நூலகம் எனும் அன்னை
[24-11-2007 யில் அருமனை அரசு நூலகத்தின் வருட விழாவில் ஆற்றிய சிறப்புரை]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
அருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த நூலகத்தில்தான் நான் என் இளமைப்பருவத்தை செலவழித்தேன்.
என் அப்பா பாகுலேயன்பிள்ளை இங்கே உதவி பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடம் பணியாற்றினார். நாங்கள் இங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள முழுக்கோடு என்ற ஊரில் தங்கியிருந்தோம். அதன்பின் மறுபக்கம் ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள திருவரம்புக்கு சொந்த வீடு கட்டி மாறினோம். நான் படித்ததெல்லாம் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்தான். எங்கள் சந்தை அருமனையில் இருந்தது… திரையரங்கு இங்கேதான்- கிருஷ்ணப்பிரியா. ஓலைக்கொட்டகை. மளிகை வாங்குவது ராகவப்பணிக்கர் கடையில். என் இளமைப்பருவம் இந்த ஊரை மையப்படுத்தியது.









