அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3
ஜெயமோகன்.இன் ல் இருந்து
அயோத்திதாசர் உருவாக்கிய வரலாற்றெழுத்தின் அடிப்படையான கூறுகள் என்னென்ன? அவற்றை என் அவதானிப்பில் நான் இவ்வாறு வகுத்துக்கொள்வேன்.
அயோத்திதாசர் அவர்களின் இந்திரர்தேசத்து சரித்திரத்தில் நாம் காணும் முதன்மையான அம்சம் அதன் மாற்று வரலாற்றுத் தரிசனம். அதை எழுதப்பட்ட வரலாற்றின் தலைகீழாக்கம் என்று ராஜ்கௌதமன் போன்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த தலைகீழாக்கம் அயோத்திதாசர் அவர்களால் கண்டடையப்பட்ட ஒன்றல்ல. அது ஏற்கனவே இங்கே இருப்பதன் நவீன வடிவம்தான். தலைகீழாக்கம் எப்போதுமே நம் மரபில் இருந்துகொண்டிருக்கிறது.
ஒரு தொன்மக்கதை. இக்கதை நிகழும் காலகட்டத்தில் பறையர்களும் புலையர்களும் ஆதிக்கசாதிகளாக இருந்தனர். திருவனந்தபுரம்கோயிலிருக்கும் இடம் அனந்தன்காடு என அழைக்கப்பட்டது . அங்கிருந்த அனந்தன்சாமி அன்று புலையர்களின் குலதெய்வம். அதற்கு ஒரு நம்பூதிரி பிராமணன் பூசைசெய்துவந்தான். அவன் பரதேசிப்பிராமணன் என்கிறது கதை. அதாவது வெளியே இருந்து வந்தவன். அவன் கொண்டுவந்த தீ அணைந்துபோனதனால் அருகே உள்ள புலையர் குடிலுக்கு தீ கேட்கசென்றான் . அங்கிருந்த புலையர்பெண்ணைக்கண்டு காதலுற்றான்.
ஆனால் அன்று புலையர் உயர்சாதியாகையால் அவனுக்குப் பெண்கொடுக்க அவள்தந்தையான மூத்தபுலையர் மறுத்துவிட்டார். நம்பூதிரி பலவாறு வற்புறுத்தினான். விரதமிருந்தான். கடைசியில் புலையர்தலைவன் அவனை அனந்தன்காட்டுக்குள் கூட்டிசென்று ஒரு பாழுங்கிணற்றைச் சுட்டிக்காட்டி அதற்குள் தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்கும்படிச் சொன்னார். குனிந்து பார்த்த நம்பூதிரியின் கால்களை தூக்கி அவனை அபப்டியே கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டான். தலைகீழாக கிணற்றில் விழுந்த நம்பூதிரி இறந்தான்
நெடுங்காலம் கழித்து அவ்வழி வணிகத்துக்காக வந்த செட்டிகள் அந்த கிணற்றருகே அமர்ந்து தங்கள் தயிர்சாதப்பொட்டலத்தை பிரித்தனர். அந்த தயிர்சாத மணம் கேட்டு நம்பூதிரி மேலே வந்தான். நடுவே சோற்றுமூட்டையை வைத்து சுற்றி அனைவரும் அமர்ந்து கொள்ள தலைவன் உருட்டி ஒவ்வொரு கையிலும் கவளங்களை வைத்தான். எட்டு கைகள் சோற்றுக்காக நீண்டபோது ஒன்பதாவது கையாக தானும் கைநீட்டினான். இருட்டாக இருந்தமையால் வணிகர்தலைவன் அதை கவனிக்கவில்லை.
அவர்கள் கிளம்பியபோது நம்பூதிரியின் ஆவியும் கூடவே வந்தது. அடுத்து அவர்கள் குமரிமாவட்டத்தில் உள்ள இரவிப்புதூர் என்ற இடத்தில் மூட்டையை பிரித்தபோது ஆவியும் கைநீட்டியது. இப்போது பகல். ஆகவே ஒரு கை கூடுவதை தலைவன் கவனித்துவிட்டன். சோற்றை அருகே இருந்த கிணற்றுக்குள் வீசினான். நம்பூதிரி தலைகீழாக உள்ளே பாய்ந்தான். மேலே மந்திரம்போட்டு நூலைக்கட்டி அவனை உள்ளே அடைத்துவிட்டான் தலைவன். அந்த நம்பூதிரியை அங்கேயே நிறுவி கோயில்கட்டி வருடத்துக்கு ஒருமுறை தயிர்சாதம் படைத்து வழிபட ஆரம்பித்தனர்
சுவாரசியமென்னவென்றால் இந்த சிறுதெய்வம் தலைகீழாகத்தான் நிறுவப்பட்டுள்ளது. தலைகீழ் தெய்வத்துக்குத்தான் படையலும் வழிபாடும் நடக்கிறது. ஆமாம், தலைகீழாக்கம் இங்குள்ள அடித்தளச்சாதியினரின் வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது
இந்திரர்தேசத்துச் சரித்திரத்தில் இதற்கிணையான பல நிகழ்வுகளை அயோத்திதாசர் கூறுதுகிறார். உண்மையில் பிராமணர்களை வெறுத்து ஒதுக்கி சாணியடித்து துரத்துபவர்கள் பறையர்களே என்கிறார். ராஜ்கௌதமன் அவரது நூலில் அது அயோத்திதாசர் செய்யும் ஒரு தலைகீழாக்கம் என்கிறார். ஆனால் நான் என் சிறுவயதுமுதல் அத்தகைய நூற்றுக்கணக்கான கதைகளை கேட்டு வளர்ந்திருக்கிறேன். குறைந்தது முந்நூறு ஆண்டு பழைமைகொண்ட தொன்மங்கள் பலவற்றில் அதற்கிணையான சித்தரிப்புகள் உள்ளன
அதாவது அயோத்திதாசர் எதையும் புதிதாக புனையவில்லை. புதிய தலைகீழாக்கங்களை நிகழ்த்தவுமில்லை. ஏற்கனவே இந்திய வரலாற்று மரபின் ஒரு பகுதியில் இருந்துகொண்டிருந்த ஒரு சரடை நவீன மொழிபுக்குள் கொண்டு வருகிறார் , அவ்வளவுதான்.
அன்றைய வரலாற்றெழுத்து அதை ஒருபொருட்டாக நினைக்கவில்லை. ஏனென்றால் அன்று நாட்டாரியல் சார்ந்த எவற்றையும் வரலாற்று ஆதாரங்களாகக் கொள்ளக்கூடாதென்ற எண்ணம் இருந்தது. சுசீந்திரம் பேராலயம் பற்றி ஒரு மகத்தான நூலை உருவாக்கிய கே.கே.பிள்ளை சுசீந்திரம் பற்றிய எந்த நாட்டார்கதையையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவை மனம்போனபடிச் சொல்லப்படும் வாய்மொழிக்கூற்றுக்கள் என்றே நினைத்தார். தொல்லியல் ஆதாரங்களும் இலக்கிய ஆதாரங்களுமே வரலாற்றை உருவாக்குகின்றன என அவர் நினைத்தார்.
அடுத்தபடியாக அயோத்திதாசர் அந்த மாற்று வரலாற்றுத் தரிசனங்களின் அடிப்படையில் தொன்மங்களை மறு கட்டமைக்கிறார். மாவலி பற்றிய தொன்மத்தை அவர் கையாளும் முறை ஓர் உதாரணம். இதுவும் அவரது விசேஷ கண்டுபிடிப்பு அல்ல. இந்தவகையான மாற்று விளக்கங்கள் எப்போதுமே நம்முடைய மரபில் இருந்துள்ளன. கொடுங்கல்லூர் கோயில் இன்று ஒரு துர்க்கை ஆலயம். அதற்கு முன் அது சேரன் செங்குட்டுவன் நிறுவிய கண்ணகி ஆலயம்.
ஆனால் நல்லம்மை தோற்றம் என்ற புலையர்களின் வாய்மொழிப்பாடல் இன்றும் அக்கோயிலில் முதல்நாள் திருவிழாவில் பாடப்படுகிறது. முதல்நாள் திருவிழா புலையர்கள் மற்றும் குறும்பர்களுக்கு உரிமைப்பட்டதாக இருந்திருக்கிறது. இன்று அது எல்லாசாதியினருக்குமானதாக ஆகிவிட்டது. அன்று கோயிலின் பிராமணப்பூசாரிகள் கோயிலை திறந்துவிட்டு தேவியை கொண்டுவந்து முகமண்டபத்தில் வைத்து விட்டு வெளியேறிவிடுவார்கள். பின்னர் அவர்கள் திரும்பிவந்து கோயிலை தீட்டுக்கழித்து திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள்
அந்த நல்லம்மைத்தோற்றம் பாட்டில் கண்ணகி ஒரு நாட்டார்தெய்வமாக இருக்கிறாள். செங்குட்டுவன் நிறுவுவதற்கும் முற்பட்ட வடிவம். அவளுக்கு பௌத்ததாராதேவியின் சாயல்கள் இருக்கின்றன. மாமங்கலை என்று சொல்லப்படுகிறாள். அதாவது நாம் தொன்மங்கள் உறுதியான கட்டமைப்புகளாக இல்லை. ஏற்கனவே அவை பல்வேறு மாற்றுவடிவங்களுடன்தான் இருக்கின்றன. இந்திரர்தேசத்துச் சரித்திரத்தில் அயோத்திதாசர் எழுதியதுபோலவே இருக்கிறது நல்லம்மைத்தோற்றம்
இன்னொருசுவாரசியம், கொடுங்கல்லூர் தேவி கோயிலின் பூசாரிகள் அடிகள் எனப்படுகிறார்கள். அவர்களுக்கு கேரள நம்பூதிரி மரபில் இடமில்லை.[ இதுசபரிமலை பூசாரிகளுக்கான தந்திரிகளுக்கும் பொருந்தும். அவர்கள் கேரளப் பிராமணர்கள் அல்ல, பிராமணத்துவம் உடைய ஒரு தனிக்குடும்பம். இந்த அம்சம் இவ்விரு ஆலயங்களும் பௌத்த பூர்வீகம் கொண்டவை என்பதற்கான சான்றாகக் கருதப்படுகிறது] அடிகள் என்பது பௌத்த -ச்மண துறவிகளுக்கான அடைமொழி. அவர்களின் இடத்தை இவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று சொல்லலாம். ஆம், இந்திரர்தேசத்துச் சரித்திரத்தை இங்கே அப்படியே திருப்பி எழுதிவிடலாம்
மூன்றாவதாக அயோத்திதாசர் சொற்களை புதியதாக விளக்குவதை சுட்டிக்காட்டலாம். அசுரர் என்ற சொல்லை அவர் விளக்குவதை உதாரணமாகச் சொல்வேன். அதற்கும் நம் மரபில் நீண்ட வேர் உள்ளது. ஆதிகேசவன் பற்றிய தொன்மத்தைச் சொன்னேன். குமரிமாவட்ட அடித்தள மக்களின் வில்லுப்பாட்டில் கேசவன் என்ற சொல்லுக்கு ஒரு விளக்கம் உள்ளது. கேசியின்மகன் என்றுதான அச்சொல் பொருள் தருகிறது. ஆதிகேசவன் கேசியை வெல்லவில்லை, மகனாகிய அவனை அவள் தன் மடியில் வைத்திருக்கிறாள் என்பாகள்.
இப்படித்தொகுக்கிறேன்.
1. அயோத்திதாசர் எழுதப்பட்ட வரலாற்றுக்கான மாற்றுவடிவை மக்களின் நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்களில் இருந்து எடுக்கிறார்
2. எழுதப்பட்ட வரலாற்றின் முறைமையை முழுமையாக நிராகரித்து மக்களிடையே ஏற்கனவே இருந்துகொண்டிருக்கு ஒரு புராணிக வரலாற்று முறைமையை கையாள்கிறார்
3. அந்த மாற்றுவரலாற்றின் சாராம்சம் இன்றைய விடுதலைக்காகவும் நாளைய சமத்துவசமூகத்துக்காவும் அமையவேண்டுமென நினைக்கிறார். அதனடிப்படையில் அந்த மாற்றுவரலாற்றை அவர் நவீனப்படுத்துகிறார்
அதற்காக அயோத்திதாசர் கீழ்க்கண்ட வழிகளை கையாள்கிறார்
1, மாற்று வரலாற்றுத்தரிசனம்
2. மாற்றுத் தொன்மவிளக்கம்
3. மாற்று சொல்விளக்கம்
அயோத்திதாசர் முன்வைப்பது ஒரு எளிய முன்வரைவை மட்டுமே. நம்மை நாம் இப்படியும் பார்க்கலாமே என்கிறார். அன்றைய கேம்பிரிட்ஜ் ஆய்வுநோக்கும், தேசிய ஆய்வுநோக்கும் அதை ஒரு முறைமை இல்லாத பாமரத்தனமான முயற்சி என நிராகரித்துவிட்டன. பின்னர்வந்த மார்க்ஸிய வரலாற்றாய்வுநோக்கும் அதை தரவுகளின் அடிப்படையற்ற ஆய்வுமுறை என நிராகரித்தது. அது ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு எவர் கண்ணுக்கும்படவில்லை
மேலே சொன்ன மூன்று ஆய்வுமுறைகளும் வரலாற்றுரீதியாக நம் ஆன்மீகத்தைப் புரிந்துகொள்வதற்கு எவ்வகையிலும் பயனற்றவை. ஆகவே நாம் நம்முடைய சொந்த ஆன்மீகத்தை, நமக்குள் உறையும் ஆழ்படிமங்களையும் தொன்மங்களையும் படிமங்களையும் , புரிந்துகொள்ள நமக்குரிய வரலாற்றாய்வுமுறை ஒன்று தேவை. அந்த தளத்தில் அயோத்திதாசர் அவர்களின் வழிகாட்டல் முக்கியமானது
அந்தக்கோணத்தில் நாம் நம்முடைய வரலாற்றை மீட்டு எழுதவேண்டிய ஒரு பெரும்பணி நம் முன் இருக்கிறது
தொடரும்..