயக்கத்தைப் புரிந்துகொள்ள இயல்கிறது. கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட தயக்கம் அது. காரணம் இன்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பது. அவர்கள் சொல்லும் இந்துத்துவம் என்ற அரசியல் கோஷத்தை அக்கட்சியை எதிர்ப்பவர்கள் [குறிப்பாக இடதுசாரிகள்] இந்துமதம், இந்து ஞான மரபு அனைத்துக்கும் பொருத்திப் பார்த்து பூமி மீதுள்ள அனைத்து தீமைகளுக்கும் உரிய, விஷமயமான ஒரு சொல்லாக அதைச் சித்தரித்துக் காட்டமுயல்கிறார்கள். மேலோட்டமான அறிவுத் தளங்களில் அச்சொல் மீது ஓர் அச்சத்தை அவர்களால் உருவாக்க முடிந்துமுள்ளது. அவர்களுடன் மதமாற்ற சக்திகளும், மதவெறிச் சக்திகளும் சேர்ந்துகொண்டு இந்துமதத்தைச் சிதைத்துவிடலாம் என எண்ணி உச்சக்கட்ட பிரசாரத்தில் இன்று ஈடுபட்டு வருகிறார்கள். அப்பிரசாரத்தையே மதவாதசக்திகள் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொள்கின்றன.

ஆனால் நான் பலவாறாக சொல்லிவருவதுபோல இந்துத்துவ அரசியல் கோட்பாட்டை இந்து மரபுடன் இணைப்பது என்பது பல்லாயிரம் வருட வரலாறும் மகத்தான தத்துவ, அழகியல் செல்வமும் கொண்ட ஒரு மாபெரும் புலத்தையே சில மதவாத அரசியல்வாதிகளுக்குப் பட்டா போட்டுத்தருவதாகும். இங்குள்ள இடதுசாரிகள் போராடினால் சற்றேனும் இந்துமதத்தை அசைக்கமுடியுமா என்ன? இந்துத்துவ அரசியலின் மேடையை இந்துமரபு என்ற இரும்புத் தூணுடன் சேர்த்து இறுக்கிக் கட்டி அவர்களுக்கு உதவுகிறார்கள் நம் முதிராமன இடதுசாரிகள். அதன் விளைவே இன்று இந்து என்ற சொல் மீது ஊடகங்களில் உருவாகியுள்ள கசப்பு. ஆனால் அது ஊடகமாயை மட்டுமே, சொந்த மனைவியிடம் கூட இவர்கள் அதைச் சொல்ல இயலாது.

இந்து என்ற சொல்லை ஞான மரபைக் குறிக்கவும், மதத்தைக் குறிக்கவும் நாம் அஞ்சவோ தயங்கவோ வேண்டியதில்லை. அது விவேகானந்தரும் நாராயணகுருவும் அரவிந்தரும் பாரதியும் பயன்படுத்திய சொல். ஏன், ஜெயகாந்தனும் இ.எம்.எஸ்ஸ¤ம் பயன்படுத்தும் சொல். அதை விரிவான தளத்தில், அத்தனை உள்முரண்களுக்கும் இடமளித்து அணுகவேண்டும் என்பதே முக்கியம். வலதுசாரிகள், இடதுசாரிகள் இருசாராரும் அளிக்கும் எந்தவிதமான குறுக்கலையும் ஏற்கலாகாது. அன்றாட அரசியல் தளத்தில் நிகழும் இந்தக் கெடுபிடிகளை பலவீனமான ஆளுமைகளே சிந்தனைத் தளத்தில் பொருட்படுத்தும். ஒரு எளிய நூல் கூட ஐம்பது வருடமேனும் நிற்கும். இன்றைய அரசியல் பத்துவருடம் நீடித்தால் ஆச்சரியம்.

oo

இந்து ஞான மரபு என்பதை என் நூலில் வரையறை செய்கிறேன். பௌத்த, சமண, சீக்கிய மதங்கள் அல்லாத எல்லா இந்திய ஞானத் தேடல்களையும் இணைக்கும் ஒட்டுமொத்தமான பெயர் அது. அம்மதங்களுக்கும் இந்து ஞான மரபுக்கும் பொதுவான ஏராளமான கூறுகள் இருந்தாலும் அவை தங்களைப் பிரித்து வகுத்துக் கொண்டவை, அப்படியே நீடிப்பவை என்பதனால் அப்படி அடையாளப்படுத்துவதே சிறப்பாகும்.

இந்து ஞான மரபு என்பது ஒரு கோணத்தில் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வரையறைசெய்யப்பட்ட ஒன்றுதான். இந்தியாவின் எந்த குருகுல சம்பிரதாயத்திலும்- சைவ, வைணவ மடங்கள், ஆரிய சமாஜம், நாராயண இயக்கம் அனைத்திலும்– அவர்கள் கற்கும் பொது மதப் பின்னணியை இவ்வாறு வகுத்திருக்கிறார்கள். ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள், மூன்று தத்துவங்கள் [ஷட்தர்சனம், ஷன்மதம், பிரஸ்தானதிரயம்] இவையடங்கியதே அது. சாங்கியம் யோகம் நியாயம் வைசேடிகம் முன்மீமாஞ்சை பின்மீமாஞ்சை ஆகியவை அடங்கியது ஆறுதரிசனம். சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் ஆகியவை அடங்கியது ஆறுமதம். உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவை அடங்கியது மூன்று தத்துவம்.

இவ்வரையறைப்படி பார்த்தால் மதங்களாகவே ஆறு இந்து ஞான மரபில் அடங்கியுள்ளன. ஆறு தரிசனங்களையும் ஆறு துணை மதங்களாகக் கொள்வதுண்டு. ஆக, ஏறத்தாழ பன்னிரண்டு மதங்கள். இம்மதங்களை மூன்று தத்துவ அமைப்புகளும் குறுக்காக ஊடுருவி உருவாகும் எண்ணற்ற தத்துவ நோக்குகளும் அடங்கியதே இந்து ஞான மரபு.

இந்திய ஞான மரபு இதிலிருந்து மாறுபட்டது. அதன் பொது அடையாளம் இன்றைய இந்திய நிலப்பரப்பு மட்டுமே. அதில் சூபி மரபு, பஹாய் மதம், அஹ்மதியா மதம், துறவி ஜோச·ப் புலிக்குன்னேல் போன்றவர்கள் முன்வைக்கும் ஒருவகை இந்தியக் கிறித்தவம் ஆகியவையும் அடங்கும். நான் ஏன் என் நூலில் இந்திய ஞான மரபு என்று சொல்லவில்லை என்றால் ஆறு தரிசனங்களுக்கு இவற்றுடன் எந்த உறவும் இல்லை என்பதனாலேயே. நான் பேசுவது இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்களின் இடம் குறித்தே.

அதை ஏன் சொல்லவேண்டியிருக்கிறது என்றால் இந்து ஞான மரபு என்றால் அது முற்றிலும் ஆன்மிக மரபே என்ற எண்ணத்தை தயானந்த சரஸ்வதியில் [ஆரிய சமாஜம்] தொடங்கி டாக்டர் ராதாகிருஷ்ணன் வரை வரும் இந்து மத ஒருங்கிணைப்புவாத மரபு உருவாக்கி நிறுவியுள்ளது. இந்து ஞான மரபு என்பது ஆன்மிக மரபும் பௌதிகவாத மரபும் முரண்பட்டு முன்னகரும் இயக்கம் மூலமே உயிர்த் துடிப்பாக இருந்தது என்றும், அந்த முரணியக்கமானது பக்தி காலகட்டத்தில் பௌதிகவாதக் கோட்பாடுகள் அழிந்ததும் மெல்ல இல்லாமலானதே இந்து ஞான மரபு தேங்கக் காரணமாயிற்று என்றும் நாராயண குருவின் இயக்கம் சொல்கிறது. குறிப்பாக நடராஜ குரு இதை விரிவாகப் பேசியுள்ளார். அவர் முரணியக்கத்தில் [dialectics] ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.

தமிழ்ச்சூழலில் அத்தரப்பை முன்வைக்கவே என் நூல் எழுதப்பட்டது. ஜெயகாந்தன் காஞ்சி சங்கரமடத்தில் பேசுகையில் ‘நான் நாத்திகன் ஆனால் இந்து, இதை உங்களால் மறுக்க முடியுமா?’ என்று கேட்டாராம். அதை விரிவாக முன்வைத்தல் என்று என் நூலைச் சொல்லலாம். பக்தி, சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவற்றால் ஆன ஒர் அமைப்பல்ல இந்து ஞான மரபு. அது ஒரு தேடல்வெளி. அனைத்துவகையான சிந்தனைகளுக்கும் இடமளிக்கும் ஒரு திறந்த சாலை. அப்படித்தான் நேற்றும் அது இருந்துள்ளது. அதை வலியுறுத்துவதே என் நூல். அவ்வகையில் நாராயணகுருவின் சிந்தனைவழிவந்தது அது. அப்படி வலியுறுத்துவது உண்மையில் ஆன்மிகத்தை வலியுத்துவதும்கூட. விடைகள் மட்டுமே கொண்ட மேலோட்டமான ஆன்மிகத்துக்கு மாற்றாக முடிவற்ற தேடல்கொண்ட ஆழமான ஆன்மிகத்தை முன்வைப்பது.

அதை இந்து மதவாதிகளும் இந்து எதிர்ப்பாளர்களும் எதிர்ப்பதும் வசைபாடுவதும் இயல்பானதே. இந்து ஞான மரபி¨னை ஒரு தேங்கிய அமைப்பாக, சடங்குத்தன்மைகொண்ட ஆன்மிகமாகக் காணவே இருவரும் ஆசைப்படுகிறார்கள். இருவருமே உண்மையான ஆன்மிகத்தை மட்டுமே அஞ்சுவார்கள். ஒருவரை ஒருவர் வெறுப்பதைவிட அதை வெறுப்பார்கள். அவ்வெறுப்பே அதன் உண்மையின் நிரூபணமாகும்.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s