எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…
வைசேஷிகமும் பெளதீகவாதமும்
[கோதாவரிப் பயணத்தின் போது]
வைசேஷிகம் ஒரு ஆதி பெளதிகவாத ஞானதரிசனம் என்று ஏன் கூறுகிறோம்? ஒரு வரியில் இதை வகுத்துக் கூறிவிடலாம். எந்த பெளதிகவாத மரபினையும் போல வைசேஷிகமும் பருப்பொருளையே பிரபஞ்சத்தின் ஆதியாகக் காண்கிறது. இந்த அடிப்படையிலிருந்து அது பெரும்பாலும் தடம் மாறவில்லை.
பெளதிகவாதத்தின் பிற தரிசனங்களான சார்வாகம், சங்கியம், ஆசீவகம், பெளத்தம் முதலியவற்றிலிருந்து வைசேஷிகம் திட்ட வட்டமாக வேறுபடும் இடம், ஆத்மா என ஒன்று உண்டு என்று கூறுவதுதான். பருப்பொருள் போலவே ஆத்மாவும் ஒரு திரவியம் ஆகும் என்று இது வகுத்துக்கொள்கிறது. இந்த வித்யாசம் முக்கியமானது.
அணுச் சித்தாந்தமும் மானுட சிந்தனையும்
அணு குறித்த சிந்தனை உலக ஞான மரபில் மிகப்பழங்காலம் முதலே உண்டு என்று கண்டோம். கிரேக்க மரபில்தான் அணுச்சித்தாந்தம் உதித்தது என்பது இன்று வரை மேற்கத்திய அறிஞர்கள் கூறிவரும் கூற்று. அப்படியல்ல, இந்து ஞான மரபில் கிரேக்க சிந்தனையாளர்களுக்கு வெகுகாலம் முன்பே அணுச் சித்தாந்தம் இருந்துள்ளது என்று அறிஞர்கள் நிறுவியுள்ளனர்.
கிரேக்க சிந்தனையாளர்களின் காலம் கி.மு. 5 ஆம் நுற்றாண்டு. ஆனால் கி.மு. பத்தாம் நூற்றாண்டு முதல் வைசேஷிக ஞானத்தின் மூல உற்றுகள் இங்கு இருந்துள்ளன. இது குறித்து வில்லியம் ஃபிளமிங் (William Flemming: Dictionary of Philosophy) கூறியிருகிறார். கீத் (Keith: Logic and Atomism) முதலிய மேனாட்டு அறிஞர்கள் எவரும் கிரேக்க மரபிலிருந்து இந்தியாவுக்கு அணுக்கொள்கை வந்தது என்று கூறுவதை இன்று ஏற்பதில்லை.
கிரேக்க அணுக்கொள்கையின்படி அணுக்களின் கூட்டின் மூலமே ஆத்மாவும் மனமும் கூட உருவாயின. வைசேஷிகம் அவற்றைத் தனித்த திரவியங்களாக கண்டது. கிரேக்க அணுக் கொள்கையில் அணுக்கள் குணவடிவங்களில்லை, பொருண்மை வடிவங்கள் மட்டுமே. அணுக்களின் குணரீதியான சிறப்பியல்பே பிரபஞ்சத்தின் குணங்களை உருவாக்கும் ஆதாரம் என்று வைசேஷிகம் கூறுகிறது.
இவ்விரு அணுக்கொள்கைகளும் சுதந்திரமாகத் தன்னிச்சையாக உருவாகி வளர்ந்து வந்தவை என்பது வெளிப்படை. ஆகவே இந்த தரிசனம் மனித மனம் சிந்திக்கும்போது இயல்பாக உருவாகி வரக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது, வேறு வார்தைகளில் கூறப்போனால் இப்படி ஒரு தரிசனம் எற்படுவதற்குப் பிரபஞ்ச அமைப்பு மட்டும் காரணமல்ல. மனித மனமும் மூளையும் விஷயங்களை உள்வாங்கும் முறையும் கூட காரணமாக இருக்கலாம்.
இன்றைய நவீன அறிவியலில் அணுக்கொள்கை ஒரு ‘நிரூபிக்கப் பட்ட’ உண்மையாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அணு என்று ஒன்று உண்டா? அப்படி ஒரு பொருள் இல்லை, அது நம் உபகரணங்கள் மூலம் நாம் நுண்மையாகப் பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது ஏற்படும் தோற்றம் மட்டுமே என்று இன்று பெளதிக அறிஞர்கள் கூறுகிறார்கள். அணுக்களின் உள்ளுருப்புகளான நுந்துகள்கள் கூட பொருட்டகளல்ல, அவை சக்திப் புலங்கள் மட்டுமே என்று கூறுகிறார்கள்.
ஆக அணுக்கொள்கை என்பது மனிதனின் பார்வையின் ஏதோ ஒரு சிறப்பு இயல்பிலிருந்து பிறந்து நவீன விஞ்ஞானம் வரை தொடரக்கூடிய ஒரு பொது உருவகம் மட்டுமேயாகும். இது ஒரு கோணம் மட்டுமே.! இன்னொரு கோணத்தில், நமக்கு தெரிவதை மட்டுமே நாம் அறியமுடியும் என்றும், அணு என்ற தோற்றம் நமக்குக் கிடைப்பதனால் அதுவே உண்மை என்றும் வாதிட முடியும்.
அடுத்து வருவது..
தருக்கமே தரிசனம்: நியாயம்