இந்தியஞானம்-கடிதங்கள்

இந்தியஞானம்-கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

சிந்திப்பவர்களுக்கான சிறப்பு வாசல் வாசித்தேன். நவீன மனம் கொண்டவர்களுக்கான, ‘ இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூல் இந்தத் தலைமுறையினரில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் அரிய பரிசாகவே இருக்கும். இந்து ஞானம் பற்றிய அறிமுகம் என்னும் மகத்தான பணியை நீங்களும் அயராது ஆற்றி வருகிறீர்கள், அந்தச் செயல்கள் மூலம் உங்கள் மீது குத்தப்படும் அபத்தமான மதவாத முத்திரைகளைப் பொருட்படுத்தாது. நான் தங்கள் எழுத்துக்களிலிருந்து இந்து ஞானம் குறித்த, குறிப்பாக வேதாந்தம் பற்றிய தெளிவை அடைந்திருக்கிறேன். தாங்கள் கீதை தொடரை எழுதிய போது அதைப் பரவசத்துடன் தொடர்ந்தவர்களில் நானும் ஒருவன். அதன் குறிப்பிடத்தக்க அம்சம் வாசகனுக்கான எவ்வித சமரசமுமின்றி கீதையை சாத்தியமுள்ள பல்வேறு கோணங்களிலிருந்து அலசியிருந்ததுதான். துவக்க நிலையிலுள்ள ஒரு சாதகனுக்கு அந்தக் கீதைத் தொடர் ஒருவேளை உவப்பை அளிக்காமல் போயிருக்கலாம்.

உங்களுக்கு எழுத வேண்டுமென்று தோன்றியது. எழுத ஆரம்பித்து எனக்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் என் இருபதுகளில் யோகா குருமார்களிடம்தான் ஞானோதயம் என்ற சரக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்று நம்பி வருடக் கணக்கில் அலைந்து கொண்டிருந்தேன். என் நண்பனொருவன்தான் எனக்கு வேதாந்தத்தை அறிமுகப்படுத்தினான். எத்தனையோ கோடி ஜென்மங்களுக்கு முன் அவனுக்கு ஏதோ நல்லது செய்திருப்பேன் போல. அவன் எனக்கு வாசிக்க அளித்த நூல் ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் விவேகசூடாமணி. தன்னுடைய கோழிப்பண்ணையில் ஒரு பின் மதிய வேளையில் இந்நூலை வாசித்துக் கொண்டிருக்கையில் ஒரு கணத்தில் தனக்குத் தேடல்கள் அற்றுப் போனதாகக் கூறினான்.

அது ஓர் ஆங்கில நூல். நானும் அதை வாசித்தேன். எனக்கு மிகுந்த உவப்பைக் கொடுத்த நூல் அது. நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடியே நவீன மனத்தின் லாஜிக்குக்கு ஏற்றபடி விவாதங்களை உருவாக்கி அவற்றுக்குத் திருப்தியளிக்கும் வகையில் விளக்கம் அளித்திருக்கிறார் ஸ்வாமிஜி. மேலும் தமிழில் வானதி வெளியிட்ட மூன்று நூல்கள் உள்ளன.

1. தர்மத்தின் மதிப்புதான் என்ன?

2. சாதனமும் சாத்தியமும்.

3. பகவத் கீதையின் சாரம்.

இம்மூன்று சிறிய நூல்களும் வேதாந்தம் குறித்த அழகான எளிய விளக்கத்தை அளிக்கின்றன. இவை பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்க வாய்ப்புண்டு. எனினும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். மேலும் சில வேதாந்த வகுப்புகளை ஒலி வடிவமாக என் நண்பன் என்னிடம் அளித்தான். தொடர்ந்து ஓர் ஆண்டு அவ்வகுப்புகளைக் கேட்டேன். பல வகுப்புகளைக் குறிப்பெடுத்தபடி ஒரு எளிய மாணவனாகக் கற்றுக் கொண்டேன். ஸ்வாமி குருபரானந்தர் என்ற எளிய மகானின் வகுப்புகள் அவை. பிறகு அவரது இணையதளத்தில் அவரது வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுவதை அறிந்து நிறைய வகுப்புகளைத் தரவிறக்கம் செய்து கொண்டேன். அந்தத் தளம் http://www.poornalayam.org. வேதாந்தத்தில் விருப்பம் கொண்டோருக்கு இது மிகுந்த பயனுள்ள தளம்.

வேதாந்தத்தை எனக்கு அறிமுகம் செய்த என் நண்பன் போலவே தத்துவத்தையும், இலக்கியத்தையும் அறிமுகம் செய்து, நெறிப்படுத்தும் நண்பனாக இருக்கிறீர்கள் ஜெ. அதற்கு என் நன்றி.

ஜெகதீஷ் குமார்

*

சார் ,
நித்ய சைதன்ய யதி வழியாக இந்து மதத்தைப் பற்றி நீங்கள் எழுதும் சமயங்களில் இந்து மதம் தெளிந்த நீரோடை போன்று காட்சியளிக்கிறது . . குருவின் எழுத்துகளையும் அவரைப் பற்றி எழுதப்பட்டவைகளையும் தொகுக்க நீங்கள் சொன்னது போல் ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் . அது வருங்கால ஆரோன்களுக்கு உதவும் தளமாக விளங்கும் .

ராதாகிருஷ்ணன்

அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் “சிந்திபவர்களுக்கான சிறப்புவாசல்” என்ற கட்டுரை கண்டேன். அதில் ஆரியப் படையெடுப்பு போன்ற அக்காலத்திய மேலை அறிஞர்களின் தவறான யுகங்களை ஆதாரத்துடன் நிராகரித்த இந்திய அறிஞர்கள் சுவாமி விவேகானந்தா மற்றும் அம்பேத்கர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இவர்கள் இருவரையும் விட அதிக ஆராய்சியுடனும் நுட்பமாகவும் அதை நிராகரித்தவர் ஸ்ரீ அரபிந்தோ அவர்கள் என்பது எனது எண்ணம். அவரது வேதத்தின் ரகசியம் நூல் எப்படி ரிக் வேதத்தில் உள்ள உருவகங்களைப் பொருள் கொள்வது என்றும் அதை எப்படித் தவறாக, சில சமயம் சிரிப்பு வரும்படி மேலை “ஆராய்ச்சியாளர்கள்” தப்பர்த்தம் செய்து ஒரு ஆரியப் படையெடுப்பு மாயையை உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் மிக விளக்கமாக ஒரு ஆய்வு நூலைப் போல சொல்லியிருக்கிறார். இது குறித்து மேலும் படிக்க விரும்புவோருக்கு உதவும் என்று குறிப்பிடுகிறேன்.

நீங்கள் அந்த நூலைப் பற்றி முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

அன்புடன்,
சிவா.
சியாட்டில்

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s