எழுதியவர் : RV
விஷ்ணுபுரத்தை பல விதத்தில் படிக்கலாம். அமைப்புகளின் குரூரம், தொன்மங்கள் தோன்றி மறையும் விதம், ஹிந்து தத்துவங்களைப் பற்றிய அறிமுகம் என்றெல்லாம் படிக்கலாம். ஒரு fantasy என்ற விதத்தில் கூட படிக்கலாம். படிக்கும்போது இப்படி பல கூறுகள் எனக்குத் தெரிந்தது. ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடைக்கு போன மனநிலையில்தான் நான் இருந்தேன். பக்கத்துக்குப் பக்கம் ஏதாவது கவனத்தைக் கவர்ந்தது. பல சமயம் மேலே படிப்பதை நிறுத்திவிட்டு இரண்டு நிமிஷம் மூச்சு வாங்கிக்கொண்டு படித்ததை ஒரு மாதிரி absorb செய்துகொண்டு பிறகுதான் மேலே படிக்கவே முடிந்தது. ஒரு மாபெரும் ஓவியம் அல்லது சிற்பத்தைப் பார்க்கும் உணர்வு தோன்றிக் கொண்டே இருந்தது. மாமல்லபுரத்தில் பகீரதன் தவம் பார்த்திருப்பீர்கள். விவரங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் இல்லையா? குயர்னிகா என்ற ஓவியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எவ்வளவு முறை பார்த்தாலும் புதிது புதிதாக ஏதாவது கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். பார்த்து முடித்துவிட்டோம் என்ற எண்ணமே எனக்கு வருவதில்லை. அதைப் போலத்தான் இந்தப் புத்தகத்தைப் பற்றியும் உணர்ந்தேன்.
சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பதிவு விமர்சனமோ புத்தக அறிமுகமோ இல்லை. இங்கே கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. வழக்கமாக பத்து வரியில் கதைச்சுருக்கம் எழுதுவது போல இதற்கு எழுதிவிடவும் முடியாது. படித்தபோது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பை பதிவு செய்யும் முயற்சி, அவ்வளவுதான்.
எதைச் சொல்வது, எதை விடுவது? முதலில் அந்தச் சிலை. ஸ்ரீபாதம், அல்லது உந்தி அல்லது முகம் மட்டுமே காணலாம் என்ற அளவுக்கு பிரமாண்டமான ஒரு சிலை! காஞ்சிபுரத்தில் ஒரு இருபது அடி உயரம் இருக்கும் உலகளந்த பெருமாள் சிலையைப் பார்த்தபோது உண்டான மன எழுச்சியே இன்னும் அகலவில்லை (பார்த்து 15 வருஷம் இருக்கும்) திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில்தான் கதையின் மூலக்கரு என்று ஜெயமோகன் எங்கோ சொல்லி இருக்கிறார். அந்த கோபுரங்களும் கண்டாமணியும். அஜிதன். அஜிதன் உண்மையிலேயே வாதத்தில் வென்றானா? திருவடி, அவனுடைய obsession, அவனால் உருவாகும் cult . சங்கர்ஷணன், அவன் சந்திக்கும் இன்னொரு “புலவன்”, அரங்கேற்றம், பின்னாளில் சங்கர்ஷணன் பற்றி உலவும் தொன்மங்கள். கதையின் அமைப்பே – முதல் பகுதியின் மனிதர்கள் மூன்றாம் பகுதியில் தொன்மங்களாக வருவதும், முதல் பகுதியின் தொன்மங்கள் இரண்டாம் பகுதியில் உண்மை மனிதர்களாக வருவதும் அபாரமான construction technique. யானைகள். மீண்டும் யானைகள். சிற்பிகள். அந்த பாண்டிய அரசன். அவனுக்குக் கூட்டிக் கொடுக்க சம்மதிக்கும் வீரர் தலைவன். அந்த ஆழ்வார், அதுவும் அவர் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று சொன்ன ஆழ்வார்! (நம்மாழ்வார் அப்படி சொன்னதாக ஒரு வைஷ்ணவ குருபரம்பரை கதை உண்டு)
தத்துவ விசாரத்தை இவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமென்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அதுவும் ஆன்மிகம் என்றால் எனக்கு கண் வெகு சீக்கிரம் சொருகிக் கொள்ளும். பொதுவாக தத்துவம் எழுப்பும் கேள்விகளில் எனக்கு அக்கறையே கிடையாது. அதுவும் நமது தத்துவம் எல்லாம் வெறும் speculation-தான். உதாரணமாக சாவுக்குப் பிறகு என்ன?சம்பத் மாதிரி அது ஓர் இடைவெளி என்று சொல்லலாம். சாவுக்குப் பிறகு எல்லாரும் ஒரு நிறமாக மாறுவோம் என்று நான் சொல்லலாம். இந்த வெற்று யூகங்களை எல்லாம் நிரூபிக்க வழி இல்லாதபோது கேள்வியே சாரமற்றது என்ற முடிவுக்குத்தான் நான் வருவேன்.
ஆனால் இந்த மாதிரி speculation எல்லாம் theoretical exercises என்ற அளவுக்காவது என்னை இந்தப் புத்தகம் ஒத்துக் கொள்ள வைத்தது. எனக்கு இன்று நமது தத்துவங்கள் பற்றி ஓரளவாவது தெரிகிறது என்றால் அதற்கு இந்த நாவலே காரணம். ஜெயமோகனின் உழைப்பு அசர வைக்கிறது. தத்துவங்களைப் பற்றி நா.பா. எழுதிய மணிபல்லவம் நாவலிலும்தான் வாதிக்கிறார்கள். அதைப் படிப்பதை விட வெங்காயம் உரிக்கலாம்.
எனக்கு இன்னும் இரண்டு மூன்று முறையாவது படிக்க வேண்டும். வார் அண்ட் பீஸ் படித்துவிட்டு என்று நினைத்திருக்கிறேன், எப்போது முடியுமோ தெரியவில்லை.
ரொம்ப கஷ்டம்தான், ஆனால் விஷ்ணுபுரம் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
கட்டாயம் படிக்கப்பட வேண்டிய புத்தகம். தத்துவம் என்றவுடன் பயப்பட வேண்டாம், மிகவும் சுவாரசியமான எழுத்தும் கூட. Unputdownable.
விஷ்ணுபுரத்தை எஸ்.ரா. தமிழின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக மதிப்பிடுகிறார். ஜெயமோகன் அதைத்தான் தமிழின் தலை சிறந்த நாவலாகக் கருதுகிறார். அப்படி சொன்னதற்காக நிறைய பேர் அவரை கர்வி என்று திட்டி இருக்கிறார்கள். அவருடைய வார்த்தைகளில்:
ஐதீகத் தொன்மை அணுகு முறையின் வழியாக இந்திய வரலாற்றையும், தத்துவ மரபையும் ஆய்ந்து மாற்று சித்திரம் ஒன்றைத் தரும் முயற்சி. அதன் முழுமை, மொழியின் தீவிரம், குறியீட்டு கவித்துவம் காரணமாக பெரிதும் பாராட்டப் பட்டது. ‘நூறு வருடத் தமிழிலக்கியத் தளத்தில் செய்யப்பட்ட மிகப் பெரிய இலக்கிய முயற்சி’ என்று மதிப்பிட்டார் அசோகமித்திரன்.
1997ல் பிரசுரமாயிற்று.