விஷ்ணுபுரம் ஆச்சரியங்கள்

விஷ்ணுபுரம் ஆச்சரியங்களை அளிக்கத் தவறுவதே இல்லை!

எழுதியவர் R.கோபி

R.கோபி தளம்

விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவற்றைப் பற்றிய பதிவுகள் எழுதியபோது எனக்குத் தோன்றிய ஒரே விஷயம் இதுதான். இது முழுமையான வாசிப்பு இல்லை. இந்த நாவல்களில் மேலும் பல விஷயங்கள் உள்ளன. காலப்போக்கில் ஒவ்வொன்றாக எனக்குப் பிடிபடலாம். இவை வாலியைப் போல வரம் வாங்கி வந்தவை. நம் பலத்தில் பாதியை எப்போதுமே எடுத்துக்கொள்பவை. எந்தக் காலக் கட்டத்திலும் நூறு சதவீதம் புரிந்துகொண்டு விட முடியாது.

வேரை மறுத்தலும் சார்ந்திருத்தலும்
சமீபத்தில் புதுக்கோட்டை சென்றுவந்தேன். அப்பாவின் சொந்த ஊர். நாங்கள் பிறக்குமுன் அப்பா கும்பகோணம் வந்துவிட்டார். பின்னர் தொடர்புகள் அற்றுப்போய் இப்போது அங்கே யார் இருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வமான தண்டாயுதபாணி குடிகொண்டிருக்கும் குமரமலைக்குப் போய் வந்திருக்கவேண்டும். பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாகக் கும்பகோணத்திற்கு அருகிலிருக்கும் சுவாமிமலையிலேயே எல்லா வேண்டுதல்களையும் செய்து வந்துகொண்டிருந்தோம்.

Continue reading

விஷ்ணுபுரம் – R.கோபி

விஷ்ணுபுரம்

எழுதியவர் R.கோபி

R.கோபி தளம்

ஜெமோவின் படைப்புகளைப் படிக்கச் சொல்லித் தொடர்ச்சியாக என்னை வற்புறுத்துபவரும், மணிக்கணக்கில் என்னிடம் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்கள் குறித்துத் தொலைபேசியில் உரையாடுபவருமான நண்பர் ஜெய் கணேஷிற்கு இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.
*
இந்தக் கட்டுரையை விஷ்ணுபுரம் நாவல் பற்றிய என்னுடைய முழுமையான வாசிப்பனுவம் என்ற வகையில் பார்க்கலாகாது. தொலைவில் தெரியும் மலைச் சிகரத்தைப் காணும்போது மனதிற்குள் அதைப் பற்றி ஒரு சித்திரம் எழும். அது நிச்சயம் முழுமையானதன்று. நுட்பமான விஷயங்கள் தூரத்திலிருந்து நிச்சயம் கண்களுக்குப் புலப்படாது. அதற்கொப்பானதுதான் இந்தக் கட்டுரை. ஒருவேளை நான்கைந்து முறை திரும்பத் திரும்ப வாசித்தால் இந்த நாவலைப் பற்றிய தெளிவு ஓரளவிற்காவது கிடைக்கும். நாவலிலேயே வருவது போல விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் முப்பது நிலைகளுக்கு மேல் சாமான்யர்களுக்குத் தெரிவதில்லை.

படித்த தருணத்திற்கும் அதைப் பற்றி எழுதும் தருணத்திற்கும் இடையேயுள்ள உள்ள இந்தக் குறைந்த நேரத்திலும் சித்திரம் கலைந்து புதிதாக வேறொன்று தோன்றிவிடுகிறது.
*
நாவலைப் படிக்கும்போதோ அல்லது படித்து முடித்தவுடனோ ‘பிரமாண்டம்’ என்று ஒருமுறையேனும் வாசகர் பிரமிப்படையவில்லை எனில் அந்த வாசகர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.

விஷ்ணுபுரம் கோவிலின் ஒரு பகுதி எப்போதுமே பாழடைந்திருக்கும் என்பதாக வருகிறது. கோவிலின் பிரமாண்டத்தை இது மறைமுகமாகச் சுட்டுகிறது. முழுக்கோவிலையும் பொலிவுடன் வைத்திருப்பது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட விஷயம்.

Continue reading

ஜெயமோகனின்-“விஷ்ணுபுரம்”

எழுதியவர் : RV

சிலிகான் ஷெல்ஃப்

விஷ்ணுபுரத்தை பல விதத்தில் படிக்கலாம். அமைப்புகளின் குரூரம், தொன்மங்கள் தோன்றி மறையும் விதம், ஹிந்து தத்துவங்களைப் பற்றிய அறிமுகம் என்றெல்லாம் படிக்கலாம். ஒரு fantasy என்ற விதத்தில் கூட படிக்கலாம். படிக்கும்போது இப்படி பல கூறுகள் எனக்குத் தெரிந்தது. ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடைக்கு போன மனநிலையில்தான் நான் இருந்தேன். பக்கத்துக்குப் பக்கம் ஏதாவது கவனத்தைக் கவர்ந்தது. பல சமயம் மேலே படிப்பதை நிறுத்திவிட்டு இரண்டு நிமிஷம் மூச்சு வாங்கிக்கொண்டு படித்ததை ஒரு மாதிரி absorb செய்துகொண்டு பிறகுதான் மேலே படிக்கவே முடிந்தது. ஒரு மாபெரும் ஓவியம் அல்லது சிற்பத்தைப் பார்க்கும் உணர்வு தோன்றிக் கொண்டே இருந்தது. மாமல்லபுரத்தில் பகீரதன் தவம் பார்த்திருப்பீர்கள். விவரங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் இல்லையா? குயர்னிகா என்ற ஓவியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எவ்வளவு முறை பார்த்தாலும் புதிது புதிதாக ஏதாவது கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். பார்த்து முடித்துவிட்டோம் என்ற எண்ணமே எனக்கு வருவதில்லை. அதைப் போலத்தான் இந்தப் புத்தகத்தைப் பற்றியும் உணர்ந்தேன்.

சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பதிவு விமர்சனமோ புத்தக அறிமுகமோ இல்லை. இங்கே கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. வழக்கமாக பத்து வரியில் கதைச்சுருக்கம் எழுதுவது போல இதற்கு எழுதிவிடவும் முடியாது. படித்தபோது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பை பதிவு செய்யும் முயற்சி, அவ்வளவுதான்.

Continue reading

8. விஷ்ணுபுரம் கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து

8. விஷ்ணுபுரம் கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து – ஓர் ஒப்பீடு

எழுதியவர் :  விசு

சிலிகான் ஷெல்ஃப்

விஷ்ணுபுரம் என்றொரு ஊர் இருந்தால், அது எந்த ஊராக இருக்கும்? காசியா? ஶ்ரீரங்கமா? திருவட்டாரா? அங்கோர் வாட்டா? பதில் எல்லாம்தான். கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் நாவலை, இந்து/பௌத்த மதங்கள் பரவிய அனைத்து நிலங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு ஒப்பீட்டிற்காக, நாவலின் கதைக்களத்தை கம்போடியாவில் பொருத்திப் பார்ப்போம். (சமீபத்தில், வரலாறில் ஆர்வமுள்ள இரு நண்பர்களுடன் கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் பத்து நாட்கள் சென்று வந்தேன். படங்கள் இங்கே. அருகருகே விஷ்ணுபுரத்தையும், பின் தொடரும் நிழலின் குரலையும் நேரில் கண்டது போல இருந்தது.)

கம்போடியாவில் பல நூற்றாண்டுகள் வைதீக மதம் தழைத்திருந்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பதிமூன்றாம் நூற்றாண்டுவரை வைதீகம், பின்பு ஐம்பதாண்டுகளுக்கு பௌத்தம், மீண்டும் வைதீகம், பின்பு பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் ஓங்கியிருக்கிறது. பழைய கம்போடியாவில் அரச அதிகாரத்தின்/மதத்தின்/தத்துவத் தளத்தின் மொழி சம்ஸ்கிருதம். மக்களின் மொழி குமெர். குமெரையும், வடமொழியையும் எழுத அவர்கள் பயன்படுத்திய எழுத்துரு பல்லவ கிரந்தம். வைதீகம் எப்படி அங்கே வந்தது? கம்போடியர்களின் தொன்மத்தின்படி, சோமா என்ற நாக வம்சத்து இளவரசியும், கௌடின்யர் என்ற பிராமணனும் காதல் வயப்படுகிறார்கள்; பின்பு அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் கம்போஜ தேசத்தை சேர்ந்தவர்கள். (விஷ்ணுபுரத்தில் செம்பி-அக்னிதத்தன் கதை). ஆங்கில, பிரெஞ்சு ஆய்வாளர்கள், இந்து மதம் வணிகர்களின் மூலம் வந்தது என்கிறார்கள். இடிபாடுகளில் சூழ்ந்திருந்த அங்கோர் கோவில்களை, மீட்டெடுத்து புனரமைத்தது ஐரோப்பிய அறிஞர்கள். அதற்காக அவர்களை பாராட்டத்தான் வேண்டுமென்றாலும், அவர்களது ஆய்வுகளை நான் ஏற்கவில்லை. குமெர்களின் இலச்சினை நாகம். ஒரு சில கோவில்களைத் தவிர, பெரும்பாலானவற்றில் உள்ள சிலைகள் நாகங்களும், யட்சிகளும்தான் (அப்சரஸ்).

Continue reading

9.விஷ்ணுபுரம் – முடிவுரை

9.விஷ்ணுபுரம் – முடிவுரை

எழுதியவர் :  விசு

சிலிகான் ஷெல்ஃப்

“அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி.” – விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பது படைப்பாளிக்கு அங்கீகார ரீதியாகவும், பொருளியல் ரீதியாகயும் இழப்புதான். மொழி பெயர்த்தாலும் புரியாது போகவே வாய்ப்பு அதிகம். ஆனால் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் கண்டிப்பாக புரியும். மொழி பெயர்ப்பது ஒருபக்கம் இருக்கட்டும், நம்மிடையே சிறந்தவற்றை நாம் முதலில் படிக்க வேண்டும். இந்த நாவலை ஒரு ஐந்தாயிரம் பேர் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. இனையத்திலும் மிகச் சிலரே விரிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் இருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் இது. சந்தேகமில்லாமல் உரக்கச் சொல்வேன் “இந்திய இலக்கியத்தில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த நாவல்களில் விஷ்ணுபுரமும் ஒன்று. நான் படித்தவைகளில் முதன்மையானது”.

மீண்டும் ஒருமுறை விஷ்ணுபுரத்தை – போரும் அமைதியும்(ஒருமுறை படித்திருக்கிறேன்), பின் தொடரும் நிழலின் குரல்நாவல்களோடும் ஒப்பிட்டு எப்போதாவது எழுத வேண்டும்.

Continue reading