தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 3
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[கோவை இலக்கிய சந்திப்பு]
இரண்டு மேலைக்கோட்பாடுகள்
கீதையின் தன்னறம் என்ற கருத்துக்கு சமானமான இரு மேலைக்கோட்பாடுகளை நாம் இங்கே கவனிக்கலாம். ஒன்று அரிஸ்டாடில் முன்வைக்கும் நிகோமாகிய அறக்கோட்பாடு. இன்னொன்று இமானுவேல்காண்ட் முன்வைக்கும் தன்னியல்பூக்கம் (Catagorical Imperative)
நிகோமாகிய அறக்கோட்பாடு அரிஸ்டாடில் அவரது பிற்கால அறவியல் சிந்தனைகளின் போது முன்வைக்கப்பட்டது. மனித இயல்பு என்பது அறம் மற்றும் ஒழுக்கம் குறித்த எந்தச் சிந்தனைக்கும் அடிப்படையாக அமைவது என்று அரிஸ்டாடில் கூறுகிறார். ஒரு மனிதனின் இயல்புகள் அவனில் தொடர் செயல்பாடுகளாக மாறி மெல்ல பழக்கங்கள் ஆகின்றன. பழக்கம் மூலம் அவனுடைய ஆளுமை உருவாகிறது. ஒருவனுடைய இயல்பை எவ்வாறு அறிவது? 1. அவனுடைய ரசனை என்ன? 2. அவனுடைய தெரிவுகள் என்ன? என்ற இரு வினாக்களின் அடிப்படையில்தான்.
மனிதனின் அறவியல் சார்ந்த தேடல் மற்றும் நிறைவு குறித்து ஆராயும் நிகோமாக்கிய அறவியல் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வழியில் தங்கள் செயல்கள் மூலம் இன்பம், நிறைவு ஆகிய இரண்டையும்தான் தேடுகிறார்கள் என்கிறது. நிறைவு என்பது ஆளுமை முழுமையடைவதில் உள்ளது. அந்த முழுமை இரு அடிப்படைகளில் அமையும் என்பது அரிஸ்டாடிலின் கூற்று. ஒன்று ஒழுக்கம் இன்னொன்று ஞானம். ஒழுக்கம் என்பது ஒருவனுடைய பழக்க வழக்கங்களில் வெளிப்படக்கூடிய அவனுடைய தனித்தன்மையாகும். ஞானம் என்பது அகத்தையும் புறத்தையும் ஒருவன் அறியும்விதம் வழியாக உருவாகும் தன்னிலை அல்லது ஆளுமை.
ஒருவனுடைய ஒழுக்கம் என்பது அவனுடைய அறநோக்கு மற்றும் இச்சை என்ற இரு எல்லைகள் நடுவே உள்ள சமரசப் புள்ளி. அதாவது ஒழுக்கம் அதன் சிறந்த தளத்தில்கூட ஒரு நடுநிலை வழியாக மட்டுமே இருக்க இயலும். கடுமையான புலனடக்கமும் சரி கட்டற்ற போகமும் சரி ஒழுக்கமின்மையே. பொறுப்பற்ற துணிவும் சரி கோழைத்தனமும் சரி தீங்கே. வீரம் என்றால் பொறுப்பும், இடச்சூழல் சார்ந்த விவேகம் உடைய துணிவேயாகும். இவ்வாறு அடிப்படையில் மனித இயல்புகளை பலவாறாக வகுத்துக் கொண்டு அறம் மற்றும் ஒழுக்கத்தை நிலைநாட்டுவது குறித்து ஆராய்கிறார் அரிஸ்டாடில். ஆர்வமுள்ள வாசகர்கள் தன்னறம் என்ற கீதைக்கோட்பாட்டை நிகோமாகிய அறவியலுடன் இணைத்து விரிவாக வாசிக்கலாம்.
ஐரோப்பிய கருத்து முதல்வாத (Idealism) சிந்தனையின் நவீன கால முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் இமானுவேல் கன்ட் தூய கரணிய ஞானம் (Pure Reason) சுதந்திர சிந்தனைக்கான விருப்புறுதி (Free will) ஆகிய கருத்துக்களை முன்வைத்தவர். நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு சமூக சிந்தனையை உருவகித்து தனிமனித ஞானம், தனிமனித விடுதலை ஆகிய கருத்துக்களை முற்றிலும் தடுத்து நிறுத்தியிருந்த மத்தியகால ஐரோப்பியக் கிறிஸ்தவத்தின் அடிப்படைகளை தகர்த்து நவீன ஐரோப்பாவை வடிவமைத்த மாபெரும் சிந்தனையாளர். இன்றும் ஐரோப்பாவை ஆளும் தத்துவக் கருத்துக்கள் இவை இரண்டே என்பதைக் காணலாம். ஐரோப்பிய சிந்தனையானது உண்மையை கண்டறிவதற்கு மனிதனுக்கு உள்ள உள்ளார்ந்த ஆற்றல், சுதந்திரமாகச் சிந்திப்பதற்குரிய தணிக்கவோ தடுக்கவோ இயலாத விருப்பமும் உறுதியும் ஆகியவற்றில் வேரூன்றியது என்று கூறலாம்.
கான்ட்டின் ‘தன்னியல்பூக்கம்’ என்பது அவரது அறக்கோட்பாடுகளில் அடிப்படையாக உள்ள ஒரு தரிசனமாகும். ஒரு மனிதன் இயல்பாகவே கடைப்பிடிக்கத்தக்க அறமானது வெளியில் இருந்து அவன் மீது ஏற்றப்பட்டதாக இருக்காது. அது அவனுள் இருந்தே இயல்பாக எழுவதாக இருக்கும் என்று கான்ட் கூறுவதாக சுருக்கிக் கூறலாம். இப்படி மனிதனின் உள்ளார்ந்த சாரத்தில் இருந்து எழும் அறமானது கண்டிப்பாக அனைத்து மானுடருக்கும் உரியதாக, உலகளாவியதாக,மட்டுமே இருக்க முடியும். எல்லா ஓழுக்க, அறநெறிகளும் மாற்ற முடியாதவையாகவும் அவசியமானவையாகவும் அடிப்படையானவையாகவும் காலாதீதமானவையாகவும் இருக்கவேண்டும். அவற்றைக் கடைப்பிடிப்பது மனிதர்களின் இயல்புக்கு மாறானதாக இருக்கலாகாது. இந்த இயற்கையான அறத்துடன் முரண்படாத படியே பிற ஒழுக்க விதிகளும் சட்டங்களும் அமைக்கப்படவேண்டும்.
உதாரணமாக இப்படிச் சொல்லலாம். என்னுடைய இயல்பில் எப்போதுமே நான் அறிந்தவற்றுக்கு அடுத்த கட்டத்தைப்பற்றி சிந்தனைசெய்யும் இயல்பு உண்டு. இது என்னுள் இருக்கும் தன்னியல்பான்ன உந்துதல். ஆகவே இது மானுட அடிப்படை. எப்ப்போதுமே மனிதகுலத்தில் இது இருந்துகொண்டிருக்கும். எந்த புறசக்தியும் இதைக் கற்பிக்க முடியாது. எந்த புறச்சக்தியும் இதை தடுத்துவிடவும் முடியாது. இதுவே என் தன்னறம். நான் உயிரோடிருக்கும் காலம் வரை தாண்டித்தாண்டிச் சிந்தனை செய்தபடியே இருப்பேன். அதிலேயே என் நிறைவை காண்பேன். அதன் மூலமே என் சமூகத்துக்குப் பங்களிப்பேன். ஒரு சர்வாதிகார நாடு அல்லது மதவெறி நாடு எனது இந்த இயல்பை தடுத்தால் நான் அழிவேன்.
இந்தக் கோட்பாட்டுக்கு பிளேட்டோ ஆத்மாவின் அடிபப்டை இயல்பு குறித்து கூறுவதுடன் உள்ள தொடர்பை நாம் கவனிக்க வேண்டும். ஆத்மாவின் அடிப்படை இயல்பு அது நன்மை, அழகு,மேன்மை ஆகியவற்றை இயல்பாகவே நாடுவதில் வெளிப்படுகிறது என்கிறார் பிளேட்டோ. மனிதனின் தடுக்க இயலாத தன்னறம் என்பது கண்டிபாக மானுட குலத்துக்கு இன்றியமையாத ஒன்றாகவே இருக்க முடியும் என்கிறார் காண்ட். இருவருமே கருத்துமுதல்வாதிகளும் இலட்சியவாதிகளுமாவர்.
இவ்விரு அறக்கோட்பாடுகளையும் இங்கு நித்யா சுட்டிக்காட்டியமைக்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று மனிதனின் உள்ளார்ந்த அடிப்படை இயல்பு என்பது அவனுடைய பழக்கவழக்கம், அறநோக்கு ஆகியவற்றைத் தீர்மானிப்பதோடு அவனுடைய விடுதலைக்கும் முழுமைக்கும் கூட காரணமாக அமைகிறது என்ற கருத்தாக்கமானது மானுடசிந்தனை உள்ள இடங்களில் எல்லாம் உள்ள ஒன்றாகும். இரண்டு மானுடனின் அக இயல்பு என்பது நிறையையும் விடுதலையையும் நோக்கியே செல்லும் தன்மை கொண்டுள்ளது என்ற நோக்கு கீதை மேலைச்சிந்தனை ஆகிய இரு சிந்தனைகளிலும் பொதிந்துள்ளது.
இவ்வாறு மேலைச்சிந்தனைகளில் சமானமான ஒட்டங்களை கண்டடைவது இந்நூலின் நோக்கம் அல்ல என்பதை இங்கு கூறிவிட வேண்டும். ஏனெனில் அது தொடர்ந்து விரிவாகச் செய்யத்தக்க ஒரு பெரும் பணி. கீதையை விட்டு வெகுவாக விலகிச்சென்றுவிடநேரும். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக இது தேவையாகிறது. இந்திய சிந்தனைகள் அனைத்துமே ஒரு இனவாதச் சதியின் விளைவாக உருவான முட்டாள்தனமான கருத்துக்கள் என்று வாதிடும் ஒரு கும்பல் என்றுமே இந்தியாவில் உள்ளது. கீதையின் இந்தக் கருத்து குறித்து அப்படி பற்பல பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. அவர்கள் ஆதர்சமாகக் கொள்ளும் மேலைச்சிந்தனையின் அடிப்படைகளும் இதே தளத்தைச் சேர்ந்தவையே என்றும் , தத்துவ சிந்தனை எப்போதுமே மானுடப் பொதுவானது என்றும் சுட்டத்தான் இதை இங்கே விவரித்தேன். நித்ய சைதன்ய யதியின் நோக்கமும் இதுவே. அதேசமயம் நித்யா ‘பார்த்தாயா அங்கேயும் இருக்கிறது’ என்றும் தாழ்வு மனப்பான்மைக்கோ ‘எல்லாம் இங்கிருந்து போனதே’ என்ற பெருமிதத்திற்கோ இடம் அளிப்பது இல்லை.
அரிஸ்டாடிலின் நிகோமாகிய அறக்கோட்பாடு மனிதனின் முழுமையை ஒழுக்கம், ஞானம் என்று இரு தளம் சார்ந்ததாகப் பிரிப்பதை வாசகர்கள் ஏற்கனவே நாம் பேசிய கீதையின் கர்மம் ஞானம் என்றும் பிரிவினையுடன் ஒப்பிட்டு யோசிக்கலாம்.
அடிப்படையில் நம்முடைய தொல் குலச்சடங்குகளிலேயே உள்ள ஒன்றுதான் இது. குமரிமாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகும் போது ‘சோறு கொடுக்கும்’ சடங்கு உண்டு. முதல் அரிசி உணவு ஊட்டுதல். இந்தச் சடங்கில் உப்பு, காரம், கசப்பு, இனிப்பு, ஆகியவற்றை கலந்து குழந்தைக்கு ஊட்டுவார்கள்- அதுதானே வாழ்க்கை! அதற்குமுன் குழந்தையை தரையில் போட்டு அதன் முன் மலர், பொன், ஆயுதம், ஏடு, பழம், உருத்திராட்சம் முதலியவற்றைப் பரப்பி வைப்பார்கள். நெல், கிண்டியில் பால் ஆகியவற்றையும் வைப்பதுண்டு. குழந்தை இயல்பாக எதை நோக்கி செல்கிறது என்று பார்ப்பதே நோக்கம். வாளை எடுக்கும் குழந்தை வீரனாவான். நெல்லை எடுப்பவன் விவசாயி. மலர் எடுப்பவன் பித்தன், ருத்திராட்சம் எடுப்பவன் துறவி. உண்மையில் இது ஒருவகை விளையாட்டாகவே இருக்கும். பலசமயம் குழந்தை அதற்கு ஏற்கனவே பழகியதைத்தான் எடுக்கும். நான் தவழ்ந்துபோய் வாழைப்பழத்தை எடுத்து தோலுடன் தின்னமுற்பட்டேன் என்று சொன்னாள் அம்மா. ஆயினும் இதன்பின் மானுட இயல்புகுறித்த, சுயதர்மம் குறித்த, ஒரு புரிதல் உள்ளது. குழந்தை முன் விரிந்துள்ள அனைத்துமே அதன் முக்தி மார்க்கங்கள்தான் எனும் தரிசனமும் உள்ளது.
தொடரும்.