விஷ்ணுபுரம்
எழுதியவர் R.கோபி
ஜெமோவின் படைப்புகளைப் படிக்கச் சொல்லித் தொடர்ச்சியாக என்னை வற்புறுத்துபவரும், மணிக்கணக்கில் என்னிடம் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்கள் குறித்துத் தொலைபேசியில் உரையாடுபவருமான நண்பர் ஜெய் கணேஷிற்கு இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.
*
இந்தக் கட்டுரையை விஷ்ணுபுரம் நாவல் பற்றிய என்னுடைய முழுமையான வாசிப்பனுவம் என்ற வகையில் பார்க்கலாகாது. தொலைவில் தெரியும் மலைச் சிகரத்தைப் காணும்போது மனதிற்குள் அதைப் பற்றி ஒரு சித்திரம் எழும். அது நிச்சயம் முழுமையானதன்று. நுட்பமான விஷயங்கள் தூரத்திலிருந்து நிச்சயம் கண்களுக்குப் புலப்படாது. அதற்கொப்பானதுதான் இந்தக் கட்டுரை. ஒருவேளை நான்கைந்து முறை திரும்பத் திரும்ப வாசித்தால் இந்த நாவலைப் பற்றிய தெளிவு ஓரளவிற்காவது கிடைக்கும். நாவலிலேயே வருவது போல விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் முப்பது நிலைகளுக்கு மேல் சாமான்யர்களுக்குத் தெரிவதில்லை.
படித்த தருணத்திற்கும் அதைப் பற்றி எழுதும் தருணத்திற்கும் இடையேயுள்ள உள்ள இந்தக் குறைந்த நேரத்திலும் சித்திரம் கலைந்து புதிதாக வேறொன்று தோன்றிவிடுகிறது.
*
நாவலைப் படிக்கும்போதோ அல்லது படித்து முடித்தவுடனோ ‘பிரமாண்டம்’ என்று ஒருமுறையேனும் வாசகர் பிரமிப்படையவில்லை எனில் அந்த வாசகர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.
விஷ்ணுபுரம் கோவிலின் ஒரு பகுதி எப்போதுமே பாழடைந்திருக்கும் என்பதாக வருகிறது. கோவிலின் பிரமாண்டத்தை இது மறைமுகமாகச் சுட்டுகிறது. முழுக்கோவிலையும் பொலிவுடன் வைத்திருப்பது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட விஷயம்.
கணக்கற்ற காலவெளி, எண்ணிலடங்காக் கதைமாந்தர்கள், நாவலின் அமைப்பு, உத்தி, கரு, மொழியாளுமை, கற்பனை, காவியத் தன்மை, மனித மனம் குறித்த அவதானிப்புகள் என்று பலவிதங்களிலும் இந்த நாவல் உயர்ந்து நிற்கிறது, விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரத்தைப் போலவே. ஞான சபை விவாதங்கள் அதன் கலசங்கள். இன்னமும் நிறைய விஷயங்கள் உண்டு / இருக்கலாம். விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் முப்பது நிலைகளுக்கு மேல் சாமான்யர்களுக்குத் தெரிவதில்லை!
இது நடந்த கதையாக எழுதப்படவில்லை. இவ்வாறு நடந்ததாகச் சொல்லப்படுவதாக எழுதப்பட்டுள்ளது. எனவே தொன்மங்களும் இடைச்செருகல்களும் நிறைய இருக்கும்! பின்நவீனத்துவக் கூறுகளும் நிறைய உண்டு.
பெரிதினும் பெரிது படைத்திருக்கிறார் ஜெமோ. இந்த நாவல் கோரும் வாசக உழைப்பும் மிகப் பெரிது. நாவலைப் படித்து முடித்ததும் கடந்துவிட முடிவதில்லை. தொடர்புடைய விஷயங்களைப் படித்தேயாக வேண்டியிருக்கிறது.
வெறும் வாசக உழைப்பு என்பதோடு மட்டுமல்லாமல் நிறைய கவனத்துடனும் படிக்க வேண்டியிருக்கிறது. ஒரு சிறிய வரி கூடப் பின்பு பெரிதாக விஸ்வரூபம் எடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனோ தானோ என்று எதையும் ஒதுக்கிவிட முடிவதில்லை. ஒரு சிறிய உதாரணம். ஸ்ரீபாதத்தில் ஸ்ரீதரன், “கௌஸ்துப காண்டம் பௌத்த ஞானத்தை முன்னிறுத்துகிறதா?” என்று கேட்கும்போது பத்மாட்சி, “இல்லை ஞானத்தை மட்டுமே அல்லது ஞானத்தின் எல்லைகளை” என்று கூறுமிடம்.
இந்த ஒரு வரி பதிலில் பத்மாட்சியின் ஞானம் வெகு அழகாக வெளிப்படுகிறது. அஜிதனின் வாதங்களை இந்த ஒரு வரி பதிலை மனதில் கொண்டு படித்தோமானால் புரிதல் இன்னும் அதிகமாகும். மூன்றாவது காண்டத்தில் விஷ்ணுதான் அஜிதன் என்று வருமிடம் இன்னமும் புரியும். ஏனெனில் கதைப்படி விஷ்ணு ஞானத்தின் ஸ்தூல வடிவம்.
மூன்று கதவுகள் வழியாகப் பாதம், உடல், சிரசு என்று காணமுடிகிற விஷ்ணுவின் பேருருவம் பெருமாளின் பிரமாண்டத்தின் குறியீடு. திருவட்டார், திருவனந்தபுரம் தலங்களில் அறிதுயில் கொள்பவனை ஏற்கனவே சேவித்திருப்பவர்கள் இதை இன்னும் நன்கு உணரலாம். நாவலையும் ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி என்று மூன்று பகுதிகளாகப் பிரித்திருப்பது விசேஷம்.
இந்த மூன்று பாகங்களை சத்வ, ரஜோ, தமோ குணங்களின் உருவகமாகக் கொள்ளலாமா என்றெண்ணி நாவலைப் படித்துக்கொண்டிருந்தபோதே அதே விஷயம் புத்தகத்தின் மூன்றாம் பகுதியில் வந்துவிட்டது!
நாவலின் எல்லா முக்கியக் கட்டங்களிலும் நாயொன்று தோன்றுகிறது – நிஜத்திலோ அல்லது கதைமாந்தர்களின் கனவிலோ. இது காலபைரவனின் / காலத்தின் குறியீடு.
விழிப்பு, கனவு, கனவிற்குள் கனவு என்று பல இடங்களில் வருகிறது. இதைப் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றை இங்கே காணலாம்.
மகா அஜிதன் விஷ்ணுவேதான் என்று மூன்றாம் பாகத்தில் வருமிடம் மிகச் சிறப்பு. பாகவத மகாபுராணப்படி புத்தரும் திருமாலின் அவதாரங்களில் ஒன்று. அஜிதனை விஷ்ணு என்று சொல்வதை அதன் நீட்சியாக நாம் கொள்ளலாம்.
விஷ்ணுபுரத்தைத் தமிழின் தலைசிறந்த நாவலாக ஜெமோ கருதுகிறார். நாவலாசிரியரே அவ்வாறு சொல்வது நம் புருவத்தைக் கொஞ்சம் உயர்த்தவே செய்கிறது. இது அகங்காரமா அல்லது தன்னம்பிக்கையின் வெளிப்பாடா என்றெல்லாம் எண்ணாமல் கொஞ்சம் விலகிநின்று யோசித்தால் அவருடைய நிலைப்பாடு சரியானதுதான் என்றே தோன்றுகிறது. ஒரு சாமானிய வாசகனாக இதுவரை படித்த நாவல்களோடு இந்த நாவலை ஒப்பிடுகையில் விஷ்ணுபுரம் முதன்மையான ஒன்றாகவே எனக்குப் படுகிறது. பின்தொடரும் நிழலின் குரல் அதனளவில் செறிவான நாவல்தான் என்றாலும் விஷ்ணுபுரத்தோடு ஒப்பிடுகையில் சில மாற்றுகள் குறைவே.
*
நாவலின் முதல் தோற்றுவாய் அட்டகாசம். ஒரு சினிமாஸ்கோப் திரையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பெரிய பாலைவனம். ஒரு சிறுபுள்ளி போல இருவர் நடந்து வருகின்றனர். அவர்கள் ஸ்ரீசக்கரம் வரைய ஆரம்பிக்கிறார்கள். முதலில் மிகச் சிறிதாக ஆரம்பித்துப் போகப் போக லக்ஷம் முக்கோணங்கள் கொண்ட சஹஸ்ர பத்மமாக முழுமை பெறும். இந்தக் காட்சியை ஒரு உயரமான இடத்திலிருந்து பார்த்தால் ஒருவருக்கு எப்படித் தோன்றுமோ அதே அனுபவத்தை வாசிக்கும்போது அடையலாம்.
நாவலின் முதல் பகுதியான ஸ்ரீபாதத்தில் வரும் விஷ்ணுபுரம் ஊர், கோவிலின் அமைப்பு பற்றிய வர்ணனை அபாரம். அரைவட்ட வடிவத்தில் அமைந்த ஊர். சிவப்பாக ஓடும் சோனா நதிக்கரையில் கோவில். அரைவட்ட வடிவத் தெருக்கள், தெருக்களை வெட்டியவாறு கோவிலில் இருந்து மூன்று திசைகளில் செல்லும் பாதைகள்.
ஸ்ரீபாத பூஜைக்கு வரும் யாத்ரீகர்கள், வண்டி வண்டியாகக் குவியும் அப்பங்கள், யானைகளும் குதிரைகளும் தயாராவது, விதவிதமான பல்லக்குகள், அங்கு நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் அழகுபட வருணிக்கப்படுகின்றன.
வீரன் என்னும் யானையை வீரபைரவன் என்னும் களிறு கொல்லுமிடம் (கொஞ்சம் மனதைப் பிசையும் கட்டமிது), வைஜயந்தி என்ற குதிரையின் அங்க லட்சணம் பற்றி வருமிடம் வெகு சிறப்பு. சிற்பங்கள் பற்றிய குறிப்புகளும் அழகு.
ஒருபுறம் வானளாவிய அதிகாரம் படைத்த விஷ்ணுபுரத்து சர்வக்ஞர், பதவி மதம் பிடித்த தளகர்த்தன் வீர வல்லாளன், இவர்களினூடே காவியம் படைக்கும் சங்கர்ஷணன், ஞானத் தேடலில் ஈடுபடும் பிங்கலன், கொற்றவையின் அம்சமான சித்திரை, மைத்ரேயி, கார்க்கிகளுடன் ஒப்பு நோக்கக் கூடிய விஷய ஞானம் கொண்ட தாசிகள் சாருகேசி, பத்மாட்சி என்று வாழ்வின் பல்வேறு படிகளில் நிற்கும் மனிதர்கள். அத்தனை கதைமாந்தர்களும் ரத்தமும் சதையுமாக நம்முன் உலவுகின்றனர்.
அனைவரின் குணாதிசயங்களும் கதையின் போக்கில் சம்பவங்களாலேயே தெரிய வருகின்றன. சர்வக்ஞர் மரண தண்டனைகளை சர்வசாதாரணமாக வழங்குகிறார். வீர வல்லாளன் லலிதாங்கியைச் சூறையாடுமிடம் ரத்தத்தை உறைய வைக்கும்.
விஸ்வரூபம் போலத் திடீரெனத் தோன்றக்கூடிய விஷ்ணுபுரத்தின் தோரண வாயில், அதிலிருக்கும் கருடன், ஆமை, யானை உருவங்கள், லட்சுமியின் அகவயச் சித்தரிப்புகள், அனிருத்தனை இழந்த சங்கர்ஷணின் சோகம் உக்கிரம் கொள்ளும் அத்தியாயம், பத்மாட்சிக்கும் சங்கர்ஷணனுக்குமிடையே நடக்கும் உரையாடல், பிங்கலனுக்கும் சாருகேசிக்குமிடையேயான சம்பாஷனை ஆகியவை ஜெமோவின் எழுத்தாளுமைக்கும், மானிட மனவோட்டம் பற்றிய அவருடைய புரிதலுக்கும் நல்ல உதாரணங்கள். லலிதாங்கி நடனமாடும் அத்தியாயமும் வெகு சிறப்பு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பக்கத்திற்குப் பக்கம் இதுபோல ஏதாவதொன்று இருக்கிறது. சிலாகித்துக் கொண்டே இருக்கலாம்.
சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ஸ்ரீபாதம் காவிய அழகோடு தனிமனிதர்களின் உன்னதங்களையும், கீழ்மைகளையும் பற்றிப் பேசுகிறது. சிலரின் ஞானத் தேடல்களையும். அதிகார மையங்கள் எப்படி உருவாகின்றன என்றும் காட்டுகிறது.
*
(இந்தப் பகுதியில் கணிதத்தோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்ட பத்திகள் என் புரிதல்களை எளிமைப்படுத்திக்கொள்ள மட்டுமே)
இரண்டாம் பாகம் கௌஸ்துபம். எனக்கு மிகவும் பிடித்த பகுதி. இப்பகுதியை ஞானத்தின் நுழைவாயில் என்று சொல்வேன். மகா அஜிதன் பவதத்தரை வாதத்தில் வெற்றிகொள்வதே இந்த பாகத்தின் பிரதானமான விஷயம்.
ஞான சபையின் வாதப் பிரதிவாதங்களை எழுத்தில் வடித்தது ஜெமோவின் அசாத்திய எழுத்தாளுமைக்கு நல்ல உதாரணம். இந்து ஞான மரபுகள், உபநிடதங்கள் பற்றிய குறிப்புகள் தத்துவம் சார்ந்த மொழியில் இல்லாமல் கதைமாந்தர்களின் உரையாடல்கள் வாயிலாகவே வெளிப்படுகிறது.
சித்தன் அஜிதனின் தோற்றம் பற்றிக் காசியபனிடம் சொல்லுமிடம் அழகு.
“அவன் முகத்தைப் பார். பதற்றமில்லை, உத்வேகமில்லை, மிகச் சாதாரணமாக இருக்கிறான். பற்பல சபைகளைக் கண்டவன். தன் தருக்க ஞானம் மீது அசையாத நம்பிக்கை கொண்டவன். ஸ்திதப் பிரதிக்ஞன் என்று அவனைக் கூறலாம்”.
சபையை அலங்கரிப்போர் பற்றிய அறிமுகம் விவாதம் எவ்வளவு காத்திரமாக இருக்கப் போகிறது என்பதற்கான கட்டியம்.
விவாதம் தொடங்குமுன் எழும் ரிக் வேத மந்திரம் விவாதம் செய்யும் முறையையும், அதன் இலக்கையும் சில அடிகளில் விளக்குகிறது.
ஒன்று சேர்ந்து பயணம் செய்யுங்கள்,
சேர்ந்தமர்ந்து விவாதம் செய்யுங்கள்,
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்!
முன்பு தேவர்கள்
ஒன்றாக அவி பங்கிட்டதுபோல
ஒன்றுகூடி சிந்தியுங்கள்,
உங்கள் சங்கம் ஒற்றுமையுடையதாகட்டும்!
ஒன்றாக பூஜை செய்யுங்கள்,
உங்கள் இலக்கு ஒன்றேயாகட்டும்!
உங்கள் இதயங்களில் ஒற்றுமை விளைக!
உங்கள் மனங்கள் இணைவதாக!
ஒற்றுமையுடன் நலமாக வாழுங்கள்!
ஓம் ஓம் ஓம்.
பொருத்தமான ஆரம்பம்.
பவதத்தர் பேசுகையில், “புலன்களில்லாத போதும் உணர்வது எது? அதன் பெயரே ஆத்மா. அது ஸ்வயம்பிரகாசமானது. அப்பிரகாசம் எங்கிருந்து வருகிறது? அது பரம் பொருளான மகாமையத்தின் பிரதிபலிப்பேயாகும். …பூரணம் அது, பூரணம் இது. பூரணத்திலிருந்து பூரணம் பிறக்கிறது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் பூரணமே எஞ்சி நிற்கிறது. சபையினரே அப்பூரணத்தை எந்தை இப்படுகையில் விஷ்ணு ரூபமாக ஆவாகனம் செய்தார்…இது ஒரு நிமித்தம், ஒரு தரிசனம், ஒரு குறியீடு. அதை வணங்குகிறோம்” என்று சொல்லி விவாதத்தை ஆரம்பித்து வைக்குமிடம் முக்கியமான கட்டம்.
மேலேயுள்ள பத்தியில் ‘பூர்ணம்…எஞ்சி நிற்கிறது’ என்று வருமிடம் ஈசாவாஸ்ய உபநிஷத்தின் சாந்தி பாடமாகும். பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் பூரணமே எஞ்சி நிற்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கலாம் (எனக்கு இன்னும் இருக்கிறது!). பூரணம் = அனந்தம்= infinity என்று கொண்டோமானால் கொஞ்சம் எளிதில் விளங்கும். Infinity – இல் இருந்து எதை நீக்கினாலும் (கழித்தாலும்) Infinity தானே மிச்சமிருக்கும். தெய்வத்தின் குரல் முதல் தொகுதியில் வரும் இந்தக்கட்டுரையில் இதை இன்னும் விரிவாகக் காணலாம்.
வரிசையாக ஒவ்வொரு ஞான மரபைச் சேர்ந்தவருடனான விவாதங்களை பவதத்தர் தருக்கத்தால் வெல்வது சிறப்பாக அமைந்திருக்கிறது. அதிலும் சாங்கிய மார்க்கத்தைச் சேர்ந்தவரை மடக்குமிடத்தில் தருக்க ஞானம் பீறிட்டு வெளிப்படுகிறது.
“எங்கிருந்து அந்த முதல் தீண்டல் வந்தது?”
“புருஷன்”
“அவனுடைய காரணம் என்ன?”
“அவனுக்குக் காரிய வடிவமில்லை. ஆகவே காரணமுமில்லை”
“அகாரணன்?”
“ஆம்”
“அவனுடைய உருவம் என்ன?”
“அவன் உருவற்றவன். புருஷம் என்பது ஒரு பாவம் மட்டுமே…”
“உருவற்றவன்?”
“ஆம்”
“அவனுடைய நோக்கமென்ன?”
“அவனுக்கு நோக்கமில்லை….”
“நீங்கள் விஷ்ணுவின் குணங்களை எல்லாம் கூறிவிட்டீர் சாத்தரே”
சாங்கியம் திட்டவட்டமாகப் பதில் சொல்லாத இடம் இதுதான். எல்லாவற்றிற்கும் காரண காரிய இயல்பைத் தேடும் சாங்கியம் ஆதிமூலக் காரணத்தைப் பற்றி மட்டும் ஒன்றும் சொல்வதில்லை – வேர் வேரற்றது, அதற்கு விளக்கம் தேவையில்லை. இதை ஆதிசங்கரர் தன்னுடைய பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் கடுமையாக விமர்சிக்கிறார் (பார்க்க பக்கங்கள் 114-115, இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம்).
“ஒன்றானதும் இரண்டற்றதுமான சத் மட்டுமே இருந்தது. அது ஆசைப்பட்டது, நான் பலவாகக் கடவது, நான் வளரக் கடவது. அது அக்னியை ஆக்கியது. அக்னி ஆசைப்பட்டது நான் பலவாக ஆகக் கடவது, தண்ணீர் உருவானது. பின் மழை, பின் அன்னம்” என்று சாந்தோக்கியத்தில் வரும் ஸ்லோகங்கள் முதல் தீண்டலுக்கான அனுமானத்தை முன்வைக்கின்றன. இந்த தரிசனத்தைக் கொண்டே பவதத்தர் பிற மரபைச் சேர்ந்தவர்களின் வாதங்களை தருக்கத்தால் எதிர்கொள்கிறார். இதே அனுமானத்தை அஜிதன் தருக்கத்தால் எதிர்கொண்டு வெல்லுமிடமும் அருமை. இவை யாவும் தத்துவச் சொற்பொழிவுகளாக இல்லாமல் உரையாடல்களாகவே இருப்பது எந்த ஒரு விஷயத்தையும் புனைவாக ஆக்கக்கூடிய ஜெமோவின் எழுத்தாளுமைக்குச் சான்றுகள்.
இன்னொரு முக்கியமான கோட்பாட்டையும் ஜெமோ வெகு அழகாக முன்வைக்கிறார். ஒவ்வொரு கிளையும் வேரை மறுத்தே மேலே வளர்கிறது. ஆனால் அது வேரை நிராகரிப்பதில்லை (ஒவ்வொரு மரபும் அதற்கு முந்தைய மரபுகளில் இருந்து சில விஷயங்களை எடுத்துக் கொள்கிறது. சில விஷயங்களை நிராகரிக்கிறது). Each contradiction is a new development என்பதை இதைவிட அழகாகச் சொல்லிவிட முடியாது.
யோக தர்ம தரிசனத்தில் “குறையாத பாத்திரத்திலிருந்து நிரம்பாத பாத்திரத்திற்கு நீர் வழிந்தபடியே இருக்கிறது” என்று வருமிடம் வாழ்க்கை நேர்க்கோடாக இல்லாமல் வளைவாக இருக்கிறது என்று அஜிதன் பின்னால் வாதிடும் இடங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
ஆயுர்வேத மருத்துவர் கணதேவர் தன் சீடர்களுக்கு மரணம் பற்றி விளக்குமிடம் மருத்துவ அறங்களுள் ஒன்றான Benefiance என்பதன் சாரமாகும். மரண தேவன் வருகை குறித்துக் கூறுமிடத்தில், “…நாம் அறிவோம், அவன் நீதி தவறாதவன் என்று. அவனுடைய வருகையை உரிய முறையில், உரிய காலத்தில் நிகழ்த்துவதே நமது கடமை” என்று குறிப்பிடுகிறார். Benefiance என்ற அறத்தின் எல்லையும் அதுவே. “Benefiance என்பது எதுவரை போகலாம்? நோயாளியின் இயற்கையான சாவிற்கு உதவுவது வரை”.
பொதுத்தன்மைகளை வைத்து நாம் தனிப் பசுக்களை அறிவதில்லை, தனிப்பசுக்களில் இருந்துதான் காலம் தோறும் பொதுத் தன்மைகளை உருவாக்கிக் கொள்கிறோம் என்று அஜிதன் வாதிடுமிடம் நமக்கு Mathematical Induction என்ற கோட்பாட்டை நினைவுபடுத்துகிறது.
பிரத்யட்சத்திலிருந்து அனுமானத்திற்கும், அங்கிருந்து அறிய முடியாமைக்கும் ஒரு கோடு நீண்டு செல்வதை அது காண்கிறது. அந்தக் கோடு மகாநியதியின் கோடு. அதையே யோகாசாரம் தனது தத்துவமென முன்வைக்கிறது. இந்த இடம் நமக்குப் புள்ளியியலில் வரும் regression analysis கோட்பாடுகளை நினைவூட்டுகிறது. உண்மையில் கணிதம் என்பது மாயையை மாயையால் அளவிடும் முயற்சியாகும் என்று வேறொரு அத்தியாயத்தில் வருவதையும் இங்கே நினைவு கூரலாம்.
“வேதம் ஞானமெனில் அந்த ஞானம் விவாதத்துக்குரியதே ஆகும். ஞானமன்று எனில் அதனால் பயில்பவர்களுக்குப் பயனேதுமில்லை. கற்பவன் கடந்து செல்லமுடியாத நூல் எதுவுமில்லை” என்று அஜிதன் சொல்லுமிடத்தில் நமக்கு நிச்சயம் “சபாஷ்” என்று சொல்லத் தோன்றும்.
*
இறுதிப் பகுதி மனதைக் கனக்கச் செய்கிறது. காவிய சோகம் என்றால் என்ன என்பதை இந்தப் பகுதி புரிய வைத்து விடுகிறது. ஸ்ரீபாதத்தில் திருவிழாக் கொண்டாட்டங்களில் ஆர்ப்பரிக்கும் விஷ்ணுபுரம், கௌஸ்துபத்தில் அனல் பறக்கும் ஞான விவாதங்கள் நடைபெறும் விஷ்ணுபுரம் என்று பார்த்துவிட்டு அழிந்து போகும் விஷ்ணுபுரத்தைப் பார்க்க மனம் கனக்கிறது. இரண்டு ஆறுதலான விஷயங்கள். ஒன்று, பிரளயத்திற்குப் பிறகு விஷ்ணுபுரம் மறுபடியும் தோன்றும் (கதைப்படி). இன்னொரு நடைமுறை ஆறுதல், மீண்டும் நாவலைப் படிக்க ஆரம்பிக்கலாம்.
உணர்ச்சிவயப்படாமல் தள்ளி நின்று யோசித்தால் விஷ்ணுபுரம் அழிவதே நல்ல முடிவாகத் தோன்றுகிறது. விஷ்ணுபுரம் ஞானத்தின் ஸ்தூல வடிவம். காலப்போக்கில் வெறும் சடங்குகள் மட்டுமே மிஞ்சிப் போகின்றன. மூன்றாம் பகுதியில் கொஞ்ச நஞ்ச மானுட அறமும் வற்றிவிடுகிறது. பின் ஸ்தூல வடிவம் மட்டும் எதற்கு? அழிந்துபடுவதே முறை.
*
நாவல் தந்த அனுபவத்தைக் குறித்து ஒரே பத்தியில் சொல்கிறேன்.
ஜெமோவின் அசாத்தியக் கற்பனைக்கும், கடும் உழைப்பிற்கும், ஆழ்ந்த அகன்ற வாசிப்பனுபவத்திற்கும், மொழியாளுமைக்கும், இவை அனைத்தையும் புனைவாக்கித் தரும் வித்தைக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
*
நாவலைப் படிக்கும்போது தொடர்புடைய சில புத்தகங்களைப் படிக்க / பார்க்க நேர்ந்தது. அவை இங்கே.
ஈசாவஸ்ய, கேன, கட, சாந்தோக்ய உபநிடதங்கள்
சமஸ்கிருத – ஆங்கில அகராதி
Concise dictionary on Zen and Buddhism
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதிய இந்திய தத்துவம் (சில பகுதிகள்)
சுகுமார் அழீக்கோடின் தத்வமஸி
ராமகிருஷ்ண மடம் பதிப்பித்திருக்கும் உபநிஷத் சாரம் (சில தொகுதிகள்)
ஜெமோவின் இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
காஞ்சிப் பெரியவரின் தெய்வத்தின் குரல் – முதல் பாகம் (சில அத்தியாயங்கள்)
இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (சில பகுதிகள்)
ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யம் (சில பகுதிகள்)