அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

நான் அயோத்திதாசரை வாசித்த நாட்களில் அவரது முக்கியத்துவம் ஏதும் என்னை வந்தடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஒட்டுமொத்த எழுத்துக்களில் இருந்து ஒவ்வொரு தளத்திலும் அவரது கருத்து என்ன என்பதை தனித்தனியாக தொகுத்து அளிக்காத வரை எந்த பொதுவாசகரும் அவரது கருத்துநிலைகளை எளிதில் புரிந்துகொள்ளவும் முடியாது. அந்நாட்களில் நானும் எம்.வேதசகாயகுமாரும் இணைந்தே அயோத்திதாசர் நூல்களை வாசித்தோம். அவர் அனேகமாக தினமும் மாலை என் வீட்டுக்கு வருவார். நெடுநேரம் எங்கள் வாசிப்புகளை பகிர்ந்துகொள்வோம்

அக்காலகட்டத்தில் அயோத்திதாசர் சமணம் பௌத்தம் இரண்டும் தனித்தனி மதங்கள் அல்ல, ஒரேமதமே என்று சொல்வதைப்பற்றிய பேச்சுவந்தது. அயோத்திதாசர் காலகட்டத்தில் விரிவான வரலாற்றாய்வுகள் நிகழவில்லை. தனக்குக்கிடைத்த குறைவான தரவுகளைக்கொண்டு அவர் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதே என்னுடைய கருத்தாக இருந்தது. அதை வேதசகாயகுமாரும் ஏற்றுக்கொண்டார்.

ஆனால் அதன்பின் நானும் என் நண்பர்களும் காரிலேயே ஓர் இந்தியப்பயணம் மேற்கொண்டோம். அப்பயணத்தில் நான் ஓர் ஆச்சரியமான விஷயத்தை கவனித்தேன். பெரும்பாலான பௌத்த தலங்கள் சமணத்தலங்களும்கூட. பெரும்பாலான சமணக்கோயில்கள் அருகே பௌத்த ஆலயங்களுமிருந்தன. இந்திய வரலாற்றில் சமணரும் பௌத்தரும் பூசலிட்டதாக எந்த குறிப்பும் இல்லை.

சென்றவருடம் இந்தியாவின் சமணத்தலங்கள் வழியாக ஒருமாதம் நீண்டு நின்ற ஒரு பயணத்தை மேற்கொண்டோம். ஈரோட்டின் அரச்சலூர் முதல் ராஜஸ்தானின் லொதுவாரா வரை. இப்பயணத்தில் திட்டவட்டமாக ஒன்றைக் கண்டோம். இந்தியாவெங்கும் சமணத்தலங்களும் பௌத்த தலங்களும் ஒன்றே. இரு வழிபாட்டிடங்களும் அருகருகேதான் இருந்தன. பல இடங்களில் ஒரே வழிபாட்டிடத்தில் இரு சமயத்தினரும் வழிபட்டிருக்கிறார்கள்.

இரு வேறு உண்மைகள். நுல்கள் வழியாகப்பார்த்தால் சமணமும் பௌத்தமும் வெவ்வேறுதான். அனாத்மவாதம் பேசுவது பௌத்தம்சர்வாத்மவாதம் பேசுவது சமணம். பௌத்தம் ஆன்மா இல்லை என்கிறது. சமணம் எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு என்கிறது. நேர் தலைகீழ். இந்தியமரபில் இந்த அளவுக்கு எதிரும்புதிருமான கொள்கைகள் குறைவே. ஆனால்ந் நடைமுறையில் அவை இரண்டும் ஒரேமதமாக இருந்தன என்பதை கண் காட்டித்தருகிறது

நாம் நூல்களில் வாசித்து அறியும் இந்திய வரலாற்றுக்கும் நேரில் சென்றால் கண்ணுக்குப்படும் வரலாற்றுக்கும் மிகப்பெரிய ஓர் இடைவெளி இருப்பதை எப்போதுமே காணலாம். அதற்கு காரணம் நவீன இந்தியவரலாறு என்ற மொழிபின் முன்வடிவம் என்பது இந்தியாவை ஆண்ட காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்டது என்பதுதான். 1920 ல் வெளிவந்த The Cambridge history of India இந்தியவரலாற்றை எழுத ஒருமுழுமையான வரைபடத்தை உருவாக்கியளித்தது. அதன்பின்னர் எழுதப்பட்ட வரலாறுகளெல்லாமே அந்த தடத்தை பின் தொடர்ந்து அவ்வரைபடத்தை முழுமைசெய்தவைதான்.

இந்தியவரலாற்றை ஒன்றை ஒன்று முரண்பட்டு வென்றழிக்க முயன்ற பல்வேறு சக்திகளின் களமாக பார்ப்பதுதான் அந்த அணுகுமுறையின் அடிப்படை நோக்கு என்று சொல்லலாம். அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைநோக்கே அதுதான். முதலில் எதையும் பல்வேறு கூறுகளாக பிரித்துக்கொள்கிறார்கள். அதன்பின் அக்கூறுகளின் தனித்தன்மைகளை வகுக்கிறார்கள். அக்கூறுகளுக்கிகிடையே உள்ள உறவுகளை தொகுக்கிறார்கள். அக்கூறுகளை பல குழுக்களாகவும் தரப்புகளாகவும் மாற்றிக்கொள்கிறார்கள். ஒரு விரிந்த முரணியக்கச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அவர்களின் வரலாற்றை மறுத்து நேர் எதிர்வரலாற்றை உருவாக்கிய இந்திய தேசியமறுமலர்ச்சி யுகத்தின் வரலாற்றாசிரியர்களும் அதே வரலாற்றெழுத்துமுறைகளைத்தான் கடைப்பிடித்தார்கள். நேர் எதிரான கோணத்தை முன்வைத்தார்கள் அவ்வளவுதான். பின்னர் வந்த மார்க்ஸிய வரலாற்றாசிரியர்களும் விளிம்புநிலை வரலாற்றாசிரியர்களும் அந்த வரைபடத்தை ஒட்டியே முன்னகர்கிறார்கள்.

என் பயணத்தில் கண்ட இந்திய யதார்த்தம் என்னை திரும்பத்திரும்ப யோசிக்கச்செய்தது. நாம் சரியாகத்தான் நம் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறோமா? இங்கே முதலில் ஓர் ஆடுகளம் வரையப்பட்டு ஆட்டவிதிகளும் உருவாக்கப்பட்டுவிட்டது. அந்த ஆட்டத்தில் நாம் ஆடி ஆட்டத்தை உருவாக்கியவர்களையே வென்றாலும்கூட இது நம்முடைய ஆட்டம் அல்ல.

ஓர் இலக்கியவாதியாகவும் வரலாற்று மாணவனாகவும் இந்த ஆட்டத்தின் நிலைபெற்றுவிட்ட விதிகள் மீது எனக்கு ஐயமிருக்கிறது. என்னுடைய தாத்தாவோ என் ஊரின் கோயில்பூசாரியோ எங்களூருக்கு மலையிறங்கி வரும் மலையனோ இப்படி ஒரு வரலாற்றை எழுதியிருக்க மாட்டார்கள் என்று எனக்குப்படுகிறது. இந்த வரலாறு அவர்களுக்குப்புரியாதென்றும் படுகிறது.

இப்படிச் சொல்கிறேன். இங்கே எழுதப்பட்ட வரலாறுகள் மூன்று வகை. அரசியல் வரலாறு, சமூக வரலாறு, பொருளியல் வரலாறு. அவற்றையே முறையே கேம்பிரிட்ஜ் பள்ளி, தேசியப்பள்ளி, மார்க்ஸியப்பள்ளி என்கிறார்கள். நான் தேடுவது ஆன்மீகத்தின் வரலாற்றை. கடவுளின், மதத்தின் வரலாற்றை அல்ல. நாம் நம்மதென்று இன்றுகொண்டிருக்கும் ஆன்மீகம் வரலாற்றினூடாக விளைந்து வந்த வரலாற்றை.

அந்த வரலாறு எனக்கு தேவைப்படுகிறது. என் கையிலிருக்கும் சொற்களையும் படிமங்களையும் புரிந்துகொள்ள. தர்மம் என்றும் கர்மம் என்றும் நியமம் என்றும் சத்யம் என்றும் என்னிடம் வந்திருக்கும் சொற்களின் வரலாறு. என்னுடைய தெய்வங்களின் வரலாறு. அந்த வரலாறு நம் எழுதப்பட்ட வரலாற்றுநூல்களில் இல்லை.

அப்படியென்றால் உண்மையில் முக்கியமான ஏதோ ஒன்றை நாம் இழந்திருக்கிறோம். நம்முடைய வரலாற்றை முற்றிலும் நம்முடைய முறைமையைக்கொண்டு, நம்முடைய மொழியையும் படிமங்களையும்கொண்டு நாம் எழுதியிருக்கமுடியும் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த வழி எது? அந்த வாசல் எது? தெரியவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றின் எல்லா வழிகளையும் அதற்காக மீறிப்பார்க்கலாமென்று தோன்றுகிறது. ஒரு மாறுதலுக்காக கூரையைப் பிய்த்துக்கொண்டு ஒரு வாசலை போட்டுபபர்த்தாலென்ன என்று தோன்றுகிறது. இலக்கிய ஆசிரியனாக எனக்கு அதற்கான சுதந்திரம் இருக்கிறது. வரலாற்றை தன் நோக்கில் முழுமை செய்வதையே எல்லா எழுத்தாளர்களும் செய்கிறார்கள்.

நானும் அதையே செய்தேன். என் நோக்கில் நான் என்னுடைய கற்பனையை எல்லா கோணங்களிலும் இழுத்து பின்னி உருவாக்கிய இன்னொருவரலாறுதான் விஷ்ணுபுரம். இன்னொரு வரலாறுதான் கொற்றவை. இன்னும் சில வரலாறுகளை நான் எழுதக்கூடும்.

என்னுடைய ஆர்வமும் தேடலும் ஆன்மீகத்தையே முதன்மையாக காண்பது என்றேன். வரலாற்றினூடாக மானுடன் அடைந்த மெய்ஞானத்தையே நான் தேடுகிறேன். ஆகவே நான் எழுதியவை ஆன்மீகத்தின் வரலாறுகள்தான். பி.கே.பாலகிருஷ்ணன் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் சொன்னதை என் எழுத்துக்கள் மூலம் செய்திருக்கிறேன். விஷ்ணுபுரம் வெளிவந்தபோது அவர் உயிருடனில்லை. இருந்திருந்தால் அவரிடம் அதைக்கொண்டு சென்று காட்டியிருப்பேன்.

அப்படி இந்தியவரலாறு என்ற இந்த மூடிய அறையின் சுவர்களில் கூரையில் முட்டிக்கொண்டிருந்தபோதுதான் நான் அயோத்திதாசரை கண்டுகொண்டேன். அறிஞர்கள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் நிறைந்த பெரும் கூட்டத்தில் நடுவே என்னுடைய சொந்த ஊரில் இருந்து கிளம்பிவந்த ஒரு சித்தவைத்தியர் போல அவர் பேசுவதைக் கேட்டேன். அவர் பேசும் மொழி என்னுடையது என்று பட்டது. அவர் இங்கிருந்துகொண்டு பேசுவதாக எண்ணினேன். அவரது வரலாற்றெழுத்து ஒரு முற்றிலும் புதிய வழி என்று எண்ணினேன்

*

என்னுடைய குலதெய்வத்தின் பெயர் நீலகேசி. எங்கள் பக்கத்தில் பல நீலகேசியம்மன்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. பல கதைகளில் ஒரு குடும்பத்தில் உள்ள கன்னிப்பெண் நீலகேசியாக ஆகிவிட்டதாகச் சொல்லப்படும். பெரும்பாலான கோயில்களில் நாரால்செய்யபப்ட்ட தேவியின் கூந்தல் மட்டுமே பிரதிஷ்டைசெய்யப்பட்டிருக்கிறது.

நீலகேசி அல்லது நீலிக்கு சில வர்ணனைகள் உண்டு. கன்னி. கன்னங்கரியவள். நீல நிறமான கேசம் கொண்டவள். குருதி நிறமான உதடுகள் கொண்டவள்.. நீலகேசம் என்பது காட்டை குறிக்கக்கூடிய சொல். நீலகேசி என்பது புராதனமான ஒரு வனதெய்வமாக இருக்க வாய்ப்புண்டு.

ஆனால் நம் இலக்கியங்களில் நீலகேசி ஒரு சமண தெய்வம். நீலகேசி என்ற சமணக்காப்பியத்தில் அவளுக்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு வணிகனால் கொல்லப்பட்ட அவன் மனைவி கொலைத்தெய்வமாக மாறி வழிப்போக்கரை பலிகொண்டு வந்தாள். அவள் ஒரு சமனமுனிவரை பலிகொள்ளப்போகையில் அவர் அவளை நல்வழிப்படுத்தினார். அவள் சமணக்கருத்துக்களை கற்றுத்தேர்ந்து பிறசமயத்தவரை வாதில் வென்று சமணத்தை நிலைநாட்டியபின் முக்தியடைந்தாள் என்பது கதை. இந்தக்கதை இப்படியே குமரிமாவட்டத்தில் கள்ளியங்காட்டுநீலி கதையாகச் சொல்லப்படுகிறது.

ஆக, நீலகேசியம்மன் சமணர்களின் காலகட்டத்திலேயே இருந்திருக்கிறாள். அப்போதே ஒரு தொல்பழந்தெய்வமாக கருதப்பட்டிருக்கிறாள். அந்த தெய்வத்தை சமணம் தன்னுடைய சிறிதெய்வங்களில் ஒன்றாக ஆக்கிக்கொண்டது. அதைத்தான் நீலகேசியம்மனை சமண முனிவர் அறம்கூறி வசப்படுத்தியதில் காண்கிறோம். பிறகு சமணபௌத்த மதங்கள் மறைந்தபின் அவள் சிறுதெய்வமாக, குலதெய்வமாக நீடிக்கிறாள்.

ஆனால் இருகதைகள் மேலும் முக்கியமானவை. இட்டகவேலி முடிப்புரை நீலகேசி அம்மன் ஒரு நாயர் குல கன்னிப்பெண். பக்கத்திலிருந்த தீண்டத்தாகாத வீட்டுக்கு தீ வாங்கச்சென்றவள் அங்கே எதையோ வாங்கித்தின்றதாக குற்றம்சாட்டப்படுகிறாள். அதன்பொருட்டு கொல்லப்படுகிறாள், நீலகேசியாகிவிடுகிறாள். இந்த நிகழ்ச்சி உண்மையில் நடந்திருக்கலாம். அந்த சிறுமி ஏன் வேறுதெய்வமாக அல்லாமல் நீலகேசியாக்கப்பட்டாள்?

அதற்கு விடைகூறுகிறது ஒரு கதை. திருவட்டார் ஆதிகேசவன் கேசி என்ற பெண் அரக்கியை வதம்செய்தார். அவளை அழிக்கமுடியாது. ஆகவே கேசியை அவர் மண்ணுக்குள் புதைத்து அவள் மேல் அரவணையில் பள்ளிகொண்டார். அந்த மண்ணுக்குள் கரியவேர்களாக அவள் பரவியிருக்கிறாள். அவளுக்கும் இன்று பூசைகள் செய்யப்படுகின்றன.

மண்ணுக்குள் வேராக இருக்கும் நீலி. கன்னங்கரிய வனதேவதை. என்னுடைய கனவுகளிள் சிறுவயதிலேயே குடியேறியவள். என்னுடைய வரலாற்றில் மிக முக்கியமான பெயர் இவளுடையதுதான். நானறிய விரும்பும் வரலாறு இவளுடையதுதான்.ஆனால் இவளை எந்த வரலாற்றுநூலிலும் நான் காணமுடியாது.

ஆகவே இவள் வரலாற்றை நான் எழுதினேன். விஷ்ணுபுரமும் கொற்றவையும் காடும் எல்லாம் நீலியின் கதைகள்தான். விராடரூபம்கொண்ட விஷ்ணுவின் நகரம் ஒரு சிறு குமிழி போல நீலியின் காலடியில் வெடித்தழிகிறது. கொற்றவையில் பேயும் அன்னையுமாக வந்து கண்ணகிக்கு நெறியுரைப்பவள் அவளே.

இந்த வரலாற்றை நான் எழுதுவதற்கான ஒரு முன்னுதாரண வரைபடத்தை எனக்களிப்பவர் அயோத்திதாசர். ஆகவேதான் தமிழின் அவரை ஒரு மாற்று வரலாற்றெழுத்தின் முதல்புள்ளி என்று நினைக்கிறேன்.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s