உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 3
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[கோதை]
கர்மமும் ஞானமும் (சாங்கர – ராமானுஜ விவாதம்)
சாங்கிய யோகம் பற்றிய இவ்விவாதத்தில் கீதையின் இப்பகுதியை முன்வைத்த உரையாசிரியர்களுக்குள் நடந்த ஒரு விவாதத்தைக் குறிப்பிட்டுவிட்டு முன்செல்வது உதவியாக இருக்கும். இது சற்று சிக்கலானது, கீதையின் இப்பகுதியுடன் நேரடி தொடர்பில்லாதது. ஆனாலும் இதை நாம் புரிந்ந்துகொள்வது இந்துமெய்ஞான மரபை அறிய மிக உதவிகரமானது
இந்த அத்தியாயம் பற்றிப் பேசுகையில் ”கிருஷ்ணன் இந்தப் பாடல்களில் அர்ஜுனனைக் கண்டிக்கிறார். அர்ஜுனனோ தன் குலதர்மமாகிய போரைச் செய்யாமல் அதைச் செய்தால் குலமே அழியுமே என்ற தர்மசங்கடத்தில் இருக்கிறான். ஆகவே கிருஷ்ணன் ஒவ்வொருவரும் தங்கள் குலதர்மத்தை முதன்மையாகச் செய்ய வேண்டும், அதுவே வாழ்வின் வெற்றிக்கும் அதன் அடுத்தப்படியான மோட்சத்திற்கும் உகந்த வழியாகும் என்று கூறுகிறான்” என்றுதான் என்று வாதிடப்பட்டு வந்தது. இந்திய மரபில் குலநீதி என்பது அன்றும் இன்றும் வலுவான ஒரு தரப்பு என்பதை நாம் அறிவோம்.
இந்தத் தரப்பை மிகக் கடுமையாக கண்டித்து விரிவாக எழுதியிருக்கிறார் ஆதிசங்கரர். ஆத்மாவைப்பற்றிய, மெய்ஞானம் உருவாகி அர்ஜுனன் விடுபடவேண்டுமென்பதே கிருஷ்ணனின் நோக்கமே ஒழிய அவன் தன் குலதர்மத்தை செய்யவேண்டும் என்பது அல்ல என்று சங்கரர் கூறினார். ‘குலதர்மம் செய்க’ என்பதுபோல கிருஷ்ணன் பேசுவது ஒரு விவாதத்தின் தொடக்கமாகவும் முகாந்தரமாகவும் மட்டும்தான். அதாவது அது ஒரு உருவகம் மட்டுமே என்பது அவரது வாதம்.
தன் தரப்பை கூறும் முன்பு சங்கரர் பண்டைய வழக்கப்படி முதலில் பூர்வபக்ஷம் (முதல்தரப்பு, அல்லது வாதியின் தரப்பு) கூறும் வாதங்களைத் தொகுத்துத் தருகிறார். அவை இவ்வாறு தொகுத்துக் கூறத்தக்கவை.
1. மோட்சமே இறுதி இலக்கு என்றாலும் அதற்கான முதற்படி குலதர்மங்களும் அதற்குரிய கருமங்களுமேயாகும்.
2. மோட்சம் என்பது வேதங்களிலும் உபவேதங்களிலும் கூறப்பட்டுள்ள அக்னிஹோத்ரம் முதலிய கர்மங்களின் மூலம் அடையப்படுவது.
3. ‘கர்மங்களைச் செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு’ என்று கிருஷ்ணன் இவ்வத்தியாயம் நாற்பத்தேழாவது பாடலில் கூறுவது இதையே. நாலாம் அத்தியாயம் பதினைந்தாம் பாடலில் ‘ஆகையால் நீ தொன்று தொட்டு வரும் கருமங்களை செய்க’ என்றும் இதையே கிருஷ்ணன் கூறுகிறார்.
4. அவரவருக்கு கூறப்பட்ட செயல்கள் ஒருவனுக்கு பாவத்தைத் தராது என்பதே கிருஷ்ணனின் கூற்று. ஆகவே வேதங்களில் கூறப்பட்டுள்ள வேள்விக்கருமங்களில் பசுக்கொலை முதலியன இருப்பினும் அவை பாவமாகாது.
இந்த முதல்தரப்புக்கு எதிர்தரப்பாக (பிரதி பக்ஷம்) சங்கரர் விரிவான பதிலை அளிக்கிறார். அவற்றை இவ்வாறு தொகுக்கலாம்.
1. ஆழ்ந்த மெய்ஞானம் அடைவதும் தனக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்வதும் முற்றிலும் வேறுவேறானவை.
2. சாங்கிய யோகத்தில் கிருஷ்ணன் சாங்கியம் என்றும் யோகம் என்றும் இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார். சாங்கியம் என்பது உலகில் நின்றபடி நம் வாழ்வைப்பற்றி அறியும் ஞானம் ஆகும். ஆனால் யோகம் என்பது செயல்முறை சார்ந்தது. சாங்கிய ஞானம் ஆத்மா செயல்களுக்கு அப்பாற்பட்டது என அறிந்து கொள்வது . யோகஞானம் ஆத்மாவை செயலில் ஈடுபடுத்துவது. இரண்டும் முரண்பட்டவை.
3. இவ்வாறு சாங்கியோக அத்தியாயத்திலேயே கிருஷ்ணர் கர்மம் ஞானம் என்பனவற்றை இரண்டாகப் பிரித்துள்ளார். இப்பிரிவினை சதபத பிராமணம் முதலிய நூல்களிலேயே உள்ளது.
4. கர்மம் என்னும் உலகியல்செயல்கள் ஞானம் ஏற்படாமல், உலகியல் ஆசைகளை முற்றிலும் விடாதவர்களுக்கு உரியவை. மனத்தின் வல்லமையைத் திரட்டிக்கொண்டு அந்த ஆசைகளை வெல்வதே கருமங்களின் நோக்கமாக உள்ளது. அதுவே இங்கு யோகம் என்று கூறப்படுகிறது.
5. ஆகவேதான் அர்ஜுனன் தொடர்ந்து, விவாதத்தில், ‘கர்மத்தைவிட ஞானமே உயர்ந்தது என்றால்’ என்று மேல் விளக்கம் கோருகிறான்.
6. வேதம் முதலிய நூல்களில் கூறப்பட்ட கர்மம் ஞானம் இரண்டையும் பிரித்துப்பார்க்கக் கூடாது என்றால் இங்கே கிருஷ்ணன் இரண்டையும் பிரித்து விவாதித்திருக்கமாட்டார்.
7. ஞானம் பெற்ற ஒருவன் பற்று இல்லாமல் கர்மம் செய்ய முடியும். அதற்கு கிருஷ்ணன் உதாரணம். ஆனால் பற்றிலாத கர்மம் ஞானத்தை அளிக்கும் என்று கூற இயலாது. அது ஞானத்துக்குப் பதிலும் ஆகாது. அது கர்மங்களை சிறப்பாகச் செய்வதற்கான வழிமுறை மட்டுமே.
8. ஆகவே பகவத்கீதை உணர்த்துவது ஆழ்ந்த ஆத்மஞானம் மூலமே மோட்சம் கிடைக்கும் என்றும் கர்மத்துடன் இணைவதனால் அல்ல என்றும் ஆகும்.
இந்த விவாதம், சரியாகச் சொல்லப் போனால் கீதையின் இந்தப் பாடல்கள் தொடர்பானது அல்ல என்பதை வாசகர் உணர்ந்திருப்பார்கள். கீதையின் இப்பகுதியில் எழும் வினா, ஒருவன் தனக்குரிய செயல்களை திறம்படச் செய்து அதை ஒரு யோகமாக ஆக்குவதன் முலம் மெய்ஞானம் அடைய முடியுமா என்பதே. செய்யும் செயலின் விளைவுகளில் பற்றில்லாமல் சமநிலை நோக்குடன் ஆற்றும் செயல் யோகம் ஆகிறது. அச்செயல் அதை ஆற்றுகிறவனுக்கு மோட்சம் (அதாவது விடுதலை. முழுமை. இதன் விரிவான விளக்கத்தை இனியும் காணலாம்) அளிக்குமோ என்பதே.
ஆம் என்று வாதிடும் தரப்பு பெரும்பாலும் வைதிகர்கள் அடங்கியது. வேள்வி முதலிய சடங்குகளையே இங்கு அவர்கள் கருமம் அல்லது செயல் என்று எடுத்துக்கொள்கிறார்கள். ஆகவே வேள்விகளை சிறப்பான முறையில் செய்வது ஞானத்துக்கும் மோட்சத்திற்கும் வழிவகுக்கும் என்கிறார்கள்.
இதை மறுத்து ஞானம் மட்டுமே மோட்சத்தை அளிக்கும் என்கிறார் சங்கரர். அதாவது செயல் மூலம் அல்ல அச்செயலை ஆழமாக அறிவதன் மூலமே அதிலிருந்து விடுதலை சாத்தியம் என்கிறார். அவ்விதம் அறியப்படாது ஆற்றப்படும் செயல் அச்செயலில் ஒருவனை மேலும் மேலும் அமிழ்த்தி வைக்கவே உதவும். ஆகவே சிறந்த செயலை செய்ய வழிகாட்டும் கிருஷ்ணன் வேதாந்தக் கல்வி மூலம் அச்செயலை ‘உற்று அறிவதையே மேலதிக முக்கியத்துவம் தந்து கூறுகிறார்’ என்கிறார் சங்கரர்.
இங்கு ஒரு சிறு பின்னணி விளக்கம் தேவையாகிறது. வேதங்களில் தொடங்கி இந்து ஞானமரபின் எல்லாப் புள்ளிகளிலும் உள்ள பிரிவினைதான் இங்கும் வருகிறது. வேதங்களையே கர்ம காண்டம் ஞான காண்டம் என்று இரண்டாகப் பிரிகிறார்கள். கர்மகாண்டம் வேள்வி முதலான சடங்குகளை, செயல்களைச் சார்ந்தது. ஞான காண்டம் தத்துவ ஆய்வு சார்ந்தது. உபநிடதங்களும் வேதாந்த மரபும் கர்மகாண்டத்திற்கு முககியத்துவம் அளிக்கின்றன. பூர்வமீமாசகர்களான வைதிகர்கள் கர்மத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். வேதாந்திகள் கர்மத்தை ஞானத்தேடல் இல்லாதவர்களுக்கு உரியவை என்று நிராகரிக்கும்போது வைதிகர் ஞானத்தை மழுப்பி, அவையெல்லாம் கர்மங்களின் மூலமே அடையத்தக்கவைதான் என்று தங்களுக்குள் இழுத்துக்கொள்ள முயல்கிறார்கள்.
இந்த விவாதம் இன்றும் தொடர்கிறது. இந்துமதத்தில் பக்தி மற்றும் சடங்குகளைச் சார்ந்ததுதான் அதன் அடிக்கட்டுமானம் அமைந்துள்ளது. ஞானம் அல்லது தத்துவம் மேற்கட்டுமானமாகவே உள்ளது. ஞானமார்க்கம் தேடுபவர்கள் சடங்கு மற்றும் பக்திகளை நிராகரிக்கிறார்கள். பக்தி மற்றும் சடங்கின் ஆதரவாளர்கள் ஞானத்தை பக்தியின் ‘பக்கவிளைவாக’ அணுகிவிடுகிறார்கள். இந்துமதத்தில் முளைத்து புகழுடன் இருக்கும் குருகுல அமைப்புகளிலேயே இதைக் காணலாம். ராமகிருஷ்ணமடம், நாராயண குருகுலம் போன்றவை ஞான மார்க்கத்தை முன்வைப்பவை. பக்தி மற்றும் சடங்குகளுக்கு எதிரானவை. சத்ய சாய்பாபா அமைப்பு, மேல்மருவத்தூர் சித்தர்பீடம். மாமதா அமிர்தானந்தமயி மடம் போன்றவை பக்தி மற்றும் சடங்குகள் சார்ந்தவை.
இந்த அடிப்படை முரண்பாட்டையே தன் கீதை பாஷ்யத்தின் தொடக்கத்திலேயே தெளிவாக முன்வைக்கிறார் சங்கரர். கீதையை சடங்குகளுக்கும் பக்திக்கும் ஆதரவான நூலாக விளக்க முயலும் தரப்புகளை முழுமுற்றாக நிராகரித்துவிட்டு அதை ஒரு ஞானநூலாக, அதாவது வேதாந்த தத்துவமாக, மட்டுமே முன்னிறுத்த உறுதி பூணுகிறார். இந்த நூலின் தொடக்கத்தில் நித்ய சைதன்ய யதி தன் குருநாதரான நடராஜ குருவை சந்தித்தபோது கீதை தொடர்பாக நடந்த பூசலைப்பற்றி குறிப்பிட்டிருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது. டாக்டர் ராதாகிருஷ்ணனின் தரப்புதான் மீமாம்சகர்களால் முன்வைக்கப்பட்டது. சங்கரரின் தரப்பு நடராஜகுருவால் வலியுறுத்தப்பட்டது.