அம்பேத்கரின் தம்மம்- 4

அம்பேத்கரின் தம்மம்- 4

ஜெயமோகன்.காம் ல் இருந்துதேடலை கைவிடுதலே தர்மம் என்ற நான்காம் படிநிலை இன்றைய வாசகனுக்கு ஆச்சரியமளிக்கும். தேடல் என்பதை புனிதமானதாக, மனிதனுக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதமாக நாம் அறிந்திருக்கிறோம். ’தேடலின் புனித துக்கம்’ என்ற சுந்தர ராமசாமியின் புகழ்மிக்க வரி நினைவுக்கு வருகிறது. எது தர்மம் என்ற வினாவுக்கு ‘தேடலைகைவிட்ட செயல்பாடு’ என்று பதில் சொல்லப்படும்போது அப்படி ஒருசெயல்பாடு இருக்கமுடியுமா, இருந்தால் அதற்கு என்ன பயன் என்ற வினா மனதில் எழுகிறது.

புத்தர் தம்மபதத்தில் சொல்லும் ஒரு வரியை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். ’ஆரோக்கியத்தைவிட சிறந்த நன்மை ஒன்றில்லை. ஆகவே நிறைவுமனநிலையை விட மதிப்பானது ஏதுமில்லை’. இந்தவரியைச் சுட்டியதுமே அம்பேத்கர் அதுசார்ந்துவரும் தவறான புரிதல்களை விளக்க ஆரம்பிக்கிறார். நிறைவுமனநிலை என்பது ஆர்வமின்மையோ சலிப்போ அல்ல. சூழலுக்குப்பணிந்து சும்மா இருப்பது அல்ல. உலகியலில் ஒட்டாத துறவுமனநிலையும் அல்ல

ஏனென்றால் அப்படிப் பொருள்கொள்வது புத்தரின் பிற சொற்களுடன் முரண்படுகிறது. ஏழையாக இருப்பதை புத்தர் ஆதரிக்கவில்லை. துயரப்படுபவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளாமல் அதிலேயே அமைந்துவிடவேண்டும் என புத்தர் சொல்லவில்லை. நேர்மாறாக, செல்வங்கள் தேவையானவை என்றுதான் புத்தர் சொல்கிறார். அநீதியின்முன் ,ஒடுக்குமுறைகளின் முன் நமக்குத்தேவையானது ஆற்றலும் அஞ்சாமையும்தான் என்றே அறைகூவுகிறார்

அதற்கு புத்தர் சொல்லும் சொல் வீர்யம் என்பது. பிராகிருதத்திலும்,பாலியிலும், சம்ஸ்கிருதத்திலும் மிக முக்கியமான சொல் இது.வீரம் என அதை நேரடியாக தமிழாக்கம் செய்யக்கூடாது. வீரியம் என்பதை ‘உயிர்களுக்கு இயல்பாகவே உள்ள அடிப்படையான ஆற்றல்’ என்று சொல்லலாம். வாழ்வதற்காக போராடும் ஆற்றல். எல்லா எதிர்மறைப்பண்புகளையும் எதிகொண்டு கடந்துசெல்லும் ஆற்றல். அதை முன்வைக்கும் புத்தர் ஒருபோதும் செயலின்மையை நிறைவுமனநிலை என்று சொல்ல மாட்டார் என்கிறார் அம்பேத்கர்

இந்த இடத்தில் அம்பேத்கர் அளிக்கும் சில வரிகள் இன்றையசூழலில் பௌத்தத்தை புரிந்துகொள்வதற்கு முக்கியமானவை. சொல்லப்போனால் அம்பேத்கர் ஏன் பௌத்தத்தை தெரிவுசெய்தார் என்பதற்கான பதிலும் அதில் உள்ளது. ‘ஏழைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புத்தர் சொல்லவில்லை’ என்கிறார் அம்பேத்கர்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இந்த அம்சம்தான் பௌத்ததை வணிகர்களுக்கு உகந்த மதமாக ஆக்கியது. திரைகடலோடி திரவியம் சேர்க்க உந்துதலாகியது. பௌத்தத்தின் இந்த அறைகூவலே இந்தியாவில் பிரம்மாண்டமான ஒரு வணிகஉலகம் உருவாக வழிவகுத்தது. இந்தியாவின் மாபெரும் வணிகப்பாதைகளை உருவாக்கியது இந்த சொல்தான். அந்த வணிகப்பாதைகள் இந்தியப்பெருநிலத்தின் நரம்பமைப்பாக ஆகி இந்த தேசத்தை கட்டி எழுப்பின. போரிட்டுக்கொண்டிருந்த பல்லாயிரம் இனக்குழுச் சமூகங்களை ஒன்றாக இணைத்து இந்தியச் சமூகத்தையும் பண்பாட்டையும் உருவாக்கின.

அம்பேத்கர் தியாகத்தின், துறவின் , இகவுலகை நிராகரிப்பின் மதத்தை நமக்கு அறிவுறுத்தவில்லை. இகத்தை வெல்லும், இங்குள்ளவை அனைத்தையும் நியாயமான வழியில் உரிமைகொள்ளும் மதத்தையே அளிக்கிறார். பௌத்தம் துறவின் மதம் என்ற வழக்கமான நம்பிக்கையை தன்னுடைய நூல் வழியாக அவர் நிராகரித்துக்கொண்டே செல்வதை காணலாம்.

பௌத்தம் பேசும் நிர்வாணமென்பது இகவுலகில் தீயஇச்சைகளை களைந்து வாழும் தூயநிலையே என்றும் பரிநிர்வாணம் என்னும் முழுமையாகத்துறந்தநிலை பௌத்ததின் கடைசி இலக்கே என்றும் அவர் முந்தைய வரியின் விளக்கமாகச் சொன்னதை இங்கே இணைத்துக்கொள்ளவேண்டும்.

பௌத்தம் சொல்லும் ஆசைகளைத் துறத்தில் என்பது இயல்பான உலகியலாசையை நிராகரித்தல் அல்ல. பேராசையைத் துறத்தல் மட்டுமே. ஏனென்றால் பேராசை அறிவுத்தேடலுக்கு எதிரானது. அறிவு அளிக்கும் விடுதலையை மறுப்பது. பௌத்தமோ அறிவின்விளைவான விடுதலையைப்பற்றிப்பேசும் ஒரு ஞானப்பாதை.

ஏன் தேடலைத் துறக்கவேண்டும்? நான் ஒரு முன்னாள் துறவியின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில் வாசித்தேன். ராமகிருஷ்ண மட்த்தைச்சேர்ந்த அமர்த்யானந்தா எழுதியது. முப்பதுவருடம் துறவியாக இருந்தவர் அந்த வாழ்க்கையை துறந்து மீண்டும் இல்லறத்தாரானார்.

அவரது நூலில் ஒரு வரி என்னை மிகவும் தொந்தரவு செய்தது. தேடலையே வாழ்க்கையாகக் கொண்டு முப்பதுவருடம் வாழ்ந்தவர் ஒரு கட்டத்தில் திரும்பிப்பார்த்தபோது அந்த தேடலின்பொருட்டு இழந்தவற்றை பார்த்து திடுக்கிட்டார். அவையெல்லாம் எங்கும் போகவில்லை. அவற்றை உதறி உதறி முன்னால்செல்வதாக நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவையெல்லாம் அவரிடம்தான் இருந்தன. x முத்திரை அடிக்கப்பட்டு பாதாள அறைகளில் இருட்டில் கிடந்தன, அவ்வளவுதான்.

ஆமாம், தேடல் என்பது ஒன்றின்பொருட்டு பிறவற்றை நிராகரிப்பதே. நம்முள் இருக்கும் அவற்றுக்கான விழைவை நிராகரிக்காமல் வெளியே உள்ளவற்றை நிராகரித்தால் அவை நிராகரிக்கப்படுவதில்லை. அவை நம்முள் மேலும் வலுவாக இருந்துகொண்டிருக்கும்

துறக்கவேண்டியது வெளியே உள்ளவற்றை அல்ல. உள்ளே உள்ள தேடலையே. நாம் முன் செல்லும் ஒவ்வொரு கணமும் நம் காலடிகளுக்கு பின்னாலுள்ளவை மிக இயல்பாக நம்மை விட்டு விலகிச்செல்லவேண்டும். முழுமையாக நம்மை விட்டு அவை அகலவேண்டும். அதுவே விடுதலையின் பாதை

புத்தர் திருஷ்ணையை வெல்லச் சொல்கிறார். அதன் பின் தேடலை இழக்கச் சொல்கிறார். அதன்பின்னரே முன்னகர்தல் சாத்தியமாகும் என்கிறார்.

ஆம், உலகியலை வெல்வதை புத்தர் சொல்கிறார். உலகியலை விடுவதை அடுத்து சொல்கிறார். இரண்டும் ஒரு விஷயத்தின் இரு பக்கங்கள். எவன் வென்று கைவிட்டானோ அவனே முன்செல்பவன். வெல்லும்போது அதை நான் கடந்து செல்கிறேன். அதை கைவிடும்போது அதைப்பற்றிய என் விழைவை கடந்துசெல்கிறேன். கடந்துசெல்வதுதான் விடுதலை.

அப்படியென்றால் அது அறச்செயல்? எச்செயல் தேடலின் விளைவாக அல்லாமல் விடுதலையின் ஒரு படிநிலையாக நிகழ்கிறதோ அச்செயல்தான்.

*

பிற்காலப் பௌத்த ஞானிகளில் ஒருவர் நாகசேனர். பௌத்தத்தின் அடிப்படைத்தரிசனங்களை விரிவான தத்துவ அமைப்புகளாக உருவாக்கிய ஞானிகளின் வரிசையில் முதன்மையானவர். நாகசேனர் காந்தார மன்னராகிய மினாண்டர் [அல்லது மிலிந்தர்] என்பவருடன் நிகழ்த்திய உரையாடல் பௌத்த ஞானமரபின் முக்கியமான நூல்களில் ஒன்று. பௌத்தத்த்தை ஆராய்ந்த முன்னோடி மேலைநாட்டு அறிஞரான ரய்ஸ் டேவிட்ஸ் இந்நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இந்நூலில் இந்த உலகம் நிலையானதா என்று மினாண்டரிடம் நாகசேனர் கேட்கிறார். ஆம், எனக்கு அப்படித்தெரிகிறது என்று அவன் பதில் சொல்கிறான். அங்கிருக்கும் ஒரு தீபத்தைச் சுட்டிக்காட்டி இதோ இந்த சுடர் நிலையானதா என்று நாகசேனர் கேட்கிறார். மினாண்டர் தெளிவுறுகிறான்

தீபச்சுடர் ஒரு பொருள்போலவே தெரிகிறது. காட்சிக்கும் கருத்துக்கும். ஆனால் அது பொருளல்ல, நிகழ்வு என நாம் அறிகிறோம். அது கணம்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. அது நிகழ்வென்றால் வெளியே ஓங்கிநிற்கும் மலைகளும் நிகழ்வுகள் அல்லவா? நம்முடைய ஆயுள் குறைவென்பதனால் அந்த மலைகளின் மாற்றம் நமக்கு மிக மெதுவானதாகத் தெரிகிறது. ஆகவே அவற்றை நிலையானவையாக , பொருட்களாக காண்கிறோம்.

நாம் காணும் ஒவ்வொன்றும் அந்தந்தக் கணங்களிலேயே உள்ளன, அடுத்த கணம் அவை மாறி இன்னொன்றாக ஆகிவிடுகின்றன. இந்தக்கொள்கை பௌத்ததின் ஆதார தரிசனங்களில் ஒன்று. இஅதை பௌத்தம் ஷணிகவாதம் என்கிறது. ஷணபங்கவாதம் என்றும் சொல்லப்படுவதுண்டு

இப்பிரபஞ்சத்தில் எதுவுமே நிலையானதல்ல என்பது பௌத்த மெய்ப்பொருளின் அடிப்படையான மூன்று அறிதல்களில் ஒன்று. அனிக்க, அனாத்த, துக்க என்று பாலியில் அதைச் சொல்கிறார்கள். சம்ஸ்கிருதச் சொற்கள் அநித்யம், அநாத்மம், துக்கம். அவற்றை நிலையாமை, சாரமின்மை, அறியமுடியாமை என்று மொழியாக்கம்செய்யலாம்

இம்மூன்று சொற்களும் சற்றே பிழையாக பொருள்கொள்ளப்படுகின்றன. நிலையின்மை என்று பௌத்தம் சொல்வது யாக்கைநிலையாமை அல்லது வாழ்க்கை நிலையாமையை மட்டும் அல்ல. இப்பிரபஞ்சத்தில் உள்ள எதுவும் அதன் நிறைநிலையில், முழுமைநிலையில் , சமநிலையில் இல்லை என்பதையே அது சுட்டுகிறது. பொருள் என்பது ஒன்றின் நிறைநிலை. நிறைநிலை என்பது இல்லையென்பதனால் நாம் நம்மைச்சுற்றிக் காணும் இப்பிரபஞ்சம் என்பது பொருட்களாலானதல்ல, நிகழ்வுகளாலானது மட்டுமே.

பௌத்ததின் அனாத்மவாதத்தை உயிர்களுக்கு ஆன்மா இல்லை என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பௌத்தம் சொல்வது அதை மட்டும் அல்ல. எந்தப்பொருளுக்கும் அதற்கு மட்டுமே உரிய சாராம்சம் என்ற ஒன்று இல்லை என்று பௌத்தம் சொல்கிறது.

பௌத்தத்தின் இந்தத் தரிசனத்தை நாம் சமணத்தின் சர்வாத்மவாதத்திற்கான நேர் எதிர்நிலையாக புரிந்துகொள்ளவேண்டும். சமணர்களைப்பொறுத்தவரை அனைத்துக்குமே ஆன்மா உண்டு. ஆன்மா என்பது சாராம்சமான இருப்பு என்று அவர்கள் வரையறைசெய்கிறார்கள். அந்தப்பொருள் என்பது அந்த சாராம்சத்தின் பருவடிவ வெளிப்பாடு மட்டுமே. அதாவது கல்லின் கல்தன்மை என்பது அதன் ஆன்மாவின் வெளிப்பாடுதான்.

கல்லின் ஆன்மா என்பது ‘கன்மை’ என்று சொல்லலாம்.கல் எந்நிலையிலும் அந்த சாராம்சத்தை மீறிச்செல்லமுடியாது. ஆனால் பௌத்தம் அப்படி ஒரு சாராம்சமே இல்லை என்று வாதிடும். ஆகவே கல் என்பது இந்த கால இடத்தில் நமக்கு தன்னை கல்லின் இயல்புகளுடன் வெளிப்படுத்திக்கொள்ளும் அறியமுடியாத ஒன்றுதான்.

வேதாந்தத்துக்கும் பௌத்ததுக்கும் இடையேயான முக்கியமான முரண்பாடும் இதுதான். வேதாந்தத்தை முதல்முழுமைவாதம் [absolutism] என நடராஜகுரு மொழியாக்கம் செய்கிறார். முதல்முழுமையாக இருப்பது சாரம்தான். ஆகவே வேதாந்தத்தை சாராம்சவாதம் அல்லது ஆன்மசார வாதம் என்று சொல்லலாம். இப்பிரபஞ்சம் என்பது ஒரு மாயை. அதன் சாரமாக உள்ள ஒன்றுதான் பிரபஞ்சமாக தன்னைக் காட்டுகிறது. ஆகவே இங்குள்ள அனைத்திலும் திகழ்வது அந்த சாராம்சமே. உபநிடதங்களின் ஞானம் என்பது இதுவே.

பௌத்தத்தின் அனாத்மவாதம் என்பது முழுமையான சாராம்ச மறுப்புதான். எந்தப்பொருளுக்கும் அதற்கு மட்டுமே உரிய சாராம்சம் என ஏதும் இல்லை. அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அந்நிகழ்வின் ஒரு தருணத்தையே நாம் அறிகிறோம். அதை நாம் பொருள் என்கிறோம். நாமறியும் விதத்துக்கு ஏற்ப அதற்கு ஒரு சாராம்சத்தைக் கற்பனைசெய்கிறோம். அப்பொருள் அது அல்ல. அது ஒட்டுமொத்தப்பிரபஞ்ச நிகழ்வின் ஒரு துளியான ஒரு சிறுநிகழ்வு, அவ்வளவுதான்.

துக்கம் என பௌத்தம் குறிப்பிடுவது பசி, மரணம், அவமதிப்பு போன்ற உலகத்துயர்களை அல்ல. பிறவித்துயர் [ பவதுக்கம்] என பௌத்த சமண மதங்கள் சொல்வதை இதனுடன் புரிந்துகொள்ளக்கூடாது.
அது வேறு ஒரு கருதுகோள்.

இங்கே துக்கம் என்று பௌத்தம் குறிப்பிடுவது மனிதன் மனிதனாக இருப்பதனாலேயே அடையும் எல்லைகளைத்தான். அவனுடைய அறிதலின் எல்லைகள் மிகக் குறுகியவை. ஆகவே அறியாமை பிரம்மாண்டமானது. அந்த அறியாமை அவனுக்கு பிரபஞ்சம் பற்றிய பதற்றத்தை, வாழ்க்கைபற்றிய பதைப்பை உருவாக்குகிறது. அதுவே இங்கே துக்கம் என்று சொல்லப்படுகிறது

பிற்கால ஐரோப்பிய சிந்தனையில் இருத்தலியளாளர்களால் பறதி [ angst] என்று சொல்லப்பட்ட அதே நிலைதான். பறதி மீண்டும் மீண்டும் வரையறைசெய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். பிரபஞ்சமும் காலமும் முடிவற்றவை. அவற்றின் முன் தான் என உணரும் மனிதப்பிரக்ஞை மிகமிகச்சிறியது தற்காலிகமானது. அதை அந்தப் பிரக்ஞை உணரும் நிலையே பறதி.

இந்த பிரபஞ்சத்தின் ஒரு துளி நான். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் முழுமையாகவே இப்பிரபஞ்சத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை என்னால் அறிந்துகொள்ள முடியாது. ஆகவே என் வாழ்க்கையை நான் அறிந்துகொள்ள முடியாது.இந்த தன்னுணர்வே துக்கம். சரியாகச் சொன்னால் பறதி என்பதும் அதுவே.

என் வீட்டுக்குப் பின்னால் ஒரு கிறித்தவ தேவாலயம் உண்டு. அங்கே வெள்ளி ,ஞாயிறுகளில் பிரார்த்தனையும் வழிபாடும் நடக்கும். ஒலிப்பெருக்கி வழியாக பகலிரவாக அந்த பிரார்த்தனைகளை கேட்டுக்கொண்டிருப்பேன். திரும்பத்திரும்ப மன்ற்டால்கள்தான். இறைவா என்னை காத்துக்கொள். என் குழந்தைகளை, என் குடும்பத்தைக் காத்துக்கொள். எவ்வளவு வேண்டுதல்கள்! பரீட்சை ஜெயிப்பதற்காக, வியாபாரம் செழிப்பதற்காக, நோய் குணமாவதற்காக !

திடீரென்று ஒன்றை கவனித்தேன். தொண்ணூறு சத பிரார்த்தனைகளும் தங்களுக்கு வந்த பிரச்சினைகளுக்காக அல்ல. வரக்கூடும் என அஞ்சப்படும் பிரச்சினைகளுக்காகவே செய்யப்படுகின்றன. மனிதர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பின்மை உணர்வு. எவ்வளவு அவநம்பிக்கை. மாபெரும் ராட்சதன் ஒருவனின் கையில் இருக்கும் பூனைக்குட்டி போல அவர்கள் காலத்தின் கைகளில் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு லௌகீக மனிதனுக்குள்ளும் பௌத்தம் துக்கம் என்று சொல்லும் அந்த பெரும்பதற்றம் நிறைந்திருக்கிறது.

எவ்வளவு கண்ணீர்! எவ்வளவு தவிப்பு! கிறித்தவம் அந்த துக்கத்துக்கு நிவாரணமாக முன்வைப்பது கண்மூடித்தனமான எளிய நம்பிக்கையை. முழுமையான சமர்ப்பணத்தை. கடவுள் உலகைபடைத்து ஆள்கிறார், அவரது கருணையில் மனிதர்கள் வாழ்கிறார்கள், ஆகவே கடவுளிடம் மனிதர்கள் தங்களை காத்து தங்கள் துக்கத்தை அழிக்க மன்றாடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அவருக்குத்தெரியும் அவர் மனிதர்களை காப்பார். காக்கவில்லை என்றால் அது அவரது இச்சை. அதை மனிதர்கள் புரிந்துகொள்ளமுடியாது

நம்பிக்கை எந்த அளவுக்கு கண்மூடித்தனமாக ஆகிறதோ அந்த அளவுக்கு ஒருவன் மேலான கிறித்தவனாக ஆகிறான். ‘விசுவாசத்தை காத்துக்கொள்’ என்றுதான் கிறித்தவம் அறைகூவுகிறது. ஆகவே அது அறிவை எதிரியாகக் கண்டது. அறிவு நம்பிக்கைக்கு தடையாக அமையக்கூடியது. கிறித்தவத்தில் அறிவு என்பது சாத்தானின் ஒளிமிக்க கருவி.

நேர் எதிரானது பௌத்தம். அது அறிவையே கருவியாகக் கொள்கிறது. ஏனென்றால் அது துக்கத்திற்கு நிவாரணமாகச் சொல்வது நம்பிக்கையையும் சரணடைதலையும் அல்ல. அந்த துக்கத்தின் காரணத்தை அறிந்துகொள்வதைத்தான். அந்தக் காரணத்தை அறிபவன் அவ்வாறு அறியும்போதே அந்த துக்கத்தை கடந்துசென்றுவிடுகிறான். அதுவே நிர்வாணம் என்பது.

பௌத்தத்தின் செய்தியை ஒரே வரியில் சொல்வதென்றால் ‘விடுதலைசெய்யும் அறிவு’ என்று சொல்லலாம். அடிமைப்பட்ட தன் மக்களுக்கு அம்பேத்கர் விட்டுச்சென்ற அறைகூவல் அதுதான்.

ஆச்சரியமான விஷயம்தான். நூற்றாண்டுக்கால அடக்குமுறையால் அடிமைப்பட்டு, கல்வியிழந்து, செல்வமிழந்து, சுயமிழந்து வாழும் மக்கள்கூட்டத்துக்கு மிக எளிய பாதை என்பது நம்பிக்கையின் குறுக்குவழிதான். அவ்வழியைத்தான் அவர்கள் அதிகமும் தேர்வுசெய்யவும் செய்கிறார்கள் என்பது ஓர் நடைமுறை உண்மை. இந்தியாவின் அடித்தளமக்களுக்கு எளிதில் புரியக்கூடிய மதம் கிறித்தவமே. அவர்களால் எளிதில் கடைப்பிடிக்கத்தக்கதும் அதுவே. ஆனால் அம்பேத்கர் அவர்களுக்கு கொடுத்தது அறிவின்மதமாகிய பௌத்தத்தை.

நவயானபௌத்தம் என அம்பேத்கர் முன்வைத்த பௌத்தம் முழுக்கமுழுக்க அறிவார்ந்தது. அந்த மக்கள் தங்கள் அறிவின், ஆன்மீகத்தேடலின் உச்சத்தில்தான் பௌத்தத்தை அறியமுடியும். அம்பேத்கர் தன் மக்கள் மீதுகொண்ட மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது நவயான பௌத்தம் என்று நான் நித்ய சைதன்ய யதியிடம் சொன்னேன்.

அதைவிட எச்சரிக்கையைக் காட்டுகிறது என்றார் நித்யா. விடுதலைக்கான குறுக்குவழிகளில் அவர்கள் புதிய நுகங்களில் சிக்கிவிடக்கூடாதென்ற எச்சரிக்கை அது. சமரசமற்ற அறிவுத்தேடல், கூரியவாள் போன்ற தர்க்கம் அவர்களிடமிருக்குமென்றால் அது அவர்களைக் காக்கும் ஆயுதம் என அம்பேத்கர் நினைத்திருக்கலாம். ஒருவேளை என்றாவது நவயானபௌத்தமும் அடிமைப்படுத்தும் அமைப்பாக மாறினால் அதையும் கிழித்துமுன்னேற அந்த ஆயுதம் அவர்களுக்கு கைகொடுக்கும்.

தொடரும்…

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s