தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 1
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[கோவை வாசகர் சந்திப்பு]
‘மனிதன் நானே உயர்ந்தவன் என்று ஆணவம் கொண்டதைக் கண்ட இயற்கை வலியைப் படைத்தது. உடலை வென்ற வலி ஆணவம் கொண்டு கொக்கரித்தபோது இயற்கை தூக்கத்தைப் படைத்தது. தூக்கத்தின் ஆணவத்தை வெல்ல மரணத்தை படைத்தாகவேண்டியிருந்தது இயற்கைக்கு. மரணம் கொக்கரித்தபோது வேறுவழியில்லாமல் இயற்கை காலத்தைப் படைத்தது. காலத்த்தின் கர்வம் அடக்க கடைசியில் முடிவிலியைப் படைத்தது’ கல்பற்றா நாராயணன் ஒருமுறை அவர் வாசித்த இவ்வரிகளைச் சொன்னார்.
”பின்னர் முடிவிலியின் ஆணவத்தை அடக்க முடிவிலி என்ற சொல்லைப் படைத்தது இயற்கை”என்று நான் வேடிக்கையாகச் சொன்னேன்.
அடிப்படைவினாக்கள் அனைத்தும் முடிவிலி நோக்கிச் சென்று முட்டி நின்றுவிடுகின்றன.நாம் அவற்றை கருத்துருவங்களாக ஆக்கி சமாதானம்செய்துகொள்கிறோம். கீதை ஒரு தத்துவ நூலாக உருவாக்கும் அடிபப்டைக்கேள்விகள் அதில் மொழி வடிவில் உள்ளன. திரும்பவும் அவற்றை மொழியில் இருந்து அனுபவமாக ஆக்கவில்லை என்றால் நமக்குக் கிடைப்பவை சில சொற்களே.அனுபவ உண்மைகளை கருத்துருக்களாகக் கொண்டேமென்றால் அதைக் குறுக்குகிறோம். கருத்துகளைச் சொற்களாகக் கண்டோமென்றால் மேலும் குறுக்குகிறோம் . இந்தப் பிழை நிகழாமல் நம்மை நாம் காத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது
தத்துவப்பயிற்சி அனேகமாக இல்லாத ஒருவனாக நான் நித்ய சைதன்ய யதியை அணுகிய நாட்களில் மண்டையில் அடிபடுவதுபோல அவரால் சுட்டிக்காட்டப்பட்டு பல அடிபப்டைப்பாடங்களைக் கற்றேன் அவற்றில் முதலாவது இது. உதாரணமாக இதைச் சொல்லலாம். ஆத்மா என்ற சொல் காதில் விழுந்ததுமே இந்த நாள் வரை ஆத்மா என்ற சொல் சார்ந்து நாம் என்னென்ன அறிந்தோமோ அவையெல்லாம் சேர்ந்து நம் மனதில் எழுந்து ஒரு பிம்பம் உருவாகிறது. செத்துப்போன பாட்டியின் ஆத்மா வானத்தில் இருக்கிறது என்ற கதை முதல் புராணங்கள் ,சினிமாக்கள் வரை…அதன் பின் நாம் வாசிப்பதும் சிந்திப்பதும் விவாதிப்பதும் நமக்குரிய அந்தப் பொருளை மட்டும் அச்சொல்லுக்கு அளித்துக்கொண்டுதான்.
இந்த விவாதத்தில் என்ன பொருள் அளிக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து நாம் பெறச்சாத்தியமான ஆகசிறந்த பொருள் என்ன என்பதே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும். அது சாக்ரடீஸாக இருந்தாலும் கண்ணனாக இருந்தாலும். ஆத்ம, முக்தி, பரம்பொருள் எல்லாமே கருத்துருக்களாக,சொற்களாக, நமக்குள் செல்லுமென்றால் அவை நம்மை தீராத விவாதத்துக்குள் மட்டுமே கொண்டுசென்று செலுத்தும். அவை எவ்வகையான அனுபவ அறிதல்கள் என்று கண்டு அணுகுவதுதான் சிறந்த வழிமுறை. பிரபஞ்ச இருப்பு தனிமனித இருப்பு இரண்டையும் இணைக்கும் ஒரு பொது தத்துவத்துக்கான தேடல் ஆத்மா என்ற உருவகத்தை உருவாக்கியது. பிரபஞ்சசாரமான ஒன்றையே மனித சாரமாகவும் காண்பது அந்த அணுகுமுறை. அந்த கருதுகோளின் சாத்தியங்களை சாங்கியத்தில், அதாவது நடைமுறைத்தளம் சார்ந்து, அணுகுகிறது இந்த அத்தியாயம். இங்கு அளிக்கப்பட்டுள்ள அர்த்தம் கீதையின் விவாதத்தில் வளர்ந்து உருமாறுவதை பின்னர் காணமுடியும்.
26. ஆத்மா
எப்போதும் பிறந்து
எப்போதும் இறப்பது என
எண்ணினால் கூட
திண்தோள் கொண்டவனே
இவ்வண்ணம் வருந்த ஏதுமில்லை
27. பிறந்தவன் இறப்பதும்
இறந்தவன் பிறப்பதும்
உறுதி
தவிர்க்க முடியாத
இதில்
நீ வருந்துவது
பொருத்தமன்று.
28. பாரதனே,
உடல்கள்
அறியப்படாமையிலிருந்து
உருவாகிவந்தவை.
அறியப்படாமைக்கே செல்கின்றன
நடுவே தென்படுகின்றவை ஆகின்றன
இதில்
எதற்கு துயரம்?
29. ஒருவன்
ஆத்மாவை
விந்தைப் பொருளென எண்ணுகிறான்
பிறிதொருவனோ
விந்தையென்று கூறுகிறான்
பிறிதும் ஒருவன்
விந்தையென்று கேட்கிறான்
யாருமே இதை
அறிவதில்லை.
30. பாரதனே
எல்லா உடல்களிலும் உள்ள
உடல்ஆனவன்
எப்போதும்
அழிவற்றவனாகவே இருக்கிறான்
ஆகவே நீ
எதைப்பற்றியும்
துயரப்படத் தக்கதல்ல.
31. உன் தன்னறத்தை எண்ணினாலும்
அஞ்ச வேண்டியவனல்ல
மறவனுக்கு
அறப்போரை விட
புகழ்தருவதாகப்
பிறிதொன்று இல்லை
32. பார்த்தனே
மறவனுக்கு
தற்செயலாக வந்து சேர்வதும்
திறந்து கிடக்கும்
விண்ணக வாயிலுமான
இத்தகைய போரை
நல்லூழ் கொண்ட மறவர்களே
அடைய முடியும்
.
33. ஆகவே
நீ இந்த அறப்போரை
செய்யவில்லை என்றால்
அறமும் புகழும் இழந்து
பாவத்தையே அடைவாய்.
34. இவ்வுலகோர் எல்லாம்
உன்னைப்பற்றி
தீங்காப்பழி கூறுவர்
புகழ் கொண்ட உனக்கு
அவச்சொற்களே மரணம்.
35. இப்போரின் தேர்வலர்
நீ அஞ்சிப் பின்வாங்கினாய் என்று
எண்ணுவர்
மதிப்பிற்குரியவனாக இருக்கும் நீ
இழிவடைவாய்
36. எதிரிகள் உன்
ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு
பேசத்தகாதனவற்றை
பேசுவர்
அச்சொற்களை விடக் கொடிதோ
இப்போரும் பழியும்?
37. குந்தியின் மகனே
போரில் இறந்தால்
சொர்க்கத்தை அடைவாய்
எனவே
போர்புரிய உறுதிபூண்டு
எழுக!
38. இப்போரில் நீ
இன்பதுன்பம்
வெற்றி தோல்வி
ஈட்டல் இழப்பு
அனைத்தையும் நிகராக எண்ணி
போரிடுக.
எப்பழியும் உன்னை அடையாது!
மீண்டும் கவனிக்கவும், இது நடைமுறை மெய்ஞானம் என்ற உணர்வுடன் வாசகர் படிக்க வேண்டிய பகுதி இது. இப்பகுதியில் கிருஷ்ணன் கூறுவது இத்தகையதோர் சந்தர்ப்பத்தில் ஒரு போர்மறவன் இயல்பாகவே சிந்திக்க வேண்டிய சிந்தனைகளையே .அவற்றுக்கு அன்றைய உயர்தத்துவம், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை சார்ந்து விளக்கம் கொடுக்கிறார் கண்ணன். ஆத்மாவின் அழிவின்மை உயர்தத்துவம். மறுபிறப்பு முதலிய நம்பிக்கைகள். குலமேன்மையும் வீரம் எனும் சுய அடையாளமும் வாழக்கை முறை சார்ந்தவை.
ஆகவேதான் முதலில் உயர்தத்துவ தளம் சார்ந்த ஒரு விளக்கத்தை அளித்த பிறகு சரி, இன்னொரு கோணத்தில் பார்த்தால் கூட என்று விளக்கத்தை மீண்டும் கொண்டு செல்கிறார் கிருஷ்ணன். ஆத்மா நிலையானது, அழியாதது கொல்லப்படாதது என்று கூறிவிட்டு அப்படிக் கொல்லப்படுவது என்றாலும் கூட அது மீண்டும் பிறக்கிறது மீண்டும் இறக்கிறது, இச்செயலில் முடிவின்மையில் மரணம் ஒர் எளிய நிகழ்வே என்கிறார். அதாவது ஆத்மா என்பதை ஒரு கருத்துக்கருவியாகவே இங்கே கிருஷ்ணன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறார்.
அதன் தொடர்ச்சியாக அர்ஜுனன் என்ற போர் மறவனின் இயல்பே வீரம்தான் என்றும் வீரத்தை அவன் இழந்தால் பழியும் அவமதிப்பும் மட்டுமே விளையும் என்றும் எச்சரித்து, வென்றால் வெற்றியும் தோற்றால் புகழும் அவனைக் காத்திருக்கிறது என்று கூறுகிறார்.
தொடரும்