தீபாவளி யாருடையது?

தீபாவளி யாருடையது?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

100_3588

[பிக்கானீர். அருகர்களின் பாதை இந்திய நெடும்பயணத்தின் போது]

அன்புள்ள ஜெ

நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என புனையப்படும் ஆரிய திராவிட இன குழுக்களின் மோதல்களில் திராவிட இனச் சார்பாக நின்ற மாவீரனின் படிமமா? நமது இன அழிப்பை (தொன்ம வரலாறு அல்லது புராணத்தின் படி) நாமே கொண்டாடும் ஒரு இழிவான பண்டிகையா? அனைத்துக்கும் மேலாக, ஒருவனது இறப்பை நாம் கொண்டாடலாமா? நாம் பண்பட்டவர்கள் இல்லையா? என்றும் எனக்குள்ளும் எனக்கு வெளியேயும் கேள்விகள் பல, விடை தேடி உங்களிடம் மீண்டும் நான்.

அன்புடன்
சக்திவேல், சென்னை

பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் அரசியலில் சிலவகையான துருவப்படுத்தல்கள் உருவாயின. முதலில் உருவானது பிராமணர்கள் பிராமணரல்லாத உயர்சாதியினர் என்ற துருவங்கள். அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து எல்லா அதிகாரங்களிலும் ஊடுருவியிருந்த பிராமணர்களுக்கு எதிராக அதிகார விருப்பு கொண்ட பிற உயர்சாதியினர் உருவாக்கிய அரசியல் உத்தி அது.

நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை ஆயிரம் வருடம் ஆண்டுவந்த பிராமணாரல்லா உயர்சதியினர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அறிமுகமாக ஆரம்பித்த முதலாளித்துவத்தின் முன் அதை மெல்லமெல்ல இழக்க ஆரம்பித்தார்கள். இன்று பூரணமாக இழந்தும் விட்டார்கள். அதற்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த கடைசி அரசியல் போராட்டமே பிராமணரல்லா இயக்கம்.பின்னர் அவ்வியக்கம் அன்று பொருளியல் பலத்துடன் உருவாகி வர ஆரம்பித்திருந்த பிற்படுத்தப்படுத்தபட்டோருக்கான இயக்கமாக ஆகியது. பிராமணர் – பிற்படுத்தப்பட்டோர் என்ற துருவப்படுத்தல் உருவாகி இன்றும் நீடிக்கிறது.

இந்த துருவப் படுத்தலுக்கான கருத்துத் தளமாக உருவாக்கப் பட்டதே ஆரிய- திராவிட வாதம். ஓரிரு கிறித்தவப் பாதிரிகளால் உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பரப்பப்பட்ட அந்த வாதம் இன்றுவரை எந்த வகையான வரலாற்று ஆதாரமும் இல்லாத வெற்று ஊகம் மட்டுமே. அன்று விவேகானந்தர் முதல் டாக்டர் அம்பேத்கார் வரையிலான ஆய்வாளர்களால் அபத்தம் என முழுமையாகவே மறுக்கப்பட்ட ஒன்று அது. இன்று மார்க்ஸியநோக்குள்ள ஆய்வாளர்கள்கூட அதை ஏற்க தயங்குமளவுக்கு அது விரிவாகவே ஆய்வுத்தளத்தில் மறுக்கப்பட்டுவிட்டது.

அந்த ஆரிய-திராவிட வாதத்தை இன்னமும் எளிமையாக்கி பிராமணர்- திராவிடர் என்று பிரித்து அதனடிப்படையில் மொத்த தமிழ்ப்பண்பாட்டையே ஒன்றுடன் ஒன்று முரண்படும் இரு கூறுகளாக உருவகித்துக்கொண்டார்கள். இந்த உருவகம் எந்தவகையிலும் வரலாற்று அடிப்படைகொண்டதல்ல. முழுக்கமுழுக்க அரசியல் சார்ந்த ஒன்றே. ஆனால் சிறு வயது முதலே நாம் இதைக்கேட்டு வருவதனால் இதைப்பற்றி ஆராய்வதில்லை. இனிமேலாவது கொஞ்சம் தமிழுணர்வுடன், கொஞ்சம் வரலாற்று நோக்குடன் இவற்றையெல்லாம் நாம் பேச ஆரம்பிப்பது நல்லது.

பொதுவாக பண்டிகைகள் எவையுமே சட்டென்று உருவாவதில்லை. புதிதாக எவராலும் கொண்டு வரப்படுவதும் இல்லை. அவை ஏதோ ஒருவகையில் பழங்குடி வாழ்க்கையில் இருந்துகொண்டிருக்கும். ஆகவே அவற்றுக்கு ஆழ்மனம் சார்ந்த குறியீட்டு முக்கியத்துவம் இருக்கும். பின்னர் அவை புராணக்கதைகளை உருவாக்கிக் கொள்ளும். தத்துவ விளக்கம் பெறும். பலவகையில் அவை மாறி வளர்ந்து சென்றுகொண்டே இருக்கும். எளிமையாக அவற்றை வகுத்துக்கொள்ள முடியாது

தீபாவளியின் தோற்றுவாய் எதுவாக இருக்கும்? குமரியிலும் மேற்கு மலைகளிலும் உள்ள தொல்தமிழ்ப் பழங்குடிகளிடம் ஒரு வழக்கம் உள்ளது. தொற்றுநோய்க்காலங்களில் அந்த தீய சக்தி தன் வீட்டை அண்டாமலிருக்க வாசலில் விளக்குகளை கொளுத்தி வைப்பது. காலாரா மாதங்களில் அவ்வாறு எங்கள் வீட்டிலும் வைத்த நினைவு உள்ளது. கிராமங்களில் இன்றும் நீடிக்கிறது அது. அதுதான் தொடக்கமாக இருக்க வேண்டும். ஐப்பசி தமிழகத்தின் மழைமாதம். தென்னாட்டின் மிகப்பெரிய நோய்க்காலம்.

தொன்மையான காலகட்டத்தில் இந்த ஆசாரம் வளர்ந்து பண்டிகையாக ஆகியிருக்கலாம். பௌத்தர்கள் இதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். பௌத்தச் சடங்குகளில் தீபவரிசை முக்கியமான ஒன்று. இன்றும் அது பௌத்தம் மருவிய வழிபாடுகளில் தாலப்பொலி என்றவடிவில் கேரளத்தில் நீடிக்கிறது.தட்டுகளில் தீபங்களை ஏந்தி அணிவகுப்பது. [கொற்றவை நாவலில் விரிவான விளக்கம் உண்டு] சமணர்களும் அதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். தங்களுக்கான விளக்கங்களை அளித்தார்கள்.

பின்னர் பெருமதங்களாக ஆன சைவமும் சாக்தமும் இப்பண்டிகையை தங்கள் கோணத்தில் விளக்கி உள்ளிழுத்தன. சைவத்தில் அது கார்த்திகைதீபமாகவும் சாக்தத்தில் தீபாவளியாகவும் ஆகியது. என் ஊகம் என்னவென்றால் பௌத்ததில் இவ்விழா பிரக்ஞாதாரா தேவியின் [அறிவொளித்தேவி.] பண்டிகையாக இருந்தது. அது சாக்தத்தில் நுழைந்தபோது நரகாசுரனை கொன்ற கொற்றவையின் பண்டிகையாக ஆகியது. தொல்தமிழ்தெய்வமான கொற்றவையின் இன்னொரு வடிவமே தேவி. கேரளத்து தேவிசிலைகளில் கொற்றவையில் துல்லியமான இலக்கணம் உள்ளது. பௌத்தர்களின் இருளரக்கனே நரகாசுரனாக ஆகியிருக்கலாம்.

அடிப்படையில் பழங்குடியினர் அஞ்சிய அந்த நோய் அல்லது பீடையின் இன்னொரு வடிவமே நரகாசுரன். நரகாசுரனைப்பற்றிய நான்கு வெவ்வேறு தொன்மங்களும் அவன் தற்செயலாக உருவாகி எழுந்த ஒரு இயற்கையான அழிவுச்சக்தி என்றே உருவகிக்கின்றன. இந்தியா முழுக்கச்சென்ற சாக்தத்தில் தீபாவளி என்னென்ன மாற்றங்கள் அடைந்தது என்பது தனி ஆராய்ச்சிக்குரியது. பல இடங்களில் இன்று அது ஒரு முக்கியமான சமணப்பண்டிகைதான். சில இடங்களில் பழங்குடிப்பண்டிகை. சைவம் வைணவம் சீக்கியம் எல்லா மதங்களுக்கும் தீபாவளிக்கு அவர்களுக்கான புராண விளக்கம் இருப்பதைப்பார்க்கலாம். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றார் என்பது வைணவக்கதை. நரகாசுரன் தன் அன்னையாகிய தேவியால் கொல்லப்பட்டான் என்பது சாக்தத்தின் கதை.

பண்டிகைகள் மாறிக்கொண்டே இருப்பது வரலாறு. தேதிகள்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம்.மேற்குமலைப் பழங்குடிகள் கொண்டாடிய தீபத்திருநாள் இப்போது சபரிமலை அய்யப்பனின் மகரவிளக்கு விழாவாக உள்ளது என்று ஒரு கேரள ஆராய்ச்சி சொல்கிறது. அது மகரசங்க்ராந்தி என்றபேரில் வட இந்தியாவிலும் கொண்டாடப்படும் பண்டிகை. சோழர்கள் காலத்தில் தமிழகத்தில் சாக்தர்கள் மட்டும் தீபாவளி கொண்டாடினார்கள். சைவர்கள் கார்த்திகையை.

உண்மையில் சோழர் காலத்தின் தமிழகத்தில் மிகப்பெரிய பண்டிகை என்பது திருவோணம்தான். இன்றும் சோழநாட்டுக் கோயில்களில் அது கொண்டாடப்படுகிறது. இன்று அது கேரளத்தில் மட்டும் எஞ்சியுள்ளது. பின்னர் நாயக்கர்களின் காலகட்டத்தில் தீபாவளி அரச ஆதரவு பெற்றது. இன்றைய வடிவில் நாம் தீபாவளியைக் கொண்டாட மாமன்னர் திருமலைநாயக்கர்தான் காரணம்.

ஆக, தீபாவளி வடவர் பண்டிகை, நரகாசுரன் தமிழன், துர்க்கை ஒரு பிராமணமாமி என்பது போன்ற ‘ஆய்வுகளை’ அடிப்படைச் சிந்தனை கொண்டவர்கள் கொஞ்சம் தாண்டிவரலாம் என்று நினைக்கிறேன். அது நம்முடைய தொல்மூதாதையரின் ஒரு நம்பிக்கையில் இருந்து உருவாகி பல்வேறு மதங்கள் வழியாக வரலாறெங்கும் வளர்ந்து பரவி இன்றைய வடிவை அடைந்திருக்கிறது.

இன்று, அதில் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மையுடன் இணைக்கின்றன. நம் வாழ்க்கை என்பது நம்மில் தொடங்கி முடிவது அல்ல. அது ஓர் அறுபடாத பெரும் நீட்சி என்று உணர்ந்தால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவைதான். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் நீடிக்கிறோம் என்ற பேருணர்வு இப்பண்டிகைகளின் சாரம்.

சடங்குகள், பண்டிகைகள் அனைத்துமே குறியீடுகள். அக்குறியீடுகளுக்கு நாம் என்ன பொருள் அளிக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியமானது. தீபாவளியை டிவி முன் குந்தி அமரும் பண்டிகையாக ஒருவர் காணலாம். அதன் வரலாற்று நீட்சியை உணரக்கூடிய ஒரு தினமாக, மதங்களும் மக்களும் கலந்து உருவாக்கிய ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடலாம். நம் அகவிரிவைப் பொறுத்தது அது.

அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.

பண்பாடு என்பது என்ன? சில சடங்குகள், சில ஆசாரங்கள், சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள் அல்லாமல்? அவற்றின் குறியீட்டு வடிவிலேயே பண்பாடு பாதுகாக்கப்படுகிறது, கைமாறப்படுகிறது. அவை இல்லையேல் பண்பாடு இல்லை. அவற்றை இழந்தால் நாம் சீன மலிவுச்சாமான்களையும் அமெரிக்க பரப்புக்கலைகளையும் நுகர்வதற்காக பிறக்கும் நூறுகோடி சதைத்திரள்கள் மட்டுமே. அப்படி அதில் துளிகளாக உங்கள் பிள்ளைகளை ஆக்குவதென்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அது உங்கள் விருப்பம்

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s