எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
தருக்கமே தரிசனம்: நியாயம்
[அருகர்கள் பாதை. இந்திய நெடும்பயணத்தின்போது பெல்காமில்]
நியாயம் என்ற வார்தை நம்முடைய அன்றாட வாழ்வில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒன்று. தருக்கப்பூர்வமானது, நீதிபூர்வமானது, சமனிலைப்படுத்தப்பட்டது, யுக்திக்கு உகந்தது என்ற அர்த்தங்களில் நாம் இச்சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்தி வருகிறோம். (நியாயமான பேச்சு, எல்லாவற்றுக்கும் நியாயம் வேண்டும், நியாயம் செய்வதாகும். நியாயவிலைக்கடை…)
இச்சொல் இந்து ஞானமரபின் ஆதி தரிசனங்களில் ஒன்றான ‘நியாய மரபில்’ இருந்து வந்ததாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல நியாய தரிசனமானது வைசேஷிக தரிசனத்தின் துணைத் தரிசனம். அடிப்படையில் வைசேஷிகத்தின் பிரபஞ்சப்பார்வையே நியாய மரபிலும் தொடர்கிறது. வைசேஷிகத் தரிசனங்களுக்குத் தருக்க அடிப்படையினை உருவாக்கித் தரும் ஒரு தருக்க சாஸ்திரமாகவே வெகு காலம் நியாயம் விளங்கி வந்திருக்கிறது.
உண்மை என்ன என்று ஆராய முற்பட்டது வைசேஷிகம். உண்மையை எப்படி அறிவுப்பூர்வமாக வகுத்துக் கொள்வது என்று விளக்க முற்பட்டது. ஹேது சாஸ்திரம் (காரண காரியங்களை விளக்கும் அறியவியல்), தர்க்க சாஸ்திரம் (விவாத இலக்கணம்), பிரமாண சாஸ்திரம் (அறிதலின் அடிப்படைகளைப் பற்றிப் பேசும் அறிவுத்துறை), அன்வீக்ஷிகி (தேடலின் அறிவியல்) முதலிய மாற்றுப் பெயர்களிலும் நியாயம் குறிப்பிடப்படுகிறது
எந்த ஒரு அடிபட்டையான சிந்தனை மரபுக்கும் தனக்கேயுறிய ஒரு தருக்க முறை இருக்கும். அதாவது, தனிதனியான அறிதல்களை வகுத்தும் தொகுத்தும் பொதுவான முடிவுகளுக்கு எப்படி வருவது என்பது பற்றிய ஒரு வழிமுறை காணப்படும். அதையொட்டியே அம்மரபில் உள்ள பல்வேறு மாறுபட்ட சிந்தனைப்போக்குகள் ஒன்றோடொன்று உரையாடவும் விவாதிக்கவும் முடியும். இப்படி ஒரு உள்விவாதம் மூலம்தான் ஒவ்வொடு சிந்தனை மரபும் தன்னை முழுமைப் படுத்திக்கொண்டு வளர்ச்சி அடைகிறது.
இவ்வாறு இந்திய மரபு வளர்த்தெடுத்த தருக்க முறைதான் ‘நியாயம்’ நியாய சாஸ்திரத்தின் ஸ்தாபகர் பெயர் கோதமர். கெளதமர் என்றும் இவர் கூறப்படுகிறார். இவருக்கு அட்சபாதர் என்றும் ஒரு பெயர் உண்டு. கெளதமர் என்பது மூலப்பெயர், அட்சபாதர் என்பது இயற்பெயர் என்பவர்கள் உண்டு. கோதமரின் மாணவரே அட்சபாதர் என்பவர்களும் உண்டு. மகாபாரதம் இயற்றப்பட்ட காலத்தில் இவர் உயிர் வாழ்ந்தார் என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கோபி என்ற இந்தியவியலாளர், கோதமர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும், இருவருக்கு முன்பே நியாயம் இந்திய ஞான மரபில் வலுவாக வேரூன்றியிருந்தது என்றும், கோதமர் அதன் அடிப்படைகளைச் சூத்திரங்களாக எழுதித்தொகுத்த இலக்கண ஆசிரியர் மட்டுமே என்றும் விளக்குகிறார்.
நியாய சூத்திரத்துக்கு எராளமான உரைகளும் விளக்கங்களும் இயற்றப்பட்டுள்ளன. வாத்சாயனரின் (கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு) நியாய பாஷ்யம் இவற்றில் முக்கியமானது. உத்யோதரன், வாசஸ்பதி மிஸ்ரன், ஸ்ரீகண்டன், ஜயந்தர் முதலியவை குறிப்பிடத்தக்க பிற உரைகள். நியாயம் பிரபலமடையுந்தோரும் அதற்கு உரைகள் வந்தபடியே இருந்தன. ஒரு பக்கம் இவை நியாயத் தரிசனத்தின் மையத்தைச் சிதைத்துத் திரித்து மறு ஆக்கம் செய்தன. குறிப்பாக வாத்ஸ்யாயனர்தான் நியாய தரிசனத்தை ஆன்மிகம் நோக்கி கொண்டு சென்றவர். மறுபக்கம் நியாய மரபு ஒரு தூய தருக்க முறையாக வளர்ந்து அத்தனை தத்துவத் தரப்புகளும் பொதுவானதாக ஆனதும் இத்தகைய உரைகள் வழியாகத்தான்.
பிற்பாடு தருக்கவியலைன் வழிமுறைகள் எல்லாத் தரிசனங்களும் தத்துவ முறைகளும் தாங்களும் கையாள ஆரம்பித்தன. தருக்கவியலை எதிக்கும் தரப்புகள் கூட தருக்கவியல் மூலமே தங்களை முன்வைக்க முடியும் என்ற நினை ஏற்பட்டது. இதுவே நியாயயியலுக்கும் நிகழ்ந்தது. நியாயயியல் பெளதீக வாதச் சிந்தனையான வைசேஷிகத்தின் கருவி. ஆனால் மற்ற சிந்தனை மரபுகள் படிப்படியாக அதன் தருக்கப்பூர்வ ஆய்வுமுறைகளையும் விவாத முறையையும் சொந்தமாக்கிக்கொண்டன. நியாய மரபு முற்றிலும் எதிரான வேதாந்த மரபும் சரி, பிறகு வந்த பெளத்த, சமண மரபுகளும் சரி, நியாத்தருக்கத்தையே கையாள்கின்றன.
இதில் நியாய மரபினை மிக விரிவாக வளர்ந்தெடுத்தவர்கள் பெளத்தர்களே. அசங்கர், வசுபந்து, நாகார்ச்சுனர், திக்னாகர் போன்ற முக்கியமான பெளத்த அறிகர்கள் அனைவருமே நியாயயிலை விரிவாகக் கற்றுத் தேர்ந்து நியாய இயலுக்கு உரைகளும் விளக்கங்களும் உருவாக்கியவர்கள். இது ஏன் என்றால், விரிவாகத் தத்துவ விவாததில் இறங்குவதற்கு முன்பாக தனது தருக்க உபகரணங்களைத் திட்டவட்டமாக வரையறுத்துக் கொள்வதுதான்.
நியாயத்தை இந்தியத் தருக்கவியல் (Indian Logic) என்று கூற முடியும். இன்று நாம் நமது சிந்தனைகளை மேற்கத்திய தருக்க முறைப்படிதான் நிகழ்த்தி வருகிறோம். இன்னும் சொல்லப்போனால் அரிஸ்டாட்டிலின் தருக்க முறையே நமது கல்வித்துறையில் எல்லாத் தளங்களிலும் கற்பிக்கப்படுகிறது. நவீன அறிவியலில் இதுதான் சத்தியமானது; காரணம், அது முற்றிலுமாகவே மேற்கத்திய தருக்கவியலின் அடிப்படையில் உருவாகி வந்த ஒன்று. ஆனால் அறிவியல், அழகியல், தத்துவம் போன்ற தளங்களில் நாம் நமது சுய சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ள நமது மரபான தருக்க முறைகளைப் பெருமளவு பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு நியாயவியலில் பயிற்சி பெருவது உதவவும் கூடும். ஆனால் நியாய மரபு உருவாக்கிய தருக்க உபகரணங்கள் எல்லாமே குறைந்த பட்சம் நானூறு வருடங்களாக நவீனப்படுத்தாமல் தேங்கி விட்டவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய தேவைக்காக இவற்றை நவீனப்படுத்தி எடுப்பது இன்று வரை நமது அறிவியலால் சந்திக்கப்படாத பெரும் சவாலாகவே உள்ளது.
அடுத்து வருவது..”நியாயம் உருவகிக்கும் பிரபஞ்சவியல்”