புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன்
[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன். நன்றி: தீராநதி ]
நன்றி: அழியாச்சுடர்கள் தளம்
பத்து வருஷங்களுக்கு முன் வெளிவந்த `ரப்பர்’ நாவலிலிருந்து சமீபத்தில் வெளிவந்த `கன்னியாகுமரி’ நாவல் வரை தமிழ் இலக்கிய உலகில் அதிகச் சர்ச்சைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர் ஜெயமோகன். 1991ல் `கதா’ விருதும், 1993ல் சமஸ்கிருதசம்மான் என்கிற தேசீய விருதும் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது.
கதை, நாவல், விமர்சனம் என்று இதுவரை பதினொரு தொகுப்புகளைத் தமிழில் தந்திருக்கிற ஜெயமோகனது தாய்மொழி மலையாளம். நாகர்கோவிலுக்கு அருகில் தக்கலை என்னும் ஊரில் தொலைபேசித் துறையில் வேலை செய்துவருகிறார்.
நாகர்கோவிலின் நகர்ப்புறச் சந்தடியிலிருந்து ஒதுங்கி சற்று அமைதியாக இருக்கிற தெரு. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிற வீடு. மாடியில் ஓலைக் கீற்றுகளுடன் ஒரு கொட்டகை பக்கத்தில் அவரது மனைவி; ஓடியாடும் அவரது குட்டிமகள்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பிரத்யேக மொழியுடன் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நீண்டது அவருடனான பேட்டி:
கேள்வி: வாழ்க்கையின் எந்தவிதமான நெருக்கடி உங்களைப் படைப்புலகத்தை நோக்கி திருப்பியது. அல்லது உங்களது எழுத்துக்குப் பின்புலமாக இருந்திருக்கிறது?
ஜெயமோகன்: எனக்கு ஆரம்பத்திலிருந்து திருப்தியாகச் செய்யக்கூடிய காரியமாக எழுத்து தான் இருந்திருக்கிறது. சிறுவயதில் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த நாட்களிலேயே நான் நிறைய எழுதியிருக்கிறேன். பல புனை பெயர்களில் ஏகப்பட்ட கதைகள். சுமார் எண்பது வரை. பல பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன். கதைக்கு ஐம்பது, அறுபது ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்தில் போய் சினிமா பார்த்துவிட்டு புரோட்டா சாப்பிட்டு வருவேன். புரோட்டா மீது அப்போதே ஒரு காதல் உண்டு.
நிறையப் படிப்பேன்; ஒரு கட்டத்தில் சாண்டில்யன் மீது ஒரு மோகம் இருந்தது; பிறகு கல்லூரி நாட்களில் எனது ஹீரோ ஜெயகாந்தன். இப்போது மனதில் அடுக்குகள் மாறினாலும் ஜெயகாந்தன் அதே நிலையில் இருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் ஒரு நெருக்கடியான விஷயம் உருவாயிற்று. எனக்கு நெருக்கமான நண்பராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார். ரப்பருக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை `ஆஸிட்’டை அவர் குடித்திருந்தார். அது கொடூரமான மரணம். அவருடைய மரணம் எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. நானும் அவனும் முந்தின தினம் இரவு வரைக்கும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு அவன் கிளம்பிப் போனான். போய் ஒரு மணிநேரத்தில் இறந்து போய்விட்டான்.
மரணத்தின் குரூரம்; மரணத்தின் மூலம் ஒருவன் முழுக்க இல்லாமல் போய்விடுகிற வெறுமை; எவ்வளவு தான் இரண்டு ஆத்மாக்கள் நெருக்கமாக இருந்தாலும் மரண அவஸ்தையைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு இருந்த இடைவெளி; இதெல்லாம் எனக்குப் பெரிய உறுத்தலை ஏற்படுத்தியது. மானசீகமாக நிலைகுலைந்து போயிருந்தேன். கல்லூரிக்குப் போகமுடியாமல், தூங்க முடியாமல் இருந்தேன். பிறகு படிப்படியாக மனசு தேறிவந்தேன்.
இந்த நேரத்தில் ஆன்மீகம் மீது ஈடுபாடு ஏற்பட்டது. இன்றைக்கு வரை என்னை எழுத வைத்திருக்கிற கேள்விகள் இந்தக் கால கட்டத்தில் தான் உருவானதென்று நினைக் கிறேன். கல்லூரியில் கடைசி வருஷம் துறவு மனப்பான்மையில் எனது வீட்டை விட்டுப் புறப்பட்டேன். மதுரை திருவேடகம், திருச்சி என்று பல இடங்களில் அலைந்து கொண்டிருந்தேன்.
கே : ஏன் துறவு கொள்கிற அளவுக்கு மனநிலை சென்றது.
ஜெயமோகன் : என்னுடைய கன்னியாகுமரி நாவல் தவிர மற்ற என்னுடைய எல்லாப் படைப்புகளிலும் அடிப்படையில் மரணம், அதற்கு முன் உறவுகளுக்கு, இருத்தலுக்கு இருக்கிற அர்த்தங்கள்; அது குறித்த விசாரணைகள் புலப்பட்டிருக்கின்றன.
பதினெட்டு வயதில் நமக்கு, மனசுக்குள் “நான் நிரந்தரமாகப் பூமியில் இருந்து கொண்டிருக்கிற ஆள்; என்கிற உணர்வு இருக்கும். நான் மலையாளத்தில் எழுதின மாதிரி. எனக்குப் பின்னால் ஒரு ஒளித்தச்சன் என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் கல்லில் நிரந்தரமாகச் செதுக்கிக் கொண்டிருக்கிறான் என்கிற பிரமை இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒரு குமிழி மாதிரி லேசில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து போவோம். அவ்வளவுதான்” என்று மனசில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. எனக்கு இருபத்தெட்டு வயசில் உருவான மனச் சித்திரம் மற்றவர்களுக்கு நாற்பத்தைந்து, ஐம்பது வயசுக்குப் பிறகு முதல் `ஹார்ட் அட்டாக்’கோ, முதல் `ஸ்ட்ரோக்’கோ வரும்போது வந்திருக்கலாம். இந்த உணர்வு வந்த பிறகு நமது வாழ்க்கை முறையே மாறிப் போவதைப் பார்க்க முடியும். இந்த உணர்விலிருந்து கிளம்புகிற கேள்விகள்தான் எனக்கு முக்கியம்.
துறவு மனநிலையில் சுவாமி சித்பாவனந்தருடன் சில நாட்கள் இருந்தேன். வயது முதிர்ந்த நிலையில் அவர் பேசும் போது அவரது கைகள் நடுங்கும், என்னிடம் “கால்மணி நேரம் தனியாகப் பேசவேண்டும்” என்று சொன்னார், உள்ளே போய்ப் பேசினார்.
“நீ எடுத்துப் படிக்கிற புஸ்தகங்களையெல்லாம் பார்த்தேன். கதைப் புஸ்தகங்களைத்தான் பார்க்கிறே.. ஆன்மீகம், தியானம் எல்லாமே கணக்கு மாதிரி `லாஜிக்’கலான விஷயங்கள். நீ முழுக்க முழுக்கக் கற்பனையில் இருக்கே.. உண்மையை அடைவதற்கு ஒரு பயணம் உண்டேன்றால் அது உனக்கு இலக்கியம் வழியாகத்தான் சாத்தியம். இன்னொருவன் சங்கீதம் வழியாகச் செய்வான். துறவெல்லாம் உனக்கு ஒத்துவராது. வீட்டுக்குப் போய் விவசாயம், ஏதாவது பண்ணு” என்றார்.
எனக்கு அப்போது அவர் மீது கோபம் வந்தது. எனக்குச் சாப்பாடு போடத் தயங்கித்தான் அப்படிச் சொல்கிறார் என்று வியாக்கியானம் செய்து கொண்டு திருப்பராய்த்துறையில் போய்ச் சில நாட்கள் இருந்தேன். அங்கும் என்னை அதைரியப்படுத்திவிட்டார்கள். திரும்பி ஊருக்கு வந்த பிறகு ஒரு காலகட்டத்தில் “அவர் சொன்னது உண்மை” என்று தெரிய வந்தது. அந்த காலகட்டத்தில் நான் எழுத ஆரம்பித்தேன்.
கே : உங்களது குடும்பச் சூழ்நிலை அப்போது எப்படியிருந்தது
ஜெயமோகன் : என் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிற திருவரம்பு, குலசேகரத்திற்கும் திற்பரப்புக்கும் நடுவில் இருக்கிறது. எங்கம்மாவின் அண்ணன் பெரிய கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் பின்னணியில் வந்தவர் எங்க அம்மா.
எங்கம்மாவுக்கு தோப்பில் பாசியைத் தெரியும். ஈ.எம்.எஸ். ஸைத் தெரியும். எழுத்து கூட்டித் தானாகவே தமிழும், ஆங்கிலமும் கற்றுக் கொள்கிற அளவுக்கு அவங்களுக்கு தீவிரம் இருந்தது. அப்பா, அம்மா இருவருமே மாறுபட்ட குணாதிசயங்கள். அவர்களுக்குள் எவ்வளவுதான் தீவிரப் பிரியம் இருந்தாலும், அந்த பிரியம் முழுவதும் பாதி விஷமாக மாறிவிடும்.
எங்கம்மா பெரிய படிப்பாளி. தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலுமே படிப்பார்கள். சில கதைகள் அம்மா எழுதி மலையாளத்தில் பிரசுரமாகியிருக்கிறது. எங்கப்பா அப்போதே ஐம்பது ரூபாய் வரை செலவழித்து அம்மாவுக்காக ஹெமிங்வேயின் நாவல்கள் எல்லாம் வாங்கி வருவார். ஆனாலும் என்ன காரணத்தாலோ அவர்களுக்கிடையில் கடுமையான உரசல் இருந்து கொண்டே இருந்தது. எங்கப்பாவுக்கு எங்கம்மா அவங்களோட அண்ணன் மீது வைத்திருந்த பக்தி மாதிரியான உணர்வைத் தாங்கமுடியவில்லை. எங்கள் வீட்டில் நல்ல புஸ்தகச் சேகரிப்பு இருந்தது. இரண்டாயிரம் புத்தகங்கள் வரை இருந்தன. எங்கம்மாவுக்கு தி. ஜானகிராமனை, ஜெயகாந்தனையெல்லாம் புத்தகங்கள் வழியாகத் தெரியும்.
எங்க அம்மா தோட்டத்தில் புல் பறித்துக் கொண்டிருப்பார்கள். கூடவே நானும் புல் பறிப்பேன். பேசிக் கொண்டே பறிப்போம். ஆங்கில நாவல் பற்றி அம்மா பேசிக் கொண்டு புல் பறிப்பது நடக்கும். அபூர்வமாக ஒரு பஸ் வந்து போகிற அந்தக் குக் கிராமத்தில் புல் பறித்தபடி இப்படியொரு இலக்கிய சம்பாஷணை நடக்கும் என்று மற்றவர்கள் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாது. தாக்கரே, டிக்கன்ஸ் என்று அவர்களுடைய ரசனை இருந்தது. தளம் எனக்கிருந்தது. டால்ஸ்டாய், தாஸ்தாவ்ஸ்கி நாவல்களை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது மலையாளம் வழியாகப் படித்திருக்கிறேன். ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போதுது அம்மா வழியாக மலையாளம் எழுதப் படிக்கக் கத்துக் கிட்டேன். அதுவரை பள்ளியில் பாடமொழி தமிழ்தான்.
வீட்டில் மலையாளம் பேசிக் கொண்டாலும், தமிழ் இலக்கியம் பற்றிப் பேசும் போது தமிழில் பேசிக் கொள்வோம். எங்க அம்மாவும் நானும் தனி உலகத்தில் இருந்தோம். மற்றவர்களுக்கு இப்படியொரு உலகம் இருப்பதே தெரியாது.
இப்படி இருந்த என்னுடைய அம்மா தற்கொலை செய்து கொண்டது எனக்குப் பெரிய அடியாக இருந்தது. அம்மா அம்மாதிரியான வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்பதற்கான சிறுபொறி கூட எனக்குத் தெரியாது. என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகக்பெரிய துக்கங்கள், ஏமாற்றங்கள் இருந்தன என்பதெல்லாம் பிறகு தான் எனக்குத் தெரிந்தது. அவர் இறந்த பிறகு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களையெல்லாம் பார்த்த எனக்கு அம்மாவின் மரணம் பலத்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வருஷம் வரைக்கும் இந்தச் சம்பவம் என்னைத் தூங்கவிடாமல் பண்ணியது.
எங்கப்பா மீது எனக்கு விருப்பும் வெறுப்பும் கலந்த மரியாதை உண்டு. ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அப்பா கறாரானவர். கல்லூரி நாட்களில் என்னை எந்த விதத்திலும் அவர் எதற்கும் வற்புறுத்தினதே கிடையாது. ஆனால் எங்கப்பா கடைப்பிடித்த ஒழுக்கங்களுக்கு நானும் வந்து சேர்ந்திருந்தேன். அவரும் எங்கம்மா மாதிரியே தற்கொலை செய்து கொண்டார். கடும் மன அவஸ்தை, நெருக்கடி. இருந்தும் எந்தப் பழக்கங்களுக்கும் ஆட்படாமல் நான் தனியான ஆளாக இருந்தேன். சோகமான மனநிலை தான் எப்போதும்.
ஒரு முறை ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது அருகே இருந்த பயணியின் கையில் “ஜே.ஜே. சில குறிப்புகள்” நாவலைக் வைத்திருந்தார். அவரிடம் நாவலை வாங்கிச் சீக்கிரமே படித்து முடித்துவிட்டேன். எனக்கு மனதில் பெரிய அதிர்வைக் கொடுத்தது அந்த நாவல். படித்ததும் எழுந்த கேள்விகளுடன் சுந்தர ராமசாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன். எதிர்மறையான கடிதம்தான். அந்த நாவலில் இருந்த தேடலும், தவிப்பும் எனக்கு முக்கியமானதாகப் பட்டது.
தொடரும்..