விஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள்

விஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

2012 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளி கவிஞர் தேவ தேவன் அவர்களுக்கு 22.12.2012 அன்று கோவை ஆர். எஸ். புரம் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. விழாவில் இசைஞானி இளையராஜா, மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன், விமர்சகன் மோகனரங்கன், விமர்சகர்கள் மோகனரங்கன், ராஜகோபாலன், திரைப்பட இயக்குநர் சுகா, எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், ஜெயமோகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.


செல்வி வானதிஸ்ரீ,செல்வி வித்யாலட்சுமி ஆகியோரின் கடவுள் வாழ்த்துடன் விழா இனிதே ஆரம்பித்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளார் திரு.கே.வி.அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சாகித்ய அகாடெமி, கனடா நாட்டின் இயல் விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். தலைமையுரையில் விருது பெறும் படைப்பாளி திரு. தேவ தேவன் அவர்களின் கவிதைகளில் சங்ககாலத்தை நோக்கிப் பயணிக்கும் தன்மை குறித்துக் குறிப்பிட்டார்.


பின்னர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதிய ‘ஒளியாலானது – தேவதேவன் படைப்புலகம் – புத்தகத்தை திரு. கல்பற்றா நாராயணன் வெளியிட வாசகர் திரு. கோபி ராமமூர்த்தி பெற்றுக்கொண்டார். விருதுக்கான பண முடிப்பும் கேடயமும் இசைஞானி இளையராஜா அவர்களால் கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

விமர்சகர் திரு. ராஜகோபாலன் தன்னுடைய உரையில் தேவ தேவன் கவிதைகள் குறித்துத் தன் வாசக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் விமர்சனங்கள் ஒரு வாசகனுக்கு வாசிப்பின் சரியான திசையைக் காட்டும் பணியைச் செய்கின்றன என்றும் குறிப்பிட்டார்.


தொடர்ந்து திரு. மோகனரங்கன் அவர்கள் பேசுகையில் திரு. தேவ தேவன் கவிதைகளில் காணக் கிடைக்கும் பக்தி இலக்கிய, அழகியல் கூறுகளைப் பல மேற்கோள்களுடன் குறிப்பிட்டார்.


மலையாளக் கவிஞர் திரு. கல்பற்றா நாராயணன் (தமிழ் மொழிபெயர்ப்பு திரு. கெ. பி. வினோத்) தன்னுடைய உரையில் வெறுமை நிரம்பிய வாழ்வை நிரப்புவது கவிதைகள் என்று கவிதையின் உயர்வு குறித்துப் பேசினார்.


இயக்குநர் சுகா அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில் இசைஞானி, தேவதேவன் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து ஆச்சரியம் கொண்டார். தேவதேவன் கவிதைகளில் காணக் கிடைக்கும் அழகியல் கூறுகள் குறித்தும் குறிப்பிட்டார்.

இளையாராஜா அவர்கள் பேசும்போது இசை இல்லாத இடமில்லை. பேச்சு இசை, ஓசை இசை என்று குறிப்பிட்டார்.  எழுத்தாளர் திரு. ஜெயமோகன் தன்னுடைய உரையில் துக்கத்தின் சாயலே படியாத கவிதைகள் தேவதேவனுடையவை என்று குறிப்பிட்டார். மேலும் பல மேற்கோள்களை எடுத்துக் காட்டிப் பேசியபோது கவிதையும் இசையும் ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தின் உச்சங்கள் என்று குறிப்பிட்டார்.


பின்னர் கவிஞர் தேவதேவன் ஏற்புரை வழங்கினார். விழாவைத் திரு. செல்வேந்திரன் தொகுத்து வழங்கினார்.  அவருடைய நன்றி நவிலலுடன் விழா இனிதே முடிவுற்றது.

விழாவின்போது சொல் புதிது பதிப்பகத்தின் நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவின் பொருட்டு  அமரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வாசக அன்பர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s