நியாய தரிசனம் : பதார்த்தங்கள்

நியாய தரிசனம் : பதார்த்தங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

P1080924

[அருகர்கள் பாதை, இந்திய நெடும்பயணத்தின் போது . ஜெய்சாலமர்.]

பிரபஞ்ச இயல்பை முழுக்க திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம் என் வைசேஷிகம் வகுத்தது என நாம் அறிவோம். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பிரமேயம் (அறிபடுபொருள்) என்ற பதார்த்தமாக வகுத்து விடுகிற நியாயம், பதினாறு பதார்த்தங்களைப் பற்றிப் பேசுகிறது. பிரமேயம் அதில் ஒன்று மட்டுமே. மற்ற பதினைந்து பதார்த்தங்களும் அதை அறிவதற்கான படிநிலைகளும் வழிமுறைகளும் ஆகும்.

பிரமாணம், பிரமேயம், சம்சயம்,பிரயோசனம், திருஷ்டாந்தம்,சித்தாந்தம், அவயவம், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டம், ஹோதாபியாசம், சலம், ஜாதி,  நிக்ரஹஸ்தானம் எனப் பதார்த்தங்களை நியாயம் வகுக்கிறது.

இவற்றில் முதலாவதாக உள்ளது பிரமாணம். அறிவதற்கான கருவிகள் அல்லது அடிபடைகள்தான் பிரமாணம் எனப்படுகின்றன. என்னென்ன முறைகளின் வழியாக அறிய முற்படுகிறோம் என்பதுதான் பிரமாணம்.இப்படி கூறலாம், நீரை அளக்கபோகிறோம். அதன் இயல்புகளைப் பற்றி அதன் அடிப்படையில் பேசப் போகிறோம் என்று வைத்துக்கொண்டால் முதலில்பேச வேண்டியது அந்த முகத்தல் கருவிகளைப் பற்றித்தானே. நாழி, படி என்றெல்லாம் தெளிவாக வகுத்துக் கொண்ட பிறகுதானே மேலே போக முடியும். பிரமாணங்கள் அத்தகையவை.

கோதமன் நான்கு பிரமாணங்களை வகுத்துரைக்கிறார். பிரத்யட்சம், அனுமானம், உபமானம், சப்தம். – புலன்களுக்குச் செக்கும் முதற்கட்ட யதார்த்தமே பிரதியக்‌ஷம். (பிரதி அக்‌ஷம் – கண்முன்) பிரதியக்‌ஷத்தை இரு வகையில் நியாயம் விளக்குகிறது. அதுவே ஞானத்தின் தொடக்கம். அது இல்லாமல் ஞானப் பயணம் சாத்தியமில்லை. அதே சமயம் அது முதல் படிதான். பிற பிரமாணங்கள் அதன் அடுத்த படிகள் அல்லது வளர்ச்சி நிலைகள் ஆகும்.

பிரத்யக்‌ஷம் இரு முக்கிய இயல்புகள் கொண்டதாகும். ஒன்று புலன்கள் புறவய உலகினைச் சந்திக்கும் போது உருவாகக்கூடியது. (சன்னிகர்ஷம் என இதைப் பற்றி நியாயம் கூறுகிறது); இரண்டு மாறுபடாத ஞாமாகும் (அவியபிசாரி). மனிதர்கள் அனைவருக்கும் அது ஒன்றாகவே பொருள்படும்.இவ்விரு அடிப்படைகளை நடத்தும் நியாயம் பிரத்யக்‌ஷப் பிரமாணம் என்று கூறுவது, மேற்கே புல அறிவு வாதம் அல்லது நிரூபண வாதம் (Empiricism) என்று கூறுவதைத்தான் என ஊகிக்கலாம்.

அனால் புலனறிவு எல்லக்குட்பட்டது. தவறுகள் செய்யக்கூடியது. உதாரணமாக பூமி சூறியனைச் சுற்றி வருவது நம் புலன்கலால் அறியக்கூடிய ஒன்றல்ல. சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற சித்திரத்தையே நமது புலன்கள் அளிக்கின்றன. பூமிதான் சுற்றி வருகிறது என்பது நாம் ஊகித்து அறிவதேயாகும்.

இவ்வூகமே நியாய மரபில் அனுமானம் எனப்படுவது. அனுபவ அறிதல்களித் தொகுத்து, ஒழுங்குபடுத்தி அவ்வனுபவ அறிவில் உள்ள இடைவெளிகளை நிரப்புதலே அனுமானம் ஆகும்.

அனுமானங்கள் மூன்று வகை என்று நியாய சூத்திரம் வகுக்கிறது. (1) பிரத்தியக்‌ஷம் நிகழ்வதற்கு முன்பே ஊகிப்பது. உதாரணம்: குளிர்க்காற்று அடிப்பதால் மழை வரக்கூடும் என்று ஊகிப்பதைப்போல். (2) பிரத்யக்‌ஷம் நிகழ்ந்தபிறகு காரணங்களை ஊகிப்பது. உதாரணம்: நதியில் புது வெள்ளம். ஆகையால் மலையில் மழை என ஊகிப்பது. (3) வெளிப்படையானவற்றில் இருந்து தெரியாதவற்றை ஊகிப்பது. உதாரணம்: மைல்யில் புகை தெரிகிறது. அங்கு காட்டுத்தீ இருக்கலாம் எனும் அனுமானம்.

மூன்றாவது பிரமாணம் உபமானம் ஆகும். ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிடுவது அறிவது இது. (உவமை). உதாரணமக நதிகள் இணைந்து மகானதி உருவாவது போல சிந்தனைகள் இணைந்து தத்துவமாக அகின்றன என்று ஊகிக்கிறோம்.

நான்காவது பிரமாணம் சப்தம் என்று கூறப்படுகிறது. முன்னறிவு, மரபான அறிவு என்று இதை விளக்கலாம். ஒரு விஷயத்தை நாம் அறிய முற்படும்போது அதுவரைக்குமான அறிதல்கள் நமக்கு கைமாறப்பட்டிருக்கிறது அந்த அறிபடுபொருள் மீது படிகிறது..இது முன் அறிவு எனப்படுகிறது.

இங்கு இரு தெளிவுகள் தேவைப்படுகின்றன. உவமை எப்படி ஒரு ஆதாரமாக ஆக முடியும், அது ஒரு விளக்கும் உத்தி மட்டும்தானே என்று கேட்கலாம். மனித அறிதலின் மிக மிக  நுட்பமான ஒரு விஷயத்தை இன்கு கோதமன் தொட்டிருக்கிறார். நம் அறிவியல் பெரும்பாலானவை அறிந்த விஷயங்களைக் குறியீடுகளாக மாற்றிக்கொள்வதன் மூலம் முன்னகர்ந்து ஊகிக்கபட்டவையே என்பதைச் சற்று யோசித்தால் அறியமுடியும். இதை இன்றைய நவீன மொழியியலும் குறியியலும் மிக விரிவாக விவாத்தித்துள்ளன.

பிரபஞ்சம், காலம், வெளி போன்றவற்றை முழுக்க நாம் உவமைகள் மூலமே அறிந்து வைத்திருக்கிறோம் என்பதைக் கவனித்துப் பார்த்தால் இது புரியும். குலத்தலைவனிலிருந்து தானே கடவுள் உருவகிக்கப்படார்? சக்கரம் என்ற பொருள் எப்படி எப்படி விரிவடைந்து பிரபஞ்சத்தையும் காலத்தையும் விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பார்தால் வியப்பே ஏற்படும். அதே போல நெருப்பு, நதி போன்றவையும் மிக அடிப்படையான உருவகங்கள்.

இரண்டாவதாக இங்கு தேவைப்படும் தெளிவு முன் அறிவு எனும் போது மூதாதையரின் ஞானத்தை ‘நம்பி’ ஏற்பதை கெளதமர் குறிப்பிடுகிறாரா என்பது. தமிழ்சூழலில் அனைத்தையும் வைதிகத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியின் விளைவாக மின் அறிவு என்றால் சாஸ்திரங்கள், வேதங்கள் முதலிய ‘ ஆதார’ நூல்கள் என்றே கற்பிக்கப்படுகிறது.

இந்து மரபில் குறிப்பிட்ட சில தரிசன, வழிபாட்டு மரபுகளுக்கு மட்டுமே வேதங்கள் ஆதார நூல்கள். அவற்றையே நாம் வைதிக மதங்கள் என்கிறோம். பூர்ம மீமாம்சை, உத்தர மீமாம்சை, பிற்கால வேதாந்தனங்கள் ஆகியவையே அடிப்படியில் வேத மதங்கள் (அல்லது வைதிக மதங்கள்). நியாயம் அவற்றில் ஒன்றல்ல.

நியாயம் பிற்பாடுதான் வைதிக மரபுடன் இணைக்கப்பட்டது. அவ்வளவுதான். வைதிக மரபுகளில் பிரத்யட்சம், அனுமானம், சுருதி என்று முன்று பிரமாணங்களே கூறப்படுகின்றன. சுருதி எனும்போது அவர்கள் வேதங்களையே கூறுகிறார்கள். எல்லா அறிவுக்கும், பிரத்யட்சத்திற்க்கும் கூட சுருதியே ஆதாரமான பிரமாணம் என்கிறார்கள். பிரத்யட்சத்திற்க்கும் சுருதிக்கும் இடையே முரண்பாடு ஏற்பாடுமானால் சுருதியே அடிப்படையாகக் கருதப்பட வேண்டும் என்கிறார்கள்.

ஆனால் நியாய மரபில் முன்னறிவு எனும்போது முன்னதாகவே உள்ள அறிவு, நம்பத்தக்க முன்னோடிக்கூற்று என்றே உத்தேசிக்கப்பட்டுள்ளது. உண்மையில் நமது அறிதல்கள் அனைத்துமே மொழியின் மூலம் நமக்கு கிடைக்கும் முன்னறிவுக்கு கட்டுப்பட்டவை. குழந்தைக்கு நாம் மொழியைக் கற்பிக்கும்போதே ‘ நாய்- கடிக்கும்’ என்றுதான் அறிமுகம் செய்கிறோம். ( ஜே. கிருஷ்ணமூர்த்தி இதையே அறிந்ததில் இருந்து விடுதலை என்கிறார். அறிந்ததவற்றின் பிடியிலிருந்து மனித மனம் விடுபடுவதே மெய்யான தியானம். அவ்வப்போது ஒவ்வொன்றும் புதியதாக, முடிவற்று அர்த்தம் தருவதாக, பரவச அனுபவமாக மாறிவிடும்)

அறிபடு பொருள் (பிரமேயம்) நியாய மரபால் விரிவாக வகுக்கப்படுகிறது. உடல், ஆத்மா, புலன், அறியப்படும் பொருட்கள், அறிவு, மனம், செயல்,விளைவு, துயரம், துயர நீக்கம் இவையே அறிபடுபொருளின் தோற்ற நிலைகள். இவற்றில் புலப்படுபவை உண்டு – சேதனம்; புலப்படாதவையும் உண்டு – அசேதனம்.

நியாயம் பருப்பொருளைப் புலன்களுக்கும், மனித ஆத்மாவுக்கும் வெளியே தனித்து இயங்கும் இருப்பாகவே உருவகித்தது. (தேவிப் பிரசாத் சட்டோபாத்யாய தன் நூலான ‘ இந்தியத் தத்துவ இயலில் நிலைத் திருப்பவையும் அழிந்தவையும்’ என்ற நூலில் இது குறித்து விரிவாகவே பேசுகிறார்.)

ஒவ்வொன்றும் தனித்த செயள்தளம் உண்டு. ஆனால் அவை ஒன்றோடொன்று தொடர்புகொண்டு இயங்குபவையும் கூட. நியாய மரபின்படி ஐந்து புலன்களும் ஐம்பெரும் பொருட்களில் இருந்து உருவானவையே. அதாவது, கருத்து முதல்வாத்தை நேர் தலைகீழாக திருப்பிப் போடுகிறது நியாய மரபு – இதி வைசேஷிக மரபின் அதே பார்வைதான் என்பதை ஏற்கனேவே பார்த்தோம்.

அடுத்து வருவது ..” நியாயத்தின் அகவயப் பார்வை”

பின்னூட்டம்