அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2[தொடர்ச்சி]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
அயோத்திதாசர் பற்றிய தன்னுடைய சிறிய நூலில் பேராசிரியர் ராஜ்கௌதமன் அயோத்திதாசரின் ‘முறையான வரலாற்றுநோக்கு இல்லாமை’யை அவரது முக்கியமான குறையாகச் சுட்டிக்காட்டுவதைக் காணலாம். கல்வித்துறைசார்ந்த இலக்கிய- வரலாற்று அணுகுமுறைக்குச் சிறந்த உதாரணமான ராஜ்கௌதமன் அப்படிச்சொல்வது இயல்பே. அயோத்திதாசரின் நோக்கம் சாதியற்ற சமகாலத்தை உருவாக்குவது. அதற்காக அவர் இறந்தகாலத்தைப்பற்றி தனக்குச் சாதகமான முறையில் புனைந்துகொள்கிறார் என்கிறார் ராஜ்கௌதமன்[ க.அயோத்திதாசர் ஆய்வுகள், காலச்சுவடு பிரசுரம்] அயோத்திதாசரின் இந்திரர்லோகசரித்திரம் முதலிய நூல்களையும் பல வரலாற்றுக்கருத்துக்களையும் எதிர்மறைப்பொருளில் புனைவு என்று சொல்கிறார்
ராஜ்கௌதமன் சொல்லும் அந்த அம்சமே எனக்கு முக்கியமானது என்பதைத்தான் நான் சுட்டவிரும்புகிறேன். புறவயமான தரவுகளைக் கொண்டு வரலாற்றின் மிகப்பெரிய முரணியக்கத்தின் சித்திரம் ஒன்றை உருவாக்குவதையே முறையான வரலாற்றுஎழுத்து என ராஜ்கௌதமனும் அவரைப்போன்ற அறிஞர்களும் எண்ணலாம். ஆனால் அழியாமல் நீடிக்கும் படிமங்களைக்கொண்டு கற்பனையையும் உள்ளுணர்வையும் கலந்து உருவாக்கப்படும் வரலாறுகள் மேலும் முக்கியமானவை என நான் நினைக்கிறேன்.
அவற்றை வரலாறுகள் என்று சொல்லமுடியாது என்றால் புராணங்கள் என்று சொல்லலாம். அப்படி ஒரு வரலாற்றெழுத்து முறை நமக்கிருக்கிறது. அதற்கு இன்றையநாம் இன்று கையாளும் நவீன ஐரோப்பிய வரலாற்றெழுத்துமுறைக்கு இல்லாத பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன . பல ரகசிய வழிமுறைகள் உள்ளன. அந்த வழியை நாம் முழுமையாக இழக்கவேண்டியதில்லை. அதனூடாக நாம் நம்மை கண்டடைய முடியும். மையப்போக்கு வரலாற்றெழுத்து தவறவிடக்கூடிய பலவற்றை தொட முடியும்
அப்படித்தொடுவனவற்றில் மிகமுக்கியமானது ஆன்மீகம். ஐரோப்பிய வரலாற்றெழுத்தில் இருந்து கிடைத்த புறவயமான வரலாறு என்ற ஓர் உருவகம் நம்முடைய வரலாற்றுப்பிரக்ஞையை ஆள்கிறது. அது இரும்பாலான ஒரு சட்டகமாகவே மாறி நம் முன் நிற்கிறது. அந்த கட்டாயம் காரணமாக நாம் மீண்டும் மீண்டும் ‘ஆதாரங்களுக்கு’ செல்கிறோம். கல்வெட்டுகளும் தொல்பொருட்சான்றுகளும் ஆதாரங்கள். அதன்பின் நூல்கள் ஆதாரங்கள். ஆனால் கண்ணெதிரே நிற்கும் நீலகேசி அம்மன் ஆதாரம் அல்ல
அந்த வரலாற்றெழுத்துமுறையைக்கொண்டு நாம் ஆதிகேசவனின் வரலாற்றை எழுதிவிடலாம். ஒருபோதும் அவர் காலடிமண்ணுக்குள் வேராகப்பரவிய நீலகேசியம்மனின் வரலாற்றை எழுதிவிடமுடியாது. புறவயமான வரலாறு என்கிறார்கள். முழுக்கமுழுக்க தொல்பொருள்-இலக்கிய ஆதாரங்களுடன் புறவயமாக எழுதப்பட்டதுதானே நம்முடைய சைவமேலாதிக்கவாதிகள் எழுதியளித்துள்ள வரலாறு? அப்படியென்றால் புறவயமானதென்றால் என்ன?
ஆப்ரிக்காவில் சென்ற நூற்றாண்டில் கறுப்பர்கள் சொல்வது சாட்சியமல்ல என்று கருதப்பட்டது. எஞ்சிய வெள்ளையர்களைக்கொண்டு எல்லாவகையிலும் பிரிட்டிஷ்பாணியிலான நீதியமைப்பு செயல்பட்டது. அவர்கள் அதை புறவயமான நீதி என்றுதான் சொன்னார்கள். அதேபோன்றதே நம்முடைய வரலாற்றெழுத்தும். நாம் வரலாறை எழுத மிக முக்கியமான சாட்சியங்களை அளிக்கும் ஒரு பெரிய உலகம் அவை சாட்சியங்களே அல்ல என்று சொல்லி வெளியேதள்ளப்பட்டுவிட்டது. எஞ்சியவற்றைக்கொண்டுதான் இந்த புறவயமான வரலாற்றை உருவாக்குகிறார்கள்.
இந்த புறவயமான வரலாற்றெழுத்துக்கு எதிரான முக்கியமான கலகக்குரல் என்று அயோத்திதாசரைச் சொல்வேன். இங்கே ஐரோப்பியபாணியிலான வரலாற்றெழுத்து உருவான ஆரம்பகாலத்திலேயே அயோத்திதாசர் அதற்கு மாற்றான இந்த புராணவரலாற்றெழுத்தை உருவாக்கி முன்வைத்திருக்கிறார் என்பது மிகவியப்பூட்டுவதாக இருக்கிறது. நம்முடைய மதங்கள் மறுவரையறை செய்யப்பட்ட, நம் ஆன்மீகம் நவீனப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் பண்டிதரின் இந்தக்குரல் எழுந்திருக்கிறது.
ஜெ.எச்.நெல்சனின் மதுரா கண்ட்ரி மானுவல் நூலில் தென்னகவரலாறு பற்றிய ஒரு முன்வரைவு உள்ளது. தென்னகவரலாற்றைப்பற்றிய தொடக்ககால வரலாற்றெழுத்து என அதைச் சொல்லலாம். முழுக்கமுழுக்க காலனியாதிக்க நோக்கில், ஐரோப்பிய வரலாற்றெழுத்துப்பாணியில் எழுதப்பட்ட நூல். அற்புதமான வாசிப்பனுபவத்தை அளிக்கக்கூடிய ஒரு கிளாஸிக் அது
1868 ல் அதுவெளிவந்தது. நண்பர்களே, இன்று இந்த 2012ல் , நீலகண்டசாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தார், கே.கே.பிள்ளை என இரண்டுதலைமுறை வரலாற்றாசிரியர்களின் காலம் கடந்தபின்னும், நம்முடைய ஒரு வரலாற்று நூலை எடுத்துப்பார்த்தால் அதில் 90 சதவீதம் நெல்சன் எழுதியவையே உள்ளன என்பதைக் காணலாம். ஆமாம், நாம் நெல்சன் எழுதிய சிலவற்றை மேம்படுத்தி மேலும் த்கவல்கள்சேர்த்து செறிவாக்கிக்கொண்டோம் அவ்வளவுதான்.
நெல்சன் எப்படி வரலாற்றை எழுதினார்? அவரைச்சூழ்ந்திருந்த தமிழக உயர்குடியினர் அவருக்குச் சொன்ன தரவுகளைக்கொண்டு அவ்வரலாற்றை எழுதினார். அவரிடமிருந்தது ஐரோப்பிய வரலாற்றெழுத்தின் முறைமையும் சிறந்த மொழிநடையும். அது இவர்களிடமில்லை. அந்த வரலாற்றில் இங்குள்ள அடித்தளமக்களின் வரலாறென்பதே இல்லை. இன்றும் இல்லை. அது ஆதிகேசவனின் வரலாறு. கேசியின் வரலாறல்ல.
நெல்சனின் நூல் வெளிவந்த காலகட்டத்தில் நம்முடைய சைவ,வைணவ மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பித்துவிட்டது. சைவமும்தமிழும் வெவ்வேறல்ல என்பதுபோன்ற வரலாற்றுச்சூத்திரங்கள் பிறந்துவிட்டன. அந்தச்சூழலில்தான் அயோத்திதாசர் அவரது ஆரம்பகட்ட வரலாற்றெழுத்துக்களை முன்வைக்கிறார். நான் ஏற்கனவே சொன்னதுபோல அவை முழுமையான எழுத்துக்கள் அல்ல. மிக ஆரம்பகாலகட்ட முயற்சிகள் மட்டுமே. ஆனால் அவை முன்னோடியானவை. முன்னோடிகளுக்குரிய எல்லா தாவல்களும் மீறல்களும் பிழைகளும் கொண்டவை. ஆனால் முன்னோடிகளே பண்பாட்டை வழிநடத்துகிறார்கள்
*
அயோத்திதாசர் அவர்களின் இந்திரர்லோகசரித்திரம் நவீன வாசனுக்குஒரு விசித்திரமான நூல். அதில் எது புறவயமான வரலாற்றுத்தரவு எது படிமம் எது ஆய்வுமுடியு எது உள்ளுணர்வின் விளைவான தரிசனம் என்று அவனால் கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் நம்முடைய மரபான புராணங்களை வாசிப்பவர்களுக்கு அது ஒன்றும் விசித்திரமாகவும் இருக்காது. உதாரணமாக மணிமேகலையை வாசிக்கும் ஒருவன் இந்த எல்லைக்கோடுகளை எங்கே கண்டுபிடிப்பான்? மணிமேகலையை கற்ற ஒருவனுக்கு இந்திரர்லோக சரித்திரம் வியப்பை அளிக்காது. அதன் இன்றியமையாத சமகால நீட்சி என்றே அவன் இந்திரர்லோக சரித்திரத்தைச் சொல்லிவிடுவான்.
இந்திரர்லோக சரித்திரம் மரபான புராணமுறையில் ஆரம்பிக்கிறது.ஒரு புராணத்தை முன்வைக்கிறது. இந்தியா முன்னர் இந்திரர்தேசம் என்று பெயர்பெற்றிருந்தது. இந்த தேசத்தில் மக்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார்கள். சமத்துவமும் நீதியும் திகழ்ந்தகாலகட்டம் அது. காரணம் அப்போது பௌத்தம் இங்கே சிறந்திருந்தது. மதுமாமிசம் உண்ணும் வழக்கம் இருக்கவில்லை.
அன்று நந்தன் என்ற பௌத்த மன்னன் புனல்நாட்டுக்கு கிழக்கே வாதவூர் என்ற நாட்டை ஆண்டுவந்தான். அப்போது பாரசீகநாட்டிலிருந்து சிலர் அங்கே வருகிறார்கள். அன்று இந்திரர்தேசத்தில் அர்ஹதர்கள் மட்டுமே அந்தணர்கள் என்று கருதப்பட்டார்கள். வந்தவர்கள் அர்ஹதர்களைப்போல வேடமிட்டு வந்து அவர்களைப்போலவே பேசுகிறார்கள். ஐயமடைந்த நந்தன் தன்னுடைய நாட்டின் தர்மசபையைக்கூட்டி அவர்களைக்கொண்டு விசாரிக்கிறான். அவர்கள் வேஷதாரிகள் என தெரியவருகிறது.
ஆகவே வேடதாரிகள் நந்தனைக் கொன்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு மொழிகளை கற்கும் திறன் மிகுந்திருந்தது. ஆகவே இங்குள்ள மொழிகளை அவர்கள் கற்றுத் தேர்ந்தார்கள். ஆனால் சோமபானம், சுராபானம் முதலியவற்றின் உதவியால் அவர்கள் இங்கே ஆட்சியாளர்களை தன்வயபப்டுத்தினார்கள்.மொழித்திறனால் மெல்லமெல்ல அவர்கள் இந்த தேசத்து சாத்திரங்களை ஊடுருவினார்கள். சாதிபேதங்களை கற்பித்தார்கள். அவ்வாறாக இந்திரர்தேசம் வீழ்ச்சியடைந்து அன்னியருக்கு அடிமையானது.
இந்த அன்னியரை அயோத்திதாசர் வேஷபிராமணர் என்கிறார். இவர்கள் பௌத்தர்களின் குறியீடுகளையும் சடங்குகளையும் கொள்கைகளையும் கவர்ந்து தங்களுக்கேற்றமுறையில் திரித்துக்கொண்டார்கள் என்று சொல்கிறார்.பௌத்தசமணத் துறவிகள் கல்விகற்க ஆரம்பிக்கும்போது கண்கள் பெறுகிறார்கள் என்ற பொருளில் உபநயனம் என்ற சடங்கு கொண்டாடப்பட்டது. அப்போது அவர்கள் பூணூல் அணிவது வழக்கம். அவ்வழக்கம் வேஷபிராமணர்களால் கையகப்படுத்தப்பட்டது
வேஷபிராமணர்கள் மதுமாமிசம் உண்பவர்கள். ஆனால் பௌத்தசமண மதங்களின் ஆசாரங்களை தங்கள் நெறிகளாக அவர்கள் பிரச்சாரம்செய்தார்கள். ஆனால் வேள்வித்தீயில் மாமிசத்தை படைத்து உண்பதை தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
இச்சைகளை ஒடுக்குவதற்காக பலவகையான நோன்புகளை கைகொள்வது பௌத்தசமணர்களின் வழக்கம். அந்நோன்புகளை எல்லாம் வேஷபிராமணர் தங்களுடையதாக்கினர். பௌத்தர்கள் கொண்டாடிவந்த பண்டிகைகளையும் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டார்கள். தீபாவளி முதலியவை அவ்வாறு அவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசமரம், தாமரை,வேப்பமரம் என வேஷப்பிராமணர் கொண்டுள்ள எல்லா குறியீடுகளும் பௌத்தத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே.
வேஷபிராமணர்களுக்கு ஆலயவழிபாட்டு முறை இருக்கவில்லை. பரிநிர்வாணம் அடைந்த புத்தரை சிலைவடித்து குகைகளிலும் கோட்டங்களிலும் வைத்து வழிபடுவது பௌத்த மரபு. வேஷபிராமணர் அவர்களும் கோயில்களைக் கட்டி அங்கே தங்கள் தெய்வங்களையும் புத்தரைப்போல யோகத்தில் அமரச்செய்தார்கள். அவர்களின் தெய்வங்களின் புராண இயல்புகளுக்கும் யோகத்துக்கும் சம்பந்தமே இல்லை. மெல்லமெல்ல அவர்கள் பௌத்த ஆலயங்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.
இப்படி ஒரு விரிவான சித்திரத்தை அயோத்திதாசர் அளிக்கிறார். தகவல்களை கொண்டு செய்யப்படும் ஒரு புனைவு என்றே இதைச் சொல்லலாம். குறியீடுகள் புதியகோணத்தில் விளக்கப்படுகின்றன. சொற்கள் புதியவகையில் பொருள்கொள்ளப்படுகின்றன. புனைவை பலகோணங்களில் விரித்து ஒரு முழுமையான வரலாற்றுச்சித்திரத்தை அயோத்திதாசர் உருவாக்குகிறார்.
இதை அயோத்திதாசர் முன்வைக்கும் ஒரு பதிலிவரலாறு என்று சொல்லலாம். அவர் கூறும் அந்த பௌத்த பொற்காலம் இருபதாம்நூற்றாண்டின் சமத்துவம் சார்ந்த கருத்துக்களை இறந்தகாலத்துக்குக் கொண்டுசெல்லும் உத்தி , அது ஒரு வெறும் இலட்சியக்கனவு மட்டுமே என்று சொல்லலாம். ஆனால் இந்தக்கதையின் வடிவம் மிகத்தொன்மையானது. ஓர் உதாரணம், கேரளத்தில் பிரபலமாக உள்ள திருவோணத்தின் கதை. மாபலி என்ற மாமன்னன் ஆண்ட காலத்தை அது விதந்தோதுகிறது.
‘மாபலி நாடு வாணிடும் காலம் மானுஷரெல்லாரும் ஒந்நுபோலே
கள்ளமில்ல சதிவுமில்ல எள்ளோளமில்ல பொளிவசனம்
[மாபலி நாடு ஆண்ட அக்காலத்தில் மனிதர்களெல்லாரும் சரிநிகர்
கள்ளமில்லை சதியில்லை எள்ளளவும் இல்லை பொய்பேச்சு]
பதினைந்தாம் நூற்றாண்டுமுதலே இருந்துவரக்கூடிய இந்தப்பாடல் அயோத்திதாசர் சொல்லும் அதே பொன்னுலகைத்தானே சொல்கிறது? மாபலியின் பொற்கால ஆட்சியைக் கண்டு இந்திரன் பொறாமை கொள்கிறான். ஆயிரம் வருடம் அப்படி மாபலி ஆண்டால் இந்திரசிம்மாசனத்துக்கு அவன் உரிமைகொண்டாடமுடியும். ஆகவே அவன் விஷ்ணுவிடம் முறையிடுகிறான். விஷ்ணு குறுகியதோற்றமுள்ள பிராமணனாக, ஓலைக்குடை கையில் ஏந்தி வந்து மாபலியிடம் மூன்றடி மண்ணை தானமாக கேட்கிறார். கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாத மாபலி அந்த மூன்றடி மண்ணை அளிக்கிறான். இரண்டடியில் முழு உலகையும் அளந்த வாமனன் மூன்றாவது அடியை மாபலி தலையில் வைத்து அவனை பாதாளத்துக்கு தள்ளுகிறான்.
சுவாரசியமான ஒரு தகவலுண்டு. திருவோணம் நெடுங்காலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே கொண்டாடும் விழாவாகவே இருந்தது. பதினெட்டாம்நூற்றாண்டில்கூட விவசாயக்கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையாளர்கள் பரிசுகள் கொடுக்கும் விழாவாகவே அது பல இடங்களில் நீடித்தது. திருவோணம் பற்றிய பாடல்களும் புராணங்களும் தாழ்த்தப்ப்பட்ட மகக்ளிடையே இருந்தவைதான். அயோத்திதாசர் சொல்லும் இந்திரர்தேசத்துசரித்திரம் அப்படியே திருவோணத்தின் கதை என்றால் என்ன பிழை?
மாபலியை அசுரன் என்று புராணம் சொல்கிறது. சுரன் என்றால் மனிதன். மனிதனல்லாதவன் என்று அச்சொல்லுக்குப் பொருள். அயோத்திதாசர் இந்திரர்லோக சரித்திரத்தில் வேறுபொருள் அளிக்கிறார். சுரபானம் குடிப்பவன் சுரன். குடிக்காதவன் அசுரன். பௌத்தர்களே அப்படி அழைக்கப்பட்டார்கள் என்கிறார்.
மாபலியின் வரலாற்றையே அயோத்திதாசர் வேறுவகையாக விளக்குகிறார். 1200 வருடம் முன்பு மாபலிபுரம் என்ற பகுதியில் இருந்து தென்னகத்தை ஆண்ட பௌத்த மன்னன் அவன் என்கிறார். இவன் இறுதியில் பௌத்த சங்கத்தில் சேர்ந்து புரட்டாசி மாதம் அமாவாசைநாளில் திருவேங்கட மலையில் நிர்வாணம் எய்தினான்.இவனுடைய மகன் திருப்பாணர். மகள் தாதகை. இவள் ஒரு பௌத்த பிக்குணி. மாவலி நிர்வாணமடைந்த நாளை பௌத்தர்கள் மாபலி அமாவாசை என்று கொண்டாடினர். அதைபின்னர் வைணவம் மகாளய அமாவாசையாக கொண்டாடுகிறது என்கிறார்.
நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது, இத்தகைய வரலாற்றெழுத்துக்கான பெறுமானம் என்ன என்பதுதான். வரலாறு என்பது ஒற்றைப்படையான ஒரு கட்டுமானம் அல்ல அது ஓர் உரையாடல் என்று எடுத்துக்கொண்டால் வரலாற்றின் எல்லா தரப்புகளும் முக்கியமானவை என்று புரிந்துகொள்ளலாம். இந்த நிலத்தில் நீரூற்றினல் இங்கே புதைந்துள்ள எல்லா விதைகளும் முளைக்கவேண்டும். ஆனால் சம்பிரதாயவரலாற்றின் நீரை ஊற்றினால் சிலவிதைகளே முளைக்கின்றன. அயோத்திதாசர் முன்வைக்கும் இந்த புராணிகவரலாற்றின் நீரே எல்லா விதைகளையும் முளைக்கச்செய்கிறது.
அவ்விதைகள் முளைத்து வரும்போது தெரிகிறது நம்முடைய பண்பாட்டுவெளி என்பது இங்குள்ள அடித்தளச்சாதியினரால் உருவாக்கப்பட்டது என்பது. இங்குள்ள வரலாற்றுக்கட்டுமானங்கள் அனைத்தும் அந்த அடித்தள வரலாற்றின் வேர்ப்பரப்பின் மீது எழுப்பப்பட்டவை என்பது.
நம்முடைய வரலாற்றெழுத்து கருவறைக்குள் கோயில்கொண்ட ஆதிகேசவனை துதிப்பதாக மட்டுமே உள்ளது. அந்த சகஸ்ரநாமத்தை மட்டுமே நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். கேசிகளை எழுப்பும் மந்திர உச்சாடனத்தையும் நாம் வரலாறாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கான வழிகாட்டலாக அமைந்தது அயோத்திதாசர் அவர்களின் ஆரம்பகால நூலான இந்திரர் தேச சரித்திரம்.